82. இருளூர்கை
கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து “தங்கள் ஆணையோலை” என்றாள். “ஆணையோலை அளிக்கப்படவில்லை. இளவரசர் உத்தரர் இங்கு வந்து தன்னைப் பார்க்கும்படி என்னிடம் சொன்னார்” என்றான். அவள் விழிகள் குழப்பத்துடன் அலைந்தன. திரும்பி காவல் மாடத்திற்குள் இருந்த பிற ஆணிலிகளை நோக்கினாள். “என் பெயர் கஜன். வேண்டுமென்றால் உங்களில் எவரும் உள்ளே சென்று இளவரசர் உத்தரரிடம் அவர் என்னை வரச்சொன்னாரா என்று கேட்டு வரலாம். அதுவரை நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான்.
காவல் மாடத்திலிருந்து எழுந்து வந்த இன்னொரு ஆணிலி “ஆம், சென்று கேட்டு வருவோம். இவரை திருப்பி அனுப்பினால் வந்து நம்மிடம் பூசலிடுவார்” என்றாள். முதலில் வந்த ஆணிலி “இங்கு நின்றிருங்கள். நான் சென்று உசாவி வருகிறேன்” என்றபின் வேலை கையிலெடுத்துக்கொண்டு அரண்மனை அகத்தளத்திற்குள் புகுந்து மறைந்தாள். கைகளை மார்பில் கட்டியபடி இடைநாழிகளையும் உப்பரிகைகளையும் கூர்ந்து நோக்கி கஜன் நின்றான். சற்று நேரத்தில் அவள் வெளியே வந்து அவனை நோக்கி நடந்து வந்தாள். அவ்வருகையிலேயே உத்தரன் என்ன சொல்லியிருப்பான் என்பதை உணர்ந்து தன்னையறியாமல் கஜன் புன்னகைத்தான்.
ஆணிலி அவனை வணங்கி “மூன்றாவது தளத்தில் சேடியர்கள் கூடத்தில் அமர்ந்திருக்கிறார். அங்கு செல்லும்படி ஆணை” என்றாள். கஜன் “நன்று” என்றபின் புரவிக் கடிவாளத்தை அவளிடம் ஒப்படைத்துவிட்டு செங்கல் பரப்பிய முற்றத்தில் விரைவிலாது நடந்தான். தன் பின்னால் ஆணிலிக் காவலரின் நோக்கு பதிந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. படிகளிலேறி அகத்தளத்திற்குள் நுழைந்ததும் அவ்வுணர்விலிருந்து விடுபட்டான். உடலை எளிதாக்கி விழிகளை ஓட்டி அந்தக் கூடத்து அமைப்பை பார்த்தான். வலப்பக்கமிருந்த படிக்கட்டு வளைந்தேறி முதல் தளத்திலிருந்த உப்பரிகையை நோக்கி சென்றது. அதில் ஏறி மேலே சென்றதும் அதன் இருபக்கமும் வளைந்து சென்ற இடைநாழிகளை பார்த்தான். எந்தத் திசை நோக்கி செல்வது என்று குழம்பி அங்கு நின்றான்.
கையில் தாலங்களுடன் எதிரே வந்த நடுஅகவைச் சேடி அவனைக் கண்டதும் விழிகள் சுருங்க நடைவிரைவு தாழ அருகே வந்து “யார்? இங்கு எப்படி வந்தீர்?” என்றாள். “நான் இளவரசியின் ஆசிரியர் பிருகந்நளையின் அணுக்கன். அவரது ஆணை பெற்று இங்கு வந்தேன்” என்றான். அவள் “யாரை பார்க்கவேண்டும்?” என்றாள். அவள் ஐயம் விலகவில்லை என்று தெரிந்தது. “இங்கு அரண்மனைச் சேடியாக உள்ள ஒருத்தியை. அவள் அரசியின் சைரந்திரியின் துணைவி. அவளுடன் கரவுக்காட்டிற்கு வந்திருந்தாள்” என்றான். “அவள் பெயர் தெரியாதா?” என்றாள். “ஆசிரியருக்கே அவள் பெயர் தெரியாது. இங்கு பொறுப்புள்ள ஏதேனும் பெண்மணியிடம் அவளைப்பற்றி விசாரிக்கச் சொன்னார். பெயர் தெரிந்திருந்தால் அவளை வரச்சொல்லும்படி ஓலையனுப்பியிருப்பாரே?” என்றான் கஜன்.
அவள் விழிகளில் மேலும் ஐயம் கூடியது. “கரவுக்காட்டிற்கு பலர் வந்தனர்” என்றாள். “ஆம், ஆனால் அரசியும் சைரந்திரியும் வந்த அதே தேரில் இவளும் இருந்தாள். அப்போது நான் ஆசிரியரின் அருகே இருந்தேன்” என்றபின் “மாநிறமானவள். நீளமுகம், மெல்லிய உடல், சுருள்கொண்ட நீண்ட கூந்தல்” என்றான். அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது. “துணிந்து பொய்யுரைத்து இத்தனை தொலைவு வந்திருக்கிறீர். இன்னும் சற்று அழகிய விவரணைகள் அளிக்கலாமே? காவியங்கள் படிப்பதில்லையோ?” என்றாள். “பொய்யல்ல” என்று அவன் சொன்னான். “வீரரே, என்னால் கண்களில் காதலை பார்க்க முடிகிறது” என்றாள் அவள்.
அவன் புன்னகைத்து “அக்கா, உன்னை நம்பி வந்தேன்” என்றான். “ஏன், என்னை உனக்கு முன்னால் தெரியுமா?” என்றாள். “இப்போது தெரிந்துகொண்டேன். ஆனால் என்மேல் அன்புகொண்ட அக்கையொருத்தி இங்கிருப்பாள் என என் உள்ளாழத்தில் தோன்றியிருந்தது” என்றான். அவள் மீண்டும் நகைத்து “உனக்கு பேசத் தெரிகிறது. எவர் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்தாய்? பிருகந்நளை பெயரை சொல்லமுடியாது” என்றாள். “உத்தரர் பெயரை” என்றான். “நம்பமாட்டார்களே?” என்றாள். “என் பெயரைச் சொல்லி சென்று அவரிடமே கேட்டுப் பாருங்கள் என்றேன். கேட்டுப் பார்த்தபோது அவரே உள்ளே வரும்படி ஆணையிட்டார்.”
அவள் புருவம் சுருங்க அவனை நோக்கினாள். “எவர் எந்தப் பெயரைச் சொல்லி எதைச் சொன்னாலும் ஆம் நான் சொன்னேன் என்றுதான் அவர் சொல்வார். முந்தைய கணத்தை முற்றிலும் மறப்பது அவரது இயல்பு” என்றான். அவள் வாய்விட்டு நகைத்து “நன்று. இனி நானும் அதை பயன்படுத்திக்கொள்கிறேன்” என்றாள். “அவள் பெயர் என்ன, அக்கையே? உங்களுக்குத் தெரியும்” என்றான். “நீ சொல்லத் தொடங்கியபோதே தெரியும்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் கூர்மையானவர்கள். கூர்மையான பெண்கள் அழகிகளாக இருப்பதில்லை. அதற்கும் விதிவிலக்கு” என்றான்.
“இதோ பார், பெண்களுக்கு புகழ்ச்சி பிடிக்கும். ஆனால் சற்று நுண்ணுணர்வோடு அதை செய்யவேண்டும்” என்றாள். “நான் என்ன பிழை செய்தேன்?” என்றான். “முதலில் என் பெயரை கேட்டிருக்கவேண்டும் அல்லவா? அக்கை என்றாய். பெயர்கூடத் தெரிய வேண்டாமா?” என்றாள். “ஆம், உங்கள் பெயர் என்ன?” என்றான். “மீண்டும் நாம் சந்திக்கும்போது என் பெயரை நினைவில் கொள்ளமாட்டாய்” என்றாள். “அதெப்படி அக்கா? மீண்டும் நாம் நாளையே சந்திப்போம் அல்லவா?” என்றான். அவள் திகைத்து “நாளையா? எங்கே?” என்றாள். “இங்குதான்” என்றான் அவன். “இங்கா?” என்றாள் குழப்பத்துடன். “நீங்கள் வரச்சொன்னீர்கள் என்று உள்ளே வந்துவிடுவேனல்லவா?” என்றான்.
அவள் நகைத்து “அடப்பாவி, தலைக்கு தீங்கு கொண்டுவந்துவிடுவாய் போலிருக்கிறதே!” என்றாள். “என் பெயர் முரளிகை” என்றாள். “நல்ல பெயர். காட்டு மூங்கிலின் இசையொன்றை நினைவில் எழுப்புகிறது.” முரளிகை சிரித்து “அவள் பெயர் சுபாஷிணி” என்றாள். “ஆம், இனிய குரலுள்ளவள்” என்றான். “அவளுக்கு தண்மொழி என்றே என் உள்ளத்தில் பெயரிட்டிருந்தேன்.” அவள் “இதற்குமேல் நீ வருவது நன்றல்ல. அரசகுடியினரல்லாத ஆண்கள் உள்ளே நுழையலாகாது. இச்சிறுகூடத்தில் இரு. அவளை வரச்சொல்கிறேன்” என்றாள். “அவள் சற்று நோயுற்றிருந்தாள். ஓரிரு நாட்களாக தேறி வந்திருக்கிறாள்.”
“நோயுற்றா?” என்று அவன் கேட்டான். “மூதன்னையர் அவள் உடலில் வந்துகொண்டே இருந்தார்கள். உணவும் நீருமின்றி அலைபாய்ந்த சித்தத்துடன் இருந்தாள். உன்னைக் கண்டபின் அவள் நிலைகொள்ளக்கூடும்” என்றபின் “அமர்க, வருகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். அவன் அந்தச் சிற்றறையின் உயரமற்ற பீடத்தில் அமர்ந்தான். சற்று நேரத்தில் வெளியே சிலம்பின் ஒலி கேட்டது. உள்ளம் படபடக்க அவன் எழுந்து பின் அமர்ந்தான். பதற்றத்துடன் மீண்டும் எழுந்தான்.
கதவு திறந்து சுபாஷிணி நுழைந்தபோது திகைத்தவனாக ஒரு அடி பின்னால் வந்து பீடத்தில் கால்தட்ட மீண்டும் அமர்ந்துகொண்டான். அவள் உள்ளே வந்து விழிகளை ஓட்டி பின் அவனைப் பார்த்து ஒருகணத்திற்குப்பின் அடையாளம் கண்டுகொண்டு “நீங்களா?” என்றாள். “ஆம், உன்னை பார்ப்பதற்காகத்தான் வந்தேன்” என்றபடி எழுந்துகொண்டான். அவள் முகத்தைப் பார்த்து “உனக்கு என்ன செய்கிறது?” என்றான். “இல்லையே, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றாள். “இல்லை, நோயுற்றிருக்கிறாய். உன் முகத்தின் ஒளி பெரிதும் குறைந்துவிட்டது. உன் கண்கள் அலைபாய்கின்றன.”
அவள் விழிகளில் நீர் நிறைய தலைகுனிந்து “அறியேன். என்னால் நன்றாகத் துயில முடியவில்லை” என்றாள். அவன் அவளை நோக்கியபடி சில கணங்கள் நின்றான். அவள் உடல் வண்ணத்துப்பூச்சி இறகுபோல அதிர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவன் ஒன்றும் சொல்லாததைக் கண்டு அவள் விழிதூக்கி “தாங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள் என்று அக்கை சொன்னாள்” என்றாள். “ஆம், உன்னைப் பார்க்கும்பொருட்டே இத்தனை தொலைவு வந்தேன்” என்றான். “ஏன்?” என்றாள். “நீ கேட்ட முதல் வினாவிலேயே நான் சொல்ல வந்ததை சொல்லலாகாது என்ற முடிவுக்கு வந்தேன்” என்றான். அவள் கண்கள் திகைக்க “நான் என்ன கேட்டேன்?” என்றாள். “நீங்களா என்றாய்.” அவள் தலையசைத்தாள். “அவ்வாறென்றால் நீ பிறிதொருவரை எதிர்பார்த்திருந்தாய்.” அவள் “அய்யோ, இல்லை” என்றாள். “ஆம், பிறிதொருவரை… நீ அறியாமல் அவனைக் காத்திருந்தாய்.”
அவள் திரும்பி கதவை பார்த்துவிட்டு “இல்லை” என்றாள். அவன் “சொல், யார் அவர்?” என்றான். “நான் செல்கிறேனே” என்று அவள் மெல்ல அசைந்தாள். “நீ பிறிதொருவரை எதிர்பார்த்தாய்” என்றான். “இல்லை” என்று அவள் மூச்சுத் திணறினாள். “உன்னிடம் அக்கை என்ன சொன்னாள்?” அவள் “என்னைப் பார்க்க காதலுடன் ஒருவர் வந்திருப்பதாக” என்று தாழ்ந்த குரலில் தரையைப் பார்த்தபடி சொன்னாள். “யார் அப்படி காதலுடன் வரவேண்டுமென்பது உன் கனவு?” என்று கஜன் கேட்டான். அவள் இல்லை என்று தலையசைத்தாள். “அஞ்சாதே. என் விழிகளைப் பார்த்து சொல். அது எவராக இருந்தாலும் நானே அவரிடம் சென்று சொல்கிறேன்.”
அவள் நிமிர்ந்து பார்த்து “நான் அச்சம் கொள்ளும்போதெல்லாம் அவர் என் கனவில் வருகிறார்” என்றாள். “யார்?” என்றான். “அடுமனைச் சூதர் சம்பவர்.” அவன் உடல் முழுக்க ஓர் அதிர்வை உணர்ந்தான். கைகளை என்ன செய்வது என்று அறியாததுபோல் மார்மேல் கட்டிக்கொண்டான். நெஞ்சக்கூட்டை உள்ளிருந்து அறைந்த இதயத்தின் ஒலியை அவ்வாறு அழுத்திக்கொள்ள முடிந்தது. ஓரிரு கணங்கள்தான். ஆனால் நெடுந்தொலைவைக் கடந்து அங்கு மீண்டும் வந்தான். “ஆம், அவர்தான் உனக்குப் பொருத்தமானவர். அவரிடம் நான் சொல்கிறேன்” என்றான். “இல்லை, அப்படியெல்லாம் இல்லை” என்று அவள் சொன்னாள்.
“அஞ்சாதே, எப்படி சொல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியும். உன்பொருட்டு என்னால் அதை சொல்லவும் முடியும்” என்றான் கஜன். “நான் மிகவும் அஞ்சுகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது. என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வாரென்றால்…” என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்ல அவன் புன்னகையுடன் “நீ இருக்கவேண்டிய இடம் அவரது இல்லம். ஒவ்வொரு நாளும் உடலுழைப்பு நிகழும் சூழல். கைகளால் உணவை உருவாக்கி குவிப்பாய். அள்ளி அள்ளி பரிமாறி பசி போக்குவாய். நீ கொள்ளும் துயரனைத்தும் மறையும்” என்றான்.
அவள் “உம்” என்றாள். “இனிய மைந்தர். மிகப் பெரிய குடும்பம்… அங்குதான் நிறைவடைவாய். பெற்றுப்பெருகி பேரன்னையென்று முதிர்ந்து கனிவாய்” என்றான். அவள் விழிகள் நிறைந்தன. “நான் அவரிடம் சொல்கிறேன்” என்றான். “வேண்டாம். நான் என்ன சொல்கிறேன் என்றே அவருக்குத் தெரியாமல் போகலாம்” என்றாள். “அவருக்கும் தெரியும்” என்று அவன் சொன்னான். அவள் நிமிர்ந்து பெரிய விழிகளுடன் அவனை பார்த்தாள். “அவருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும்” என்றான். “எப்படி?” என்றாள். “அடுமனையாளர் சம்பவன் என்று சொன்னதுமே அதை நான் வியப்பின்றி எதிர்கொண்டேனல்லவா அவ்வாறுதான்” என்றான் கஜன். பின்னர் “அஞ்சாதே, ஓரிரு நாட்கள் மட்டுமே” என்றபின் திரும்பி நடந்தான்.
படிகளில் இறங்குகையில் ஒவ்வொரு காலடிக்கும் அவன் தளர்ந்துகொண்டிருந்தான். ஓடி வெளியே சென்று தன் புரவியை எடுத்துக்கொண்டு நகரத் தெருக்களில் வெறி பிடித்தவன்போல பாயவேண்டுமென்று தோன்றியது. அவ்வெண்ணம் எழுந்ததுமே அவ்வாறு நகரத் தெருக்களில் வெறிகொண்டு சீறிச்செல்லும் தன் புரவியை அவன் கண்ணால் கண்டுவிட்டான். அதன் பின் உடலை உந்தி எடுத்து வைத்த ஒவ்வொரு காலடியும் நூறு கைகளால் அழுத்தப்பட்டிருந்ததாக எடை கொண்டிருந்தது. மூச்சு இழுத்துவிட்டும் இமைகளைக் கொட்டியும் தன் கணங்களை ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி காலத்தை உருவாக்கியபடி அவன் நடந்தான்.
கஜன் படிகளில் இறங்கி வெளியே வந்தபோது அரண்மனை முகப்பில் புரவிகள் நின்றிருக்க அருகே உத்தரன் நான்கு ஏவலருடன் நின்றிருப்பதை கண்டான். இயல்பாகத் திரும்பி நோக்கிய உத்தரன் கஜனைக் கண்டு “நீ யார்?” என்றான். அத்தனை காவலரும் அவனை நோக்கினர். கஜன் அவனருகே சென்று தலைவணங்கி “தங்கள் ஆணைப்படிதான் இங்கு வந்தேன்” என்றான். “ஆம், நான் உன்னை ஒரு முதன்மையான செயலுக்காகவே அழைத்தேன். வருக!” என்றபின் உத்தரன் தன் புரவியை நோக்கி சென்றான். “என் புரவி வெளியே நிற்கிறது, அரசே. நான் தங்களைத் தொடர்ந்து…” என்று அவன் சொல்லத்தொடங்க “அது அங்கு நிற்கட்டும். நீ இந்தப் புரவியில் ஏறிக்கொள்” என்று இன்னொரு புரவியைக் காட்டியபடி உத்தரன் தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.
இருவரும் பெருஞ்சாலைக்கு வந்தனர். உத்தரன் “நாம் எங்கு செல்கிறோம் என்று தெரியுமா?” என்றான். அவன் உவகை பொங்கும் நிலையிலிருப்பதை கஜன் புரிந்துகொண்டான். “தாங்கள் இன்று உவகையுடன் இருக்கிறீர்கள், இளவரசே” என்றான் “ஆம். இன்றல்ல, சென்ற பல நாட்களாகவே நான் உவகையில் நிறைந்திருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொன்றும் எழுந்து தானாகவே அமைந்து என்னை அரியணை நோக்கி கொண்டு செல்கின்றன” என்றான் உத்தரன். கையை நீட்டி “மூடா! நீ என்னைப்பற்றி என்ன நினைத்தாய்? எண்ணிக்கொள், ஒருநாள் இதே நகரியில் நான் ராஜசூயப் பெருவேள்வி நடத்துவேன். சத்ராஜித் என்று என்னை பேரரசர்கள் மணிமுடி தாழ்த்தி வணங்குவார்கள்” என்றான்.
கஜன் “அதிலென்ன வியப்பிருக்கிறது? நான் சிறுவனாக இருக்கும்போதே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். “எதை?” என்றான் உத்தரன் ஐயத்துடன். “தாங்கள் சத்ராஜித்தாக மணிமுடி சூட்டிக்கொள்வதற்கென்றே பிறந்தவர் என்று நிமித்திகர்களும் சூதர்களும் பாடுவதுண்டு. அவ்வாறு நிகழாது போனால்தான் அது வருத்தத்துக்குரியது” என்றான் கஜன். ஒருமுறை அவனை ஓரக்கண்ணால் பார்த்தபின் உத்தரன் சாலையைப் பார்த்து “ஆம், ஒவ்வொன்றும் அமைந்து வருகிறது. இன்று கலிங்கத்திலிருந்து அரசக்குழு ஒன்று வருகிறது. அறிந்திருக்கிறாயா?” என்றான். கஜன் “இல்லை. நான் எளிய காவலன்” என்றான். “ஆம், இது அரசவைக்கு மட்டும் தெரிந்தது. உனக்கு நான் சொல்கிறேன்” என்றான் உத்தரன். “ஆம், என்னை தங்கள் நல்லியல்பால் மதித்து இவ்வரிய செய்தியை சொல்கிறீர்கள்” என்றான் கஜன்.
உத்தரன் உரக்க நகைத்து “ஆம், நான் எப்போதுமே அப்படித்தான். பெரியோர் சிறியோர் என்னும் வேறுபாடு என் உள்ளத்தில் இல்லை. தகுதி உடையவர்களை அணுக்கர்களாகக் கொள்வேன்” என்றான். “அதை அறியாத எவரும் இந்த நகரில் இல்லையே” என்றான் கஜன். “தூதுக்குழு எதன்பொருட்டு வருகிறது தெரியுமா?” என்று உத்தரன் மீண்டும் கேட்டான். “தங்களை சந்திக்கும்பொருட்டு” என்றான் கஜன். “ஆம், என்னையும் அவர்கள் சந்திக்கிறார்கள். ஆனால் என்பொருட்டே அவர்கள் இன்று வருகிறார்கள். கலிங்க இளவரசியின் உடன்பிறந்த இளவரசர் மூவர் தலைமை அமைச்சருடன் வருகிறார்கள். இன்றே அவையில் அவர்கள் தங்கள் மணஏற்பை அறிவிப்பார்கள். மங்கலப் பேச்சுக்குரிய வரிசையும் பரிசிலும் கொண்டு அவர்கள் வருகிறார்கள். அவர்களின் மணஏற்பை தந்தை ஏற்று மணநாள் முடிவை அறிவிப்பார். அவர்களுக்கு நாங்கள் பரிசும் வரிசையும் செய்வோம்” என்றான் உத்தரன்.
“இன்றுடன் நான் கலிங்க இளவரசியை மணக்கவிருக்கும் செய்தி உறுதிப்படுத்தப்படும். நாளைமறுநாள் அனைத்து ஷத்ரிய அரசர்களுக்கும் மண அறிவிப்பு ஓலைகள் சென்று சேரும். ஒவ்வொருவரும் அந்த ஓலையை கையில் வைத்துக்கொண்டு என்ன எண்ணுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.” புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அவன் உரக்க நகைத்தான். “எத்தனை முகங்கள் சுருங்கும். எவரெவரெல்லாம் நெஞ்சில் அறைந்துகொண்டு விம்முவார்கள்… எண்ணவே உளம் கிளர்கிறது” என்றான். “ஏன்?” என்றான் கஜன். “மூடா, கலிங்கமும் விராடமும் ஒன்று சேர்ந்தால் இப்பகுதியில் எவர் என் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியும்? விராடம் பேரரசாவதை ஊழை ஆளும் தெய்வம் முடிவுசெய்துவிட்டதென்றே பொருள்.”
“இளவரசே, இது தங்கள் பெருந்தன்மையால் தாங்கள் சொல்லிக்கொள்வது. எங்களைப்போல விராடகுடிகளுக்குத் தெரியும், பாரதவர்ஷத்தின் பிற நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு எதிர்த்தாலும் தாங்கள் முன்நின்று களம்கண்டால் விராடப் படைகள் சுழல்காற்று சருகுகளை என அவற்றை வெல்லும் என்று” என்றான் கஜன். “தாங்கள் பேரரசராக மணிமுடி சூடி அமர்வதென்பது தங்கள் பிறப்புக்கு முன்னரே ஊழ் முடிவெடுத்த ஒன்று. அதை கலிங்கமோ சதகர்ணிகளோ எவரும் மாற்ற முடியாது.” உத்தரன் தலைதிருப்பிக்கொண்டு இயல்பாக “ஆம், அதுவும் உண்மைதான்” என்றான்.
கஜன் “ஆனால் எப்படியென்றாலும் தங்கள் தகுதிக்குரிய பேரரசி இங்கு வருகிறார்கள் என்பது எங்களுக்கு நிறைவூட்டுகிறது. நாளை தாங்கள் மணிமுடி சூடி அமர்கையில் தங்கள் அருகே அமரும் அழகும் நிமிர்வும் அவருக்கும் இருக்கவேண்டுமல்லவா?” என்றான். “ஆம், நான் அதில்தான் குறிப்பாக இருந்தேன். ஏராளமான மணத்தூதுகள் வந்தன. எதையும் நான் ஏற்கவில்லை. பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு முதன்மை அரசுகளில் ஓர் அரசின் இளவரசி மட்டுமே என்னால் ஏற்கப்படுபவள் என்று தெளிவாகவே தந்தையிடம் தெரிவித்துவிட்டேன்” என்றான் உத்தரன். “காலமுதல்வர் தங்கள் பணியென்ன என்று அறிந்தவர்” என்றான் கஜன்.
அவர்கள் புறக்கோட்டை காவல் மாடம் ஒன்றை கடந்தனர். அதில் பெருமுரசு முழங்கிக்கொண்டிருந்தது. வெவ்வேறு இடங்களில் முரசுகள் எதிரொலித்தொடர் என முழங்கின. ஏழு காவல் வீரர்கள் புரவிகளில் கொக்குக் கூட்டம்போல மிதந்து கடந்து சென்றனர். தெற்குப் பெருவீதியின் இருபுறமும் மாளிகைகள் மலர்களாலும் தளிர்த்தோரணங்களாலும் அணி செய்யப்பட்டிருந்தன. சாலைகள் முழுக்க தோரண வளைவுகள் அமைக்கப்பட்டு அவற்றின்மேல் கலிங்கத்தின் சிம்மக்கொடியும் விராடபுரியின் காகக்கொடியும் பறந்தன. மலர்த்தூண்களும் அவற்றிலாடிய பட்டுத் திரைச்சீலைகளும் அணிப்பாவட்டாக்களும் மலர்க்காடு என விழிமயங்க வைத்தன.
உத்தரன் “கலிங்கத் தூதுக்குழுவினருக்கான வரவேற்பு அணிச்செய்கைகள்” என்றான். “மூன்று நாள் முன்னதாகவே நகரில் முரசறைந்து அனைவருக்கும் செய்தியை அறிவித்துவிட்டிருக்கிறோம். இன்று நகரமே பொலிந்து தூதுக்குழுவை வரவேற்க ஒன்றுகூடும். அந்தியில் குடியவையில் அத்தனை குடித்தலைவர்களும் வந்து அமர்வார்கள். அவர்களின் அரசியின் பெயரை அவர்கள் அறியும் முதற்தருணம் அது. வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு என்பதை அவர்கள் அறிவார்கள்.” கஜன் “அந்த வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது” என்றான்.
குதிரைக்கொட்டிலை நோக்கிச்செல்லும் பாதையை நோக்கி திரும்பிய உத்தரன் “நான் இங்கு எதற்காக வந்திருக்கிறேன் தெரியுமா?” என்றான். “புரவிப்பயிற்சிக்காக” என்றான் கஜன். “தாங்கள் பயில வேண்டியது ஒன்றுமில்லையென்றாலும் எப்போதும் பயிற்சியை விட்டுவிடுபவரல்ல. அஸ்தினபுரியின் வில்விஜயன் ஒவ்வொரு நாளும் புலரியில் வில்தொட்டு பயிற்சி எடுப்பான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.” உத்தரன் “ஆம், பயிற்சியை நான் தவறவிடுவதில்லை” என்று சொன்னான். “ஆனால் இன்று வெறும் பயிற்சிக்காக நான் வரவில்லை. காரகனில் ஏறிக்கொண்டு நகர் வீதிகளில் சுற்றிவர எண்ணுகிறேன்.”
“ஆனால் காரகன்…” என்று கஜன் சற்று தயங்க உத்தரன் “இன்று அவன் கன்றுக்குட்டிபோல என் கைக்கு அடங்குகிறான். கலிங்கத் தூதுக்குழு கோட்டைவாயிலுக்குள் நுழைந்து மங்கல இசையுடனும் குரவையொலியுடனும் அரண்மனை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அவர்களை மின்னல்போலக் கடந்து ஒரு கரும்புரவி செல்லும். அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்க அமைச்சர்கள் அதுதான் முடிசூடி நாட்டை ஆளப்போகும் இளவரசர் உத்தரர் என்பார்கள். பயிற்சி முடிந்து விரைந்து அரண்மனைக்குச் செல்கிறார். நாம் அங்கு செல்வதற்குள் நீராடி ஆடை மாற்றி அரசணிக்கோலத்தில் அவைக்குச் சென்றுவிடுவார். நாம் அவையில் அவரைப் பார்க்கும்போது அப்போது வரைந்து முடிக்கப்பட்ட அணிஓவியம்போல் இருப்பார் என்பார்கள்” என்றான்.
“ஆம், மாவீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முகங்கள் கொண்டவர்கள்” என்றான் கஜன். “மூடா! மூடா!” என உத்தரன் நகைத்தான். “உண்மையை சொல்கிறாய். காரகனைப்போன்ற ஒரு புரவியை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். அப்பெரும்புரவிமேல் ஏறிச்செல்கையில் நான் யாரென்பதை பிறிதெவ்வகையிலும் அறிவிக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றான். “ஆம், உண்மை” என்று கஜன் சொன்னான். “இணையான புரவியில் கிரந்திகன் தங்களைத் தொடர்ந்து வருவான். தங்கள் ஏவலரும் எத்தனை ஆற்றல் மிக்கவர்கள் என்பதை அவர்கள் அறியட்டும்.” அவனை திரும்பி நோக்கியபின் “ஆம்” என்று உத்தரன் சொன்னான்.
குதிரைக்கொட்டிலின் முற்றத்தில் அவர்கள் சென்றிறங்கியபோது எவரும் இருக்கவில்லை. அவர்களை வரவேற்க சற்று பொழுது கழிந்தே உள்ளிருந்து நாமர் ஓடி வந்தார். “எங்கே குதிரைக்காரர்கள் அனைவரும்?” என்றான் உத்தரன் இறங்கியபடி. “புரவிப்பயிற்சிக்காக காட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இன்று கலிங்கத் தூதுக்குழு வருவதனால் தாங்கள் வர வாய்ப்பில்லையென்று சொல்லப்பட்டது” என்றார் நாமர். “யார் சொன்னது? நான் சொல்லாமல் யார் சொன்னது?” என்று உத்தரன் கேட்டான். “இளவரசே, தங்கள் அரண்மனையில் தாங்களேதான் சொன்னீர்கள்” என்றார் நாமர். “நானா? நான் சொன்னேனா?” என்றான் உத்தரன். “ஆம், இளவரசே. என்னிடம் சொன்னீர்கள்” என்றார் நாமர்.
கஜன் கண்காட்ட அதை புரிந்துகொண்டு நாமர் “ஆனால் வரக்கூடும் என்றும் சொல்லப்பட்டது. நான் பிழையாக புரிந்துகொண்டேன்” என்றார். “என் நினைவு பிறழ்வதில்லை…” என்று உத்தரன் சொன்னான். “சரி, கிரந்திகனை அழைத்து வா. காரகன் உடனே ஒருங்கட்டும். நான் இப்போதே கிளம்பவேண்டும்.” நாமர் “கிரந்திகன் இங்கே இல்லை. அவர்தான் புரவிகளுடன் காட்டுக்கு சென்றிருக்கிறார்” என்றார். “அவன் எதற்கு காட்டுக்கு செல்லவேண்டும்?” என்றான் உத்தரன். “குதிரைகளுடன்…” என்று நாமர் சொல்ல இடைமறித்து “அவனை உடனே காட்டிலிருந்து அழைத்துவர ஆணையிடுகிறேன்” என்றான் உத்தரன். “இளவரசே, காடு இங்கிருந்து தொலைவில் இருக்கிறது. அவர்களை அழைத்து வருவதென்றால் பத்து நாழிகையாவது ஆகும்” என்றார் நாமர்.
உத்தரன் பொறுமையை இழந்து “காரகனை பூட்டி அழைத்து வாருங்கள்… உடனே” என்றான். “காரகனை…” என அவர் தயங்க “சொன்னதை செய்… செல்!” என்று உத்தரன் கூவினான். நாமர் உள்ளே செல்ல கஜன் உடன்சென்றான். நாமர் “என்ன சொல்கிறார்? காரகன் இவரை கடித்தே கொன்றுவிடும்” என்றான். “இல்லை, நான் ஒரு வழி வைத்திருக்கிறேன்” என்றான் கஜன். “வருக, சொல்கிறேன்.”
காரகன் அவர்கள் தன்னை நெருங்குவதை முன்னரே உணர்ந்து செவிகளை பின்னால் கோட்டி முன்னங்காலால் கற்தரையைத் தட்டி மூச்சு சீறியது. அதன் உடலில் தசைகள் விதிர்த்து அசைந்தன. கஜன் அதனருகே சென்று அதன் கீழ்க்கழுத்தை வருடினான். அது கழுத்தை வளைத்து தலையைத் திருப்பி அவன் தோளை நக்கியது. அவன் “சேணத்தை கொண்டுவாருங்கள்” என்றான். நாமர் “சேணத்தையா? இந்த மூடன் விழுந்து செத்துவிடுவான்… இதை என்னவென்று எண்ணினாய்? குதிரையல்ல, சிம்மம் இது” என்றார்.
“அவர் ஏறப்போவதில்லை… நான் ஒரு சூழ்ச்சி செய்யவிருக்கிறேன்” என்றான் கஜன். நாமர் சேணத்தை எடுத்துவந்து புரவிமேல் போட்டார். அதன் நாடாக்களை அவர் இழுத்துக் கட்டியபோது முதல் நாடாவை எடுத்து காரகனின் முன்வலக்காலைச் சுற்றி கட்டினான் கஜன். “என்ன செய்கிறாய்?” என்றார் நாமர். “அது நடக்கையில் சற்று நொண்டும்” என்றான் கஜன். நாமர் முகம் மலர்ந்து “ஆம், அது நன்று. அவரிடம் காட்டுவோம்” என்றார்.
அவர்கள் புரவியுடன் கொட்டில் முகப்புக்கு வந்தனர். நாமர் “உண்மையில் இவரைப் பார்க்கும்போதுதான் வாழ்க்கைமேல் நம்பிக்கையே வருகிறது. எக்குலத்தில் பிறந்தாலும் மூடன் மூடனே…” என்றார். காரகன் முன்னங்காலை இழுத்து இழுத்து வைத்து நடந்து வந்தது. “அதற்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை” என்றார் நாமர்.
உத்தரன் உரத்த குரலில் “மூடர்களே, அங்கே என்ன செய்கிறீர்கள்? விரைந்து வருக!” என்றான். கஜன் “அரசே, காரகனைக் காட்டவே கொண்டுவந்தோம். அதன் குளம்பு ஒன்று விரிந்துள்ளது. கமுக்கட்டில் வலி இருக்குமென நினைக்கிறேன். இன்று அது ஊர்வதற்கு உகந்தது அல்ல” என்றான். நாமர் “சந்திரிகை என்னும் அழகிய வெண்புரவி உள்ளது. விரைவானவள். தாங்கள் ஆணையிட்டால் அவளை இப்போதே ஒருக்கிக் கொண்டுவருவேன்” என்றார்.
ஒருகணம் தயங்கி காரகனின் கால்களை நோக்கிய உத்தரன் “இதுவே போதும்…” என்றான். “இது ஓடவியலாது, இளவரசே” என்றான் கஜன். “கால் சற்று நொண்டுவதும் நன்றே… கிரந்திகன் இல்லை என்பதனால்…” என்ற உத்தரன் “நான் நகருக்குள் செல்கிறேன். அவன் இருந்தால் எதிரே வருபவர்களை எச்சரிக்க முடியும்” என்றான். நாமர் “கோழை” என்று மெல்ல சொன்னார். “சேணமிட்டுவிட்டீர்களா? நன்று…” என்று உத்தரன் வந்து நாமரின் கையில் இருந்து சவுக்கை வாங்கிக்கொண்டான்.
காரகன் இருமுறை கால்களை உதறியது. பின்னர் குனிந்து நோக்கி உறுமியது. அது காலில் தோல்பட்டை தடுக்குவதை புரிந்துகொண்டுவிட்டது என்று கஜனுக்குப் புரிந்தது. காலை இருமுறை உதறிவிட்டு ஒடிப்பதுபோல முழங்காலை மடித்து அதேபொழுதில் வயிற்றை எக்கி உடலைக் குறுக்கி நாடாவினூடாக காலை வெளியே எடுத்துவிட்டது. இருமுறை உதறிவிட்டு தலையை நிமிர்த்தி பிடரி உலைய ஒருமுறை காலெடுத்து வைத்து நின்றது.
உத்தரன் “நான் விரும்புவது இதன் இந்த நிமிர்வைத்தான்…” என்றபடி அதன் விலாவை தொட்டான். காரகன் அசைவில்லாமல் நின்றது. அதன் காதுகள் மட்டும் பின் மடிந்தன. கஜன் அதன் கடிவாளத்தைப் பற்றி அதன் காதில் “அளிகூர்க… வேந்தே, அளிகூர்க” என்றான். “என்ன செய்கிறாய்? கொடு கடிவாளத்தை” என்று உத்தரன் கைநீட்டினான். கடிவாளத்தை அளித்துவிட்டு “வேந்தே, எளியமானுடர். வேந்தே, தங்களை வணங்குகிறோம்… அளிகூர்க, அரசே” என்றான் கஜன். “செல்வோம்… அங்கே என்ன செய்கிறாய்?” என்றான் உத்தரன். கஜன் தன் புரவியில் ஏறிக்கொண்டான். நாமரின் விழிகளை முழுமையாக தவிர்த்தான்.
“செல்வோம்” என்றபடி உத்தரன் புரவியை குதிமுள்ளால் தொட அது கணை என எழுந்து விரைந்தது. அதனுடன் விரைந்தபடி கஜன் “இளவரசே, சவுக்கை சொடுக்கவேண்டாம். அதன் ஒலியே எழலாகாது. காரகன் அதை விரும்புவதில்லை” என்றான். “ஆம், நான் அறிவேன்” என்றான் உத்தரன். அவர்கள் சிறிய சாலை வழியாக விரைந்தனர். காரகனின் குளம்படிகளின் எடையை ஓசைகள் வழியாக கஜன் உணர்ந்தான். முதுகிலேயே அதன் அதிர்வு விழுவதுபோலிருந்தது. எவ்வளவு பெரிய புரவி என எண்ணிக்கொண்டான். பிடரிமயிர் காற்றில் அலைபாய்ந்தது. கரிய சிம்மம், முரசுமேல் விழும் முழைத்தடிகள்போல. அதன் குளம்புகளை நோக்கியபடியே சென்றான்.
அரசப்பெருவீதியை அடைந்தபோது தரையெங்கும் அரிமலர் பெய்து பரவியிருப்பதைக் கண்டான். உப்பரிகைகளிலும் முகமண்டபங்களிலும் சாளரங்களிலும் கலைந்துகொண்டிருந்த பெண்கள் ஓடிவந்து அவர்களை நோக்கினர். சாலையோரங்களில் நின்றவர்கள் ஓசைகேட்டு பதறி விலகினர். தொலைவில் முரசுகளும் மங்கலப் பேரிசையும் முழங்கிக்கொண்டிருந்தது. வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் அதனுடன் கலந்தன. உத்தரன் “கடந்து சென்றுவிட்டனர்” என்றான். “ஆம்” என்றான் கஜன்.
அவன் அறியாமல் எண்ணியது அப்பொழுதே நிகழ்ந்தது. “ஏய்! ஏய்!” என உவகைப்பெருக்குடன் கூவிய உத்தரன் காரகனை சவுக்கால் ஓங்கி அறைந்தான். கனைத்தபடி முன்னிரு கால்களை காற்றில் தூக்கி எழுந்த காரகன் சீறியபடி ஒரு அணித்தூணை தட்டித்தெறிக்கவிட்டு சாலையில் பாய்ந்தது. “இளவரசே! இளவரசே!” என்று கூவியபடி கஜன் தொடர்ந்தான். தன் புரவியை மேலும் மேலுமென ஊக்கினான். அதற்குள் நெடுந்தொலைவு சென்றிருந்தது காரகன். அதன்மேல் உடலால் அதை அள்ளிப்பற்றியபடி உத்தரன் அமர்ந்திருந்தான்.
முன்னால் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தை கஜன் கண்டான். அதைக் கண்டு காரகன் சற்றே விரைவழியுமென அவன் எண்ணினான். ஆனால் அந்நிரையைச் சிதறடித்தபடி அது உள்ளே புகுந்தது. சொல்லற்ற ஓலமாக உத்தரன் அலறுவது அக்கூச்சல்களுக்கு நடுவிலும் கேட்டது. காரகன் முன்னால் சென்ற வண்டியை ஒதுங்கிக் கடந்து இரு புரவிகளை இடித்து இருபக்கம் தள்ளிவிட்டு முன்னால் பாய்ந்தது. உத்தரனின் கால் ஒரு தூணில் முட்டிக்கொள்ள அவன் அலறியபடி நிலத்தில் ஒருக்களித்து விழுந்து உருண்டு துடித்தான். தொலைவிலிருந்து பார்க்க ஓர் ஆடை விழுந்து காற்றிலாடுவது போலிருந்தது.
கடிவாளங்கள் இழுக்கப்பட்ட தேர்ப்புரவிகள் தலைகளைத் திருப்பி வாய்தூக்கி கனைத்தன. குளம்புகள் ஒன்றுடனொன்று முட்ட அங்குமிங்கும் திரும்பிக்கொண்டு நின்றன. பின்மரங்கள் உரசி ஒலிக்க, அச்சாணிகள் முனக தேர்ச்சகடங்கள் நிலைத்தன. தேர்களிலிருந்து இறங்கி ஓடிய கலிங்க இளவரசர்கள் உத்தரனை பற்றி தூக்கினர். அடிபட்ட கால் நீண்டிருக்க தொங்கும் தலையுடன் அவன் நினைவிழந்திருந்தான். “இளவரசர்! இளவரசர் உத்தரர்!” என்று விராடநாட்டுக் காவலர் கூவினார்கள். அனைத்து திசைகளிலிருந்தும் காவலரும் பிறரும் உத்தரனை நோக்கி கூடினர். கூச்சல்களும் ஆணைகளும் உரக்க எழுந்தன. கஜன் சோர்வுடன் புரவியை கடிவாளம் பற்றி நிறுத்திவிட்டு மெல்ல நிலத்தில் இறங்கி தலைகுனிந்து நின்றான்.