இல்லக்கணவர் -கடிதங்கள்

dog

 

அன்புள்ள ஜெ,

வணக்கம், தங்களின் இல்லக்கணவர் பதிவை இன்று வாசித்தேன் மிகவும் இறுகிய திங்கள் காலை பொழுதின் சற்றே எனக்கு ஒரு புன்னகையை தந்து சென்றது, தங்களையே பகடி செய்வது என்பது இலக்கியவாதிக்கு மட்டுமே உரித்தானது, மேலும் ஆண்கள் வீட்டு வேலை செய்தல் என்பதே நம் சமூகத்தின் கேலிக்குரியதாக உள்ளது, அந்த சூழலில் ஒரு எழுத்தாளர் தம் அந்தரங்கங்களை தெரிவிப்பது என்பது ஒரு துணிச்சலான பதிவே.

அன்புடன்,
ந.முரளி

அன்புள்ள ஜெ

இல்லக்கணவன் கட்டுரை வாசித்தேன். என் தொழிலில் ஒரு சிக்கல் வந்து நான்கு ஆண்டுக்காலம் வீட்டில் இருந்தேன். மனைவி ஆசிரியை அதில் வாழ்ந்தோம். அப்போது நான் சந்தித்த இளக்காரங்களும் மனவருத்தங்களும் மிகமிக அதிகம். என்னை வாய்யா மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். வீட்டோடு மாப்பிள்ளை என்ற அர்த்தம் என்று எனக்கு கொஞ்சநாள் கழித்துத்தான் புரிந்தது. அதேபோல அதிர்ஷ்டக்காரன்யா நீ என்பார்கள். ஒருநாள் கையில் அயர்ன் பாக்ஸ் சுட்டுவிட்டது. மாப்ள கரண்டி பட்டுவிட்டதா என்றர்கள். நான் எங்கேயுமே செல்வதில்லை. கல்யாணங்களுக்குக்கூட. மீண்டும் தொழில் ஆரம்பித்து மேலே வந்தபிறகுதான் மனுஷனாக ஆனேன். நம் சமூகத்தின் மனநிலை இது

செல்வா

அன்புள்ள ஜெமோ

இல்லக்கணவர் என்ற நையாண்டிக்கட்டுரை சுயமாகப் பகடி செய்வதாக இருந்தது. சிரித்தேன். ஆனால் அந்தக்கட்டுரைகூட இன்றிருக்கும் நிலையைக் காட்டுவதாகவே உள்ளது. ஆண்கள் வீட்டுவேலைசெய்வது இங்கே சுத்தமாகக் கிடையாது. செய்தால் அதை எவரும் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஆனால் பெண்கள் ஆபீஸ் வேலைசெய்வதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்

எஸ்

இல்லக்கணவர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83
அடுத்த கட்டுரைஎவருக்காக விளக்குகிறோம்?