‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82

81. முகம்பரிமாறல்

flowerசேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள்.

விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து கட்டைகளை சிறுசுத்தியலால் தட்டி இறுக்கினாள். இன்னொருத்தி யாழ் தந்திகளை முறுக்கி விரல்களை ஓட்டி சுதி நோக்கினாள். அதுவரை பாடிக்கொண்டிருந்த அவை குழந்தைகளென்றாகி சிணுங்குவதாக முக்தன் நினைத்தான். சைரந்திரியின் பக்கவாட்டு முகத்தில் தெரிந்த மென்னகையை நோக்கியபோது அவன் ஒன்றை உணர்ந்தான், அவளுக்கு அவன் நோக்குவதும் தெரியும்.

உளஅதிர்வுடன் அவன் விழியோட்டி எதிர்ப்பக்கத்தின் வெண்கலக் கதவுமுழையில் தெரிந்த ஒளித்துளியை கண்டான். பின்னகர்ந்து சுவரில் சாய்ந்துகொண்டான். இவள் ஷத்ரிய குலத்தவள். போர்க்கலை பயின்று உடலை விழியாக்கியவள். ஏன் இங்கு வந்திருக்கிறாள்? மீண்டும் அரசியை பார்த்தான். அவள் பற்களைக் கடித்தபடி பேசிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவளை எண்ணி ஏளனமும் இரக்கமும் எழுந்தன. உடனுறைந்தும் சைரந்திரியை அரசி உணர்ந்திருக்கவில்லை. தான் பேசும் சொற்களால் அவளை அச்சுறுத்தவோ துயருறுத்தவோ முயல்கிறாள். அவன் புன்னகையுடன் வேலை கைமாற்றிக்கொண்டான்.

விறலி மீண்டும் வந்து மேடைமணையில் அமர்ந்தாள். அவள் தோழியர் இரு பக்கமும் அமர்ந்து யாழையும் தண்ணுமையையும் மடியில் வைத்துக்கொண்டனர். அவள் குறுமுழவை எடுத்து விரலோட்ட அது மெல்ல விம்மியது. அவ்வொலியில் பேசிக்கொண்டும் வேறுபக்கம் நோக்கிக்கொண்டும் இருந்த சேடியர் அனைவரும் அசைவுகொண்டு ஒருங்கமைந்தனர். அரசி இறுதியாக உத்தரையிடம் சில சொல்லிவிட்டு பெருமூச்சுடன் மேடையை நோக்கினாள்.

சைரந்திரி மேடையை நோக்கிக்கொண்டிருப்பதை ஓரவிழியால் கண்டு அவள் அமைதியிழப்பது தெரிந்தது. சைரந்திரி அறியாமல் அவளைப் பார்க்கவேண்டும் என விரும்பி அவள் மெல்ல திரும்பி நோக்க சரியாக அத்தருணத்தில் திரும்பிய சைரந்திரி அரசியை நோக்கி புன்னகையுடன் தலைதாழ்த்தினாள். அரசி திடுக்கிட்டு விழிவிலக்கிக்கொண்டாள். அவள் முகத்தில் தெரிந்த பதற்றத்தைக் கண்ட முக்தன் சிரிப்பை அடக்கியபடி முகம் திருப்பிக்கொண்டான்.

விறலி மீண்டும் தமயந்தியின் கதையை சொல்லத் தொடங்கினாள். “குண்டினபுரியில் முடிசூட்டிக்கொண்ட பீமபலன் தன் தமக்கையைத் தேடி நூற்றெட்டு வைதிகர்களை பாரதவர்ஷமெங்கும் அனுப்பினான். ஆயிரத்தெட்டு ஒற்றர்களை அனைத்து சாலைகளையும் உளவு நோக்க அனுப்பினான். தன் அக்கையைக் குறித்த செய்தி கொண்டுவருபவர்களுக்கு ஆயிரம் பொன்னும் ஆயிரம் பசுக்களும் பரிசளிப்பதாக முரசறிவித்தான். ஆற்றில் விழுந்த வைரக் கணையாழியை வலையிட்டுத் தேடுவதுபோல அந்தணரும் வணிகரும் ஒற்றரும் சூதரும் தமயந்தியை பாரதவர்ஷமெங்கும் தேடலானார்கள்.”

பாஸ்கரரின் தவச்சாலையிலிருந்து கலிங்கப் பெருவணிகர் குழுவுடன் வடக்கே சென்ற தமயந்தி வழியில் அவ்வணிகர் குழு காட்டு யானைகளால் தாக்கப்பட்டு சிதறடிக்கப்பட தான் மட்டும் காட்டு மரம் ஒன்றில் ஏறி உயிர் தப்பினாள். அங்கிருந்து தன்னந்தனியாக நடந்துசென்று சேதிநாட்டை அடைந்தாள். நெடுவழி நடந்து அவள் உடல் கன்றி பொலிவிழந்தது. நீள்குழல் உதிர்ந்த தேம்பியது. உணவின்றி மெலிந்து நோயுற்று நலிந்து சூக்திமதி நகருக்குள் நுழைந்தாள்.

அரசியென அமர்ந்திருந்தவளுக்கு தொழிலென்றும் புழக்கமுறையென்றும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. யானையிலும் பல்லக்கிலும் அமர்ந்தே அவள் நகரை கண்டிருந்தாள். மண்ணில் நடந்தறிந்த நகர் பிறிதொன்றாக இருந்தது. அங்கே எவரும் எவரையும் நோக்கவில்லை. எவரிடமும் பிறர் கனியவில்லை. பட்டி ஆடுகள் என மானுடர் தோள்முட்டி சினைத்தபடி எல்லைக்குள் ததும்பிக்கொண்டே இருந்தனர். அவள் அறிந்த ஆட்டநெறிகள் ஏதும் செயல்படாத பெருங்களம். அறியமுயன்று முட்டி மோதி ஏதோ கணத்தில் அவள் அகப்பதற்றம் ஒன்றை அடைந்தாள். அக்கணமே அனைத்தும் மேலும் சிதறிவிரிந்து முற்றிலும் அறியமுடியாதவை என்றாயின. பகைகொண்டு சூழ்ந்தன.

நீண்ட வழித்தனிமையில் தன்னுள் பேசிப்பேசி மொழியை இழந்துவிட்டிருந்தாள். சூக்திமதியின் தெருக்களில் அலைந்து எவரேனும் அளித்திடும் உணவை உண்டு தெருக்களில் உறங்கினாள். அவளை பிச்சி என்றெண்ணிய அங்காடிச் சிறுவர்கள் கற்களை வீசித் துரத்தினர். அவர்களிடமிருந்து தப்ப தெருவில் ஓடிக்கொண்டிருந்த அவளை ஆலயவழிபாடு முடித்து பல்லக்கில் வந்துகொண்டிருந்த சேதிநாட்டு அரசனின் அன்னை கண்டாள். நடையிலிருந்தே அவள் அரசகுலத்தாள் என்று அறிந்து தன்னுடன் அழைத்துச்சென்றாள்.

சேதிநாட்டு அரண்மனையில் தமயந்தி அரசனின் தங்கை சுனந்தையின் சேடியென்றும் தோழி என்றும் வாழ்ந்தாள். அரசிக்கு அணுக்கி என அமையும் ஷத்ரியப் பெண்ணையே சைரந்திரி என்பர். மிகச்சில நாட்களிலேயே சைரந்திரி மீண்டும் தன் உயிர்த்துடிப்பை பெற்றாள். அரசுநூலும் காவியமும் கலைகளும் அறிந்த அவளை சுனந்தை ஒருகணமும் பிரியாதவளானாள். அவள் சொல் பெற்றே எதையும் செய்தாள். இளவரசிக்கு அவள் ஒவ்வொரு நாளும் பாடம் சொன்னாள். களிக்காட்டில் வேட்டைக்கு அழைத்துச்சென்றாள். புரவி ஊரவும் யானையை மெருக்கவும் கற்றுக்கொடுத்தாள்.

தமயந்தி ஒருபோதும் குன்றாத ஊக்கம் புன்னகை என விளங்கும் முகம் கொண்டிருந்தாள். அரண்மனை அகத்தளத்தில் சுடரேற்றப்பட்டதுபோல அவள் விளங்குவதாக சேடியர் சொன்னார்கள். “சிறுமியருக்குரிய துள்ளலும் கன்னியருக்குரிய சிரிப்பும் அன்னையருக்குரிய கனிவும் கொண்டவள்” என்று அரசி சுகிர்தை சொன்னாள். மூதரசி அவளை நகைகளாலும் ஆடைகளாலும் அணிசெய்தாள். தன்னருகே நிகரென அமர்த்தி உணவளித்தாள். “மங்கலையே, நீ யார்? உன் முகத்தை எங்கோ நான் கண்டிருக்கிறேனே?” என்று அவள் கேட்டாள். “அதை மட்டும் நான் உரைக்கப் போவதில்லை, அரசி. காலம் வருகையில் அது தெளியட்டும்” என்று தமயந்தி சொன்னாள்.

அவ்வினாவைக் கேட்டதுமே அவள் முகம் மங்குவதைக்கண்டு அதை தவிர்த்தனர். பின்னர் அவள் எவரென்பது வெளிப்பட்டால் அங்கிருந்து சென்றுவிடுவாள் என அஞ்சி அவ்வெண்ணத்தையே அவர்கள் ஒழித்தனர். தமயந்தி அவர்களுடன் அவைமன்றுக்குச் செல்வதில்லை. நகர்த்தெருக்களிலோ ஆலயத்திலோ பொதுவிழிகள் முன் தோன்றுவதையும் தவிர்த்தாள். விறலியர் பாடும் அவைகளில் பின்நிரையில் அரையிருளிலேயே அமர்ந்தாள். ஆனால் பிறர் அறியாமல் அவள் குண்டினபுரியில் என்ன நிகழ்கிறதென்று அறிந்துகொண்டிருந்தாள்.

அந்நாளில் சுனந்தைக்கு மணத்தூதுடன் அந்தணராகிய சுதேவர் சூக்திமதிக்கு வந்தார். பத்மாவதி நகரை ஆண்ட பார்ஷிவ நாகர்குலத்தின் அரசனான விருஷசேனன் தன் மைந்தன் விருஷநாகனுக்காக அவளை கேட்டிருந்தான். அவையில் அச்செய்தி முன்வைக்கப்பட்டபோது முரண்பட்ட குரல்கள் எழுந்தன. “அவர்கள் நாகர்களில் இருந்து உருவான ஷத்ரியர். பரசுராமரால் அனலளிக்கப்பட்டவர்கள்” என்று அமைச்சர் தப்தர் சொன்னார். “குலப்பெருமை இல்லையென்றாலும் வளர்ந்துவரும் படைவல்லமையும் வாய்ப்பான வணிகமும் கொண்டவர்கள். சேதிக்கு நலம் சேர்க்கும் படைக்கூட்டாகவும் அமையும் இவ்வுறவு.”

ஆனால் அரசி சுகிர்தை “அரசனுக்கு பதினெட்டு மைந்தர்கள். அவர்கள் பூசலிட்டால் அம்மணிமுடி ஒருகணமும் நிலைகொள்ளாது” என்றாள். முதலில் அமைச்சர் சொன்னதை ஏற்றுக்கொண்ட அவை மெல்ல அரசியை நோக்கி சென்றது. இளவரசியின் ஒப்புதலைப் பெற்றபின் முடிவெடுக்கலாம் என்று கலைந்தது. அரசி சொல்வதையே இளவரசி சுனந்தை சொல்வாள் என அவையோர் எண்ணினர். ஆனால் மறுநாள் அவையில் இளவரசி தன் மணஒப்புதலை அறிவித்துவிட்டாள் என்றாள் முதுசெவிலி. அவை அதை வாழ்த்துரைத்து ஏற்றுக்கொண்டது.

சுதேவர் அரசியைச் சந்தித்து விடைபெறும்போது எப்படி அம்முடிவு எட்டப்பட்டது என இயல்பாக வினவினார். “அது இளவரசியின் அணுக்கியான சைரந்திரியின் சொல். பதினெட்டு இளவரசர்கள் என்பதே ஒற்றுமையை உருவாக்கும் என்று அவள் எண்ணுகிறாள்” என்றாள் அரசி. “பதினெட்டில் ஓரிருவர் முரண்பட்டால் பிறர் இணைந்து அவர்களை எளிதில் வெல்லமுடியும். நிகரென ஒருவன் எழுந்து உரிமைகோர இயலாது என்றாள். அது மெய்யென்றே தோன்றியது.”

சுதேவர் நகைத்து “மெய், அரசியல் வரலாறு காட்டுவது அதையே” என்றார். “அத்துடன் ஒற்றரை அழைத்து விருஷநாகரின் இளையோர் அவரிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று உசாவினாள் சைரந்திரி. அவர்கள் அவரிடம் எதையும் கேட்பதில்லை. தாங்கள் எண்ணியதைச் செய்கிறார்கள் என்றான் தலைமை ஒற்றன். நான் அதெப்படி என சினம்கொள்ள சைரந்திரி அது நன்று என்றாள். ஒவ்வொன்றுக்கும் மூத்தவரை நம்பினார்கள் என்றால் அவர்களுக்கு தன்னெண்ணம் இல்லை என பொருள். அவர்களை பிறர் வழிதவறச் செய்யக்கூடும். எங்கோ ஓரிடத்தில் அவர்கள் ஆணவம் புண்படலாம். அன்று அவர்கள் மீறிச்செல்லலாம் என்றாள்” என்றாள் அரசி.

சுதேவர் வியப்புடன் “மிகக்கூரிய நோக்கு, அரசி. அவர்களை நான்கூட இத்தனை தெளிவாக புரிந்துகொண்டதில்லை” என்றார். அரசி ஊக்கமடைந்து “தானென நிற்பவர்களே சிறந்தோர், அவர்கள் சித்தத் தெளிவுடன் மூத்தானுடன் நிற்பார்கள் என்றாள். அத்துடன் மூத்தவனின் உள்ளமென்ன என்று இளையோர் நன்கறிந்திருப்பதையும் அது காட்டுகிறது என்று விளக்கினாள். எனக்கு மாற்று எண்ணம் எழவேயில்லை” என்றாள்.

சுதேவர் “நான் அவளை காணலாமா?” என்றார். “அழைக்கிறேன்” என்றாள் அரசி. “வேண்டாம். அவள் அவைக்கு வரமறுக்கிறாள் என்றால் இங்கும் வரமாட்டாள். நானே சென்று அவளை பார்க்கிறேன். எங்கிருக்கிறாள் என்று மட்டும் சொல்க!” என்றார். “அங்கே கல்விச்சாலையில் இருக்கிறாள். உடன்அமர்ந்து இளவரசி காவியம் பயில்கிறாள்” என்றாள் அரசி. சுதேவர் சேடியொருத்தியுடன் கல்விநிலைக்குள் நுழைந்தபோதே தமயந்தியை கண்டுகொண்டார். அவர் நோக்கைக் கண்டு எழுந்து நின்றதுமே தமயந்தியும் அவர் தன்னை அறிந்ததை உணர்ந்துகொண்டாள்.

“அரசி, தங்களுக்காக பாரதவர்ஷமெங்கும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் விதர்ப்பத்தினர்” என்று சுதேவர் சொன்னார். “ஆம், நான் அதை அறிவேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டடைந்து அழைத்துச் செல்லவேண்டும். அதுவே முறை. அதற்காகக் காத்திருந்தேன். வருந்தியழைக்காமல், வாயில்வந்து வரவேற்காமல் நான் குண்டினபுரிக்குள் நுழையமாட்டேன். அது என் கணவனுக்கும் நான் புகுந்த இல்லத்திற்கும் பெருமையல்ல” என்றாள் தமயந்தி. “நான் சென்று விதர்ப்பத்திற்கு செய்தியை அறிவிக்கிறேன். அரசவரிசையுடன் இளவரசர்களில் ஒருவர் நேரில் வந்து தங்களை அழைத்துச்செல்வார்” என்றார் சுதேவர்.

சுனந்தையும் அரசியும் அவள் தமயந்தி என்றறிந்ததும் திகைத்தனர். பின் உணர்வுக் கொந்தளிப்புடன் அவளை தழுவிக்கொண்டனர். அவள் அடைந்த துயர்களைக் கேட்டு விழிநீர் விட்டனர். ஆனால் மூதரசி அவளை அழைத்து தலைதொட்டு வாழ்த்தி “நான் அதை முன்னரே அறிந்துவிட்டிருந்தேன், மகளே. தசார்ணநாட்டு அரசர் சுதாமரின் இரு மகள்களில் நான் இளையவள். உன் மூதன்னை வாஹினி மூத்தவள். உன்னில் நான் கண்டது என் அக்கையின் இளமை முகத்தை. நளன் கதையை விறலி ஒருத்தி சொல்லக்கேட்டு உன் விழி மாறியதைக் கண்டதும் புரிந்துகொண்டேன். முடிந்தவரை நீ என்னுடன் இருக்கட்டும் என என் உள்ளம் விழைந்தது” என்றாள்.

அப்போதே பேரரசி தமயந்தி நகரில் உறைவதை அறிவிக்கும்பொருட்டு நிஷதநாட்டின் மின்கதிர்க் கொடியும் விதர்ப்பத்தின் கொடியும் சேதிநாட்டுக் கோட்டைமுகப்பில் ஏற்றப்பட்டன. பேரரசியை வாழ்த்தி நகரெங்கும் பெருமுரசுகள் முழங்கின. செய்தி பரவ நகரம் கொந்தளித்தெழுந்தது. அன்று மாலை அவள் கொற்றவை ஆலயத்திற்கும் இந்திரகோட்டத்திற்கும் சென்றபோது கொடியேந்தி வீரன் முன்செல்ல மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் வழியமைத்தனர். அரசஅகம்படி உடன் சென்றது. முதன்மை முறைமை அளித்தனர் பூசகர். சூக்திமதியின் அரசவையில் அவளை அழைத்து பொற்தால எதிரேற்பளித்தனர். அவள் அவைபுகுந்தபோது செங்கோல் தாழ்த்தி அரசன் வரவேற்றான். வாழ்த்துரைத்தது குடியவை.

விதர்ப்பத்திலிருந்து ஏழு இளவரசர்கள் நூற்றெட்டு வண்டிகளில் பரிசில்களும் வரிசைகளுமாக சேதிநாட்டுக்கு வந்தனர். அவையை வணங்கி தமயந்தியை அழைத்துச்செல்ல ஒப்புதல் கோரினர். பேரரசிக்கு அளிக்கப்படும் அவைமுறைமைகளுடன் தமயந்தியை சேதிநாடு வழியனுப்பியது. நகரம் அணிகொண்டது. தெருக்களில் கூடிய மக்கள் வாழ்த்தொலித்து அரிமலர் தூவினர். பெருமுரசங்கள் முழங்கி விடையளித்தன. படையூர்வலமாக தமயந்தி விதர்ப்பத்திற்கு சென்றாள். அவளை வரவேற்க நாட்டு எல்லை முதல் சாலையெங்கும் மக்கள் காத்து நின்றிருந்தனர். கோட்டைமுகப்பில் பீமபலனும் இளையோரும் வந்து நின்றனர். பீமபலன் தன் வாளை உருவி அவள் காலடியில் தாழ்த்தி எதிரேற்றான்.

பொன்முகபடாம் சூடிய பட்டத்து யானைமேல் அமர்ந்து தமயந்தி குண்டினபுரிக்குள் நுழைந்தாள். பேரரசி நகர்புகுவதை அறிவித்து முரசுகள் முழங்க கோட்டைமுகப்பில் மின்கதிர்க்கொடி எழுந்தது. நகரம் களிவெறிகொண்டு வாழ்த்து கூவியது. வீரர்கள் வாள்களையும் வேல்களையும் வீசி கூச்சலிட்டனர். பெண்கள் நெஞ்சைப் பற்றியபடி விம்மினர். அவளை நோக்கி நோக்கி தங்கள் நினைவுகளிலிருந்து வரைந்தெடுத்துக்கொண்டனர். பின்னர் அக்கணம் எழுந்தவள்போல அவள் தெரியலானாள். அவள் அரண்மனையை நெருங்கியபோது வாழ்த்தொலிகள் முற்றாக அமைந்து நகரம் அமைதியாக அழுதுகொண்டிருந்தது.

அரண்மனை முகப்பில் காத்திருந்த அவள் அன்னையும் அரசியரும் விழிநீர் விட்டபடி அவளை தழுவிக்கொண்டனர். அன்னை நிலைமயங்கி கீழே சரிய சேடியர் தாங்கிக்கொண்டார்கள். அங்கே செவிலியருடன் நின்றிருந்த இந்திரசேனன் அவள் கால்தொட்டு வணங்க அவனை தலைதொட்டு வாழ்த்தினாள். இந்திரசேனையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டபோதுமட்டும் அவள் விழிநீர் கொண்டாள். மைந்தருக்கும் விழிநீரன்றி ஒரு சொல்லும் இருக்கவில்லை. அன்னையின் தொடுகையிலேயே அவர்கள் இறுக்கிச் செறித்து உள்ளடக்கியிருந்த துயரை உணர்ந்தனர். இந்திரசேனையை செவிலி அணைத்து கீழே விழாமல் கொண்டுசென்றாள்.

வலக்கால் வைத்து தமயந்தி அரண்மனை புகுந்தாள். அவளை அரசன் அழைத்துச்சென்று தன் அரியணையில் அமரச்செய்து செங்கோலை அவள் கையில் அளித்தான். அவள் தலையில் விதர்ப்பத்தின் முடியை குலமூத்தோர் அணிவித்தனர். அந்தணர் அவளை வாழ்த்தினர். குடிகளும் சான்றோரும் அவளை வணங்கினர். “என்றும் என் மூத்தவள் சொல்லுக்கு அப்பால் இந்நாட்டில் நெறியென ஒன்றில்லை. அவள் நோக்கில் இந்நகர் வெல்லும். அவள் அளியால் இது செழிக்கும்” என்றான் பீமபலன். அவையினர் “ஆம்! ஆம் !ஆம்!” எனக்கூவி ஆர்ப்பரித்தனர்.

தமயந்தி தன் இளையவன் பீமத்துவஜனை அவைக்கு அழைத்து தோளுடன் அணைத்து அருகமர்த்திக்கொண்டாள். பீமபாகு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த அவன் அவள் கால்களைத் தொட்டு வணங்கி அவள் அணைப்பில் விழிநீர் மல்கி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். குடியினர் ஒவ்வொருவராக வந்து அவளை வணங்கி கண்ணீர் பெருக குரல் உடைய அன்புரைத்தனர். அன்று நிகழ்ந்த உண்டாட்டில் பீமகர் மதுவுண்டு அனைத்து தன்கரைகளையும் மீறி அழுதுகொண்டே இருந்தார். தன் இளையோரின் மைந்தருடனும் தன் மைந்தருடனும் மலர்ச்சோலையில் இரவெல்லாம் விளையாடிய தமயந்தி புலரி எழுந்தபோதுதான் படுக்கைக்கு சென்றாள். தனிமையில் அவள் நளனை எண்ணி விழிநிறைந்தாள்.

flowerவிறலி முழவைத் தாழ்த்தி வணங்கியபோது சூழ்ந்திருந்தவர்கள் பாராட்டு ஒலிகளுடன் எழுந்தனர். முக்தன் அவர்களின் நோக்கு படாமல் விலகிக்கொண்டான். உள்ளே கலைந்த குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. பின்னர் அரசி கிளம்புவதை அறிவிக்கும்பொருட்டு முதற்சேடி தன் கையிலிருந்த வலம்புரிச் சங்கை முழக்கினாள். வாழ்த்தொலிகள் எழுந்தன. கொடியுடன் ஒருத்தி முன்னால் செல்ல அரசி தொடர்ந்து சென்றாள். அவளுக்குப் பின்னால் சைரந்திரி நடந்தாள்.

அவர்கள் சென்றபின் உத்தரை வெளியே வந்தாள். அவளுடன் இருந்த சேடியர் அவனை நோக்கினர். அவள் முன்னால் நடக்க முக்தன் பின்தொடர்ந்தான். அவள் இடைநாழியை அடைந்தபோது நின்று திரும்பி அவனிடம் “உமது பெயர் முக்தன் அல்லவா?” என்றாள். “ஆம், இளவரசி” என்றான். “உம்மிடம் ஆசிரியர் சொன்னதென்ன?” என்றாள். “உங்களுடன் இருக்க.” அவள் புன்னகைத்து “எனக்குக் காவலாகவா?” என்றாள். “ஆம்” என்றான். அவள் சிரித்து “அவர் உம்மை விலக்கியிருக்கிறார். இப்போது சென்றால் குடிலில் அவர் இருக்கமாட்டார்” என்றாள்.

முக்தன் ஒன்றும் சொல்லவில்லை. “அவர் பூனையைப்போல என என் தோழிகள் சொல்கிறார்கள். இங்கிருப்பதான தோற்றத்தை உருவாக்குகிறார். ஆனால் எங்கெங்கோ சென்று மீள்கிறார். அவருடைய தடம் இங்கு எவருக்கும் தெரிவதில்லை.” முக்தன் “ஆனால் காவலர்…” என சொல்லத்தொடங்க “காவலர் கண்மறைவது அவருக்கு ஒரு பொருட்டா என்ன?” என்றாள். முக்தன் “ஆம்” என்றான். “ஏன் உம்மை விலக்கினார் என எண்ணுகிறீர்?” என்றாள். அவனால் ஒன்றும் சொல்லக்கூடவில்லை.

“அவருக்கும் இங்கிருக்கும் சிலருக்கும் நாம் அறியாத உறவு உள்ளதென்று தோன்றவில்லையா உமக்கு?” என்றாள். அவன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “ஏறத்தாழ இரண்டுமாத காலத்திற்குள் இங்கே அறுவர் வந்துசேர்ந்தனர். அறுவரும் எளிய மானுடர் அல்ல. இங்கே நிகழ்வன ஒவ்வொன்றும் தேவர்கள் நிகழ்த்துவது போலுள்ளது. அதில் உச்சம் கீசகரின் மறைவு” என்றாள் உத்தரை. “அதை பாரதவர்ஷமே அறிந்துவிட்டது என்றான் ஒற்றன். ஏனென்றால் வெல்லப்பட முடியாதவர் என்னும் தோற்றம் கீசகருக்கு இருந்தது.”

“அவரை கந்தர்வர்கள்…” என்று முக்தன் சொல்லத்தொடங்க அவள் கைவீசி அதைத் தடுத்து “வலவன் கந்தர்வன் அல்ல” என்றாள். அவன் நின்றுவிட்டான். அவள் திரும்பிநோக்கி “என்ன?” என்றாள். “அவரா?” என்றான். “ஐயமுண்டா?” என்றாள். “நான் அவ்வண்ணம் எண்ணவே இல்லை, இளவரசி” என்றான். அவள் புன்னகை செய்தாள். பின்னர் “ஏதோ நம்மைச் சூழ்ந்து நிகழ்கிறது. இவ்வரண்மனையில் என்னைத் தவிர அரசகுடியினர் எவரும் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆபரை நம்பி இந்நாடு இயங்குகிறது” என்றாள்.

அவள் இதையெல்லாம் தன்னிடம் ஏன் சொல்கிறாள் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அரசகுடியினர் அவ்வாறு மிக எளியவர்களிடம் அணுக்கம் காட்டுவதும் மறுமுறை பார்க்கையில் முகமே அவர்களுக்குத் தெரிந்திருக்காது என்பதும் அவன் அறிந்தவையே. “நீர் இன்று கேட்ட கதையைப்பற்றி என்ன நினைக்கிறீர்?” என்றாள் உத்தரை. “அரசி தமயந்தியின் கதை… நன்று” என்றான். “நான் இக்கதையை இதுவரை பதினைந்து வடிவங்களில் கேட்டிருக்கிறேன். இங்கே நாகவிறலி சொன்ன கதையில் அவள் கார்க்கோடகனின் நஞ்சு படர்ந்து முதுமகளானாள். ஆகவேதான் அவளை சேதிநாட்டில் எவரும் அடையாளம் காணவில்லை” என்றாள் உத்தரை.

“ஆம், அதுவே பொருத்தமாகத் தெரிகிறது” என்றான் முக்தன். உத்தரை “அது நாகர்களின் கதை” என்றாள். “பீமகர் நாடுகளெங்கும் தேடியும் அவளை கண்டடைய முடியவில்லை. இறுதியில் தென்னகத்துக் கணியர் ஒருவரை அழைத்துவரச் செய்து அவள் பிறவிநூலை ஆராய்ந்தார். அவளுக்கு நாகக்குறை இருப்பதை அவர் கணித்துச் சொன்னார். அவள் ஆவணி மாதம் ஆயில்யம் மீன்பொழுதில் பிறந்தவள்.” முக்தன் “ஆம்” என்றான். “அவளை நாகம் கவ்வியிருப்பதை அவர் கண்டறிந்து சொன்னார். நாக கிரகணம் விலக பீமகர் விதர்ப்பத்தில் பெருவேள்வி ஒன்றை நிகழ்த்தினார். அதில் ஆயிரம் நாகங்கள் வந்து நிலம்கொத்தி ஆணையிட்டுச் சென்றன. இறுதியாக நிழலுருவாக வந்த கார்க்கோடகன் அவளைக் கொத்தியது தானே என்று ஒத்துக்கொண்டான்.”

சேடிகள் அப்பால் விலகி குரல் கேட்காத தொலைவில் நடக்க அவன் அவளுடன் தனியாக பேசிக்கொண்டு சென்றான். அது அவனுக்கு பதற்றத்தை அளித்தது. அதை ஒரு நூற்றுவர்தலைவன் நோக்கினால்கூட அவன் முற்றெதிரியாகிவிடுவான். அவனிடமிருந்து அரசகுடியினர் தன்னை காக்கவும் போவதில்லை. அவள் “கார்க்கோடகன் அவளிடமிருக்கும் தன் நஞ்சு அவளால் செரிக்கப்படுவதாகவும் அது முற்றிலும் மறையும்போது அவள் விடுபடுவாள் என்றும் சொன்னான். அப்போது அவள் தன்னுரு தெளியும், அவளை பிறர் எவரென்று அறிவர் என்றான். பீமகர் அதற்காக காத்திருந்தார்.”

“தமயந்தியின் உடல் மாறிக்கொண்டே இருப்பதை அகத்தளப் பெண்டிர் அனைவரும் அறிந்திருந்தனர். அவள் தோலின் சுருக்கங்கள் மறைந்தன. கூன் நிமிர்ந்துவந்தது. தளர்ந்த முகத் தசைகள் இறுகின. அவள் நாள்தோறும் இளமைகொண்டாள். புகைவிலகி சுடர் எழுவதுபோல அவளைப் பீடித்திருந்த ஒன்று அகன்றது. ஒருநாள் அவள் தன் படுக்கையில் துயின்றுகொண்டிருக்கையில் ஏதோ சொல்லக்கேட்டு உடன் துயின்ற சேடி எழுந்து நோக்கினாள். அவள் மலர்ந்த முகத்துடன் குரல் கனிந்து ஏதோ உரைத்தாள். அவள் கச்சு நனைய முலைப்பால் ஊறியிருந்ததை சேடி கண்டாள்.”

முக்தன் “ஆம் இளவரசி, இக்கதையை நான் இளமையில் கேட்டிருக்கிறேன்” என்றான். ஆனால் அக்கதையை அவன் அப்போதுதான் அறிந்தான். உத்தரை உளம் குலைந்துவிட்டாளோ என்னும் ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. “அப்போது அவள் முகத்தை நோக்கிய சேடி அவளை எங்கோ பார்த்திருப்பதை உணர்ந்தாள். மறுநாள் அவள் எழுந்தபோது மிக இளமையாக இருந்தாள். அரசி அவள் தமயந்தி என்பதை உடனே கண்டுகொண்டாள். அவள் முடிசூட்டு விழாவுக்கு அரசருடன் அவளும் சென்றிருந்தாள். தமயந்தி நிகழ்ந்த அனைத்தையும் உரைத்தாள். விதர்ப்பத்திற்கு செய்தியனுப்பப்பட்டது. அவளுடைய ஏழு இளவல்கள் பரிசில்களும் வரிசைகளுமாக வந்து அவளை அழைத்துச் சென்றனர். அவளைப் பற்றியிருந்த அரவுக்குறை முற்றிலும் விலக அவள் முன்னிருந்த எழிலை அடைந்தாள்.”

“ஆம்” என்றான் முக்தன். “முக்தரே, நானும் அரவுக்குறை கொண்டவள்தான், அறிந்திருப்பீர்” என்றாள் உத்தரை. அவள் அங்கே வந்துசேர்வதற்காகவே அதை சொல்லியிருக்கிறாள் என்று முக்தன் உணர்ந்தான். அவன் தலையசைத்தான். “அதை ஆசிரியரிடம் சென்று சொல்லும். விதர்ப்பினியாகிய தமயந்திக்கு இணையாகவே குருவின் அருளுமிருந்தது. என்னுடையது முற்றான அரவுக்குறை. நான் மீள்வது கடினம்.” முக்தன் என்ன சொல்வதென்று அறியாமல் “இளவரசி…” என்றான். “இதை இவ்வண்ணமே சென்று சொல்க!” என்றாள் உத்தரை. “ஆணை” என்றான் முக்தன்.

அவர்கள் படிகளை அடைந்தனர். “நீர் உடன்வரவேண்டியதில்லை. அவர் குடிலருகே காவலிரும். அவர் வரும்போது நான் சொன்னவற்றை அப்படியே சொல்லும்” என்றாள் உத்தரை படிகளில் ஏறியபடி. “அவரை நீர் அறிவீர்” என்று அவனை நோக்காமல் சொன்னாள். அவன் “இல்லை, இளவரசி” என்றான். “என்னைப்போலவே நீங்களும் அவரை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர். நான் பார்ப்பதன் மறுபக்கத்திலிருந்து.” அவன் நெஞ்சு படபடக்க “காவலனாக என் பணியை…” என்றான். அவள் இடைமறித்து “நான் அவரில் அகழ்ந்தெடுத்த உருவம் ஒன்று உண்டு. நீங்களும் அவ்வாறு ஒன்றை அகழ்ந்தெடுத்திருப்பீர்கள்” என்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டு மறுமொழி சொல்லாமல் நின்றான். “ஆம், எப்போதும் மேலே தெரிவது இனியது. ஆழ்ந்திருப்பது ஒவ்வாதது” என்று உத்தரை சொன்னாள். அவன் அப்போதும் மறுமொழி சொல்லவில்லை. அவள் திரும்பி “சொல்க!” என்றாள். முக்தன் தொண்டையைச் செருமி குரலை திரட்டிக்கொண்டான். “இளவரசி, அது நீங்களும் உள்ளூர அறிந்ததே” என்று கூறியபோது அவன் சொற்கள் உருக்கொண்டன. “அந்த ஆழுருவமும் அவரால் நமக்கு அளிக்கப்படுவதே. அதுவும் பொய்யே.” அவள் உடலில் ஒரு விதிர்ப்பை அவன் கண்டான். மாடிப்படியின் கைப்பிடியைப் பற்றியிருந்த கைகள் இறுகின.

“அவர் நம்முடன் விளையாடுகிறார். நாம் விரும்பவும் வெறுக்கவும் இரு தோற்றங்களை பூண்கிறார். அவற்றுக்கு அப்பால் அவர் யார்? அதை நம்மால் அறியவே முடியாது. எங்கோ எவரோ ஒருவரிடம் மட்டுமே முற்றிலும் திறந்துகொள்கிறார். அவ்வாறு திறந்துகொள்வது அவருக்கு தான் அளிக்கும் காணிக்கை என்று எண்ணுவதனால் பிறர் எவருக்கும் அதை அளிக்க மறுக்கிறார்.” அவள் திரும்பி நோக்கியபோது முகம் சீற்றம்கொண்டிருந்தது. மூச்சில் கழுத்துக்குழிகள் எழுந்தமைந்தன. “யார் அவள்?” என்றாள்.

“அது பெண்ணல்ல” என்றான் முக்தன். “அவர் ஓர் ஆண். அவரிடம் இவர் கொள்ளும் காதலே இவரில் பெண்மையென வெளிப்படுகிறது.” அவள் கலங்கிய கண்களுடன் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். “இந்த ஓராண்டும் நான் அவரையன்றி பிறிதொன்றை எண்ணவே இல்லை. என் தவம் இது” என்றான் முக்தன். “நீங்களும் அதையே செய்தீர்கள். ஆகவே நாமிருவரும் அவர் எவரென்று உள்ளூர அறிவோம்.” அவள் நீள்மூச்சுடன் ஒன்றும் சொல்லாமல் படிகளில் ஏறிச்சென்றாள்.

முந்தைய கட்டுரைகலாச்சார இந்து
அடுத்த கட்டுரைமன்மதன் கடிதங்கள்