பாரதிமணியின் திருமணம்

bha

அந்திமழை இதழில் பாரதி மணி எழுதிய இந்தக்கட்டுரை பலவகையான சித்திரங்களின் கலவை. எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குமரிமாவட்டத்துத் திருமணம் ஒன்று எப்படி நிகழும் என்ற சித்திரம். திருவனந்தபுரம் நாகர்கோயில் பஸ்பயணம் ஒரு நாளெல்லாம் நடக்கிறது. பத்தமடை மெத்தைப்பாய் மணமக்களுக்குரிய மதிப்புமிக்க பரிசாக இருக்கிறது [இது ஈச்சை ஓலையை மெலிதாக வகுந்து நிழலில் காயவைத்து முடையப்படுவது இரண்டு அல்லது மூன்று அடுக்காக இருக்கும்]

அடுத்தது டெல்லியின் ஆடம்பரத்திருமணங்கள். பலவகையான உணவுகள். சலீல் சௌதுரி போன்ற மேதைகள் பயிற்சியளிக்கும் போட்டி நலுங்குப்பாடல்கள். கோடிக்கணக்கான ரூபாய் மொய்யும் பரிசுமாகப்புழங்கும் ஓர் உலகம்

ka.na.su

அதன்பின் பாரதிமணி தன் திருமண அனுபவங்களைச் சொல்கிறார். அதில்வரும் க.நா.சுவின் சித்திரம் முக்கியமானது. முன்னரே இதில் பெரும்பகுதியை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். சு.ராவின் சொற்களில் க.நா.சுவிடம் ஒரு வகையான ‘தடித்தனம்’ உண்டு. அதை செல்லமாக, ஒரு உயர்பண்பாகவே சு.ரா சொல்வார். பெரிதாக எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டார். “சர்தான் என்னபண்றது?’ என்பது அவருடைய சொல்லாட்சி.

அவருக்குப் பிடித்ததைச் செய்வார். பிடிக்காவிட்டால் செய்யமாட்டார். அலட்சியம் என்பது அனைத்திலும்தான். கையில் காசு இல்லை, பட்டினி என்றாலும் ‘சர்தான் இப்ப என்ன பண்றது?” என்று நூலகத்திற்குக் கிளம்பிச்சென்றுவிடுவார். காசுகிடைத்தால் ஆட்டோ பிடித்து பத்துகிலோமீட்டர் சென்று ஒருகுறிப்பிட்ட கடையில் காபி சாப்பிடுவார். அவருக்கும் லௌகீகத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்தது. கண்ணில் சரிந்துவிழும் முடி அமைந்தது அவருடைய அதிருஷ்டம். அந்த இடைவெளியை அது அடையாளம் காட்டியபடியே இருந்தது” என்கிறார் சு.ரா க.நா.சு நட்பும் மதிப்பும் என்னும் அஞ்சலிக் கட்டுரையில்.

அந்தக் க.நா.சுவின் சித்திரம் இக்கட்டுரையில் உள்ளது. மகளே தன் கணவனை அடையாளம் கண்டு தந்தையிடம் சென்று விசாரிக்கும்படிச் சொல்கிறார். அதன் அடிப்படையில் க.நா.சு வந்து மணம்பேசுகிறார். ஆனால் கையில் காசு இல்லை. யுனெஸ்கோ காசு கொடுத்தால் திருமணம் நிகழும் என்று சொல்கிறார். வரதட்சிணையாக கொடுக்கும்படி பாரதிமணிகொடுத்த காசையும் தன் கடனை அடைக்கச் செலவிட்டுவிடுகிறார்

நினைவுகளில் விரியும் க.நா,சு புன்னகைக்கச் செய்கிறார். சூழ்ந்திருப்பவர்களுக்கு அந்தப்புன்னகை வராதுதான். என்னசெய்வது?

எனது திருமணம் – பாரதி மணி [அந்திமழை இணைப்பு]

 

முந்தைய கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுறளைப் பொருள்கொள்ளுதல்…