அஞ்சலி ஹெச்.ஜி.ரசூல்

rasuul

 

சற்றுமுன்னர் கவிஞர் நட.சிவக்குமார் அழைத்து எழுத்தாளரும் கவிஞருமான ஹெச்.ஜி.ரசூல் இறப்படைந்த செய்தியைச் சொன்னார். வழக்கம்போல இத்தகைய செய்திகள் அளிக்கும் ஆழமான செயலின்மை. தொடர்ந்து சோர்வு. இன்னதென்றில்லாத கசப்பு.

 

ரசூலுக்கு சர்க்கரைநோய் நோய் இருந்தது. சிறிய உடல்நலக்குறைவுக்குப்பின் நேற்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இன்று உயிர்பிரிந்திருக்கிறது

 

நான் தக்கலைக்கு வருவதற்கு முன்னரே ரசூலுடன் அறிமுகமுண்டு. பொன்னீலன் அவர்களின் புதியதரிசனங்கள் நாவல் 1992 ல் வெளிவந்தபோது கலையிலக்கியப் பெருமன்றம் சார்பில் நாகர்கோயிலில் ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். தர்மபுரியிலிருந்து வந்து நான் அதில் கலந்துகொண்டேன். அன்றுதான் அவரை முதல்முறையாகச் சந்தித்தேன். அவரும் இளைஞர், நானும் இளைஞன். நாகர்கோயிலில் பல இடங்களில் நின்று நின்று இலக்கியம் பற்றி சண்டைபோட்டுக்கொண்டோம்

 

அதன்பின் நான் நாகர்கோயிலுக்கு பணிமாற்றம் பெற்றுவந்து பத்மநாபபுரத்தில் குடியேறினேன். அவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. தக்கலையில் பணியாற்றியபோது அடிக்கடி சந்திப்பதும் சந்தித்த இடத்தில் நின்றபடியே மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்தது. அவ்வப்போது நான் வீடுசெல்லும் வழியிலிருந்த அவருடைய வீட்டுக்கும் செல்வேன்.

 

ரசூல் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைப்போக்குகளை தன் வாழ்க்கையினூடாக இணைத்துக்கொண்டு தனக்கான ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்க முயன்றவர் . அடிப்படையில் மார்க்ஸியப் பார்வை கொண்டவர். வலது கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கியப் பெருமன்றத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல பொறுப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். அதேசமயம் இஸ்லாமியப் பண்பாடு, இஸ்லாமிய ஆன்மீகமரபு ஆகியவற்றை அவர் தன் அடையாளமாகவும் அகத்தேடலுக்கான விடையாகவும் ஏற்றுக்கொண்டார்.

 

செவ்வியல் மார்க்ஸிய அணுகுமுறை இந்த இணைவுக்கு இடமளிக்காது என்பதனால் அவருடைய தேடல் அவரை பின்நவீனத்துவச் சிந்தனைகளை நோக்கிக் கொண்டுசென்றது. நெகிழ்வானதும் ,உள்முரண்கள் கொண்டதும், மையப்பெருநோக்கு அற்றதுமான ஒரு மார்க்ஸியப் பார்வை அவருடையது. அதை பின்நவீனத்துவ மார்க்ஸியம் அல்லது நவவரலாற்றுவாதம் என்று சொன்னார். தன் கட்டுரைகள் வழியாக இதை தனக்க்குத்தானே விளக்கிக்கொண்டார் என நினைக்கிறேன்

 

ரசூல் இஸ்லாம் குறித்த அவருடைய திடமான அணுகுமுறைக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இஸ்லாமை ஒரு இறுக்கமான மதஅமைப்பாகவும், சமரசமற்ற மூலநூல்வாதமாகவும், தான் பிறன் என வரையறைசெய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளும் போக்காகவும் அணுகிய வஹாபியப் போக்குகளுக்கு தீவிரமான எதிர்த்தரப்பு அவருடையது. தமிழகத்தில் சென்ற சில ஆண்டுகளாக பெருவல்லமை பெற்று அரசியல் சக்தியாகவே எழுந்து வந்துள்ள வஹாபிய அடிப்படைவாதத்திற்கு எதிரான முதன்மைப் பெருங்குரல் என ரசூலைச் சொல்லலாம்

 

ரசூலின் நோக்கில் இஸ்லாம் என்பது பற்பலநூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த ஒரு பெரும் பண்பாட்டுப்பெருக்கு. வரலாற்றினூடாக திரண்டு வந்த மெய்யியல். ஆகவே அவர் இஸ்லாம் காலந்தோறும் இழுத்துக்கொண்ட அத்தனை விளிம்புநிலைப் பண்பாடுகளையும் உள்ளடக்கிய ஓர் இஸ்லாமையே மெய்யானது என்று கூறினார். அது சமரசப்போக்கு கொண்டது. உள்ளடக்கும் தன்மைகொண்டது.  வட்டாரத்தனித்தன்மைகளுக்கு இடமளிக்கும் நெகிழ்வு கொண்டது.

 

அவருடைய நோக்கில் சூஃபி மரபு இஸ்லாமியின் முக்கியமான ஆன்மிக சாரம். உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு முதல் பீர்முகம்மது அப்பா வரையிலான சூபி மரபை தமிழ் இஸ்லாமிய மெய்யியலின் மையமாக அவர் தொடர்ந்து முன்வைத்து வாதிட்டுவந்தார். அவர்களிடமிருக்கும் நாட்டார் மெய்யியலை முக்கியமான ஒரு பண்பாட்டுக்கூறு என அவர் நினைத்தார்.

 

அவ்வகையில் பார்த்தால் அவர் மரபான இஸ்லாமுக்காக வாதிட்டவர், வஹாபியம் நவீனத்துவ ஒற்றைப்படைநோக்கு கொண்டது என்றும் இங்கிருந்த தொன்மையான இஸ்லாம் பின்நவீனத்துவ பன்மைநோக்கு கொண்டது என்றும் அவர் எண்ணினார். அவருடைய பின்நவீனத்துவம் என்பது மறுப்புவாதமோ சிதைவுவாதமோ அல்ல, அது ஆக்கப்பூர்வமான ஒரு தொகுப்புவாதம். பன்மைத்துவத்திற்கான குரல்.

 

இஸ்லாமை விவாதங்களற்ற அமைப்பாக ஆக்குவதற்கு அவர் எதிரானவர். ‘இத்தனை நபிகளில் ஏன் ஒரு பெண்நபி கூட இல்லை?’ என அவருடைய கவிதையில் ஒரு பெண்குழந்தை கேட்கிறது. அதன்பொருட்டு அடிப்படைவாதிகளால் கடுமையாக மிரட்டப்பட்டார்.

 

குடி குறித்த இஸ்லாமிய நெறி என்ன என உசாவும் கட்டுரை ஒன்றை அவர் 2007ல் உயிர்மையில் எழுதினார். குடிகுறித்த இஸ்லாமிய நெறிகள் காலப்போக்கில் பலவாறாக மாறிவந்தவை, அவற்றுக்கு இட, கால வேறுபாடுகள் உண்டு என அக்கட்டுரை வாதிட்டது. அதற்காக அவர் தக்கலை அஞ்சுவண்ணம் ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். வளர்ந்த பெண்கள் இருந்த சூழலில் அது மிக மிக ஆபத்தான ஒரு தண்டனை. ஆனால் அவர் வளைந்துகொடுக்காமல் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். அப்போது அவருக்கு ஆதரவாக நிகழ்ந்த கண்டனக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

 

அதன்பின் தக்கலை நீதிமன்றத்தின் முன்னால்தான் அவரை பெரும்பாலும் சந்தித்திருக்கிறேன். உற்சாகமும் சோர்வுமாக வழக்கு குறித்து பேசிக்கொண்டிருப்பார். நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஃபத்வாவுக்கு எதிரான தீர்ப்பை பெற்றார். சட்டபூர்வமான அமைப்பால் வழங்கப்பட்ட ஊர்விலக்கு என்பதனால் அது ரத்தானது. ஆயினும் பலபோராட்டங்கள் தேவைப்பட்டன

 

ரசூல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிலையத்தில் வேலைபார்த்தார். நாள்தோறும் மக்கள்தொகை பெருகினாலும் அந்த அலுவலகம் ஓய்வாக இயங்கியது. ஆகவே நிறைய வாசிக்கவும் நிறைய பயணம்செய்து பேசவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எப்போதும் இந்த கணெக்கெடுப்பு என்னும் விஷயத்தைக்கொண்டே அவரை நான் கேலிசெய்துவந்தேன்.

 

இறுதியாக சென்ற ஜூன் 23 அன்று தக்கலையில் கவிஞர் நடசிவகுமாரின் கவிதைகள் குறித்த விவாதத்திற்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்தேன். அவருடைய கட்டுரைநூல் ஒன்றும் அன்று வெளியிடப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வெளியே நின்று பேசிக்கொண்டோம். வழக்கமான கேலியும் சிரிப்பும்

 

ரசூலுக்கு அஞ்சலி

எச்.ஜி.ரசூல்
இரு நிகழ்ச்சிகள்
இடங்கை இலக்கியம்
குமரியின் சொல்நிலம்
முந்தைய கட்டுரைவம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74