ஜெ,
ஒரு வினா. கோபம் கொள்ளமாட்டீர்கள் என நினைக்கிறேன். இளையதலைமுறையினர் வெண்முரசை எவ்வளவுபேர் வாசிக்கிறார்கள்? நானும் என் நண்பரும் பேசிக்கொண்டபோது அவர் இளையதலைமுறையினர் வெண்முரசை வாசிக்கமுடியாது என்றார். ஏனென்றால் தமிழ்க்கல்வியின் தரம் மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவர்களுக்கு வெண்முரசின் நடையின் உள்ளே போகமுடியாது என்றார். இதுதான் என் கேள்விக்கான அடிப்படை
ஜெகன்
அன்புள்ள ஜெகன்
பொதுவான ஓர் அவதானிப்பு இது, ஆனால் இதெல்லாம் பொதுவான விஷயங்களைப்பற்றி மதிப்பிடவே உதவும். இலக்கியம் ஒரு சமூகத்தின் பொதுவான செயல்பாடு அல்ல. அது சிறப்புச் செயல்பாடு. அதில் ஈடுபடுபவர்கள் விதிவிலக்கானவர்கள். ஆகவே பொதுவான போக்குகளை அவர்கள் எளிதில் மீறிவிடுவார்கள்
வெண்முரசு விவாதக்கூடுகைகள், புதியவர் சந்திப்புகளுக்கு வருபவர்கள் உட்பட எங்கும் பெரும்பாலனவர்கள் இளைஞர்களே. சொல்லப்போனால் விடாப்பிடியாக இன்றுவரை வாசித்துக்கொண்டிருப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், மாணவர்கள். என் தளத்தைப் பொதுவாகப் பார்த்தாலே இது தெரியும். என் மகள் வயதிலேயே பலர் வாசிக்கிறார்கள். மகளும் அவள் தோழிகளும் உட்பட
மொழிநடை கடினமானதுதான். ஆகவே எளியவாசகர் உள்ளே வரமுடியாதுதான். ஆனால் இலக்கியவாசகர்கள் அந்தத் தடைகளை மீறத்தெரிந்தவர்கள். அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள். என் மகளோ அல்லது சுசித்ரா ராமச்சந்திரனோ பள்ளியில் போதிய அளவு தமிழ் கற்றவர்கள் அல்ல. அவர்கள் கற்றதெல்லாம் இலக்கியம் வழியாகவே.
வெண்முரசுக்கு இளைய வாசகர்கள் உகந்தவர்கள். அவர்களுக்குத் சில தடைகள் இல்லை. இது ஐரோப்பாவில் உருவாகி இங்கே வந்த மரபான நாவல்வடிவில் இல்லை. அந்த வடிவை இங்குள்ள கதைசொல்லும் முறையுடன் இணைத்து நெகிழ்வாக்கி விரித்திருக்கிறது. தீவிரமான பகுதிகள், எளியகதைவிளையாட்டுக்கள், தத்துவங்கள், வாழ்க்கைச்சித்தரிப்புகள் என உருமாறி சென்றுகொண்டே இருக்கிறது. தத்துவ உருவகக் கதையாக நிகழ்ந்த மறுகணமே ஒருவகை சாகசக்கதையாக ‘காமிக்’ தன்மையுடன் உருமாறும். குலவரலாறு, அரசியல்வரலாறு என விரிந்து உடனே உளவியலாய்வுக்குள்ளும் செல்லும்
.சென்றகால நவீனத்துவம் இலக்கியத்திற்கென வரையறை செய்திருந்த பெரும்பாலான எல்லைகளை உடைத்துக்கொண்டு எல்லா வகையான புனைவுகளையும் உள்ளடக்கிக்கொண்டு செல்வது இது.இது ஒரு நூல் அல்ல, ஒரு புனைவு வெளி. ஒருவகையில் உருவாகிவரும் புதிய எழுத்து.ஏதேனும் நாவல் வடிவம் குறித்த உருவகம் உள்ளவர்கள் அதை உடைக்காமல் இதற்குள் ஈடுபட முடியாது
அதேபோல பழைய வாசகர்கள் மகாபாரதத்தை ஒருவகையில் வாசித்துப் பழகியிருப்பார்கள்.பெரும்பாலானவர்கள் எளிய கதைச்சுருக்கங்களை ஒட்டி தங்கள் உளச்சித்திரத்தை அமைத்திருப்பார்கள்.உதாரணமாக நளன்கதை. அது அவர்களுக்கு கலிபாதிப்பதைப்பற்றிய எளிமையான கதை. வெண்முரசில் அது ஷத்ரிய இளவரசியை மணந்த நிஷாத அரசனின் தாழ்வுணர்ச்சியிலிருந்து தொடங்கி வெவ்வேறு அரசியல் சிடுக்குகளுக்குள் சென்று விரிகிறது. அவர்களுக்கு இந்த விரிவை அடைய மரபான கதைப்புரிதல் பெரிய தடையாகவே அமையும்.
அத்துடன் பெரும்பாலான உணர்த்தல்களை இந்நாவல் கவித்துவம் மூலமே நிகழ்த்துகிறது. புராணத்திற்குரிய நேரடியான விவரணை, உரையாடல் மேல்தளத்திலும் உருவகங்களின் பின்னல் அடியிலும் நிகழ்கிறது. இதை வாசிப்பதில் மிகப்பெரிய தடையை அடைபவர்கள் எவரென்றால் தமிழின் வணிக எழுத்துக்களை வாசித்துப்பழகியவர்கள்.மற்றும்இலக்கியமென்றால் எளிய டைரிக்குறிப்பு என பழகியவர்கள். இது ஒரு புதுவடிவம் என்பதனால் புதியவர்கள் எளிதாக உள்ளே நுழையவும் இதன் மடிப்புகளையும் ஆழங்களையும் எளிதில் சென்றடையவும் இயல்கிறது
அத்துடன் நான் கவனித்த ஒன்று என் மகள் உட்பட இளைய தலைமுறையினர் பலரும் இதை காகிதநூலாகவே வாசிக்கிறார்கள். இதுவும் ஒரு முன்முடிவைத் தகர்ப்பது. அதோடு இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முகநூல் கணக்கு இல்லை என்பதையும் இளைஞர் சந்திப்புகளில் கவனித்தேன். அதெல்லாம் ’அங்கிள்களின்’உலகம் என்று என்னிடம் ஒரு பெண் சொன்னாள். முதல்கணம் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது
*
ஆனால் இவர்கள் பொதுவான திரள் அல்ல. வெண்முரசு போன்ற நூல்கள் ‘டிரெண்ட்’ ஆகவே முடியாது- எப்போதுமே. அப்படி பரவலான விருப்புக்கு உள்ளாகும் படைப்புக்களுக்குச் சில பொதுக்கூறுகள் உண்டு.
1 , பரவலாக வாசிக்கப்படும் ஆக்கங்கள் நேரடியான சமகாலத்தன்மையை மட்டுமே கொண்டிருக்கும். சமகாலச் சிக்கல்கள், சமகாலத் தகவல்கள் ஆகியவை அடங்கியவை. அரசியல், பண்பாட்டு பிரச்சினைகளையும் சமகால உளநெருக்கடிகளையும் அவை பேசும்.பெரும்பாலான வாசகர்களால் அவற்றுடன் எளிதாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்.
இளம் வாசகர்கள் வாசிக்க ஆரம்பிப்பதே தங்களை சமகாலத்துடன் பொருத்திக்கொள்வதற்காகத்தான். ஆகவே அவர்களுக்கு சமகாலம் பெரிய கிளர்ச்சியை உருவாக்குகிறது. ‘இப்பல்லாம் இதுதான்’ என்பதே அவர்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள போதுமான காரணமாக ஆகிறது. ஒரு படைப்பு தாங்கள் கொஞ்சம் அறிந்த ஒரு விஷயத்தை பேசினால் அது அவர்களுக்குப் பரவசம் அளிக்கிறது
2 , பரவலாக வாசிக்கப்படும் படைப்புக்கள் அதை வாசிப்பவனை நவீனமானவனாக சித்தரிக்கும் தன்மை கொண்டிருக்கும். பழைமையிலிருந்து அறுத்துக்கொண்டு முன்னோக்கிப் பாய்பவனாக, சுதந்திரமானவனாக அவனைக்காட்டும்.. முதிரா இளைஞர்களின் வாசிப்பு பெரும்பாலும் அவர்களுக்கு அவர்களின் சூழலில் ஓர் அடையாளத்தைத் தேடிக்கொடுப்பதாகவே அமையும். அதைப்பற்றி அவர்கள் நாலுபேரிடம் உற்சாகமாகப் பேசவேண்டும்.
ஆகவேதான் ஐரோப்பாவின் அறியப்படாத ஏதேனும் நூலைப்பற்றிப் பேச அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நம் சூழலில் வாசிப்பவர்கள் குறைவு என்பதனால் அப்படி நூல்கள் குறிப்பிடப்படுவது மிகக்குறைவு. ஏராளமாகக் கிடைப்பது சினிமாதான். ஆகவே அரிய சினிமாக்களைப்பற்றிய பேச்சுக்கள் அதிகமாகக் கேட்கின்றன. ஆனால் அச்சினிமாக்களை அவற்றின் வரலாற்று,பண்பாட்டுப் பின்புலத்துடன் புரிந்துகொண்டு எழுதப்படும் குறிப்புகள் அனேகமாக தமிழில் இல்லை.
3 , பரவலாக வாசிக்கப்படும் படைப்புக்கள் அவற்றை வாசிக்க மேலதிக வாசிப்புப்புலம் ஏதும் தேவை அற்றவையாக இருக்கும். வரலாறு, பண்பாடு சார்ந்த மேலதிகவாசிப்புடன் மட்டும் வாசிக்கப்படவேண்டிய ஆக்கங்களுக்குள் பொதுவாக இளம் வாசகர்கள் வருவது கடினம். அவர்களுக்கு அந்தப்புரிதல் இருப்பதில்லை. அவர்கள் பேசும் சூழலில் உள்ள பிறருக்கும் அந்தப்புரிதல் இருப்பதில்லை
4 , பரவலாக வாசிக்கப்படும் படைப்புக்கள் ஒற்றைப்படையான கிளர்ச்சியை அளிக்கும் . தீவிரமான ஒருநிலைபாடு கொண்டவை. அவை அவ்வயதின் செயலூக்கம் மிக்க ஆற்றலுக்கு உவப்பானவை. பெரியவரலாற்றுச் சித்திரம், பண்பாட்டுச்சித்திரம் பொதுவாக சமநிலைகொண்டது. ஆகவே ஆழ்ந்த அமைதியை, சொல்லப்போனால் ஒருவகைச் சோர்வை, அளிப்பது.
5, பரவலாக வாசிக்கப்படும் படைப்புக்கள் பெரும்பாலும் பாலுறவைப்பற்றியதாகவே இருக்கும். ஏனென்றால் வாசிக்க ஆரம்பிப்பவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு முதன்மைக்கவற்சி பாலுறவே. அந்தந்தக் காலகட்டத்திற்கு எது பாலியல்பேசுதளத்தின் எல்லைகளை மீறுகிறதோ அது பெரும் பரபரப்பை அளிக்கும். அதை விழுந்தடித்து வாசிப்பார்கள். பெரும்புரட்சியாக எண்ணிக்கொள்வார்கள்
தமிழில் ஆரம்பகட்டத்தில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் கிளுகிளுப்பான எழுத்தாளர். அதன்பின் அரு.ராமநாதன், சாண்டில்யன். அதன்பின் புஷ்பா தங்கத்துரை. அதன் பின் தஞ்சை பிரகாஷ். அந்த வரிசை மாறிக்கொண்டே இருக்கும். ஆங்கிலத்தில் நான் வாசிக்க ஆரம்பித்தபோது ஹரால்ட் ராபின்ஸ் இதற்காகப் புகழ்பெற்றவர். பின்னர் எரிகா ஜங்.
இவ்வரிசையில் உண்மையில் முக்கியமான கலைஞர்கள் உண்டு. டி.எச்.லாரன்ஸ், ஆல்பர்டோ மொரோவியா, ஹென்றி மில்லர் போன்றவர்கள் அவர்களின் காலகட்டத்தைக் கடந்தபோது ‘அதிர்ச்சி ஊட்டுபவர்கள்’ அல்லாமலானார்கள். ஆனாலும் கலைஞர்களாக நீடிக்கிறார்கள்.
*
மேலே சொன்ன ஐந்து அம்சங்களுக்கும் எதிரானது வெண்முரசு வெண்முரசு சென்றகாலத்தைய உலகின் சித்திரம் என்னும் புனைவுப்பாவனையைக் கொண்டுள்ளது. தன் வெளிப்பாட்டை அது குறியீடுகள், ஆழ்படிமங்கள் வழியாகவே முன்வைக்கிறது. அதுபேசும் தத்துவதரிசனங்களும், உணர்வுநிலைகளும், உறவுச்சிக்கல்களும் மானுடம்தழுவியவை, காலம்தாண்டியவை. அவை முதற்கட்டப் புனைவுப்பாவனைக்கு அடியில்தான் உள்ளன.
வாசிக்க ஆரம்பிக்கும் சாதாரண இளைஞனுக்கு ’அதெல்லாம் பழையவிஷயம் பாஸ்’ என்ற எண்ணமே இயல்பாக எழும். அதை வாசிப்பதனூடாக அவன் நவீனயுக இளைஞன் என்னும் பிம்பத்தை அணிய முடியாது. அதைப்பற்றி சூழலில் விவாதிக்கவும் முடியாது.
இவ்வைந்து நிலைகளையும் தன் வாசிப்பால், தேடலால் கடந்துவந்த வாசகர்களுக்குரியது வெண்முரசு. அத்தகையவர்கள் எப்போதும் இருப்பார்கள். தொன்மங்களை சமகாலத்தின் சாரத்தை நோக்கி நீட்டிக்கொள்ளவும், சமகால விஷயங்களை அவற்றின் மேல்ச்சிக்கல்களைக் கடந்து மானுடப்பிரச்சினைகளாகக் காணவும் அவர்களால் முடியும். அவர்களில் பலர் எழுத்தாளர்கள் அல்ல என்பதனால் உடனடியாக விரிவாக எதிர்வினையாற்ற முடியாமலிருக்கலாம். அவர்களின் அகத்தில் வெண்முரசு வளர்ந்துகொண்டே இருக்கும். மொழி கடுமையாக உள்ளது, வடிவம் சிக்கலாக உள்ளது, பல்லாயிரம் பக்கங்கள் உள்ளன என்பதெல்லாம் அவ்வாசகர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல.
ஆச்சரியம் என்னவென்றால் வெண்முரசின் நல்ல வாசகர்கள் மட்டுமே பெரியம்மாவின் சொற்கள் கதையின் உள்மடிப்புகளையும் அடையாளம் கண்டார்கள். மற்றவர்களுக்கு அது ஒரு நகைச்சுவைக் கதையாகவே தோன்றியது. ‘முடிவுசரியில்லை’ என்றும் ‘நெறைய இங்க்லீஷ் வார்த்தைகள் இருக்கு பாஸ், தெரியாம எழுதிட்டார்” என்றும்தான் அவர்களின் கருத்துக்கள் இருந்தன.
இன்றைய தமிழ்ச்சூழலில் வெண்முரசின் பண்பாட்டு, வரலாற்று , தத்துவ மாற்றுரைப்புக்களை தொட்டு அறியும் வாசகர்களே நவீனமானவர்கள். அதன் உளவியல் அவதானிப்புக்களை தொடரமுடிபவர்கள், அதன் கவித்துவத்தை உணரமுடிபவர்களே உருவாகிவரும் தலைமுறை.அதை ஏற்றும் மறுத்தும் விவாதித்தும் அவர்கள் முன்னால் செல்லலாம். அதன் படிமங்களை அவர்கள் தங்கள் கனவிலும் மொழியிலும் வளர்த்தெடுக்கலாம்.
ஜெ