அழைப்பு மோசடி -கடிதங்கள்

koNangki

ஓர் அழைப்பு

இப்படி பேசியவரிடம் வங்கி ,மற்றும் ATM கார்ட் தகவல்களை சொல்லிவிட்டு மறுநாள் காலை 10 மணிக்குள் தனது வங்கி கணக்கில் இருந்த rs 160000 ரூபாவை இழந்தார் நமக்குத் தெரிந்தவர்களில் கோணங்கி .இது நடைபெற்று ஆறுமாத காலம் இருக்கும் .புகார் தெரிவித்து ஒரு பலனும் இதுவரையில் ஏற்படவில்லை.வட இந்தியாவில் இருந்து நடைபெறுகிற online கொள்ளை இது.பலர் விபரங்களை தெரிவித்து விட்டு மாட்டியிருக்கிறார்கள் இவர்களிடம்.விபரம் தெரிவித்த மறு நிமிடமே இவர்கள் கணக்கில் திருடத் தொடங்கி விடுவார்கள்.

கோணங்கியின் கணக்கில் இருந்து தொலைபேசிக் கட்டணம்,மின்சாரக் கட்டணம் எல்லாம் செலுத்தியிருக்கிறார்.ஆனால் குற்றவாளியை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை .

லக்ஷ்மி மணிவண்ணன்

*

இனிய ஜெயம்,

ஒரு அழைப்பு வாசித்தேன். இந்த மோசடியில் சிக்கிய சற்றே சமத்து குறைத்த சில இல்லத்தரசிகளை அறிவேன். வெளிநாட்டு மகன் அனுப்பும் அத்தனை பணமும் இந்த மோசடி அழைப்பால் இழந்தவர்கள் . எனது ஊடக நண்பர்கள் வழியே ,சில குற்றங்கள் துலக்கப்படும் போது ,அருகிலிருந்து அவற்றை கவனித்திருக்கிறேன். சுவாரஸ்யமான பல ஹாக்கிங் மென்பொருட்கள் இருக்கின்றன .அதில் முக்கியமானவை இரண்டு. ஒன்றினில் ரைட்டர் ஜெயமோகன் என உள்ளிட்டால் போதும், இந்த பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து எண்களையும் அது மாநிலம் வாரியாக ,தேசம் வாரியாக எடுத்து தந்து விடும். உபரியாக இந்த பெயரை சேமித்து வைத்திருக்கும் அந்த நபரின் எண்ணையும் எடுத்து கொடுத்து விடும். இரண்டாவது மென்பொருள் ஒரு எண் வாட்சப்பில் இருந்தால் அந்த எண் வழியே நிகழ்ந்த அனைத்து உரையாடலையும் [அதன் சேமிப்பு கிடங்கிலிருந்து ] திருடி அளித்து விடும். இதில் சில வேலைகளை செய்து தரும் இதன் எளிய வெர்ஷன்கள் இலவச ஆப்பாக கூகுளிலேயே தரவிறக்கிக்கொள்ள முடியும். இதிலிருந்து ஐபோன் கஸ்டமர்கள் மட்டும் சற்றே பாதுகாப்புடன் உள்ளனர்.

இந்த விஷயத்தில் இத்தகு சில்லறை மோசடி ஆட்களை காவல் வலைக்குள் கொண்டு வர சில வழிகள் உண்டு. நான் கேள்விப்பட்ட ஒரு வழி . வங்கி ஏடிஎம் எண்ணை மூன்று மாதத்துக்கு பிறகு மாற்றி விட வேண்டும் . ஏற்கனவே பயன்படுத்திய கடவு எண்ணை வங்கி வழியே , இணைய குற்ற தடுப்பு காவல் பிரிவுக்கு அனுப்பி விட வேண்டும். இத்தகு மோசடி அழைப்பு வருகையில் ,கண்காணிக்கப்படும் அந்த முன்னாள் கடவு சொல்லை அளிக்க வேண்டும். மோசடி பார்ட்டி அந்த எண்ணை வந்து தொடும் போது , சைபர் க்ரைம் அவனை தொட ஐம்பது சதம் வாய்ப்பு உண்டு.

நான் ஒரு முறை அப்போது காலாவதி ஆன வங்கி அட்டை எண்ணை சொல்லி ,கடவு சொல்லாக அப்போது வாசித்துக்கொண்டிருந்த புத்தகம் ஒன்றின் பின்பக்கம் இருந்த ஐயஸ்பிஎன் எண்ணை தந்தேன்.

கடலூர் சீனு

*

அன்புள்ள ஜெ

நலம்தானே?

ஓர் அழைப்பு வாசித்தேன். வங்கிகளிலிருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக இந்த மோசடி நடந்துகொண்டிருக்கிறது. வங்கிக்கணக்கில் நிறையப் பணமிருந்தால் அதிலிருந்து இணையவழி செயல்கள் எதையும் செய்யக்கூடாதென்ற நிலை வந்துவிட்டது. பல தனியார் வங்கிகள், பயணப்பதிவு இணையதளங்கள் தங்கள் தகவல்களை தனியாருக்கு விற்றுவிடுகின்றன என்றுகூட சொல்கிறார்கள்.

ஆனந்த்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79
அடுத்த கட்டுரைகென்யா -இனக்குழு அரசியல்