கைவிடப்படும் மரபு

jain1

அன்புள்ள ஜெயமோகன்,

\\\இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன///

இருதீவுகள், ஒன்பது நாட்கள் என்ற உங்களது பயணக்கட்டுரைத் தொடரில், நீங்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தீர்கள். இதில், தமிழகம் தவிர என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சமீபத்தில் குளித்தலை அருகேயுள்ள சத்தியமங்கலம் என்ற இடத்தில் அமைந்துள்ள குண்டாங்கல் பாறை என்ற கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மஹாவீரருடைய சிற்பம் இருக்குமிடத்தைப் பார்த்துவரச் சென்றிருந்தேன், இது மத்திய தொல்லியல் துறையால் பேணப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட இடமாகும். மிகவும் அற்புதமான கலைப்படைப்பு. ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ளபடியால், இது சாயங்கால வேளைகளில் ”குடிமகன்”கள் ஒதுங்குமிடமாக மாறிவிட்டதற்கான சாயல்கள் தென்பட்டன. குறிப்பிட்ட சமண சிற்பப் பாறைக்குக் கீழே, சிதறு தேங்காய் உடைத்து, சிதறிய தேங்காய்ச் சில்லுகள் போல, குடித்துவிட்டு சாராயப் புட்டிகளை உடைத்து பாய் விரித்தாற்போல் கண்ணாடிச் சில்லுகள். தவிர அப்பாறையில் சிற்பத்திற்குக் கீழே, இக்கால சிற்பிகள் தங்கள் கலைத்திறமையைக் காண்பிக்க முற்பட்டதற்கான அடையாளங்களாக அவர்களுடைய பெயர்கள் மற்றும் ஏதேதோ எண்கள் தென்பட்டன.

வயிற்றெரிச்சல் தாளாமல் திருச்சி மத்திய தொல்லியல் துறை அலுவலகக் கிளைக்கு தொலைபேசி மூலமாக இதைச் சொன்னதும், ஆவன செய்வதாகக் கூறினர், என்ன செய்வார்களோ!!

அதேபோல, விஜயாலய சோளீச்வரத்திலும், பிரதான சந்நிதி நீங்கலாக, கதவில்லாத உபசந்நிதிகளின் உட்புறம் பயன்படுத்திய டீ மற்றும் பாலிதீன் கப்புகள் சிதறிக் கிடந்தன.

கடவுளென்ற பயம் தேவையில்லை, குறைந்தபட்சம் கலைக்கான மரியாதையாவது கொடுக்க வேண்டும், அதுவுமில்லை தமிழகத்தில்.

பாஷ்யம்.

***

jain2

அன்புள்ள பாஷ்யம் அவர்களுக்கு,

இந்த அம்சம் இந்தியா முழுக்க உள்ளதுதான். நாங்கள் கர்நாடகத்தில் ஒரு சமணத்தலத்திற்குச் சென்றபோது அந்தக் காலைவேளையில் அங்கே கிராமமே திரண்டு சென்று காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்தது. காலைக்கடன் கழிக்க இத்தனைபேரா என்று எங்களை வியந்து பார்த்தார்கள். ஒற்றைப்பாறையில் செதுக்கப்பட்ட பெரிய பார்ஸ்வநாதர் சிற்பமும் இரண்டு அழகிய கோயில்களும் அங்கிருந்தன.

என்ன செய்வது? சமகால இந்தியா இது. இதன் மரபும் பண்பாடும் இன்றைய மக்களுக்குத்தெரியாமலாகி பலநூற்றாண்டுகள் ஆகிவிட்டன.மக்கள் தங்கள் அன்றாடவாழ்க்கையின் வறுமை, சுகாதாரமின்மை, கல்வியறிவின்மை ஆகியவற்றிலிருந்து மீண்டு வந்து இவற்றை அறிய இன்னும் சில தலைமுறைகள் ஆகலாம். அதற்குள் இவை அழிந்துவிடக்கூடாது. அதற்குத்தான் அரசும் பிற அமைப்புக்களும் ஆவன செய்யவேண்டும்.

ஒப்புநோக்க சமணர்கள் அதை சரியாகச் செய்கிறார்கள் என்பது என் எண்ணம். இந்துக்கள் ஒன்று ஆலயங்களை கைவிடுகிறார்கள். அல்லது திருப்பணி என்றபேரில் இடித்து அழிக்கிறார்கள். இவர்கள் செய்யும் திருப்பணிக்கு கைவிடுதலே மேலானது என்பது என் கருத்து.

ஜெயமோகன்

அருகர்களின் பாதை 6 – மூல்குந்த்
முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97
அடுத்த கட்டுரைகழிவின் ஈர்ப்பு