76. கைகளானவன்
காட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும் இயல்பாக வந்துசென்றன. பசித்தபோது உணவு விழிகளுக்குத் தெரிந்தது. துயிலெழுந்தபோது நிரப்பை கண்டடைந்தான். துயின்றெழுந்ததுமே கால்கள் நடக்கத் தொடங்கின.
வன்னிமரத்தடியில் துயில்கையில் அவன் கனவில் ஒரு நாகக்குழவியை கண்டான். மிகச் சிறிது, மாந்தளிர் நிறத்தில் மண்ணகழ்ந்தெடுத்த தளிர்வேர்போல வளைந்து கிடந்தது. அவன் குனிந்து அதன் நெளியும் வாலை நோக்கினான். குனிந்து அதை மெல்ல தொட்டான். சீறி மேலெழுந்தது. சிறிய படம் மெல்ல ஆடியது. அது நாகமல்ல, சிறுதழலென அறிந்தான். அதன் உடல்பட்டு சுள்ளிகள் நொறுங்கிக் கருகி எரிந்தன. அனலெழுந்து பெருகி அவன் தலைக்குமேல் சென்றது. அவன் அத்தழல் காட்டை சூழ்வதை, பெருமரங்கள் அனலால் தழுவப்பட்டு துடித்துப் பொசுங்குவதை, தளிருடன் இலைத்தழைப்புகள் வெந்து சுருண்டு கருகி பொழிவதை கண்டான். அவன் உடல் அந்த வெக்கையை அறிந்தது. அவனை நோக்கி நான்குபுறமிருந்தும் தீ எழுந்து வந்தது. செந்நிறமும் பொன்னிறமும் நீலநிறமும் கொண்ட மூவனல். அவன் தலைமுடி பொசுங்கி கெடுமணம் எழுந்தது.
அவன் எழுந்துகொண்டபோது தன்னைச் சூழ்ந்து வரும் காட்டெரியை கண்டான். தீ உறுமும் என்றும் ஓலமிடும் என்றும் அன்றுதான் அறிந்தான். செந்தழல் அலைகளாக எழுந்து அறைந்து பெருகி வந்தது. அனலுக்கு நுரையுண்டு, துமியுண்டு என்று கண்டான். ஓடு ஓடு என்று உள்ளம் கூவியபோதிலும் அச்செந்நிறக் கொந்தளிப்பை விட்டு விழிவிலக்க இயலவில்லை. அதற்குள் சிறுசுழிகள். கரிய நிழலுருக்கள். வெடித்து வெடித்து எழும் வண்ணங்கள்.
அவன் காலடியை அனல் நெருங்கியபோதுதான் பின்னால் விலகினான். வெடித்த விதையொன்று அவன்மேல் தெறிக்க துள்ளி மேலும் விலகியபோது விழுந்து கிடந்த மரமொன்றின் பட்டைக்குள் இருந்து எழுந்து நெளிந்த சிறிய பாம்புக்குழவியை கண்டான். குழந்தையின் கைவிரல்போல சிவந்த மென்மையான உடல் அனல்வெம்மையில் நெளிந்து துடித்தது. அந்த மரம் ஈரம் மிக்கதாக இருந்தமையால் எளிதில் எரியவில்லை. ஆயினும் அதன் பட்டை கருகி புகையெழ எரிநோக்கி சென்றுகொண்டே இருந்தது. சுண்டிச் சுண்டி அவனை அழைத்தது அந்த விரல்.
எதுவும் எண்ணாமல் அவன் எரிக்குள் பாய்ந்தான். எரியாமல் கிடந்த மரங்கள் மேல் மிதித்துச்சென்று அந்த மரத்தடியை அடைந்து பட்டையை உதைத்துப் பிளந்தான். அதில் உடல் சிக்கியிருந்த நாகக்குழவி பாய்ந்து நெளிந்து ஓடிவந்து அவன் காலில் தொற்றிக்கொண்டது. அதை நோக்கி கையை நீட்டியதும் கையில் துள்ளி ஏறியது. அவன் அங்கிருந்து இரு மரத்தடிகள்மேல் மிதித்து தீயை விட்டு வெளியே வந்தான். ஓடி அகன்று அப்பால் தெரிந்த நீரோடை நோக்கி சென்றான். அவன் தோளிலேறிய நாகத்தைப் பிடித்து நீரில் வீச முயன்றான். அது அவன் விரலை உடலால் சுற்றிக்கொண்டு மறுத்தது. இன்னொரு கையால் பற்றி வீச முயன்றபோது அவன் கைவிரலைக் கவ்வியது.
எறும்பு கடித்ததுபோல் உணர்ந்தான். கையை உதறியபோது தெறித்து நீரில் விழுந்து நெளிந்து நீந்தி மறுபக்கம் சென்று தழைத்த புல்லுக்குள் நுழைந்தது. அதன் வால்நுனியின் இறுதித் துடிப்பை அவன் நோக்கினான். அவ்வசைவு விழிகளில் எஞ்சியிருக்க தன் கைவிரலை தூக்கிப்பார்த்தான். சிவந்த இரு புள்ளிகள். அதை வாயில் வைத்துக் கடித்து உறிஞ்சி வாயில் ஊறிவந்த சிலதுளிக் குருதியை துப்பிவிட்டு நடந்தான்.
இரு கைகளை விரித்ததுபோல எரிந்தெழுந்து வந்த தீயிலிருந்து தெறித்த காய்கள் விழுந்து வெடித்து பற்றிக்கொண்டு இஞ்சிப்புற்பரப்பு எரிகொண்டது. தன் முன் எரி எழுவதைக் கண்டு அவன் திகைத்து திரும்பிப்பார்த்தான். சுழித்தெழுந்து அணைந்தது தழல். முடிந்தது என்ற சொல்லாக தன் அகத்தை உணர்ந்தான். இத்தனை எளிதாகவா? இத்தனை பொருளில்லாமலா? எவரேனும் என்னை கண்டடைவார்களா? வெள்ளெலும்புகள் எஞ்சுமா? எந்தக் கதையில் இது சொல்லப்படும்? கதை முடிவு அங்கே நிஷதபுரியின் அரண்மனைமுற்றத்துடன் நின்றுவிடுமா? ஏன் அச்சமெழவில்லை? ஏன் இந்நிலையிலும் நான் நான் என துள்ளுகிறது என் உள்ளம்?
இஞ்சிப்புல் விரைவில் எரிந்தழிய அந்தக் கரிய பரப்பிலிருந்து நீரில் கரித்தூள் கரைவதுபோல நீலப் புகைச்சுருள்கள் எழுந்துகொண்டிருந்தன. அவன் அந்த சாம்பல்பரப்பில் சென்று நின்றான். அணுகிவந்த செந்தழல் தயங்கியது. மாபெரும் பசு ஒன்றின் வாய் மேய்ந்தபடி வந்து புல் தீர்ந்துவிடக்கண்டு நின்று மேலெழுந்தது. நுரை வற்றுவதுபோல தீ அணைவதை அவன் கண்டான். பின்னர் அவனைச் சூழ்ந்து கரியநிலம் புகைமூடி ஆங்காங்கே எரியும் உதிரி மரத்தடிகளுடன் விரிந்துகிடந்தது. மேலெழுந்த கரிச்சுருள்கள் மழையென பெய்யத் தொடங்கின. அவன் உடலில் வியர்வை வழிய அதில் கரி கரைந்து கோடுகளாக வழிந்தது.
அவன் பெருமூச்சுடன் சூழ நோக்கினான். சற்றுமுன் அங்கே பேருருக்கொண்டு நின்றிருந்த ஒன்று இல்லையென்றாகிவிட்டிருந்தது. சினம் ஒன்று பெருகி தணிந்ததுபோல. வெந்த காடு வேறொரு மணம் கொண்டிருந்தது. அந்த மணங்கள் அங்குதான் இருந்தன. காடு நீருக்கு ஒரு மணத்தை அளிக்கிறது. நெருப்புக்கு பிறிதொன்றை. ஓடையில் சுழித்துச்சென்ற நீரில் கரிப்பொடிகள் மிதந்தன. அள்ளி உண்டபோது புகைமணம் இருந்தது.
காட்டுக்குள் சென்றபோது அவன் உடலெங்கும் களைப்பை உணர்ந்தான். மரத்தடி ஒன்று தெரிய அங்கே சென்று இலைப்படுக்கை அமைக்க முயலாமல் அப்படியே படுத்துக்கொண்டான். பாலாடை படிவதுபோல் உடல் நிலத்தில் படிந்தது. ஒவ்வொரு கூழாங்கல் மேலும் உடல் உருகி வழிந்துவிட்டதாகத் தோன்றியது. கைகால்கள் எடைகொண்டன. சித்தம் எடைகொண்டு அசைவிழந்தது. அவன் தன் குறட்டையொலியை தானே கேட்டான்.
அவனருகே கரிய பேருருவன் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் நடந்து வருவதை அவன் காணவில்லை. அருகே அமர்கையில் ஓசையும் எழவில்லை. உடலுணர்வால் அவனை அறிந்து எழ முயன்றான். “துயில்க… நான் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். “இக்காட்டில் வாழ்பவன் நான். நீங்கள் எவரென்று அறியலாமா?” என்றான். “நான் காட்டில் வாழ முயல்பவன்” என்றான் நளன். “நீங்கள் காட்டிலிருந்து வெளியேறியவர். மீளமுடியாதவர்” என்றான். “ஆம்” என்றான் நளன். “நீங்கள் நிஷதபுரியின் நளன் அல்லவா?” “என்னை அறிவீர்களா?” என்றான். “ஆம்” என்றான் அவன்.
சில கணங்களுக்குப் பின் “எங்கு செல்கிறீர்கள்?” என்றான். “அறியேன். சென்றுகொண்டே இருக்கிறேன்.” அவன் சிரித்து “இலக்கில்லாதவர்கள் எத்தனை விரைந்தாலும் எங்கும் செல்வதில்லை” என்றான். “ஆம்” என நளன் சொன்னான். “முற்றிலுமறியாத ஒருவனிடம் நீங்கள் அனைத்தையும் சொல்லலாம் என்று நூல்கூற்று உள்ளது, அரசே” என்றான் கரியவன். அவன் பெருந்தோள்களை நளன் நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை பெரிய தோள்கள் மானுடருக்கு அமையக்கூடுமா? அவன் கைகள் மிக நீளமானவை. இறுகிய தசைகளும் புடைத்த நரம்புகளுமாக முதுவேங்கைமரத்தடி போல.
“சொல்லுங்கள்” என்றான் கரியோன். “எனக்கு நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்றான் நளன். “கதைகளினூடாக” என்றான் அவன். “எல்லா கதைகளும் மெய்யென்றே கொள்க” என்றான் நளன். “நான் சூதாட்டத்தில் ஏன் தோற்றேன்? நான் அறிய விழைவது அதையே.” அவன் குனிந்து நளன் விழிகளை நோக்கியபடி “சூதாட்டத்தை நெடுநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டீர்கள், நிஷாதரே” என்றான். நளன் “என்ன?” என்றான். “நெடுநாட்களுக்கு முன்” என்றான். “நாற்களத்திற்காக குதிரைகளை அமைத்தீர்கள். பின் முதல் காய்நகர்வு. அது கலியை நீக்கி இந்திரனை முன்வைத்தது.”
அவன் என்ன சொல்கிறான் என நளனுக்குப் புரியவில்லை. “பின் அரசியின் வரவு, பின்னர்…” நளன் எரிச்சலுடன் “போதும்” என்றான். “எல்லா சூதாட்டங்களும் பிறிதொரு பெருஞ்சூதாட்டத்திற்குள் நிகழ்கின்றன. ஒன்றின் நெறியை அது அமைந்திருக்கும் பிறிதின் நெறி கட்டுப்படுத்துகிறது. சூதிற்குள் சூதிற்குள் சூதென்று செல்லும் ஆயிரம் பல்லாயிரம் அடுக்குகள். நீங்கள் ஆடியது ஒன்றில். அதன் உச்சமென பிறிதொன்றில்.” நளன் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தான்.
“சூதில் வெல்வதற்கே அனைவரும் ஆடுகிறார்கள். ஆனால் அனைவரின் ஆழங்களும் வெல்லத்தான் விழைகின்றன என்று கூறமுடியாது” என்றான் கரியவன். “தோற்கவும் விழையக்கூடும் நாமென்றாகி நடிக்கும் நாமறியா அது.” நளன் எழப்போனான். “நான் விழைவதையே சொல்லவேண்டுமா என்ன?” நளன் “இல்லை, நீர் என்னுடன் விளையாடுகிறீர்” என்றான். “ஆம்” என அவன் நகைக்க அதிலிருந்த கேலி நளனை மீண்டும் படுக்க வைத்தது. “நான் துயில்கொள்ள விரும்புகிறேன்…” என்றான். “நன்று” என அவன் சொன்னான்.
நளன் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அவன் அருகே இருக்கும் உணர்வு நோக்காதானதும் பெரிதாகியது. “எதை அஞ்சி தப்பி ஓடுகிறோமோ அதை வெல்ல எளிய வழி ஒன்றே. அதை நோக்கி திரும்புவது. அதுவாவது. அதில் திளைப்பது.” நளன் விழி திறந்து சினத்துடன் “என்ன உளறுகிறாய்?” என்றான். “எதிலும் முடிவிலாது திளைக்கவியலாது என்பதனால் அதை கடந்தாகவேண்டும். அதன்பின் அது இல்லை.” நளன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “இதோ, இது என்னவென்று தெரிகிறதா?” நளன் அதை பார்த்தான். வெண்ணிறப் பட்டாடை. பொன்னூல்களால் கரைப்பின்னல் செய்யப்பட்டிருந்தது. அன்னங்கள் ஒன்றுடன் ஒன்று கழுத்து பிணைத்து மாலையென்றாகியிருந்தது. மேலும் விழிகூர்ந்தபோது அன்னங்களின் தூவிகள் அனைத்துமே மிகச் சிறிய அன்னங்களால் ஆனதென்று தெரிந்தது.
அவன் அதை நினைவுகூர்ந்தான். “இது என்னுடையது. நான் மணிமுடி சூடிக்கொண்டபோது பீதர்நாட்டு வணிகக்குழுவொன்றால் அளிக்கப்பட்டது.” அவன் “ஆம், விலைமதிப்பற்றது. அன்று இதைக் கண்டு பெருவிழைவு கொண்டீர்கள். ஆனால் இதை அணியத் தோன்றவில்லை. உங்கள் கருவூலத்தில் கொண்டுவைக்க ஆணையிட்டீர்கள்” என்றான். நளன் “ஆம்” என்றான். “அதன்பின் இதை மறந்துவிட்டீர்கள்.” நளன் தலையசைத்தான். “ஆனால் ஒருமுறை இது கனவில் வந்தது.” நளன் “இதெல்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு?” என்றான். “இதோ, உங்கள் உள்ளத்திலிருந்தே படித்தறிகிறேன்.”
நளன் “நீர் மானுடரல்ல” என்றான். “கந்தர்வர், யட்சர், தேவர்… ஆம்.” கரியவன் நகைத்து “நாகனாக இருக்கக்கூடாதா?” என்றான். அவன் கண்களைப் பார்த்து நளன் திடுக்கிட்டான். “ஆம்!” என்றான். “இது உங்கள் கனவில் வந்த நாள் எது எனத் தெரிகிறதா?” அவன் விழிகள் நாகவிழிகளாக நிலைகொண்டிருந்தன. “ஆம்” என்றான். “அவள் சத்ராஜித் ஆக முடிசூட முடிவெடுத்த நாள். வெண்புரவி நகர்மீண்ட அன்றிரவு.” நளன் அவன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான்.
“இதை இந்தப் பொந்தில் வைக்கிறேன்” என்று அவன் அந்த வெண்பட்டை ஒரு தோல்பையால் பொதிந்து அவர்கள் படுத்திருந்த நெடுமரத்தின் பொந்தில் கொண்டுசென்று வைத்தான். “இங்கிருக்கிறது இது” என்றான். “இது எப்படி உங்கள் கையில் கிடைத்தது?” என்றான் நளன்.
திடுக்கிட்டவனாக விழிப்படைந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்து அமர்ந்தபோது தன் உடல் காந்துவதை உணர்ந்தான். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. கண்கள் கனன்று நீர் வழிந்தது. எழுந்து நிற்க முயன்றபோது உடல் ஒரு பக்கமாக சரிந்தது. மரத்தைப் பற்றிக்கொண்டு நிலைகொண்டான். கண்களை மூடியபோது நிலம் நழுவ திசை சுழல காலமின்மையில் இருந்தான். மீண்டும் விழி திறந்தபோது வியர்வை பூத்திருந்தது. விடாயை உணர்ந்தான்.
ஓரவிழியில் ஏதோ தெரிய திகைத்து தன் கைகளை தூக்கிப் பார்த்தான். அவை குழந்தைக் கைகள்போல மெத்தென்று வீங்கியிருந்தன, விரல்கள் உருண்டு மேல்கையில் குழிகளுடன் மணிக்கட்டுகளில் மடிப்பு வளையங்களுடன். கால்களும் வீங்கி பன்றிக்குட்டிகள் போலிருந்தன. சுட்டுவிரலை தூக்கி நோக்கினான். அந்த நாகம் கடித்த தழும்பு இரு கரிய புள்ளிகளாகத் தெரிந்தது.
அருகே எங்காவது மானுடர் இருப்பார்களா என்ற எண்ணமே அவனுக்கு முதலில் வந்தது. அவ்வெண்ணம் வந்ததுமே விழிகள் அதற்கான தடயங்களை கண்டடைந்தன. அங்கே எங்கோ நீரோடையின் ஓசை கேட்டது. அது ஆற்றைத்தான் சென்றடையும். ஆற்றிலிருந்து கரையேறும் பாதைகள் இல்லாமலிருக்காது. அவன் திரும்பியபோது அந்த மரப்பொந்தை பார்த்தான். ஒரு கணம் அசையாமல் நின்றான். பின்னர் அதை அணுகி உள்ளே நோக்கினான். உள்ளே மான்தோல்பொதி ஒன்று கிடந்தது.
அதை உள்ளே போட்டு நெடுங்காலமாகியிருந்தமையால் சருகுகள் விழுந்து மட்கி மூடி சிலந்திவலை அடர்ந்து பரவி எளிதில் என்னவென்று தெரியவில்லை. கனவில் அதை பார்த்திருக்கவில்லை என்றால் அதை அடையாளம் கண்டிருக்க முடியாது. இல்லை, நான் முன்னரே கண்டுவிட்டேன், ஆகவேதான் கனவு. அவன் உள்ளே கைவிட்டு அதை எடுக்கப்போய் பின் ஒரு கணம் தயங்கி சுற்றிலும் பார்த்தான். அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டுவந்து உள்ளே விட்டு சுழற்றினான். சீறியபடி அரசநாகம் ஒன்று பத்தி விரித்தது. அவன் திடுக்கிட்டு பின்வாங்கி பின் குச்சியால் அதன் முன் தட்டினான். அது மூச்சொலிக்க சினந்து அக்குச்சியை இருமுறை கொத்தியது. பின்னர் உள்ளே உடலை இழுத்துக்கொண்டு மெல்ல மறைந்தது.
அவன் அந்தக் குச்சியாலேயே தோல்பொதியை மெல்ல சுழற்றி வெளியே எடுத்தான். அரசநாகம் உண்டு எஞ்சிய எலும்புகளும் மட்கிய இறகுகளும் பலவகையான சருகுச் செத்தைகளுமாக அந்தப் பொதி வந்து நிலத்தில் விழுந்தது. கழியால் அதை தட்டித்தட்டி அதிலிருந்த சிற்றுயிர்களை விலக்கினான். கழியாலேயே அதை எடுத்து அருகே கொண்டுவந்து பிரித்து நோக்கினான். வெண்பட்டு. விரித்துப் பார்த்தான். அன்னப்பறவை மாலை கொண்ட அணிக்கரை. அதை உதறி மடித்து மீண்டும் அந்தப் பொதியில் வைத்துக் கட்டி எடுத்துக்கொண்டான்.
ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் தள்ளாடியது. புற்களையும் புதர்களையும் கடந்து மரங்களை பற்றுகோடாகப் பிடித்துக்கொண்டு நின்று இளைப்பாறி ஓடையை சென்றடைந்தான். அங்கே சேற்றில் பாதி புதைந்தபடி மட்கிய ஆடை அணிந்த எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. கால்களில் இரும்புத் தண்டையும் கைகளில் இரும்பு வளையும் அணிந்திருந்தது. அருகே சேற்றில் அதன் தலைப்பாகை கிடந்தது. சேற்றில் மூழ்கிய வாளுறை.
அவன் அதை நோக்கியபின் நீருள் இறங்கி நீர்வழியாகவே சென்றான். நீரோடை மேலும் பெரிய ஓடை ஒன்றை சென்றடைந்தது. அன்று உச்சிப்பொழுதுக்குள் அவன் காட்டாறொன்றை அடைந்தான் அதன் கரைவழியாக நடந்து சென்றபோது குடைவுப்படகு ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருப்பதை கண்டான். அது வரைக்கும் செல்ல தன் உடலில் எஞ்சிய சித்தத்தை துளித்துளியாக செலவழித்தான். அது மிகத் தொலைவில் நீரிலாடிக்கொண்டே இருந்தது.
காட்டில் மூலிகை தேடிவந்த மருத்துவரான அர்ச்சர் நளனை கண்டடைந்தார். அவன் நஞ்சு முழுத்து உடல் வீங்கி கடும்காய்ச்சலில் நினைவிழந்திருந்தான். அவர் அவனை படகிலேற்றி காடோரம் அமைந்த தன் ஆய்வுக்குடிலுக்கு கொண்டுவந்தார். அங்கே நாற்பத்தெட்டு மாணவர்களும் நூறு நோயாளிகளும் அவருடன் இருந்தனர். பதினெட்டு நாள் நளன் அவருடைய ஆதுரசாலையில் நினைவில்லாமல் படுத்துக்கிடந்தான். அவன் சொன்ன ஓரிரு சொற்களிலிருந்தே அவர் அவன் யாரென்று புரிந்துகொண்டார். அவனை தனிக் குடிலில் எவருமறியாது வைத்து மருத்துவம் செய்தார்.
அர்ச்சர் தென்னகத்துக்குச் சென்று முக்கடல் முனையருகே ஓங்கி நின்றிருக்கும் மகேந்திர மலையில் அமர்ந்த அகத்தியர்மரபைச் சேர்ந்த சித்தரான குரகரிடம் மருத்துவமுறை கற்றவர். அவர் அவனுக்கு சாதிலிங்கம், மனோசிலை, ருத்ரகாந்தம், எரிகாரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை கலந்து புடமிட்டு எடுக்கப்பட்ட நவபாஷாண மருந்தை ஊசிமுனையால் தொட்டு நாவிலோடிய நரம்பில் குத்தி உடலில் செலுத்தினார்.
ஒன்பது நச்சுக்கள் பழகிய யானைகள் காட்டுயானையை என நாகநஞ்சை சூழ்ந்துகொண்டன. அவை அந்நச்சை அவன் உட்குலைகளில் இருந்தும் குடலில் இருந்தும் துரத்தி ஒதுக்கி தோலிலும் தசைகளிலும் கொண்டுசென்று ஒடுக்கி வைத்தன. அந்தப் போரில் அவன் உடல் கடும்சுரம் கொண்டது. ஆகவே அவனை ஆதுரசாலைக்கு அருகே ஓடிய சிற்றோடைக்குள் உடல் அமிழும்படி வைத்தனர். மலைத்தேன் மட்டுமே அவனுக்கு உணவென்று அளிக்கப்பட்டது.
நாளுமென அவன் உடல் வற்றி உலர்ந்தது. முகம் உருகி வடிவிழந்தது. தோல் வெந்து பின் உரிந்து உலர்ந்த சருகுபோல் ஆகியது. பதினெட்டு நாட்களுக்குப் பின் அவன் விழித்துக்கொண்டபோது அவனருகே அமர்ந்த அர்ச்சர் அவன் கைகளை பிடித்துக்கொண்டு விழிகளை நோக்கி தணிந்த குரலில் “நீங்கள் இதுவரை நீங்களென எண்ணிய உடலை இழந்துவிட்டீர்கள். இப்போதிருப்பது பிறிதொரு தோற்றம். உங்கள் உளம் அதை உணர்ந்து தெளிந்த பின் நீரில் உரு நோக்குங்கள். இனி இதுவே நான் என எண்ணிக்கொள்ளுங்கள். அதை உள்ளம் ஏற்கச் செய்யுங்கள்” என்றார்.
“மிக எளிது அது. மானுட உடல் ஒவ்வொருநாளும் உருமாறிக்கொண்டுதான் இருக்கிறது. அத்தனை மாற்றத்தையும் மானுடர் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் உடல் இனிதானது. இவ்வுடலையும் நீங்கள் விரும்பத் தொடங்குவீர்கள். இன்னும் சிலகாலம் கடக்கையில் இம்முகத்தை ஆடியில் நோக்கி நோக்கி மகிழவும்கூடும்” என்றார் அர்ச்சர். “இது ஏன் இவ்வாறு அமைந்தது என்று எண்ணினேன். ஊழ் விடைகள் அற்றது. ஆனால் இதற்கென உங்கள் ஆழத்தில் நீங்கள் விழைந்திருக்கவும் கூடும் என்றும் பட்டது.”
“அவ்வண்ணமெனில் இந்த அரங்கிலும் ஆடுங்கள். இதைக் கடந்து எழுங்கள். இறை துணை நிற்கட்டும்” என்றார் அர்ச்சர். நளன் கைகூப்பி “எவ்வண்ணமாயினும் உயிருடன் எழுகிறேன். அதன்பொருட்டு நான் கடன்பட்டுள்ளேன், மருத்துவரே” என்றான். “நோய் வருவது உடலுக்கு மட்டும் அல்ல. அந்நஞ்சு உங்களுள் வாழும் கலியிருளையே பற்றியதென்றால் அது அருமருந்தென்றே பொருள்” என்றார் அர்ச்சர். “அவ்வாறே ஆகட்டும்” என்றான் நளன்.
நாற்பத்தோராம் நாள் பிறிதொருவனாக நளன் எழுந்தான். உடல் சிறுத்து சிறுவனைப்போல் ஆகிவிட்டிருந்தான். கால்கள் இரு பக்கமும் வளைந்திருந்தமையால் மேலும் உயரம் குறைந்தான். வளைந்த கைகளை வீசி நண்டுபோல நடந்தான். குறுகிய தொண்டையிலிருந்து கிளிக்குரல் எழுந்தது. முதலில் அவன் உணர்ந்தது தன் உடலின் எடையின்மையை. அதுவரை சுமந்திருந்த உடலின் எடைக்குப் பழகிவிட்டிருந்த உள்ளம் அதை பெரும்விடுதலையென கொண்டாடியது. விட்டில்போலத் தாவினான். தொற்றிக்கொண்டான். பற்றி மேலேறினான்.
அந்த விடுதலை அவன் விழிகளிலும் சிரிப்பிலும் வெளிப்பட்டது. எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் குள்ளனை அங்கிருந்தோர் அனைவரும் விரும்பினர். அவர்கள் அவன் சிற்றுருவால் அவனை சிறுவனென்று நடத்தினர். அவர்களால் அவனும் சிறுவனென்று தன்னை உருவகித்துக்கொண்டான். சிறுவர்களுக்குரிய ஓயா விளையாட்டும் புதியது நாடும் ஆர்வமும் கொப்பளிக்கும் உவகையும் கொண்டவனாக ஆனான்.
புதிய இடம் புதிய சுவை என தேடிக்கொண்டே இருந்தான். அவன் உடலுக்கு கைகள் பெரிதாக இருந்தன. அவற்றை காலென ஊன்றி அவனால் தலைகீழாக நடக்க முடிந்தது. மெல்லிய கொடிகளை பற்றிக்கொண்டு பூச்சிபோல மேலேறிச்செல்ல இயன்றது. கைகளால் ஆனவனை பாகுகன் என்று அழைத்தார் அர்ச்சர். அதுவே அவன் பெயரானது.
அருகிருந்த காட்டுக்குள் சென்று காட்டுப்புரவி ஒன்றைப் பிடித்து கொடிகளால் கட்டி அழைத்து வந்தான். பதினைந்து நாட்களில் அதைப் பழக்கி அதன்மேல் அமர்ந்து மலைச்சரிவில் பாய்ந்து சுழன்று வந்தான். அவன் காட்டுப்புரவியுடன் வந்தபோது அஞ்சி கூச்சலிட்ட மாணவர்கள் அவன் ஆணைக்கு அது பணிவதைக் கண்டு திகைத்தனர். அவன் அவர்களுக்கு புரவியேறக் கற்பித்தான். மேலும் மேலுமென புரவிகளை காட்டிலிருந்து கொண்டுவந்து புரவித்திரள் ஒன்றை அமைத்தான். ஆதுரசாலையின் பணிகள் அனைத்தும் எளிதாயின. தொலைவுகள் சுருங்கின.
அவ்வழி சென்ற மலைவணிகர் குழு ஒன்றுக்கு அவர்கள் ஏழு புரவிகளை விற்றனர். அவை அக்காட்டில் பிடித்துப் பழக்கப்பட்டவை என்பதை அறிந்த வணிகர்தலைவர் கனகர் அவனைப் பார்க்க விழைந்தார். அவனுடைய சிற்றுடலைக் கண்டதும் முதல் கணம் திகைத்த அவர் “ஆம், இப்படி ஏதோ ஒரு பிறிதின்மை இவரிடம் இருந்தாகவேண்டும். இல்லையேல் இது நிகழாது” என்றார். “வருகிறீரா, பாகுகரே? நகரில் நீங்கள் பார்ப்பதற்கும் ஆற்றுவதற்கும் ஏராளமாக உள்ளன” என்றார்.
“நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் பாகுகன். “நாங்கள் அயோத்திக்குச் செல்கிறோம். அயோத்தி அரசர் ரிதுபர்ணரின் அன்னைக்கு மருத்துவம் நோக்குபவர்கள் கோரிய அரிய மலைப்பொருட்கள் சிலவற்றை வாங்கவே இங்கே வந்தோம்” என்றார் கனகர். “நான் வருகிறேன். இப்போதே செல்வோம்” என்று பாகுகன் சொன்னான். “அங்கே சென்று என்ன செய்யவிருக்கிறீர், பாகுகரே?” என முரண்பட்ட தன் மாணவனை நோக்கி அர்ச்சர் “அவர் செல்லட்டும். அங்கே அவருக்கான உலகம் காத்திருக்கிறது” என்றார்.
கனகரின் வணிகக் குழுவுடன் பாகுகன் கிளம்பியபோது அவனுடைய தோல்பொதியை அவனிடம் அளித்த அர்ச்சர் “உங்களுடையது இது, பாகுகரே” என்றார். அவர் விழிகளை விழிதொட்டபின் குனிந்து கால்தொட்டு தலைசூடி “வாழ்த்துங்கள், அர்ச்சரே“ என்றான் பாகுகன். “நோய்கள் விலகுக!” என அர்ச்சர் வாழ்த்தினார்.