நத்தையின் பாதை 3
மறைந்த காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்களுடன் எனக்கு ஒரு விருப்புவிலக்க உறவு எப்போதும் உண்டு. அவருடைய பழமையான சமூக நோக்கு மேல் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். அவரை எளிமையான பக்திக்கதைகள் வழியாக தெய்வமாக ஆக்கும்போக்கை விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் மரபை அறிவதற்கான நல்லாசிரியராகவும் அவரைக் கொண்டிருக்கிறேன். எப்போதும் நான் அறியாத, அறிந்திருக்கவேண்டிய ஏதோ ஒன்றை அவருடைய சொற்கள் சொல்கின்றன. முற்றிலும் புதிதாகத் திறக்கின்றன.
ஓர் உரையாடலில் அவர் சொல்லியிருந்தார். “எழுத்தாளர்கள் புதிய காலகட்டத்தின் பௌராணிகர்கள்’ நவீன எழுத்தாளர்கள் இந்த யுகத்திற்குரிய விழுமியங்களை உருவாக்குவதே அவர்களின் பணி, அவர்கள் அகங்காரமில்லாமல் அதைத்தேடிச்செல்லவேண்டும் என்று அவர் அதை விளக்கினார். பத்தாண்டுகளுக்கு முன் இலக்கியம் மீதே நான் நம்பிக்கையிழந்து ஏறத்தாழ ஓராண்டுக்காலம் எழுதாமலிருந்தேன். அந்தத் தருணத்தில் அந்த வரி நினைவிலெழுந்து ஒர் உலுக்கலை உருவாக்கியது.
புராணங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நவீன இலக்கிய ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாடு என்ன? பல புராண ஆசிரியர்களின் பெயரே தெரியவில்லை. பிறவற்றில் பெயர் மட்டும்தான் தெரியவருகிறது. அவர்கள் தங்களை முன்னிறுத்தவில்லை. தங்கள் பேசுபொருளாகிய சான்றோர்களை, மாவீரர்களை, மிகப்பெரிய மானுடத்தருணங்களை, அவை உருவாக்கிய விழுமியங்களை மட்டுமே முன்னிறுத்தினர். ஆனால் நவீன எழுத்தாளனின் அத்தனை படைப்புக்களும் அவனையே மையமாகக் கொண்டிருக்கின்றன
நவீன இலக்கியம் உருவாகி வந்தபோது எழுந்த மிகப்பெரிய சிக்கலே இதுதான். படைப்பாளி பிண அறுவை மேடைமேல் தன் சடலத்தை முன்வைக்கிறான்’ என்றார் நவீனத்துவத்தை தொடங்கிவைத்த டி.எஸ்.எலியட். படைப்பாளி தன்னை அளவுகோலாக வைத்து உலகை ஆராய்வதும், தன் உள்ளத்தை நேரடியாக முன்வைப்பதும் மரபான வாசகர்களுக்கு ஒவ்வாமையை அளித்தது. அது ஒரு துடுக்கு, திமிர் என்றே அவர்கள் எண்ணினர்
அந்தக்காலகட்டத்தில் மதம், தத்துவம், அதிகாரம் ஆகியவற்றின் முன் இலக்கிய ஆசிரியன் கைகட்டி நின்றிருந்தான். அவர்களைப் போற்றி அவர்களின் ஆணைப்படி அவன் எழுதவேண்டியிருந்தது. இன்றும்கூட இலக்கியத்திற்கு வெளியே உள்ள பெரும்பான்மை மக்களுக்கு இலக்கியவாதி குறித்து இருக்கும் சித்திரம் இதுவே – பாராட்டிப் பிழைப்பவன், மதமும் தத்துவமும் அதிகாரமும் சொல்வனவற்றை தேனில் முக்கி விளக்குபவன். இலக்கியவாதி தன் கருத்து என எது சொன்னாலும் ‘ சொல்வதற்கு இவன் யார்?” என்ற கேள்வி நம் பொதுப்புத்தித் தளத்தில் தவறாமல் எழுவதைப் பார்க்கலாம்.
அச்சூழலில் எழுத்தாளனின் தனிஆளுமையை வலுவாக முன்வைத்த நவீன இலக்கியம் நிகழ்த்தியது ஒரு பெரும்புரட்சி. வானின்கீழே உள்ள அனைத்தையும் வானுக்கு அப்பால் உள்ளவற்றையும்கூட தன் தனிப்பார்வையால் விமர்சிப்பவனாக நவீன எழுத்தாளன் தன்னை நிகழ்த்திக்காட்டினான். அவையடக்கம் போன்ற பாவனைகள் இல்லாமல் நிமிர்ந்து நின்றான். தலைவணங்க மறுத்தான். அதற்கு தமிழில் நமக்கு முன்னுதாரணம் புதுமைப்பித்தன்.
மதமோ ,தத்துவமோ, அரசியலோ சொல்லாத ஒன்றை எழுத்தாளன் எப்படிச் சொல்லமுடியும்? அவனுடைய சொந்த உள்ளத்தை ஆராய்ந்து, அதில் கண்டதை முன்வைப்பதன் வழியாகத்தான். அது சமூகத்தின் ஒருபகுதி, பண்பாட்டில் அள்ளிய ஒரு கைப்பிடி. ஆகவே அதை முன்வைத்தே அவனால் சமூகத்தையும் பண்பாட்டையும் விவாதிக்க முடியும். பிறதுறைகளின் ஆய்வுகளையும் விவாதங்களையும் விட இலக்கியவாதியின் நுண்ணுணர்வு கூரியது. ஆகவே அவன் நோக்கு அவர்களாலும் ஒதுக்கிவிடமுடியாது.
நவீன இலக்கியம் உருவாகி வந்த கடந்த நூறாண்டுகளில் பல்வேறு சமூக, அரசியல் ஆன்மிக விஷயங்களில் இது நிரூபிக்கப்பட்டுவிட்டது. உதாரணம், சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி. அந்த அமைப்பின் அடிப்படையான அறச்சரிவை, அதன் விளைவான முழுவீழ்ச்சியை முதலில் உணர்ந்ததும் வலுவாக முன்வைத்ததும் இலக்கியமே. அதன்பொருட்டு அது கண்டிக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது. அதன்குரல் காலத்தில் நின்றது.
இலக்கியவாதியின் கருவி அவனுடைய ஆழ்மனம். நனவிலி என உளவியலாளர்கள் சொல்லும் அப்பெரும்பரப்பு. அது மரபாலும் அவன் வாழும் சூழலாலும் அவனுடைய அனுபவங்களாலும் வடிவமைக்கப்பட்டது. அதில் அவன் அறியவிழையும் அனைத்தும் உள்ளன. அதை அறிவதற்கான வழி கனவும் கற்பனையும். அதை வெளிப்படுத்துவதற்கான வழி படிமங்களும், உருவகங்களும், உணர்வுவெளிப்பாடுகளும் ,மொழிப்பாய்ச்சல்களும்.
நவீன இலக்கியம் எழுத்தாளனின் தனியாளுமையை முன்வைத்தபடி முளைவிட்டது. அது நவீனத்துவ இலக்கியப்போக்காக ஆனபோது* எழுத்தாளனை மட்டுமே முன்வைப்பதாக மாறியது. தல்ஸ்தோய் முதல் காலகட்டத்தைச் சேர்ந்தவர். அவர் தன் தனிப்பட்ட நோக்கில் ருஷ்ய வாழ்க்கையையும் வரலாற்றையும் முன்வைக்கிறார். காஃப்கா இரண்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தவர், அவர் தன்னை மட்டுமே முன்வைக்கிறார். தன் தனிமையை, சோர்வை, தான் உணர்ந்த வெறுமையை மட்டும்.
தமிழில் நவீன இலக்கியம் நவீனத்துவ இலக்கியமாகவே பிறந்தது. அதற்குக் காரணம் காலத்தில் முன்னே பாய்ந்த புதுமைப்பித்தன். அதன் பின் இங்கே எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் எழுத்தாளனை மட்டுமே முன்வைப்பவை. கி.ராஜநாராயணன் போன்ற சிறிய விதிவிலக்குகளே இங்கு உள்ளன. நம் சமகாலக் கதைகளை, கவிதைகளைப் பார்த்தால் இது தெரியும்.
எழுத்தாளன் தன்னை மட்டுமே முன்வைத்த நவீனத்துவ காலகட்டத்தில் ஐரோப்பாவில் எழுதிய படைப்பாளிகளுக்கு மிகவிரிவான வாழ்க்கை அனுபவங்கள் இருந்தன. போர்கள், தத்துவங்களின் மோதல்கள், பண்பாடுகளின் உரசல்கள் என. தமிழ் எழுத்தாளனின் அனுபவங்கள் மிகமிகக்குறுகியவை. மிகச்சாதாரணமான அன்றாடவாழ்க்கை சார்ந்தவை.தமிழ் எழுத்தாளர்களில் அனுபவங்களுக்கு தன்னைத் திறந்துகொடுத்தவர்கள், சற்றேனும் பயணம்செய்தவர்கள் மிகக்குறைவு. ஆகவே மீண்டும் மீண்டும் எளிய அன்றாடவாழ்க்கையின் மீதான தனிப்பட்ட உணர்வுவெளிப்பாடு என்னும் வரையறைக்குள்ளேயே நம் படைப்புக்கள் நின்றுவிட்டன. அதற்குள் இருந்து எவ்வளவு எழமுடியுமோ அவ்வளவே அவை மேலெழுந்தன .
சென்ற மாதம் ஓர் இளையவாசகர் என்னை சந்தித்தார். தமிழிலக்கியம் அறிமுகமான ஈராண்டுக்குள் அனேகமாக எல்லா முக்கியமான ஆக்கங்களையும் வாசித்துவிட்டிருந்தார். ஏமாற்றத்துடன் “இவ்ளவுதானா சார் தமிழ் இலக்கியம்?” என்று அவர் கேட்டார். ஓரிரு படைப்புகளுக்கு அப்பால் தமிழில் வாசிக்கக்கிடைத்த பெரும்பாலான நூல்கள் எளிமையான சுயவரலாற்றுப் பதிவுகள். அவற்றிலும் பெரும்பகுதி இன்று அர்த்தப்படாதபடி காலாவதியாகிவிட்டன என்றார்
சென்ற முந்நூறாண்டுக்காலத்தில் தமிழ் வரலாற்றில் மாபெரும் அதிகார மாற்றங்கள் மூன்றுமுறை நிகழ்ந்துள்ளன. பெரும்பஞ்சங்கள் இரண்டு வந்து சென்றுள்ளன. சாதி, சமூக அமைப்புகள் குலைந்து மறு அமைப்பு கொண்டிருக்கின்றன. பல லட்சம்பேர் இங்கிருந்து கிளம்பி அடிமைகளாகச் சென்றார்கள். அதற்கு முன் பல லட்சம்பேர் வேறு நிலங்களில் இருந்து இங்கே வந்து குடியேறினார்கள்.“வேறெந்த இலக்கியச் சூழலிலும் இதெல்லாம் இலக்கியவாதிகளின் கதைப்பொக்கிஷங்கள். எழுதிக் குவித்திருப்பார்கள். தமிழில் ஒன்றுமே எழுதப்படவில்லையே?” என்றார்
”அதையெல்லாம் எழுதவேண்டுமென்றால் எழுத்தாளன் புறவயமாக நோக்கவேண்டும். இங்கே இவர்கள் தன்னை நோக்கிக் குறுகிவிட்டிருக்கிறார்கள்” என்றேன். “திரும்பத்திரும்ப ஆண்பெண் உறவு, அதன் நுட்பங்கள் என்றபேரில் சில்லறைப் பூடகத்தன்மை அவ்வளவுதானா தமிழிலக்கியம்?” என்றார். “இவர்களின் சின்னவாழ்க்கைக்குள் எழுதுவதற்கு சுவாரசியமாக இருப்பது இளமையில் சிக்கிய இந்த சின்ன அனுபவங்கள் மட்டுமே” என்றேன்
நவீன இலக்கியம் இங்கே வந்து நூறாண்டாகப்போகிறது. இங்கே வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் இப்படி எளிய தன்கதைகளுக்குப் பழகிவிட்டிருக்கிறார்கள். வரலாறு, பண்பாடு நோக்கித் திறந்துகொள்ளும் ஆர்வமோ பயிற்சியோ அவர்களிடமில்லை. அவர்கள் தங்களை எளிமையாக அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு வாழ்க்கைச்சித்தரிப்பு போதும் அவர்களுக்கு.
இச்சூழலில்தான் சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் அச்சொல் என்னுள் விரிவடைகிறது. எழுத்தாளன் மெய்ஞானியோ, தத்துவவாதியோ அல்ல. மாபெரும் வாழ்க்கைக் களங்களில் நிறைந்து பரவும் வாய்ப்பு கிடைத்தவனும் அல்ல. மிக எளியவன். அப்படி இருக்க அவன் தன்னை மட்டுமே முன்வைக்கும் எழுத்துக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்? காசநோயாளிகளின் நகரில் ஒரு காசநோயாளியின் நுரையீரலாக அவன் தன் அகத்தை ஆய்வுகாக எடுத்து வைக்கலாம், அவ்வளவுதான். இலக்கியம் என்பது ஒரு ’மாதிரி ஆய்வு’ மட்டும்தானா?
இன்றைய சூழலில் இலக்கியவாதி தன்னை ஒரு பௌராணிகனாகக் கருதிக்கொள்ளவேண்டும் என்று நானும் எண்ணுகிறேன். தன்னை கதைசொல்லியாக மட்டும் அவன் வரையறுத்துக்கொண்டால்போதும். அவனுடைய தனித்திறன் அது மட்டுமே. பௌராணிகனைப்போல தன்னைவிட பெரியவற்றின் முன் அவன் சென்று நிற்கவேண்டும். தன்னை விடப்பெரிய மகத்துவங்களுக்கு முன். தன்னைவிட பெரிய இருட்டுக்கு முன். அவற்றை காலத்தின் முன் கதையினூடாக நிறுத்துபவனாக மட்டுமே தன்னை முன்வைக்கவேண்டும்
அப்படியென்றால் அவனுடைய உள்ளத்திற்கு, தனியாளுமைக்கு உள்ள பணி என்ன? அந்த மகத்துவங்களையும் இருளையும் அவன் எப்படி அறியமுடியும்? தன் ஆழ்மனதை கருவியாகக் கொண்டுதான். தன் கனவை ஊடகமாகக் கொண்டுதான். அவன் என்ன எழுதினாலும் அதில் அவன் இருப்பான். ஆனால் அந்த மகத்துவங்களாகவும் இருள்களாகவும் உருமாறியிருப்பான். அப்படி உருமாறி பெருகிவிரிவதன் பெயரே பெருங்கலை. கம்பனும் சேக்கிழாரும் பெருங்கலைஞர்கள். மதுரை அகோரவீரபத்ரனையும் கிருஷ்ணாபுரம் குறவனையும் வடித்தவர்களைப்போல. அவர்கள் தங்களை முன்வைக்கவில்லை, தங்கள் கலைகளுக்குள் வாழ்கிறார்கள்.
- நவீனஇலக்கியம் [modern literature] என்றால் அச்சும் உரைநடையும் உருவானபின்னர் எழுந்த இலக்கியம். நேரடியாக வாசகனுடன் பேசுவது அது.நவீனத்துவம் [modernism] என்பது ஓர் இலக்கியப்போக்கு. தர்க்க ஒழுங்கு வடிவ ஒழுங்கு தனிமனிதப்பார்வை ஆகியவற்றை அடிப்படைகளாகக் கொண்டது.