75. காகத்தின் நகர்
அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன?” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான்.
மஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று கோப்பை யவன மதுவை அருந்திவிட்டு தன்னை எளிதாக்கிக்கொண்டான். அப்போதுதான் குருதி உலர்ந்து கருத்த தன் உடைவாளை கண்டான். அதை எடுத்து கண்ணெதிரே தூக்கி பார்த்தான். நெஞ்சு படபடத்தது. அதன் செதுக்குகளுக்குள் உறைந்திருந்த கருங்குருதியை நகத்தால் நீவி எடுத்தான். எண்ணியிராக் கணத்தில் பெரும் உளக்கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டது. முதுகுத்தண்டு சிலிர்க்க கண்கள் மங்க தலைக்குள் குளிர் பரவ காலமில்லாதாகி மீண்டான். புன்னகையுடன் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.
கையில் வாளுடன் படுக்கையில் படுத்து முகடுப்பலகையை நோக்கிக்கொண்டிருந்தான். மெல்ல அவன் துயில வாள் நழுவி கீழே விழுந்தது. அவ்வொலியை அவன் கனவில் ஒரு மணியோசையென கேட்டான். அந்த வாள் ஒரு பாம்பென்று மாறி உடலெங்கும் குருதி வழிய கட்டிலின் கால்மேல் சுழன்றேறி அவன் காலை அடைந்தது. உடல்வழிந்து மார்பின்மேல் சுருண்டு படம் எடுத்தது. கரிய நாகம். அவன் அதன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் சுடரென அதன் படம் அசைந்தது.
“நீயா?” என்றான். பாம்பு சீறல் ஒலியெழுப்பியது. அவ்வொலியே சொல்லாக பேசத்தொடங்கியது. “இது கடன்தான்” என்றது. “என்ன சொல்கிறாய்?” அது “இது கடன்தான்” என்றது மீண்டும். “எதுவரை?” என்றான். அது சீறியது. “சொல், எதுவரை?” அதன் விழிகள் பொருளிலா மணிகள். “சொல், எதுவரை? எதுவரை?” அதன் ஆட்டம் பொருளிலா நெகிழ்வு. “சொல், எதுவரை? எதுவரை? சொல்!” அவன் அதைப் பிடித்து நெரித்தான். “நீ என்னுடனிருப்பாய்… நான் விடமாட்டேன்.” அது சுருங்கி அவன் பிடியிலிருந்து நழுவி தன்னை உருவிக்கொண்டது. “சொல், எதுவரை? எதுவரை உடனிருப்பாய்?”
தன் குரலைக் கேட்டே அவன் விழித்துக்கொண்டான். கையில் அவன் உடைவாள் இருந்தது. அதன் கூர்முனையை இறுகப்பற்றியிருந்தான். விரலிடுக்குகளில் செங்குருதி ஊறி படுக்கைமேல் சொட்டியது. கையை விடவேண்டுமென எண்ணினாலும் முடியாமல் இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். வெளியே நகரின் ஓசைகள் பெருகி அனைத்துச் சாளரங்களூடாகவும் அரண்மனைக்குள் நிறைந்து சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. யானைகளின் பிளிறல்கள், முரசொலிகள், மனிதக்குரல் திரண்டெழுந்த அலை முழக்கம்.
ஏன் இக்குரல்கள் இப்படி அலையடிக்கின்றன என்று எண்ணிக்கொண்டான். அது உளமயக்கா? இல்லை, அவை மெய்யாகவே அலையடித்துக் கொண்டிருந்தன. அத்தனை குரல்களும் இணைந்து மேலெழுந்து இறங்குகின்றனவா? காட்டில் சீவிடின் ஒலிபோல. அத்தனை உள்ளங்களும் ஒன்றென்று ஆகிவிட்டனவா? அவன் அறைக்குள் வந்து தலைவணங்கிய ஏவலன் “புலரி அணுகுகிறது, அரசே. விடிவெள்ளி எழுந்துவிட்டது” என்றான். “நன்று” என்றபின் அவன் எழுந்து நீராட்டறைக்குச் சென்றான்.
ஏவலர் இளவெந்நீரில் அவனை நீராட்டினர். குருதி உடலெங்கும் வெம்மைகொண்டு ஓட சித்தம் மெல்ல மயங்கியபோது நிறைவு மட்டுமே அளிக்கும் மயக்கத்தை உணர்ந்தான். இங்கிருக்கிறேன் என்று ஒற்றைச்சொல்லாக அவன் உள்ளம் இருந்தது. அதன் பொருளென்ன என்று அவன் உணர்ந்தபோது அத்தருணத்தை கடந்து வந்திருந்தான். எழுந்து ஈரம் வழிய ஆடி முன் நின்றான். ஏவலர் அவன் உடலைத் துடைத்து மலர்ச்சுண்ணப்பொடி பூசினர். ஆடியில் அவன் தன்னை நோக்கிக்கொண்டே நின்றான். அப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது, அதுவே அவன் வாழ்வின் உச்சம். அந்த மலைமுடியிலிருந்து மறுபுறம் இறங்குவதே அதற்குமேல் எஞ்சியிருந்தது.
நிஷதபுரியில் பன்னிரண்டு நாட்கள் கலிப்பதிட்டைப் பெருவிழவு நடந்தது. நகரெங்கிலுமிருந்து மக்கள் பெருகி திரைதள்ளி ஒழுகி கலியின் சிற்றாலயம் அமைந்த காட்டை தலைகளென நிரப்பினர். வெறியாட்டெழுந்த நூற்றெட்டு நிஷதகுடிப் பூசகர்கள் வேல் சுழற்றி அலறி நடனமிட்டபடி நகரத்திலிருந்து கிளம்பி கலியின் ஆலயத்திற்கு வந்தனர். அவர்களைச் சூழ்ந்து கை முழவும் துடியும் கிணையும் பறையும் முழக்கியபடி நிஷாதர்கள் கட்டிலா நடனமிட்டு கூவி ஆர்ப்பரித்தபடி வந்தனர்.
ஒவ்வொருவராக அவர்கள் ஆலயத்தை வந்தணைய அவர்களை வாழ்த்தியும் கலிக்கு வெற்றி கூவியும் நிஷாதர்கள் ஆர்ப்பரித்தனர். “எழுக காகம்! எழுக கருமை! எழுக நிகரிலாதோன் நகர்! எழுக நிஷதக்குருதிப் பேரலை!” என எழுந்த கூவல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து சொல்லிலா கார்வையென்றாயின. ஆனால் அக்கார்வை அச்சொற்களை செவிகேட்கவும் செய்தது.
நகரெங்கும் அமைந்த சிறிய கலிப்பதிட்டைகளுக்கு முன் எருமைகளை கழுத்தறுத்து பலி கொடுத்தனர். அந்தக் குருதியால் கலியை முழுக்காட்டினர். வழிந்து மடையில் கொட்டிய குருதியை கொப்பரைகளில் அள்ளி தெருக்களில் கொந்தளித்த மக்கள்திரள்மேல் வீசினர். அதை குடித்தனர், கொப்பளித்து துப்பினர். குழந்தைகளை அதில் முழுக்காட்டி தூக்கி காற்றில் வீசிப்பிடித்தனர். நிஷாதர் அனைவரும் குருதியாடினர். வியர்வை வழிந்து குருதியுடன் கலந்து அவர்களை போர்க்களத்திலிருந்து எழுந்துவந்த குறையுடல்களென மயங்கச் செய்தது.
கலிதேவனின் ஆலயப்பெருமுகப்பில் அரசனின் தேர் வந்தபோது “காளகக்குடி மைந்தர் புஷ்கரன் வெல்க! நிஷதக்குடி மன்னர் வெல்க! கலிமைந்தர் என்றென்றும் வெல்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. நாற்புறமும் திறந்த தேர்த்தட்டில் இரு கைகளையும் கூப்பியபடி நின்று மக்கள் வீசிய அரிமலர் மழையில் நனைந்து ஆலயத்தை வந்தடைந்தான் புஷ்கரன். வீரர் அமைத்த படிகளில் இறங்கி இருபுறமும் மனிதத்திரள் கொப்பளிக்க வேல்கொண்டு விலக்கி வீரர்கள் உருவாக்கிய சிறுபாதையினூடாக நடந்து ஆலயத்தை சென்றடைந்தான்.
அவன் வருகையை முரசுகள் முழங்கி அறிவித்தன. பூசகர்கள் எழுவர் வந்து அவனை வேல்தாழ்த்தி வரவேற்று கொண்டுசென்று கலிமுன் நிறுத்தினர். விழி கட்டப்பட்ட சிலையை நோக்கியபடி அவன் கைகூப்பி நின்றான். அவன் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. பூசகர் ஒருவர் வெறியாட்டு கொண்டு அலறி வேல்சுழற்றி ஆடினார். சூழநின்ற பூசகர்கள் ஒவ்வொருவராக வெறியாட்டு கொண்டனர். அது ஒருவரிலிருந்து ஒருவர் என கடந்து செல்ல அப்பகுதியில் நின்ற அனைவருமே வெறியாட்டெழ கூவி துள்ளியாடினர். நரம்புகள் புடைத்த கழுத்துகளும் துறித்த விழிகளும் தொங்கியாடிய நாக்குகளுமாக துள்ளுமீன் என கூட்டத்திலிருந்து எழுந்து காற்றில் பறந்தமைந்தனர்.
வெறிக்கூச்சலுடன் ஒருவன் ஓடிவந்து கலிமுன் நின்று தன் குழலை இடக்கையால் பற்றி வலக்கையில் ஏந்திய வாளால் தலை அரிந்து குருதி பெருக கீழே விழுந்தான். அவன்மேல் என இன்னொருவன் வந்து தலையரிந்து விழுந்தான். மேலும் மேலுமென ஏழு நிஷாதர் தலைகொடுத்து விழுந்தனர். பூசகர் அவர்களின் குருதியை மரக்குடைவுக் கலங்களில் பிடித்து சேர்த்தனர். கால்கள் பின்னித் துடிக்க கைகள் மண்ணள்ளி அதிர விழித்த கண்களும் இளித்த பற்களுமாக அவர்கள் உயிரடங்கினர்.
தற்பலி கொடுத்துக்கொண்ட நிஷாத வீரர்களின் உடல்களைத் தூக்கி அகற்றினர் பூசகர். பன்னிரு குடங்களில் பிடித்துச் சேர்க்கப்பட்ட அவர்களின் கொழுங்குருதியை கலியின் சிலைமேல் ஊற்றி முழுக்காட்டினர். முழவும் பறையும் உறுமியும் சங்கும் மணியும் கொண்ட ஐந்தொகைக் கருவிகள் முழங்கிக்கொண்டே இருந்தன. மலராட்டும் சுடராட்டும் முடிவது வரை அந்த இசையாலேயே அப்பகுதியின் அத்தனை காட்சிகளும் சமைக்கப்பட்டிருந்தன. “பஞ்சவாத்தியம் அமைக!” என பூசகர் கைகாட்டியதும் அவை ஓய்ந்து அமைதி எழுந்தது.
அமைதியும் பெருகி அகன்று சென்றது. சூழ்ந்திருந்த முற்றமும் காடும் ஓசையடங்கின. பூசகர் கலிக்கு படையலிட்டு அக்குருதி அன்னத்தை அவனுக்கு அளித்தார். அதில் ஒரு பருக்கையை எடுத்து உண்டு வணங்கி கலியின் காலில் இருந்த குருதிக்குழம்பை எடுத்து நெற்றியில் குறிதொட்டு அவன் வெளியே வந்தான். தேரில் ஏறி நாற்புறமும் நோக்கித் தொழுதபின் உரத்த குரலில் “இனி தடையேதும் இல்லை. நம் தெய்வம் அது வீற்றிருக்கும் இடம் என நமது முன்னோர் வகுத்த மலையுச்சிக்கே செல்லட்டும். நம் தெய்வத்தை நம் சென்னிமேல் அமர்த்துவது நமது கடன். அவ்வாறே ஆகுக!” என்றான்.
அவன் கூறியதை பல நூறு நிமித்திகர்கள் மீண்டும் மீண்டும் கூவ நிஷாதர்கள் வெறிக்கூச்சலிட்டனர். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி சிலர் அழுதனர். கொம்பும் முரசும் முழங்க வாழ்த்தொலி கூவியபடி பூசகர்கள் கலியின் விழிக்கட்டை அவிழ்த்தனர். விழி திறந்த தெய்வத்தை கற்பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து மரப்பீடத்தில் வைத்தனர். ஆறு மரச்சட்டங்களின்மேல் அமைந்த அந்தப் பீடத்தை கழிக்கு ஐவர் என முப்பது மல்லர்கள் தூக்கிக்கொண்டார்கள். ஆர்ப்பரிக்கும் நிஷாதர்களை நோக்கியபடி கலி வெளிவந்து பகலொளியில் நின்றது.
கொப்பளிக்கும் பெருவெள்ளத்தில் மிதப்பதுபோல கலியின் சிலை மக்கள்திரள்மேல் அலைபாய்ந்ததை புஷ்கரன் நோக்கி நின்றான். “மேலேறிச் செல்லும் வெள்ளம்” என்றார் பத்ரர். எறும்புப்பெருக்கு என அவன் எண்ணினான். அப்பால் நின்றிருந்த சுநீதர் “எரிந்தெழுந்து மலையை உண்ணும் தழல்” என்றார். ஒன்றை ஒன்று உந்தி மேலேற்றும் சிறிய அலைகளாக மக்கள்திரள் இந்திரகிரிக்கு மேலேறிச் சென்றது.
தேர்த்தட்டில் இடையில் கைவைத்து நின்று அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்திரகிரி முற்றிலும் மனிதர்களால் ஆனதாக மாறியது. அவன் அருகே நின்ற சுநீதர் “மலையே மறைந்துவிட்டது, அரசே” என்றார். அவன் தலையசைத்தான். அமைச்சர் பத்ரர் “மானுட மலை” என்றார். அவனுக்கு மண்ணில் நிறைந்திருக்கும் மானுடப்பரப்பில் ஒரு குமிழி என்று தோன்றியது. மேலே இந்திரனின் சிலை அசைவதை அவன் கண்டான். அங்கிருந்து எழுந்த ஓலம் மிக மெல்லிய செவித்தீற்றலாகவே கேட்டது.
சிலை அசைவது அதற்குப் பின்னிருந்த முகில் நகர்வாலா என்று ஐயம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அது நடுங்கி அதிர்ந்து அசைந்தபோதுதான் உண்மை அது என்ற திண்ணம் வந்தது. சிலை வலப்பக்கமாக சரியத் தொடங்கியது. சுநீதர் “சிலை சரிகிறது. அங்கு நின்றவர்கள் விலகி ஓடவில்லை எனில் பலர் நசுங்குவது உறுதி” என்றார். அமைச்சர் பத்ரர் “அனைவரும் அவ்வாறு விலக்கிக்கொள்ள இயலாது. மலையில் எங்கும் இடமே இல்லையே” என்றார். சுநீதர் “ஆம், கலி விழி திறந்தால் திரள்பலி இன்றி அமையமாட்டான்” என்றார்.
காற்றில் கரிய இறகு ஒன்று விழுந்து நிலத்தில் அமைவதுபோல சிலை சென்று அறைந்தது. ஓசையே இல்லாது அது நிகழ்ந்தமை புஷ்கரனுக்குள் ஒரு துணுக்குறலை உருவாக்கியது. அங்கு எழுந்த அலறல்களும் கூச்சல்களும் தொலைவிலிருந்து பார்க்கையில் மிகச் சிறிய பறவைக்கலைவொலிபோல தோன்றியது. சற்று நேரத்தில் சிலைமேல் மனிதத்திரள் ஏறி முழுமையாகவே மூடியது. கூர்ந்து நோக்கியபோது மனித உடல்கள் போர்வையென மூடியிருக்க ஒரு முழுப்புருவாக சிலையை காணமுடிந்தது.
“கலிதேவனின் சிலையை இப்போதே அங்கு நிறுவிவிடுவார்கள். பதிட்டைப் பூசனைகள் பகல் முழுக்க நிகழும். அந்தியில் முழுக்காட்டும் விழிதிறப்பும்” என்றார் சுநீதர். “நாம் அரண்மனைக்கே மீண்டு ஓய்வெடுத்துவிட்டு அங்கே செல்வோம்.” புஷ்கரன் தலையசைத்து தேரைத் திருப்பும்படி ஆணையிட்டான். தேர் ஒழிந்த நகர்த்தெருக்களினூடாகச் செல்லும்போது “கலிங்க அரசியையும் அவள் காதலனையும் இக்குடிகளே தண்டிக்கட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்” என்றான்.
பத்ரர் திடுக்கிட்டு “அரசே, குடியவையில் அவர்களை நிறுத்தி நெறியுசாவ வேண்டியது நம் கடன்” என்றார். புஷ்கரன் “மேலும் ஒரு நாள் கடத்தினால் அவளை நம்மால் தொடமுடியாது. ஏனெனில் அவள் ஷத்ரியப் பெண். ஒருபோதும் ஷத்ரியர் நிஷாதர்முன் ஷத்ரியப் பெண் மன்றுநிற்க ஒப்பமாட்டார்கள். இத்தருணத்தில் இங்கேயே இவ்வலையிலேயே அது நிகழ்ந்தாக வேண்டும்” என்றான். பத்ரர் “ஆணை” என்றார்.
“நிஷதபுரியின் புஷ்கரன் ஒவ்வொன்றையும் எண்ணிஎண்ணிச் செய்து ஏணியில் ஏறிக்கொண்டே இருந்தான். அந்த ஏணி உண்மையில் கீழ்நோக்கிச் சரிந்து ஆழத்திற்கிறங்கியது என்பதை அவன் உணர்ந்தும் இருந்தான்” என்றார் ஆபர். விராடர் “ஆம், கண் மூடினாலும் எழுவதையும் விழுவதையும் உணரும் ஒரு புலன் நம்முள் உள்ளது” என்றார்.
“கலிக்கொண்டாட்டத்தின் நாளிலேயே பெருகிவந்து செண்டுவெளியைச் சூழ்ந்த நிஷாதர்கள் ரிஷபனையும் மாலினியையும் கல்லால் அடித்து கிழித்தெறிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் குருதியிலாடியிருந்தனர். மேலும் மேலும் குருதி என அவர்களுள் வாழ்ந்த இருண்ட தெய்வம் விடாய் மிக்க நாவை நீட்டியது. ரிஷபனும் மாலினியும் எரிப்பெருக்கிலிட்ட வெண்ணைக்கட்டிகள்போல கண்ணெதிரிலேயே கணங்களுக்குள் உருவழிந்தனர். அவர்களின் ஊனில் ஒரு துண்டுக்காக நிஷாதர் முண்டியடித்தனர். ஒரு நகம் மட்டும் கிடைத்த ஒருவன் வெறிகொண்டு நகைத்தபடி எழுந்து குதிக்க அவன்மேல் பாய்ந்து பிறர் அவனையே கிழித்தெறிந்தனர்” என்றார் ஆபர்.
தண்டபுரத்தின் கலிங்க அரசன் பானுதேவன் செய்தியறிந்தபோது சினம்கொண்டு தொடையை அறைந்தபடி எழுந்தான். “எழுக நம் படைகள்” என அவன் ஆணையிட்டான். “அரசே, பொறுங்கள். நம்முடன் நின்றிருக்கும் படைகள் எவை என நாம் அறியவேண்டும். அவனுடன் நிற்பவர் எவரென்றும் தெளியவேண்டும்” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். “நம்முடன் அத்தனை ஷத்ரியர்களும் நிற்பார்கள். உடனே நிகழ்ந்ததென்ன என்று அரசர்களுக்கு செய்தியறிவியுங்கள்” என்றான் பானுதேவன். “அதை அறிந்த பின்னர் போதும் நம் படைநீக்கம்” என்றார் அமைச்சர்.
அதற்குள்ளாகவே புஷ்கரன் படைகொண்டு தண்டபுரத்தின்மேல் எழுந்திருக்கும் செய்தி வந்தது. அவனுடன் சதகர்ணிகளின் படைகளும் வழியில் இணைந்துகொண்டன. “இப்பெருவஞ்சனையை நான் எதிர்பார்க்கவில்லை. வஞ்சனையாலேயே இந்த ஆடல் நிகழுமென நான் அறிந்திருந்தேன். ஆயினும் இது எண்ணற்கரியது” என்று பானுதேவன் குமுறினான். “சதகர்ணிகளை புஷ்கரனுடன் இணைத்ததே நான்தான்… என்னிடமே முதல் வஞ்சனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.”
“அதுவே நிகழும். ஏனென்றால் வஞ்சனைத்திறனால் நீங்கள் ஆற்றல்கொள்கிறீர்கள் என அவர்கள் அறிவார்கள். படைவல்லமை கண்ணுக்குத் தெரியும். சூழ்ச்சியை உய்த்தறிய இயலாது. சூழ்ச்சித்திறன் கொண்டவனை அவன் வளர்வதற்குள் அழிக்கவேண்டும் என்றுதான் அரசநூல்கள் சொல்கின்றன” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். பானுதேவன் சினம்கொண்டு தொடைமேல் ஓங்கி அறைந்தான். “நம் சூழ்ச்சியின் வெற்றியை இவர்கள் அறுவடை செய்கிறார்கள். இதை ஒப்ப முடியாது. ஷத்ரியர் எவர் நம்முடன் திரள்வார்கள் என்று இன்றே அறிக!” என்றான்.
ஷத்ரிய நாடுகள் எதிலிருந்தும் மறுமொழி வரவில்லை. நான்கு நாட்கள் காத்திருந்த பின் பானுதேவன் பொறுமையிழந்தான். “அவர்களுடன் வேறேதோ உடன்படிக்கை நிகழ்ந்துள்ளது, அரசே” என்றார் ஸ்ரீகரர். “வேறுவழியில்லை. நாம் நம் பங்காளிகளிடம் சென்று சேரவேண்டியதுதான். நம் தூதர்கள் தாம்ரலிப்திக்கு செல்லட்டும். கலிங்கம் ஒன்றாக நம்முடன் நின்றாலே நாம் எளிதில் விழமாட்டோம்” என்றான் பானுதேவன். ஆனால் மறுநாள் செய்தி வந்தது. தாம்ரலிப்தியின் கலிங்க மன்னன் சூரியதேவனின் மகள் சாயாதேவியை புஷ்கரன் மணம் செய்துகொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று. அதற்கு ஈடாக தண்டபுரத்தை தாம்ரலிப்திக்கு அளித்து ஒருங்கிணைந்த கலிங்கம் உருவாக புஷ்கரன் உதவுவதாக சொல்லப்பட்டுள்ளது என்றான் ஒற்றன்.
உளமுடைந்து அரியணையில் அமர்ந்த பானுதேவன் உதடுகளை இறுகக் கடித்து கைகளை முறுக்கியபடி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான். அவ்வெல்லை மீற வெடித்து அழத்தொடங்கினான். அவை அவன் அழுவதை திகைப்புடன் நோக்கி அமர்ந்திருந்தது. தன் அழுகையை உணர்ந்து சீற்றம் கொண்டு எழுந்த பானுதேவன் “நாம் கிளம்புவோம்… வடக்கே செல்வோம்” என்றான். “நகரை கைவிட்டுவிட்டா? அது அறமல்ல” என்றார் அமைச்சர் ஸ்ரீகரர். “அறம் பேசும் பொழுதல்ல இது. அவன் என்னை விட்டுவைக்கமாட்டான்” என்றான் பானுதேவன்.
“உயிர்தப்பி ஓடுவதை விட…” என அமைச்சர் சொல்லத் தொடங்க “நீர் காவல்படையுடன் இங்கிரும். புஷ்கரனிடம் பேசி நம் குடிகளின் உயிர்களை காத்துக்கொள்ளும். நான் கிளம்புகிறேன்” என்றான் அரசன். அவையினர் தயங்கியபடி எழுந்தனர். “படைகள் ஒருங்குக! நான் இன்று மாலையே கிளம்பவேண்டும்” என்று ஆணையிட்டபடி அவன் அவையிலிருந்து விலகிச் சென்றான்.
அன்று மாலையே பானுதேவன் தன் படையுடன் பின்வாங்கி வடக்கே சென்றான். ஆனால் அவன் சென்ற பாதையை முன்னரே புஷ்கரனின் படைகள் மறித்துவிட்டிருந்தன. தொலைவில் நிஷாதர்களின் காகக்கொடியை பார்த்ததுமே பானுதேவன் உளமுடைந்து மீண்டும் அழத்தொடங்கினான். அவனுடைய படைத்தலைவன் உக்ரவீரியன் புஷ்கரனுக்கு முழுப் படையும் அடிபணிவதாக செய்தி அனுப்பினான். அதற்கு மறுமொழி வரவில்லை. படைத்தலைவர்கள் அமர்ந்து சொல்சூழ்ந்தார்கள். “முழுப் பணிதலுக்கு செய்தியனுப்பியும் மறுமொழி இல்லை என்பதன் பொருள் ஒன்றே” என்றான் உக்ரவீரியன். அவன் துணைவர் அவன் விழிகளையே நோக்கினர். “என்னுடன் நில்லுங்கள்” என்று அவன் சொல்ல அவர்கள் விழிகளால் ஆம் என்றனர்.
அன்றிரவு தன் பாடிவீட்டில் மதுவுண்டு வாய்வழிய துயின்றுகொண்டிருந்த பானுதேவனை உள்ளே நுழைந்த உக்ரவீரியன் வெட்டிக் கொன்றான். அவன் பாடிவீட்டிற்குள் வாளுடன் புகுந்தபோது அரசனுடன் இருந்த சேடி அலறினாள். ஒலி கேட்டு விழித்துக்கொண்ட பானுதேவன் “உக்ரரே!” என கைநீட்டினான். அத்தருணத்தை வெல்ல தன் கீழ்மையை முழுமையாக திரட்டிக்கொள்ளவேண்டும் என உணர்ந்த உக்ரவீரியன் அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்தான். அவன் மல்லாந்து விழ குழல்பற்றி தலையைத் தூக்கி கழுத்தை வெட்டினான். துண்டான தலையுடன் அவன் வெளிவந்தபோது படைத்துணைவர்கள் அங்கே திரண்டு நின்றிருந்தனர். தலையை முடிபற்றி தூக்கிக் காட்டினான் உக்ரவீரியன். கைகளைத் தூக்கி “ஆம்” என்றனர்.
பானுதேவனின் தலையுடன் கலிங்கப்படை சென்று புஷ்கரனின் படைகளுடன் சேர்ந்துகொண்டது. அவர்கள் கலிங்கக்கொடியை கீழேயும் காகக்கொடியை மேலேயும் கட்டிய கம்பங்களுடன் புஷ்கரனை வாழ்த்தி ஒலியெழுப்பியபடி திரளாக நிஷதப்படை நோக்கி சென்றனர். அவர்களைக் கண்டதும் நிஷாதர்கள் உரக்கக் கூச்சலிட்டு வரவேற்றனர். புஷ்கரன் முன்னிலையில் அவர்கள் தலைமழித்து நெற்றியில் காகக்குறி பொறித்து நிஷதகுடியின் அடிமைகளாக ஆயினர்.
புஷ்கரன் தண்டபுரத்தை அடைந்தபோது கையில் கங்கைநீர் கொண்ட நிறைகுடத்துடன் நூற்றெட்டு அந்தணர் உடன்வர கோட்டைவாயிலுக்கே வந்து ஸ்ரீகரர் அவனை எதிர்கொண்டார். தண்டபுரத்தின் அவையைக் கூட்டி அரியணையில் அமர்ந்து முடிசூடிய புஷ்கரன் நகர்மையத்தில் இருந்த சூரியன் ஆலயத்தின் கிழக்குச் சுவரில் தன் வெற்றியை கல்வெட்டாகப் பொறித்தபின் நகர்மீண்டான். தண்டபுரத்தை கன்யாசுல்கமாக அளித்து தாம்ரலிப்தியின் அரசன் சூரியதேவனின் மகள் சாயாதேவியை மணந்துகொண்டான்.
ஆபர் கைகுவித்து வணங்கி “குருதியில் வேர்விட்டே அரசுகள் எழுகின்றன. ஆனால் ஷத்ரியக் குருதி சூரியன் சான்றாகவே விழவேண்டும் என்கின்றன நூல்கள். இருளில் சிந்தப்படும் குருதியை உண்ண வருபவை இருளை நிறைத்துள்ள தெய்வங்கள். அவை சுவைகண்ட பின் அடங்குவதில்லை. முழுக்க நக்கித் துவட்டிய பின்னரே அகல்கின்றன” என்றார்.
விராடர் பெருமூச்சுடன் “ஆம், ஒருமுறைகூட வரலாறு பிறிதொன்றை சொன்னதில்லை. ஆனால் இது நிகழாமலும் இருந்ததில்லை” என்றார். “மீண்டும் மீண்டும் இந்நிலத்தில் உடன்பிறந்தார் நிலத்திற்கென பூசலிட்டிருக்கிறார்கள். பின்னர் விண்ணேகி அங்கே ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டிருக்கிறார்கள். ஆயினும் குருதிப் பூசலும் அடங்கவில்லை” என்றார் ஆபர்.
குங்கன் எழுந்தமைந்து மெல்ல முனகிய பின் “போருக்கெழுபவர்கள் நூல் நோக்குவதில்லை” என்றான். விராடர் “எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு, குங்கரே. இப்போது நீங்கள் அசைந்து ஒலியெழுப்புகையில் உறுதிப்பட்டது. உங்கள் அசைவுகளை மட்டும் கண்டால் நீங்கள் புண்பட்டு உடற்குறை கொண்ட ஒருவர் எனத் தோன்றும்” என்றார். குங்கன் “என்ன?” என்றான் வியப்புடன். “ஆம், உங்கள் இடக்காலில் புண் எழுந்து முடமானதுபோல. அதை நீங்கள் மாளா வலியுடன் அசைத்து வைப்பதாகவே தோன்றும்” என்றார். குங்கன் புன்னகைத்து “நாம் அதை அறியவோ பகுக்கவோ இயலாது” என்றான்.
பின்னர் ஆபரிடம் “கானேகிய நளன் என்ன ஆனார்?” என்றான். “பல நூறு கதை வடிவுகள் இங்குள்ளன. நான் நாலைந்தை கேட்டுவிட்டேன். நான் கேட்க விழைவது அரசுசூழும் அந்தணர் எழுதி வைத்திருக்கும் வரலாற்றை.” ஆபர் “இதுவும் கதையே. சென்றவரைப் பற்றி இருப்பவர் கதையாக அன்றி எதையுமே சொல்லிவிட முடியாது” என்றார். விராடர் “மெய் வரலாறென்பதே இல்லையா?” என்றார். “இல்லை. மெய்வரலாறு ஒன்று இருந்தால் அது பாறைகளைப்போல. அதைக் கொண்டு நிகழ்காலத்தை விரும்பிய வண்ணம் புனைந்துகொள்ள முடியாது” என்றார் ஆபர்.
“சொல்க!” என்றான் குங்கன். ஆபர் நீள்மூச்சுவிட்டு “புஷ்கரனை பற்றிக்கொண்ட நாகம் நளனை கைவிட்டது என்கின்றன நூல்கள்” எனத் தொடங்கினார். “அன்றுதான் இந்திரகிரியின் உச்சியில் நளன் நிறுவிய பெருஞ்சிலை மண்ணறைந்து விழுந்து நாற்பத்தாறுபேரை பலி கொண்டது. கலி விழி திறந்து எழுந்து தன் குடிகளின்மேல் அனலெனப் பரவி ஆட்கொண்டது. குருதியிலாடி குருதியை உண்டு வெறிகொண்டாடியது நிஷதபுரி.”