‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75

74. நச்சாடல்

flowerஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க!” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான் உங்கள் ஊழியன். நான் உங்களை பணியவேண்டும். உங்களை வாழ்த்தவேண்டும். அதுவே இந்நாடகத்தின் நெறி. இனி இது மீறப்பட்டால் நான் துறவுகொண்டு கிளம்பிச்செல்வேன்” என்றார். “இல்லை…” என்றார் விராடர் பதற்றத்துடன். “என் தந்தை எனக்களித்த பொறுப்பு இது. இதை முழுமையாக ஆக்கிவிட்டே நான் என் மைந்தனுக்கு இத்தலைப்பாகையை அளிக்கவேண்டும். அதுவரை நான் உங்கள் அடி தொழுபவனே” என்றார் ஆபர். விராடர் தலைதாழ்த்தினார்.

சில கணங்கள் அமைதி நிலவியது. ஆபர் தன் கையிலிருந்த ஓலைகளை சீரமைத்துவிட்டு “செய்திகள் பல உள்ளன, அரசே. அவையில் அவற்றை முன்வைப்பதற்கு முன் தங்களிடம் சொல்லாட வேண்டுமென்று தோன்றியது” என்றார். விராடர் “குங்கரையும் வரச்சொன்னேன். அவரும் உடனிருப்பதில் தங்களுக்கு மறு எண்ணம் இல்லையல்லவா?” என்றார். “இல்லை, அவரை நான் இங்கு எதிர்பார்த்தேன்” என்றார் ஆபர். “அவர் இங்கிருப்பதே இந்நாட்டின் எதிர்காலம் மீது எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது.” விராடர் “அவர் சூதாடி, கெடுமதியர் என்கிறார்கள்” என்றார். “அதுவும் உண்மையே” என ஆபர் புன்னகை செய்தார்.

வாயிற்காவலன் உள்ளே வந்து தலைவணங்கி “குங்கன்” என்றான். “வரச்சொல்க!” என்று விராடர் சொன்னதும் அவன் வெளியே சென்று குங்கனை உள்ளே அனுப்பினான். குங்கன் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் உரைத்தபின் சுவரோரமாக இருந்த சிறிய பீடத்தில் அமர்ந்தான். கைகளால் தாடியை வருடியபடி இருவரையும் மாறி மாறி நோக்கிக்கொண்டிருந்தான். “அரசுசூழ்தலில் சில புதிய முடிச்சுகள் நிகழ்வதை ஆபர் சொன்னார். அவற்றை விளக்கும்பொருட்டு இங்கு வந்திருக்கிறார்” என்றார் விராடர். குங்கன் தலையசைத்தான்.

ஆபர் “கீசகரின் இறப்பு நமது படைகளின் தன்னம்பிக்கையை பெரிதும் தளர்த்தியிருக்கிறது. இங்குள்ள எவரும் இனி விராடபுரியின் படைகளை நடத்திச்செல்ல முடியாதென்று பரவலாகவே பேச்சிருக்கிறது. தாங்கள் அறிவீர்கள் அரசே, உத்தரரைப்பற்றி நமது குடியும் படையும் என்ன நினைக்கிறது என்று” என்றார். விராடர் தலையசைத்தார். “தங்களைப்பற்றியும் உயர்வான எண்ணமில்லை” என்றார் ஆபர். விராடர் அதற்கும் தலையசைத்தார்.

“நமது படைகளின் நம்பிக்கையிழப்பு ஓரிரு நாட்களுக்குள்ளேயே சூழ்ந்திருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவிட்டது. எல்லைப்புற ஊர்கள் பலவற்றில் விதர்ப்பமும் சதகர்ணிகளும் படைநகர்வு செய்திருக்கிறார்கள். நதிமுகங்களும் நீர்நிலைகளும் அவர்களிடம் சென்றுகொண்டிருக்கின்றன. பூசலைத் தவிர்க்கும்படி ஆணையிட்டிருக்கிறேன். அவர்கள் எவரேனும் நம்மீது படை கொண்டுவருவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீர்ப்பூசலை அதன்பொருட்டேகூட அவர்கள் உருவாக்கக்கூடும்” என்றார் ஆபர்.

“நான் அதை எதிர்பார்த்தேன்” என்றார் விராடர். “விதர்ப்பமும் சதகர்ணிகளும் தங்களுக்குள் படைக்கூட்டுக்கு ஏதேனும் கைச்சாத்திடுவார்கள் என்றால் நாம் தப்ப முடியாது” என்றார் ஆபர். “விதர்ப்பன் துவாரகையின் இளைய யாதவன்மேல் தீரா வஞ்சம் கொண்டிருக்கிறான். அவனை வெல்ல படைதிரட்டுகிறான். அவன் வடமேற்கே செல்லவேண்டும் என்றால் தென்பகுதி அமைதியாக இருக்கவேண்டும். ஆகவே அவன் சதகர்ணிகளுடன் உடன்சாத்திட்டு நம்மை வென்று நிலம் பகிர்ந்துகொண்டு மேலே செல்லக்கூடும்.”

விராடர் குங்கனை நோக்கி “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், குங்கரே?” என்றார். “படைகள் தங்கள் நெறிகளில் மாறாது நின்றால் போதும். படைநடத்துவதற்குரியவர்கள் வந்தமைவார்கள்” என்றான் குங்கன். “நம்பிக்கையிழக்கும்போது படைகள் பயிற்சியை கைவிடுகின்றன. மானுடத்திரளை படையென நிறுத்துவது பயிற்சியே. நம்பிக்கையும் இழப்பும் அல்ல, பயிற்சியே போரில் ஆற்றலென்றாகிறது. போர் தொடங்கியபின் அங்கே செயல்படுவது பயின்ற உடல் மட்டுமே. உள்ளம் விழிநிலைக்கனவு ஒன்றுக்கு சென்றுவிடுகிறது.”

ஆபர் “யார் படைநடத்துவது, உத்தரரா?” என்றார். “உத்தரரேகூட படைநடத்த முடியும்” என்றான் குங்கன். “என்ன செய்யவேண்டுமென்கிறீர்கள்?” என்று விராடர் கேட்டார். “படைகள் உளத்தளர்வு அடையும்போது மும்மடங்கு பயிற்சி அளிக்கவேண்டும். கடுமையான பயிற்சிகள் படைகளின் ஊக்கத்தை மிகைப்படுத்துகின்றன. அமர்ந்திருந்து எண்ணவும் சொல்லாடவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாகாது” என்றான் குங்கன்.

விராடர் “பயிற்சி அளிப்பதென்றால்கூட யார் அவற்றை ஒருங்கிணைப்பது? போருக்குமட்டும் அல்ல பயிற்சிக்கும் படைத்தலைவர் தேவை” என்றார். குங்கன் “அதற்குரியவர்களை நான் சொல்கிறேன். உத்தரையும் உத்தரரும்கூட அப்பொறுப்பேற்கலாம்” என்றான். விராடர் “என்ன சொல்கிறீர்கள்?” என சொல்ல வர இடைபுகுந்த ஆபர் “அவர்களுக்கு எவரேனும் துணை புரியவேண்டும்” என்றார். “ஆம், உத்தரைக்கு பிருகந்நளையும் உத்தரருக்கு கிரந்திகனும் துணை புரியட்டும்.”

“என்ன துணையிருந்தாலும் அவர்கள் என்ன செய்ய இயலும்? இருவருக்குமே படைநகர்வுப் பயிற்சி இல்லையே?” என்று விராடர் கேட்டார். “அவர்களிருவருக்கும் வாய்ப்பளிப்போமே… என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்” என்று குங்கன் சொன்னான். விராடர் நம்பிக்கையின்றி தலையசைத்தபின் “நமக்கு வேறு வழியில்லை. எதையாவது ஒன்றை செய்துதான் ஆகவேண்டும்” என்றார்.

ஆபர் “நற்செய்தி ஒன்றுள்ளது” என்றார். “முன்பு கலிங்கர் உத்தரருக்கு நாம் மகட்கொடை கோரியபோது தயங்கிக்கொண்டிருந்தார். ஏனெனில் அப்போது உத்தரர் விராடபுரியின் மணிமுடியை ஏற்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று எண்ணப்பட்டது. இப்போது கீசகரின் இறப்பு தடைகளை களைந்திருக்கிறது. கலிங்கம் நமது தூதிற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது” என்றார்.

விராடர் “இத்தருணத்தில் ஒரு மணநிகழ்வென்றால்…” என்றார். குங்கன் “அந்த மணம் நிகழட்டும். அது விராடபுரிக்கு நன்றே” என்றான். விராடர் “கலிங்கம் வலுவான நாடு. மணக்கூட்டு நமக்கு ஆற்றல் சேர்ப்பதே. ஆனால் என் மைந்தன்மேல் எனக்கு இப்போதும் நம்பிக்கையில்லை. அவர்கள் அவனை ஒரு கைப்பாவை என்றாக்கிக்கொண்டு விராடபுரியை எடுத்துக்கொள்ள முயலமாட்டார்கள் என்று எப்படி சொல்லமுடியும்?” என்றார்.

குங்கன் “உத்தரர் நாம் எண்ணுவதுபோல் எளியவர் அல்ல. தனக்குள்ளிருந்து பிறிதொன்றை முளைத்தெழ வைக்க அவரால் இயலும்” என்றான். விராடர் கசப்புடன் சிரித்து “உத்தரன்மேல் இத்தனை நம்பிக்கை கொண்டுள்ள பிறிதொருவர் விராடபுரியில் இருக்க வாய்ப்பில்லை, அவன் அன்னையேகூட” என்றார். “அவரை நான் கரவுக்காட்டில் பார்த்தேன்” என்றான் குங்கன். அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் நோக்கியபின் விராடர் போகட்டும் என்பதுபோல கையசைத்தார்.

ஆபர் “மூன்றாவது செய்தி இது. நன்றா தீதா என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. இன்றும் நேற்றுமாக ஏழு மணத்தூதுகள் வந்துள்ளன, உத்தரைக்கு” என்றார். விராடர் “எவரிடமிருந்து?” என்றார். “சேதி நாட்டிலிருந்து, மகதத்திலிருந்து, மாளவத்திலிருந்து. அவந்தி, கூர்ஜரம், வங்கத்திலிருந்தும். அங்கநாட்டரசன் கர்ணனிடமிருந்தும் ஒன்று வந்துள்ளது.” விராடர் “அத்தனை பேரரசர்களும் ஓலையனுப்பியிருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்?” என்றார்.

“எவரோ ஒருவர் அவரை மணமுடிக்க விரும்பி ஓலையனுப்புவதை பிறர் அறிந்துவிட்டனர். உடனே அவர்களும் இந்த ஓலைகளை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார் ஆபர். “இதில் நன்றென்ன, தீதென்ன?” என்றார் விராடர். “இளவரசி பேரரசர் ஒருவரை மணப்பது நன்று” என்றார் ஆபர். “ஆம், அவள் பிறவிநூல் அவ்வாறு சொல்கிறது” என்றார் விராடர். “தீதெனத் தோன்றுவது இப்பேரரசர்கள் கொள்ளும் விழைவு” என்றார் ஆபர். “ஏன்?” என்று விராடர் கேட்டார். “அது உத்தரர்மேல் கொண்ட எதிர்பார்ப்பு” என்றர் ஆபர்.

விராடர் மீசையை விரலால் சுழற்றியபடி “புரிகிறது” என்றார். “உத்தரர் இந்நாட்டை முழுதாள முடியாதென்றும் உத்தரையை மணக்கும் இளவரசன் எளிதில் இந்நாட்டை கைப்பற்றிவிட முடியும் என்றும் கணக்கிடுகிறார்கள். இப்பேரரசர்கள் அனைவரும் தங்கள் இரண்டாவது மைந்தனுக்கே உத்தரையை கோரியிருக்கிறார்கள். தங்கள் இரண்டாம் தலைநகராக விராடபுரி ஒருநாள் ஆகுமென எண்ணுகிறார்கள்.”

விராடர் நெற்றியை நீவியபடி “மகட்கொடை மறுப்பது அவ்வளவு எளிதல்ல. இன்று ஷத்ரியர்களின் நோக்கில் அது போருக்கான அறைகூவலேயாகும்” என்றார். ஆபர் “ஒருவரின் மணக்கோரிக்கையை ஏற்பதும் பிறிதுள்ளவர்களை பகைவர்களாக்குவதில் சென்று முடியும். நம்மைப்போன்ற தனியரசுகள் அனைத்தும் எப்போதும் எதிர்கொள்ளும் இடர் இது” என்றார். “என்ன செய்வது?” என்று விராடர் கேட்டார்.

குங்கன் மெல்ல அசைந்தமைந்து தாழ்ந்த குரலில் “மணத்தன்னேற்பு நிகழ்த்துவதுதான், வேறென்ன?” என்றான். ஆபர் “ஒரு பெண்கோளும் ஒரு மணத்தன்னேற்பும் ஒரே தருணத்தில்” என்றார். “ஏன், நிகழ்ந்தால் என்ன?” என்று குங்கன் கேட்டான். “அதை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான்…” என்றார் ஆபர். குங்கன் “பெண்கோள் முதலில் நிகழட்டும். உத்தரன் கலிங்க இளவரசியை மணந்து மணிமுடி சூடி அமரட்டும். உத்தரனின் ஆணைப்படி இங்கு மணத்தன்னேற்பு நிகழட்டும். அதற்கு வேண்டிய பொழுதை நாம் எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.

ஆபர் குங்கனையே நோக்கிக்கொண்டிருந்தார். “பொழுது கடத்துவதே இப்போது நமக்குத் தேவை. நடுவில் இரு மாதங்கள் மழைக்காலம் வருகிறது. வேனிலில் பெருவிழவுகளை வைப்பதே நமது வழக்கம். உத்தரையின் மணத்தன்னேற்பு வரும் இளவேனில் தொடக்கத்தில் நிகழுமென்று இப்போதே அறிவித்துவிடலாம். பெண்கேட்டு செய்தி அனுப்பிய அத்தனை அரசர்களுக்கும் முறைப்படி அழைப்பு அனுப்புவோம்” என்றான் குங்கன். விராடர் “ஆம், இது ஒன்றே வழி. பிறிதொன்றும் இப்போது எண்ணுவதற்கில்லை” என்றார்.

ஆபர் புன்னகையுடன் “அப்போது தாங்கள் இங்கு இருப்பீர்களா, குங்கரே?” என்றார். குங்கன் விழிகள் சுருங்க “ஏன்?” என்றான். “தாங்கள் வந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் அப்போது.” குங்கன் நகைத்து “ஆம், ஓராண்டுக்குப்பின் இங்கிருந்து கிளம்பவே என் எண்ணம்” என்றான். “எங்கே?” என்று விராடர் கேட்டார். “அதை பிறகு பார்ப்போம். ஓராண்டுக்கு மேல் ஓரிடத்தில் இருந்தால் உள்ளம் தேங்கிவிடுகிறது” என்றான்.

“நான் எழுகிறேன். வேறு ஏதும் இல்லை, அரசே. இவையே தங்களது ஆணையென்றால் இவற்றை ஓலைகளில் பொறித்தபடி இன்று அவைக்கு வருகிறேன்” என்றார் ஆபர். “அமருங்கள், ஆபரே” என்று விராடர் சொன்னார். “நான் தங்களிடம் கேட்க விரும்புவது பிறிதொன்று உள்ளது.” ஆபர் “சொல்லுங்கள்” என்றார். “எனது மூதாதை நளன் எப்படி நாற்களத்தில் தோற்று ஐந்தாம் குடியென்றாகி காடு புகுந்தார் என்று சொன்னீர்கள். அந்த அரசியற்களம் என்ன ஆகியது? இக்கதை சொல்லும் காவியங்கள் பாடல்கள் எதிலும் அது இல்லை. உங்கள் குடி வழக்கென புழங்கும் கதைகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?”

ஆபர் புன்னகைத்தபடி “ஆம், காவியங்களிலும் சூதர்பாடல்களிலும் இல்லாத அரசுசூழ்தல்கள் எங்கள் செவிவழிக் கதைகளில் உள்ளன. அதை அந்தணரன்றி பிறர் அறியலாகாதென்றும் தேவையென்றால் மட்டும் அரசகுடிப் பிறந்து கோல்கொண்டமைந்த ஷத்ரியரிடம் சொல்ல வேண்டுமென்றும் நெறியுள்ளது” என்றார். விராடர் குங்கனை திரும்பிப்பார்த்து “இவர் இருப்பதில் பிழையுள்ளதா?” என்றார். ஆபர் சிரித்து “அவரையும் அரசகுடியென்றே கொள்கிறேன்” என்றார். “சொல்லுங்கள்” என்று விராடர் சொல்லி கால்களை நீட்டிக்கொண்டார்.

flowerநளனும் தமயந்தியும் நிஷதபுரியைவிட்டு நீங்கிய அன்று மாலையிலேயே இந்திரகிரியின் உச்சியிலிருந்த ஆலயத்தில் நின்ற இந்திரன் சிலையை அகற்றவும் கலியின் சிலையை அங்கு கொண்டு நிறுவவும் புஷ்கரன் ஆணையிட்டான். அம்முடிவை அவன் தன் தனியறையில் வெளியிட்டபோது சுநீதர் “அரசே, முறையாக இவ்வறிவிப்பை அரசவையில் தாங்களே விடுப்பது நன்று. குலமூத்தார் கோல் தூக்கி அதை வாழ்த்தட்டும். நாளை சூதர்கள் பாடி காலத்தில் நிறுத்தப்போகும் செய்தி இது” என்றார்.

புஷ்கரன் புன்னகையுடன் “இது பிந்தவேண்டிய செயலல்ல” என்றான். “அத்துடன் இவ்வாணையை நான் பிறப்பித்தேன் என்றே இருக்கவேண்டும்.” சுநீதர் “ஆனால் நீங்கள் இன்னமும் நிஷதபுரியின் முடிபுனையவில்லை” என்றார். “ஆம், ஆகவேதான் நான் இதை செய்யவில்லை. மக்கள் செய்யலாமென ஆணையிடவிருக்கிறேன்” என்றான் புஷ்கரன். உரக்க நகைத்தபடி “சுநீதரே, இன்று நளன் தன் துணைவியுடன் நகர் நீங்கினான். இப்போது சிரித்துக் களியாடி கீழ்மையில் திளைக்கும் இதே மக்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவார்கள். தனிமையில் இருளில் துயிலுக்கு முந்தைய கணத்தில் அவர்களுக்குள் வாழும் குலதெய்வங்கள் எழுந்து வரும். குற்றவுணர்வை உருவாக்கி அவர்களின் துயில் களையும். ஓர் இரவு அவர்கள் விழித்துக்கொண்டிருந்தார்கள் என்றால் நாளை காலை என்மேல் பழி சுமத்தி சினம் கொள்வார்கள்” என்றான்.

அமைச்சர் பத்ரர் “ஆம், அது மெய்யே” என்றார். புஷ்கரன் “இன்று நிகழ்ந்தவற்றில் இங்குள்ள குடிகள் ஒவ்வொருவரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். ஒரு சொல் இளிவரல் உரைக்காத, ஒரு கைப்பிடி மண்ணள்ளி வீசாத எவரேனும் இந்நகரில் உள்ளனரா என்பதே ஐயத்திற்குரியது. அக்குற்றவுணர்வினால் அவர்கள் மேலும் நெகிழ்வார்கள். அதிலிருந்து தப்ப அனைத்துப் பழியையும் என்மேல் சுமத்துவார்கள். இரண்டு நாள் நான் வீணே இருந்தேனென்றால் மூன்றாவது நாள் இப்புவியின் கீழ்மகன்களில் நானே தலைவன் என்று இங்குள்ள ஒவ்வொருவரும் சொல்லத் தொடங்குவார்கள்” என்றான்.

“நான் இவர்களை அறிவேன். கீழ்மையில் மகிழ்ச்சியை கண்டடைபவர்கள். ஏனென்றால் மேன்மையில் ஏறி மகிழ்ச்சிகொள்வது கடினமானது. உளப்பயிற்சியும் ஒழுங்கும் தேவையாவது. கீழ்மையின் உவகை அதுவே தேடிவந்து பற்றிக்கொள்ளும். அலையென அடித்துச்செல்லும். ஆனால் அது அளிக்கும் இழிவுணர்வால் எப்போதேனும் மேன்மையை கொடியென தாங்கி கூச்சலிடுவார்கள் இவர்கள்” என்றான். “ஆகவே அவர்களுக்கு கீழ்மையின் இன்பத்தையும் அதை மறைக்கும் மேன்மையின் திரையையும் ஒருங்கே அளிக்கவேண்டும். இன்றிரவே கலிபூசனை தொடங்கட்டும்.”

“நாளை விடியலில் கலிதேவன் ஆலயத்தில் கூட்டுப் பெரும்பூசனை நிகழவேண்டும். இன்றிரவு இவர்கள் துயில் நீப்பார்கள், குற்ற உணர்வால் அல்ல களியாட்டினால்” என புஷ்கரன் தொடர்ந்தான். “களியாட்டு நன்று. அது அனைத்தையும் மறக்க வைக்கிறது. நேற்றும் நாளையும் இல்லாதாக்கி இன்றில் திளைக்கச் செய்கிறது. மக்களை வெல்ல வேண்டுமென்றால் இடைவெளி இல்லாமல் அவர்களுக்கு களியாட்டை அளித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது அரசியல் சூழ்ச்சி.”

சுநீதர் புன்னகையுடன் “இதையெல்லாம் எங்கு கற்றீர்கள், அரசே?” என்றார். “என்னால் படைமுகம் நிற்க முடியாதென்று எப்போது தோன்றியதோ அன்று முதல் அரசுசூழ்கையை கற்கத் தொடங்கினேன்” என்றான் புஷ்கரன். “அல்ல, தங்களுக்கு கலியின் பேரருள் வந்து சேர்ந்துள்ளது. கலியால் கையாளப்படும் படைக்கலம் நீங்கள்” என்றார் சுநீதர். புஷ்கரன் புன்னகைத்தான்.

அன்று மாலையே நகரின் பதினெட்டு மையங்களில் கொடிப்பட்டம் தாங்கிய யானைகள் வந்து நின்றன. அவற்றின்மேல் ஏற்றப்பட்ட பெருமுரசுகளை முழைக்கோலர் அறைந்து பேரொலி எழுப்பினர். அம்பாரிமேல் எழுந்து நின்ற நிமித்திகன் மறுநாள் காலை கலிபூசனை தொடங்குமென்றும் நிஷாதர்களின் அனைத்துக் குடிகளும் அங்கு வந்து கலியருள் கொள்ள வேண்டுமென்றும் அறிவித்தான்.

நிஷதகுடியின் மக்கள் தங்கள் கைகளாலேயே இந்திர மலைமேல் இருக்கும் இந்திரனை சரித்து உடைக்கவேண்டுமென்று அரசர் ஆணையிட்டதாக அவன் அறிவித்தபோது கூடிநின்ற நிஷதகுடிகள் வெறிக்கூச்சலிட்டபடி தலைப்பாகைகளையும் கைக்கோல்களையும் மேலாடைகளையும் எடுத்து வீசி துள்ளி ஆர்ப்பரித்தனர். ஒவ்வொரு கணமும் வெறியெழுந்துகொண்டே சென்றது. தெருக்களெங்கும் கள்வெறி கொண்டவர்கள்போல் நிஷாதர்கள் முட்டித் ததும்பினர், கூச்சலிட்டு குரல் இழந்தனர். கையில் சிக்கிய அனைத்தையும் எடுத்து வானில் வீசினர். ஓரிரு நாழிகைகளில் நகரமே குப்பைகளால் நிறைந்தது. சேற்றில் புழுக்களென மானுடர் அதில் கொப்பளித்தனர்.

பெண்டிர் பூசனைக்கான ஒருக்கங்களை தொடங்கினர். ஊர்மன்றுகளில் எழுந்த காளகக்குடித் தலைவர்களும் பூசகர்களும் நிமித்திகர்களும் கைக்கோல்களைத் தூக்கி கண்ணீருடன் கூவினர். “தோற்பதில்லை கலி! மானுடன் ஒருபோதும் வென்றதில்லை தெய்வங்களை என்று அறிக! இதோ எழுகிறது நம் குலதெய்வம்! இருண்ட காட்டிலிருந்து மலை உச்சி நோக்கி உயர்கிறது காகக் கருங்கொடி! நமது மாடங்களின்மேல் கலிக்கொடி ஏறுக! நமது நெற்றிகளில் கலிக்குறி விளங்குக! நமது குடிகளின்மேல் அவன் அருள் என்றும் நிலைக்கட்டும்! நமது கொடிவழிகள் அவன் பேர் சொல்லி வாழட்டும்!” “ஆம்! ஆம்! ஆம்!” என்று கூவினர் மக்கள்.

இரவெல்லாம் நகரம் ஓசையுடன் முழங்கிக்கொண்டிருந்தது. மக்கள் கொண்ட வெறியுடன் குதிரைகளும் யானைகளும் கூட இணைந்துகொள்ள அவற்றின் ஓசையும் முழங்கியது. புஷ்கரன் சுநீதரிடம் “நான் நாளை புலரியில்தான் கலியின் ஆலயத்திற்கு வருவேன். இன்றிரவு ஆற்றவேண்டிய பணி ஒன்றுள்ளது” என்றான். சுநீதர் “என்ன?” என்றார். “நான் காட்டிற்குச் சென்றிருக்கிறேன் என்று சொல்லுங்கள். எவரும் அறியவேண்டாம்” என்று ஆணையிட்டுவிட்டு ஏழு படைவீரர்களுடன் நகரைவிட்டுச் சென்றான்.

அவன் சென்ற செய்தியை சுநீதர் அமைச்சர் பத்ரருடன் மட்டும் பகிர்ந்துகொண்டார். “எங்கு செல்கிறார்?” என்றார் உடனிருந்த அவைச்செயலர் பிரவீரர். “தன் மூத்தவனை வேட்டையாடச் செல்கிறார், ஐயமே இல்லை. நஞ்சையும் நெருப்பையும் எதிரியையும் எஞ்சவிடலாகாதென்று அறிந்திருக்கிறார். இன்று நிஷதபுரிக்குத் தேவை இம்மியும் நெகிழாத இவரைப்போன்ற அரசர்தான். தொல்குடியை ஒருங்கிணைத்த மகாகீசகர் இவரைப் போன்றிருந்தார் என்கிறார்கள்” என்றார்.

நகரம் ஒருவர் பிறிதொருவரை அறியாதபடி கள்ளும் களிப்புமென சித்தம் புளித்து நுரைத்தெழ மயங்கித் திளைத்துக் கொண்டிருந்தபோது பின்னிரவில் புஷ்கரன் தன் வீரர்களுடன் அரண்மனைக்கு திரும்பி வந்தான். அரண்மனைக்கோட்டை வாயிலில் அவன் வந்து நின்றபோதுதான் காவலர் அவனை அறிந்தனர். அவன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு காவலர்களிடம் “சுநீதரை அரண்மனை அகத்தளத்திற்கு வரச்சொல்க! நமது அமைச்சர்களும் குலமூத்தார் அனைவரும் அகத்தளத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரவேண்டுமென்று ஆணையிடுகிறேன்” என்றான்.

செல்லும் வழியிலேயே படைத்தலைவர்களையும் சிற்றமைச்சர்களையும் தன்னுடன் வரும்படி கையசைத்து அழைத்துக்கொண்டான். பிரவீரர் “எங்கு செல்கிறோம், அரசே?” என்றபோது அவன் சிவந்த விழிகளால் வெறித்தான். மகளிர் மாளிகையின் வாயிலில் அவனைக் கண்டதும் திகைத்து தன் கையிலிருந்த சிறு கொம்பை எடுக்க முயன்ற காவலனை அக்கை உயர்வதற்கு முன்னரே வெட்டி வீழ்த்தினான். அவனைச் சூழ்ந்த திரள் விழிதெறிக்க உடல்பதறிக்கொண்டிருந்தது. உள்ளறைக்குச் சென்று அரசியின் அறைவாயிலை அடைந்தான். அங்கு நின்ற காவலன் அதற்குள் கூச்சலிடத் தொடங்கியிருந்தான். புஷ்கரனின் இரு வீரர்கள் அவனை உடல் போழ்ந்திட்டனர்.

அறைக்கதவைத் தட்டும்படி புஷ்கரன் ஆணையிட்டான். உள்ளே ஓசைகளும் பேச்சொலிகளும் கசங்கின. அகத்தளத்திலிருந்த சேடியரும் பெண்டிரும் வந்து அத்தனை சாளரங்களிலும் கூடிநின்று நோக்கினர். கதவு திறந்து ரிஷபன் வெளியே வந்தான். அவன் தன்னை தொகுத்துக்கொள்ளவும் நிலைபதறாதிருக்கவும் முயன்றாலும் கைகள் பதறிக்கொண்டிருந்தன. அவன் முதற்சொல்லெடுப்பதற்குள் “இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்று புஷ்கரன் ஆணையிட்டான்.

ரிஷபன் “பொறுங்கள், நான் விளக்குகிறேன். நான் ஒற்றன். முதன்மைச் செய்தியுடன்…” என்று சொல்வதற்குள் புஷ்கரன் கைநீட்டி அவன் நாவைப்பற்றி இழுத்து தன் வாளால் அறுத்து வெளியே வீசினான். இரு கைகளாலும் வாயைப் பொத்தி விரல்களிடையே குருதி வழிய முழந்தாளிட்டு அமர்ந்தான் ரிஷபன். அவன் தலைமயிரை பற்றித் தூக்கி இரு கைகளையும் முறுக்கி தன் மேலாடையாலேயே பின்னால் கட்டினான். ரிஷபன் முனகியபடி உடலதிர்ந்தான்.

உள்ளிருந்து கலைந்த ஆடையுடன் ஓடிவந்த மாலினிதேவி “யாரது? என்ன நிகழ்கிறது இங்கே?” என்று கூவினாள். அந்தக் குரலில் இருந்த மெய்யான சினம் புஷ்கரனையும் அவன் வீரர்களையும் ஒருகணம் தயங்கச் செய்தது. அவள் கைநீட்டி “நான் கலிங்க அரசனின் மகள். என் அகத்தளத்திற்குள் நுழைந்த எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை” என்றாள். அந்த நீண்ட சொற்றொடரில் அவள் அச்சமும் உளக்கரவும் வெளிப்பட புஷ்கரன் துணிவும் வஞ்சமும் கொண்டு மீண்டான். அவன் உடலில் வெளிப்பட்ட அந்த மாற்றம் அவன் வீரர்களையும் மீளச் செய்தது.

புஷ்கரன் இளிநகையுடன் “உன் தந்தைக்கு செய்தி சொல்லி அனுப்பிய பிறகுதான் உன்னை கழுவிலேற்றப் போகிறேன்” என்றான். “கழுவிலா? யாரிடம் பேசுகிறாய் என்று தெரியுமா? இழிமகனே, ஷத்ரிய பெண்ணின் முகம் நோக்கி இதைச் சொல்ல உனக்கென்ன ஆணவம், நிஷதப் பிறவியே!” என்று கூவியபடி அவள் வெளியே வந்தாள். அவள் ஆடை கலைந்து சரிந்தது. குழல்கற்றைகள் தோளிலும் மார்பிலும் விழுந்தாடின. அப்போது எழுந்த முகச்சுளிப்பால் அவள் மிக அழகற்றவளாகத் தோன்றினாள். வெளித்தெரிந்த ஓநாய்ப் பற்கள் அவள் விழிகளை மொழியற்ற விலங்கு என காட்டின.

அவன் அச்செயலை செய்யத் தேவையான சினம் தன்னுள் ஊறுவதற்காகவே முள்முனையில் தயங்கிக்கொண்டிருந்தான் என்பதை அவள் அறியவில்லை. முதற்கணத்தில் அவர்களிடம் எழுந்த தயக்கத்தை தன் சினத்தால் அச்சமென்றாக்கிவிடலாமென்ற அவள் எண்ணம் பிழையாகியது. அவள் உரைத்த இழிசொற்களால் அவனும் பிறரும் சித்தம் எரிந்தெழும் பெருஞ்சினத்தை அடைந்து எதையும் செய்யத் துணிபவர்களானார்கள். எப்போதும் அவர்களை கொதிக்கச் செய்வது குல வசையே. அவர்கள் நாடென, அரசென எழுந்ததே அச்சொற்களுக்கு எதிராகத்தான். அதை உள்ளூர அவள் அறிந்திருந்தமையால் அவளையறியாமலேயே அச்சொற்கள் அவள் நாவிலெழுந்தன.

புஷ்கரன் தன் வாளின் பின்பகுதியால் ஓங்கி அவளை அறைந்து வீழ்த்தினான். தலை உடைய இரு கைகளாலும் பற்றிக்கொண்டு பீறிட்ட குருதியுடன் தரையில் விழுந்து துடித்தாள். வெறும் முனகல் மட்டும் அவளிலிருந்து எழுந்தது. குருதிமணம் வீரர்களின் விழிகளை ஒளிரச் செய்தது. “எழுந்து நட, நாயே” என்றபடி படைத்தலைவன் அவள் தலைமேல் ஓங்கி மிதித்தான். ரிஷபன் சினத்துடன் ஏறிட அவன் முகத்தில் உமிழ்ந்த இன்னொருவன் “என்னடா பார்க்கிறாய், ஷத்ரியக் கீழ்மகனே?” என்றபடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“இருவரையும் இழுத்து வந்து செண்டுவெளி முற்றத்தில் நிறுத்துங்கள்” என்று புஷ்கரன் ஆணையிட்டான். அதற்குள் சுநீதரும் குடிமூத்தார் பன்னிருவரும் பத்ரரும் பிற அமைச்சர்களும் அகத்தளத்திற்கு வந்துவிட்டிருந்தனர். சுநீதர் உரக்க “என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது, அரசே?” என்றார். “காவலரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இங்கே நூறு விழிகளேனும் சான்று உள்ளன” என்றபின் அவன் குருதி படிந்த தன் வாளைத் தூக்கி அதை நோக்கினான். அவன் வாய் சிறிய புன்னகையில் கோணலாகியது.

முந்தைய கட்டுரைசீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!
அடுத்த கட்டுரைவாசிப்பு எஸ்.ரா உரை