அவ்வழி நல்லை!

muka

பத்தொன்பது வயதில்தான் ஊரைவிட்டு கிளம்பினேன், தனியாக அலைந்து திரிந்து அடிபட்டு வதங்கி திரும்பி வந்தேன். வந்த அடுத்த மாதமே மீண்டும் கிளம்பினேன். அந்த அனுபவங்களை புறப்பாடு என்னும் நூலாக எழுதியிருக்கிறேன்.

அன்றுமுதல் இன்றுவரை என்னை எழுத்தாளன் என்பதற்கு அப்பால் ஏதாவது சொல்லவேண்டும் என்றால் ‘பயணி’ என்றுதான். ஆண்டுக்கு இருமுறையாவது இந்தியாவின் விரிந்த நிலப்பரப்புகளில் நீண்ட பயணங்கள் செய்துகொண்டே இருக்கிறேன். இன்று அதற்குரிய நண்பர்குழு அமைந்துவிட்டிருக்கிறது.

இணையம் வந்தபின்னர் என் பயண அனுபவங்களை அன்றன்றே வலைப்பதிவாக வெளியிட்டுவரத் தொடங்கினேன். என் வாசகர்கள் என்னுடனேயே பயணம் செய்யும் அனுபவத்தை அடைய அது உதவியது. இமையமலைப்பகுதிகளில், வடகிழக்கில், ராஜஸ்தான் பாலைவனத்தில், அறியப்படாத வடஇந்தியச் சிற்றூர்களில் இருந்து நான் எழுத அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருந்தபடி என் வாசகர் உடன் பயணிக்கும் அனுபவத்தை அடைவது தொழில்நுட்பத்தால் சாத்தியமாகிறது.அப்பயண அனுபவங்களில் சில துளிகள் என இந்நூலைச் சொல்லலாம்.

நான் இந்தியாவை சக்தியாக, அன்னையாக எண்ணும் மனநிலையை என் மதமாக கொண்டவன். நான் வணங்கும் நல்லாசிரியர்கள் அனைவருமே இந்த மண்ணை வழிபட்டு, இதில் அலைந்து திரிந்து தங்கள் மெய்மையைக் கண்டடைந்தவர்களே. எனக்கு எந்த ஐயமும் இல்லை. இது ஞானபூமிதான். மாபெரும் தவம் நிகழ்ந்த மண் என்பதனால் இதன் ஒவ்வொரு மலையும் ஆறும் ஏரியும் சமவெளியும் ஊரும் எனக்கு புனிதமானதே. இதிலிருந்து நானும் என் ஞானத்தை அடைந்திருக்கிறேன் என்று சொல்ல எந்தத் தயக்கமும் எனக்கில்லை. வைக்கம் முகமது பஷீரும் , தாராசங்கர் பானர்ஜியும், சிவராமகாரந்தும் அடைந்த மெய்மை.

ஞானத்தின் முடிவின்மை என பாரதப்பெருநிலத்தை மீண்டும் மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன்.பனிமலை முதல் பாலை வரை அத்தனை நிலங்களும் கொண்ட பெருவெளியாக,. தொன்மையான கலைச்செல்வங்களின் களஞ்சியமாக, பலவகையான மானுட இனங்களின் கலவையாக, ஐந்து மதங்களின் பரப்பாக, வரலாற்றின் இடிபாடுகளாக, அரசியல்கொந்தளிப்புகளின் வெளியாக. ஒவ்வொரு பயனமும் ஒவ்வொரு கோணத்தில் அமைந்தது. .

இத்தொடரில் மானுடமுகங்களாக இந்தியாவை பார்க்க முயன்றிருக்கிறேன். பயணம் முடிந்து திரும்பும்போது சிலசமயம் பிற அனைத்தையும் விட முகங்கள் நம் நினைவில் நின்றிருக்கும். உணர்வுநிலைகளின் கலங்களாக, ஆழ்பொருள்கொண்ட சிலைகளாக. ஒருகணம் கண்மூடி எண்ணிப்பார்த்தபோது அலையலையாக வந்துசென்ற முகங்களே நான் கண்ட இந்தியா என்று பட்டது. அதுதான் இந்நூலின் கோணம்.

இந்தியநிலத்தில் நான் பயணம்செய்ய தொடங்கி நாற்பதாண்டுகளாகின்றன. நூறுபயணங்களுக்கும் மேல்.  கசப்பான, சோர்வூட்டும் அனுபவங்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன என இப்போது படுகிறது. நெகிழச்செய்யும் அனுபவங்கள், இனிய நிகழ்வுகள் நூற்றுக்கணக்கில் நினைவில் சேர்ந்துள்ளன.

இந்த மானுடர் நல்லவர். ஆகவே இந்த நிலமும் நன்று. அதைத்தான் ஔவை சொன்னாள் “எவ்வழி நல்லவர் மானுடர் அவ்வழி நல்லை வாழிய நிலனே”

 [குங்குமம் வெளியீடாக வந்துள்ள முகங்களின் தேசம் பயணநூலுக்கான முன்னுரை]

***

முந்தைய கட்டுரைகென்யா -இனக்குழு அரசியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80