எழுத்தாளர்களும் வாசகர்களும்

அ.சேஷகிரி

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

உங்கள்  மாணவர் தி.ஜினுராஜ் அவர்கள் ‘மன்மதன்’ கதைக்கு எழுதிய விமர்சனம் படித்தேன்.இந்த இள வயதில் என்ன அருமையாக அவதானித்து,கதையை உள்வாங்கி,மற்றவற்றுடன் ஒப்புநோக்கி கருத்தை தெரிவித்திருக்கிறார்…

 

மன்மதன் கதையில் வரும் கிருஷ்ணனோ காலியாக உள்ள கோவிலில் செருப்பை கழட்டுவதற்கே யோசிக்கிறான் அவனால் தன் உடலை இழந்து காமத்தை அறிவது கடினம்.அவன் கண்களால் புற உலகத்தை வெறும் நிறம் மற்றும் வடிவ ஒழுங்குகளாக பார்க்கிறான்.கிருஷ்ணன் மல்லியையும் அதே போன்று தான் பார்க்கிறான்.அவன் மல்லியோட முலைகள் சிற்பக்கள் முலைகள் போன்றுசரிசமமாகஇருந்தது என நினைக்கிறான்.அவனால் அந்த முதல் பரவச அனுபவத்தை தாண்டி அறிய முடியவில்லை“.

ராஜுவை புரிந்ததினால்  மல்லியும் கண் இல்லாத உலகத்தின் தடையின்மையை,ஒழுங்கின்மையை உணர்ந்திருக்கிறாள்.”

 

இனி செவி திறந்து ஒலியை புணர்வேன்,

கை விரித்து காற்றை புணர்வேன்நிம்மதியாக”.

 

இவர் மற்றும் அல்ல இவரைப்போன்று இள வயதினர்கள் (என் வயதில் பாதி கூட இருக்காது) கருத்துக்களை  தங்கள் தளத்தில் தெரிவிக்கும்போது ஒரு விதத்தில் பெருமிதமும்,ஆச்சர்யமும் ,மற்றொரு விதத்தில் என்னை நினைத்து ஆற்றாமையும் ஒருசேர எழுகிறது.கடந்த 50 வருடங்களாக கண்ணில் கண்டதையெல்லாம்  படித்தும், இவர்களின் நிழலுக்கு அருகில் கூட என்னால் நெருங்கமுடியவில்லை,எங்கே தவறவிட்டேன் அல்லது தவற விடுகிறேன் என்று இன்னும் புரியவில்லை!.தங்களால் விளக்கமுடிந்தால் நன்றாக இருக்கும்.

 

அன்புடன்,

அ .சேஷகிரி.

மன்மதனின் காமம்

 

jinu

 

அன்புள்ள சேஷகிரி

 

இந்தத் தளத்திற்கு எதிர்வினையாற்றுபவர்களில் ஒரு சாரார் எதிர்கால எழுத்தாளர்கள். இங்கே எதிர்வினையாற்றியபடி அறிய வந்தவர்களில் பலர் இன்று எழுத்தாளர்களாக வந்துவிட்டனர்.   தூயன் [ இருமுனை ] சுரேஷ் பிரதீப் [ஒளிர்நிழல்] போன்றவர்கள் சமீபத்திய உதாரணம்

 

பிறவாசகர்களுக்கும் இவர்களுக்கும் இடையேயான வேறுபாடு என்பது இவர்கள் என்னுடன் மறுமுனையில் நின்று உரையாடமுயல்கிறார்கள் என்பது. ஏற்றும் மறுத்தும். இவ்வேற்பும் மறுப்பும் தனிப்பட்ட அகங்காரத்தால் பாதிக்கப்படாமல், மேலும் கூர்மைகொள்வதாக அமைகையில் அவர்கள் மிக விரைவிலேயே முன்னகர்ந்து தங்கள் அடையாளங்களை கண்டடைகிறார்கள்.

41K6L1GTegL

நந்தகுமார், ஜினு ராஜ், சுசித்ரா, பிரியம்வதா, மாதவன் இளங்கோ முகம்மது ரியாஸ், கமலக்கண்ணன்,கலைச்செல்வி என  பலரை நான் புகைப்படங்களுடன் அறிமுகம் செய்வது அவர்கள் தங்கள் ஆளுமையுடன் வாசகர்கள் முன் வந்து நிற்கவேண்டும் என்பதற்காகவும், அவர்களின் கருத்துக்களின் தொடர்ச்சியை வாசகர்கள் உணரவேண்டும் என்பதற்காகவும்தான்.

 

பெரும்பாலானவர்களின் கடிதங்களுக்கு கீழே அவர்களின் முந்தைய கடிதங்களின் இணைப்புக்கள் இருப்பதைப் பார்க்கலாம். அது மிகுந்த உழைப்புடன் செய்யப்படுவது அவர்களை கவனப்படுத்தவேண்டும் என்பதற்காகவே. புகைப்படம் வெளியாகும் அனைத்து இளைஞர்களையும் எழுதக்கூடியவர்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

iru

வாசகர்கள் வேறுவகை. அவர்கள் அவ்வாறு தங்களை இடைவிடாது திரட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்களை அறியாமலேயேகூட அவர்களின் ஆழ்மொழி மேம்படும். நுண்ணுணர்வு கூர்கொள்ளும். அதுவே இலக்கியம் அவர்களுக்கு அளிக்கும் கொடை என்றாகும்

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75