ஜெ,
நீலகண்டப்பறவையைத் தேடி இரண்டாம்பாகம் என்று ஒன்று இருக்கிறதா? அது தமிழில் வந்ததில்லையா? தமிழில் இப்போது வெளிவந்துள்ள நூலில் முதற்பாகம் முற்றும் என்றுதான் உள்ளது.
செந்தில்
***
அன்புள்ள செந்தில்,
நீலகண்ட பறவையைத்தேடி முழுமையான தனி நாவல்தான். ஆனால் அதற்கு மேலும் இரு தொடர்நாவல்கள் உண்டு. நீலகண்ட் பக்கிர் கோஞ்சே, அலௌகிக் ஜலஜான், ஈஷ்வரேர் பகான் ஆகியவை முத்தொடர் நாவல்கள்.
அதீன் பந்த்யோபாத்யாய இன்றைய வங்க தேசத்தில் உள்ள பத்மா நதிக்கரையில் பிறந்தவர். அந்த இளமைபபருவ பின்னணியை கொண்டு அவர் எழுதிய நாவல் நீலகண்டப் பறவையைத் தேடி. மெல்லிய சுயசரிதைத்தன்மை அதற்குண்டு. அந்நாவலில் கதை என ஏதுமில்லை. நிகழ்ச்சிகளின் தொடர்தான்
பிற இருநாவல்களும் பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்தியாவில் தொடர்ந்து நிகழ்கின்றன. பின்னர் வந்த நாவல்களில் முதல் நாவலில் இருந்த ‘அர்த்தமில்லாத கவித்துவம்’ இல்லை. அவை வங்கத்தின் சமகால அரசியலை பேச ஆரம்பித்துவிடுகின்றன என்கிறார்கள் 1989 ல் நான் நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை வாசித்துவிட்டு கல்கத்தா சென்று அதீன் பந்த்யோபாத்யாயவை சந்தித்தபோது இரண்டாம் பாகம் மொழியாக்கம் செய்யப்படுவதாகச் சொன்னார்.மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தியும் அதை மொழியாக்கம் செய்வதாகச் சொன்னார்.வெளிவரவில்லை என தெரிகிறது.
நீலகண்டப் பறவையைத் தேடி நாவலின் அழகு பைத்தியக்காரபாபுவின் அந்த அழியாத தேடலின் மர்மத்திலும், ஜலாலியைக் கொல்லும் ஆழத்து மீன் போன்ற மாயப்புனைவுகளிலும், தனக்குத்தானே தீபங்கள் ஏற்றிக்கொண்ட பாபாவின் மறைவு போன்ற தொன்மங்களிலும் உள்ளது. அந்த மாய உலகை அதீன் இளமையில் அடைந்திருக்கிறார். பின்னாளில் அரசியல்பிரக்ஞையால் அந்த கற்பனாவாதத்தை இழந்தார் என்கிறார்கள் விமர்சகர்கள்
முத்தொடர் நாவல்கள் [trilogy ] என்பதற்கும் மூன்று பாகங்கள் கொண்ட ஒருநாவல் என்பதற்கும் வேறுபாடுண்டு. உதாரணமாக ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகிய நாவல்கள் தொடர்நாவல்கள். மையக்கதாபாத்திரங்களோ சூழலோ மட்டும் இரண்டாம் நாவலில் தொடர்வது அது.பொன்னியின் செல்வன் மூன்று பாகங்கள் கொண்ட ஒரே நாவல்.
ஜெயஜெய சங்கர நாவலின் தொடர்நாவல் ஹரஹர சங்கர. முதல்நாவலை மட்டுமே பெரும்பாலானவர்கள் வாசித்திருப்பார்கள். இரண்டாம்நாவல் அந்த வீச்சை அடையவில்லை. பாரீஸுக்குப்போ நாவலில் இரண்டாம்நாவலுக்கு எண்ணமிருப்பது தெரிகிறது. ஆனால் ஜெயகாந்தன் அதை எழுதவில்லை.
முதல்பாகம் முடிவு என்று மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்டதனால் வந்த குழப்பம் இது.முதல்நாவல் முடிவு என்று போட்டிருக்கவேண்டும்நெடுங்காலம் அச்சில் இல்லாமல் இருந்த இந்நாவல் இப்போது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
ஜெ
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’ஜெயமோகன்