கோவையாசாரம்!
விஷ்ணுபுரம் கிண்டிலில்…
சார் வணக்கம்
ஆசாரக்கோவை பதிவை தாமதமாக இப்போதுதான் வாசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்றிருந்த ஆய்வு மாணவியை தொலைபேசியில் அழைத்து “சங்கச்சித்திரங்கள்” வாங்கி வரச் சொன்னேன். விஜயா பதிப்பகத்திலிருந்து அவள் என்னை அழைத்து ஜெயமோகன் அவர்கள் எழுதிய ” சங்குச்சக்கரங்கள் ” அங்கு இல்லவே இல்லை என்கிறார்கள் என்றாள். உடன் புறப்பட்டு கல்லூரி வரும்படியும் இனி அந்த புத்தகத்தை தேடவேண்டாம் கிடைக்காது என்றும்சொன்னேன்
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள லோகமாதேவி
விஷ்ணுபுரம் விளம்பரம் டிவியில் வருகிறது. அதன்பி விஷ்ணுபுராணம் விற்பனை சூடுபிடித்திருப்பதாகச் சொன்னார்கள்
ஜெ
***
அன்புள்ள ஜெ
புத்தகங்களை எழுதிக்கொடுக்காமல் எவரிடமேனும் சொல்லி வாங்கிவரச்செய்வது தமிழகத்தில் அனேகமாக முடியாது. புத்தகங்களுக்கு எப்படியெல்லாம் தலைப்புக்கள் இருக்கமுடியும் என்பது நம்மூரில் புத்தகம் என்றால் என்னவென்றே அறியாத மக்களால் ஊகிக்கவே முடியாது.
எனக்கு நான்கு அனுபவங்கள். நான் மதுரையில் இருந்தபோது வண்ணதாசனின் ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ என்ற நூலை வாங்கிவரும்படிச் சொல்லியனுப்பியிருந்தேன். என் மாமா வாங்கி வந்த நூல் ‘வீட்டு மலர்த்தோட்டம்’
நண்பனுக்கு அவன் அப்பா ஜே ஜே சில குறிப்புகளுக்குப் பதிலாக வாங்கிவந்தது ஜே.ஜெயலலிதா வாழ்க்கைவரலாறு. எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் வாங்கச்சொல்லி அனுப்பியபோது உபநயனச் சடங்குகள் வந்தது ஒருமுறை
நான் வெளிநாட்டில் இருக்கிறேன். ஆகவே நானே போய் புத்தகம் வாங்குவது முன்பெல்லாம் நடக்காது. ஆகவே இது அடிக்கடி நடக்கும். ஆனால் நம்பமுடியாதது ஒன்று நடந்தது. நான் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல் வாங்கிவரும்படி என் உறவினரிடம் சொன்னேன். வந்துசேர்ந்தது யோகப்பயிற்சி முறை நூல். ஆசனா ஆண்டியப்பன் எழுதியது
எப்படி இதை வாங்கினீர்கள் என்று கேட்டேன். நீ சொன்ன ‘கான்ஸெப்டை’ கடைக்காரரிடம் விளக்கினேன் என்றார். இது எப்படி நிகழ்ந்தது என எண்ணி எண்ணிப்பார்க்கிறேன். பிடிபடவே இல்லை
மகேஷ்
***
அன்புள்ள மகேஷ்
இது ஒரு நல்ல விளையாட்டாக இருக்கும்போலிருக்கிறதே. நம் சமூக உளவியலை ஆராய்வதற்கான ஒரு நல்ல பயிற்சியும்கூட
ஜெ