பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்று தங்களைக் கண்டு ஐந்து நிமிடங்கள் உரையாடியாதை எண்ணி சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியில் எழுதுவதே இந்தக் கடிதம்.
இன்று காலையில் எப்போதும்போல் தங்களின் இணையதளத்தை நீர்க்கோலத்திற்காக வாசிக்கும்பொழுது தாங்கள் இன்று கண்காட்சிக்கு வரவிருப்பது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பை நான் அப்போது படித்திருக்கவில்லை. எனவே திடீரென்று தங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்த பொழுது நான் முற்றிலும் சமநிலை இழந்துவிட்டிருந்தேன். உரையாடல் முடிந்து அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னரே நான் அவ்வாய்ப்பை எனக்கு அறிதல்கள் ஏதும் நிகழும்படி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று உணர்ந்தேன்.
ஒரு வாசகனாக எழுத்தாளர் முன்பு எவ்விதம் தன்னை முன்வைப்பது அல்லது எப்படி பேச்சை துவங்குவது என்பது குறித்து எனக்கு சற்று குழப்பமே.
சுய அறிமுகம் சலிப்பூட்டும் என்ற அச்சமும் வாசித்தவைகளைப் பாராட்டுவதென்பது சம்பிரதாயம் என்ற ஐயமும் வாசித்தவைகளிலிருந்து கேட்கும் கேள்விகளோ என்னை ஒரு அறிவுஜீவியெனக் காட்டிக்கொள்ளும் முயற்சியென்று பொருள்படுமென்ற குழப்பமும் இன்று என்னை தடுமாறச்செய்தது உண்மை. வெளியே சென்று நான் என்னை மீட்டுக் கொண்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் வந்து தங்கள் உரையாடலை சற்று கவனித்த பின்புதான் இச்சந்திப்பின் முழு மகிழ்ச்சியையும் நான் பெற்றேன்.
எவ்வண்ணமாயினும் இது எனது தங்களுடன் உரையாடக் கிடைத்த முதல் சந்திப்பு. இந்த நிகழ்வின் மூலம் பிறிதொரு சந்திப்பின் பொழுது தங்களிடம் என்னால் வாசிப்பு மற்றும் இலக்கியம் சார்ந்த ஐயங்களை கேட்டுக்கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை பெறுகிறேன்.
இந்த கடித்தைத் தொடர்ந்து தங்களுக்கு நிறைய எழுத வேண்டுமென்ற ஆவல் எழுகின்றது. ஒரு வரி கூட எனக்கு எழுதாமல் என்னுடன் பல ஆண்டுகள் தொடர்பிலிருக்கும் வாசகர்களும் எனக்கு அணுக்கமானவர்களே என்ற தங்களின் வரிகளை இங்கு நினைவு கூறி நன்றியுடன் இக்கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்
பணிவுடன்,
பூபதி துரைசாமி.
***
அன்புள்ள பூபதி,
கோவையில் வாசகர்களை சந்தித்துப்பேச வாய்ப்பு கிடைத்தது. கோவையில் நிகழும் உரைகளில் அப்படி ஒரு உரையாடல் சாத்தியமில்லை. பெரும்பாலும் உரைமுடிந்தபின் நான் ஒருவகை உணர்வுச்ச நிலையில் இருப்பேன். சந்திப்பவர்களில் ஒருசாரார் சம்பந்தமில்லாமல் அந்த உச்சத்தை அழிக்க முனைவார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இப்போது அந்தத் தயக்கமெல்லாம் இல்லாமல் அனைவரையும் சந்திக்கமுடிந்தது.
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன்,
நான் இன்றைய காந்தி புத்தகம் வாங்கலாம் என்று இணையம் மூலம் முயன்றேன் எல்லா இடத்திலும் Out of stock நிலை நீடிக்கிறது, எப்பொழுது வெளிவரும் என்று தெரிவிக்கவும்.
நன்றி!
ஆர்வமுள்ள,
செந்தில்குமரன் R
***
அன்புள்ள செந்தில்
இன்றைய காந்தி நூல் சில பிரதிகளே வந்தன. பல இடங்களில் புத்தகக் கண்காட்சி நடப்பதனால் நூல்கள் பிரித்து அனுப்பப் பட்டிருக்கலாம். அடுத்த அச்சு உடனே வருமென நினைக்கிறேன்
ஜெ
***
ஜெ
கோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. விசாலமான அரங்கு. நிறைய கடைகள். கூட்டம் கொஞ்சம் குறைவுதான். ஆனால் கலைநிகழ்ச்சிகள் அனைத்துமே மிகத்தரமாக இருந்தன. மிகுந்த அக்கறையுடன் ஏற்பாடு செய்திருந்தார்கள். புத்தகங்கள் விற்பதற்கான ஏற்பாடுகளும் அருமை. காண்டீன் மட்டுமே கொஞ்சம் சொதப்பல். டீ காபி எல்லாம் டிரம் மணத்துடன் அசட்டு இனிப்புடன் இருந்தன
என் அபிமான எழுத்தாளருக்கு தனி ஸ்டால் என்பது மகிழ்ச்சியை அளித்தது. அதிலிருந்த உங்கள் புகைப்படமும் மிக அருமை. நற்றிணை வெளியீடாக வந்த உங்கள் மூன்றுநூல்களில் உச்சவழு வாங்கிக்கொண்டேன். மூன்றுநூல்களுமே அற்புதமான தயாரிப்புகள்
பிரதீப்
***