அன்புள்ள ஜெ,
கோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்த்தது மிகுந்த நிறைவை அளித்தது. அதிலிருந்த உங்கள் புகைப்படம் அருமை. சிலகாலம் முன்பு எடுத்தது என நினைக்கிறேன். உங்கள் முகத்திலிருந்த தீவிர அபாரமானது. நான் உங்கள் நூல்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். இனிமேல்தான் பெரிய நாவல்களை வாசிக்க ஆரம்பிக்கவேண்டும்
மகேஷ் மாதவன்
***
அன்புள்ள மகேஷ்
அந்தப்படம் நான்காண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் எஸ்.கே.பி. கருணாவின் கல்லூரிக்குள் உள்ள விருந்தினர் மாளிகையின் வராந்தாவில் மாத்ருபூமி நிருபரால் எடுக்கப்பட்டது என நினைவு
ஜெ
***
அன்பு ஜெ,
முதல் பயணம் மற்றும் கூட இருத்தலின் ஒரு வாய்ப்பு.
முழுமையாக கேட்பது தரும் திறப்புகள் எல்லை இல்லாதவை என்று மீண்டும் தெரிந்தது. அனைவருக்கும் திறந்த புத்தகமாக இருந்து கொண்டு, வேலைகளை அவரவர் வசம் கொடுத்துவிட்டு, உங்களின் ஆழத்தில் இருந்தபடியும் பேசியபடியும் எளிதான ஒரு பயணத்தில் வந்தது இப்போது ஒரு “ஆ” அதிசயம் – மெல்லிய குட்டு சத்தமின்றி வாங்கி கொண்டாலும்.
களம் நிற்பவர்கள் பற்றிய உரையாடல்கள் தான் மனம் நிறைக்கிறது, முன் செலுத்துகிறது.
2 , 3 ஆட்கள் இருக்கும் அந்த குருகுலம், ஒரு ஆழ் தியானத்தில் இருப்பது போல தோன்றியது. சமாதியும் சரி மொத்த கட்டிடங்களும் சரி, காலாதீதமாக நிற்கிறது என்று தோன்றியது. ஒரு பூட்டு இன்றி, ஆள் இன்றி, பொங்கி நிறைந்த ஞானம் என்ற செல்வம் கொண்ட ஒரு குருகுலம்
நன்றிகள் ஜெ… மீண்டும் சிந்திப்போம்.
அன்புடன்,
லிங்கராஜ்
***
அன்புள்ள லிங்கராஜ்
மீண்டும் ஒரு பயணத்தில் பார்ப்போம். ஊட்டியில் குருகுலம் முகில்மூடி அமைதியில் ஆழ்ந்திருந்தது ஒரு நிறைவூட்டும் நினைவாக உள்ளது இப்போது
ஜெ
***
ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்! வெண்முரசு தான் நான் வாசிக்கும் முதல் இலக்கிய புத்தகம். கிருஷ்ணன், கீதை மற்றும் மகாபாரதத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக உங்களது படைப்பை வாசிக்கத் துவங்கினேன்.
கவிதைகளையும், ஞானங்களையும், வீர சாகசங்களையும் இயல்பாக கொடுத்துக் கொண்டே செல்வது மிகுந்த ஈர்ப்பளிக்கின்றன.
உங்களுடைய “பனிமனிதன்” வாங்குவதற்காக கோவை புத்தக அரங்கிற்கு வந்தபோது எதிர்பாராமல் உங்களை சந்தித்தது உவகையளித்தது. ஆரம்பகால வாசகனுக்கான உங்களின் ஆலோசனைப்படி “அறம்” வாங்கிக் கொண்டேன்.
நிற்க!
நான் 8×10 அறையில் அடிப்படைக் கணினியும், அடிப்படை ஆங்கில இலக்கணமும் கற்றுக் கொடுத்து வருகிறேன். உங்களால் இலக்கியம் மீது ஆர்வம் வந்துவிட்டது. ஆங்கில இலக்கிய வாசிப்பையும் இப்போதே துவங்கி விட்டால் என்னுடைய பயிற்சிமுறை தரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்களைப் போல சமகாலத்தில் ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஒருவரது பெயரை அல்லது அவரது வலைதளத்தை எனக்கு அறிமுகப்படுத்துவீர்களா?
– விஜயகுமார். (கோவை)
***
அன்புள்ள விஜயகுமார்,
ஆங்கில இலக்கியத்தில் இன்ன படைப்பாளிகள் என சுட்டுவது எளிதல்ல. ஏனென்றால் ஆங்கில இலக்கியமென்பது ஒருவகையில் உலக இலக்கியம் உலகம் முழுக்கவிருந்து படைப்புக்கள் வந்துகுவிகின்றன.
இருவகையில் ஆங்கிலம் வழியான வாசிப்பை தொடங்கலாம். சமகாலத்தைய எளிய ஆங்கில இலக்கிய ஆக்கங்கள். அவை நடை எளிதாகவும் அதேசமயம் உள்ளடக்கம் ஆழமானதாகவும் இருந்தால் மட்டுமே ஒரு வயதுக்குமேல் நம்மால் வாசிக்கமுடியும்.
அவ்வகையில் உடனடியாக நினைவிலெழுபவை
To Kill a Mockingbird – Harper Lee
Waiting – Ha Jin
நான் உடனடியாக படைப்புக்களை படிப்பவன் அல்ல. கொஞ்சம் காலம் கடந்தபின் நிற்பவற்றை வாசிக்கலாமென நினைப்பவன். ஆகவே உடனடியாக வரும் நூல்களைச் சொல்லமுடியவில்லை
கூடவே எளியமொழி கொண்ட பேரிலக்கியங்களை வாசிக்கலாம்.
ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். அவை எளிய மொழிநடையால்.நேரடியான கூறுமுறையால் வாசிக்கவைக்கும். அதேசமயம் பேரிலக்கியமாக நம்மிடம் பேசும். நம் அளவீடுகளை வடிவமைக்கும். அதன்பின் நாம் சில்லறை எழுத்துக்களை நம்பிச்செல்லமாட்டோம்
ஜெ
***