தான்,பிறன்- கடிதங்கள்

ஆசிரியருக்கு,

gandhi2

 

பிறனரசியல், பிரிவினையரசியல்

வணக்கம்.

 

தான் என்னும் அகங்காரம் இன்றி இருக்க சாத்தியமில்லை.   தான் என்னும் உணர்வு கொடி பற்றிக் கொள்ள ஏதேனும் பாரம்பரிய கொம்பை தேடுதல் இயல்பான ஓன்றுதானே. பழமை என்பதோடு நினைவுகள் எனவே தேவைப்படுகின்றது. எல்லா நினைவுகளும் ஒருவருக்கு சாத்தியமில்லாத சூழலில் குடும்பம், குழு, சாதி, இனம், மதமென தொகுத்த நினைவுகளில் இருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும் “தான்” நகர்கின்றது.

 

சொல்லிக் கொள்ள தக்க, கொஞ்சம் மதிப்புடன் நிற்க பழைய நினைவுகள் தேவைப்படுகின்றது.  எங்களூரில் “வெஸ்டர்ன்”,”அமெரிக்கன்” போன்ற வலுவான அடையாளங்கள் உண்டு. அமெரிக்கன் என்ற அடையாளம் தளர்வானது.(Hyphenenated Identity).  வேறு பண்பாடுகளை கோர்த்துக் கொண்டு மையப்பண்பாட்டுடன் இணைத்துக் கொள்ள முடியும். இது குடியேற்ற நாடாகையால் கொஞ்சம் எளிது, கட்டமைப்பு வேறு.

 

டைவர்சிட்டி மேனேஜ்மெண்ட் பற்றி என பள்ளிக் கூடத்தில்  பாடம் உருவாக்க முயற்சி கூட செய்யலாம் என தோன்றுகின்றது.

 

இந்திய சூழலில் வேறு “தான்”  உணர்வுடைய நினைவுகளை சேகரித்த தனித்த அடையாளங்கள் இருக்கையில் அடையாள மேலான்மைதான் தேவைப்படுகின்றது.  எப்படி இத்தனை அடையாளங்கள் உரையாடிக் கொள்வது, ஒரு குறுகிய நிலப்பரப்பில் உரையாடிக் கொள்கையில் உருவாகும் இயற்கையான பிரச்சனைகளில் எப்படி ஓரளவுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு கொண்டு வருவது? அடையாள மாற்றங்களை கையாள்வது எப்படி?  எப்படி பரஸ்பர மரியாதையை கொண்டு வருவது?

 

உலகின் வேறு நாகரீகங்கள் இத்தனை மாறுபாடுடைய தனித்த அடையாளங்களின் பொது வெளி உரையாடலை சமாளிக்க வேறு தீர்வுகளை பரிட்சித்து பார்த்துள்ளன. நீங்கள் அதை பற்றியெல்லாம் எழுதியுள்ளீர்கள்.

 

நிர்மல்

 

அன்புள்ள நிர்மல்,

 

தாங்கள் என தன்னை பகுத்து தொகுத்துக் கொள்வது இல்லாமல் ஒருபோதும் சாமானியர் வாழமுடியாது. ஏனென்றால் நான் என நின்றிருக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் அவர்களுக்கில்லை. ஆகவே அவர்கள் தொகுப்படையாளம் தேடிச்சென்றுகொண்டே இருப்பார்கள். அப்படி தாங்கள் என வகுக்கும்போதே பிறன் உருவாகிவிடுகிறது

 

இந்த அடையாளங்கள், வெறுப்புகள் சார்ந்து அரசியலும் சமூகவாழ்க்கையும் தீர்மானிக்கப்படுவதே அபாயமானது. அதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அதைக் கடந்துசெல்வதைப்பற்றியே பேசுகிறேன்.

உலக வரலாற்றில் பொதுக்கல்வி, பொதுப்போக்குவரத்து, வணிகம் ஆகியவையே இந்த வேறுபாடுகளைக் களைய பெருமளவு உதவியிருக்கின்றன. அவற்றைப்புரிந்துகொள்ளும் யதார்த்தவாத அணுகுமுறையும், அந்த யதார்த்தவாதத்தில் வேரூன்றிய இலட்சியவாத அரசியலும் முக்கியமானவை

 

இதற்கு எதிராக இருப்பது ஒருவகையில் ஜனநாயகம் என்பதுதான் என்பது ஒரு சிக்கலான உண்மை. பெரும்பான்மையினரின் அதிகாரம் அது . ஆகவே பாமரர்களின் அதிகாரம். பாமரர்களைக் கையாளத்தெரிந்தவர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களை பிறனரசியல் மிக எளிதில் ஆட்கொள்கிறது

 

ஆனால் ஜனநாயகத்துக்கு மாற்று இல்லை. ஜனநாயகம் கும்பல் அரசியலால், வெறுப்பரசியலால் ஆக்ரமிக்கப்படாத விழிப்புணர்ச்சிதான் ஒரே வழி. அது ஒரு தற்காப்பு. கல்வி, போக்குவரத்து, வணிகம் ஆகியவற்றில் நிகழும் நவீனமயமாதல் மிக எளிதில் பிறனரசியலை பின்னுக்குத்தள்ளமுடியும்.

 

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் நேற்று பஞ்சாபும் இன்று வடகிழக்கும்தான்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

 

பிறனரசியல் வாசித்தேன். தெளிவான கண்ணோட்டம். ஆனால் பொதுவாக இந்தவகையான பேச்சுக்கள் கண்ணெதிரே உள்ள யதார்த்தமான எதிரிகளை காணமுடியாமல் தடுத்துவிடுகின்றன. யாதும் ஊரே என்பது நல்ல கொள்கைதான். ஆனால் அது ஒருபோதும் நம் அரசியல் கொள்கையாக ஆகமுடியாது.

கணபதிராமன்

 

அன்புள்ள கணபதிராமன்

நான் சொல்வது எந்தவகையிலும் ‘இலட்சியவாதம்’ அல்ல. நடைமுறைவாதம் மட்டுமே

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு [சென்னை] விவாதக்கூடுகை
அடுத்த கட்டுரைநிம்மதி