62. மற்களம்
ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா? சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே?” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா?” என்றார் ஆபர். “ஆம், சென்ற மூன்று நாட்களாகவே இங்குதான் இருக்கிறார். இங்கிருந்து அவரை ஐந்துமுறை வெளியே அனுப்பினேன். சென்ற விரைவிலேயே திரும்பிவிடுகிறார்” என்றபின் புன்னகைத்து “அஞ்சுகிறார்” என்றான்.
ஆபர் உள்ளே சென்று குங்கனின் மஞ்சத்தில் போர்வையால் முகத்தையும் மூடிக்கொண்டு படுத்திருந்த உத்தரனை பார்த்தார். “மதுவுண்டாரா?” என்றார். “இல்லை. சற்று சிவமூலிகை புகைக்கக் கொடுத்தேன். அச்சம் களைவதற்கு அது நன்று. ஆனால் அவரில் துயிலாகவே அது வெளிப்படுகிறது” என்றான் குங்கன். “இன்று வசந்தபஞ்சமி விழா. இளவரசர் தோன்றவேண்டிய எந்த அவையிலும் அவர் தென்படவில்லை. நகர்மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள் என்று சிற்றமைச்சர்கள் வந்து சொன்னார்கள்.”
“மாலையில்தானே செண்டுவெளி நிகழ்வு? எழுப்பி கொண்டுவந்துவிடுகிறேன்” என்றான் குங்கன். ஆபர் அமர்ந்துகொண்டு நீள்மூச்சுவிட்டு “குங்கரே, தாங்கள் அறியாதது அல்ல. இங்கே நிகழவிருப்பது என்னவென்றால்…” என்றதும் “அறிவேன்” என்றான் குங்கன். “காலகேயர்கள் வந்திருப்பது உண்மையா என்று நானே சென்று நோக்கினேன். இந்நகரை வெல்வதற்கு அவர்கள் நூற்றுவரே போதும். பேருரு கொண்டவர்கள். அவர்களின் நெஞ்சக்குழி வரைதான் நம் நகரின் மல்லர்கள் இருக்கிறார்கள். கீசகரின் திட்டம் மிகத் தெளிவானது. வசந்தபஞ்சமிக்கு மறுநாள் மதுக்களியாட்டில் நகர்மக்கள் மூழ்கிக் கிடப்பார்கள்…”
குங்கன் தலையசைத்தான். “காலகேயர்களில் முதல்வன் ஜீமுதன் என்னும் மகாமல்லன். அத்தனை பெரிய மானுட உடலை நான் கண்டதே இல்லை. நேரில் கண்டிருக்காவிட்டால் நம்பியிருக்கவும் மாட்டேன்” என்றார் ஆபர். “அவனை எதன்பொருட்டு அழைத்து வந்திருக்கிறார் கீசகர் என்று அறிந்துவரும்படி ஆணையிட்டேன். ஒற்றர்களில் நுண்மை மிக்கவன் சபுத்ரன் என்னும் குள்ளன். மருத்துவ குலத்தில் பிறந்தவன். உழிச்சில்கலை தேர்ந்தவன். கீசகரின் தனிப்பட்ட மருத்துவன். அவனை கோரகோரனுக்கு தசையுழிய அனுப்பியிருக்கிறார் கீசகர். அவன் சொன்னது நம்பும்படி உள்ளது.”
குங்கன் தலையசைத்தான். “வசந்தபஞ்சமி விழவில் காலகேய மல்லர்களின் உடற்தசை விளக்கமும் மற்போரும் நிகழும். உச்சியில் ஜீமுதன் எழுந்து நமது மல்லர்களிடம் தன்னை எதிர்க்க எவரேனும் உண்டா என்று கேட்பான். நம்மவர்கள் குருதியுறைந்து அமர்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. குங்கரே, நாங்கள் நாடுகொண்டு அரசாண்டாலும் இன்றும் எங்கள் குலநெறிகள் நிஷாதர்களுடைய காடுகளில் எழுந்தவையே. தொல்முறைப்படி கலிதேவனை தெய்வமெனக் கொண்ட எவர் வேண்டுமென்றாலும் எங்கள் அவைபுகுந்து மற்போருக்கு அழைக்கலாம். அரசனோ அரசன் பொருட்டு பிறரோ அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.”
“அரசரின்பொருட்டு குடிகள் எவரும் எழவில்லை என்றால் அரசரே மல்லுக்கு களமெழுந்தாகவேண்டும். அரசரை வென்றவன் அவனே அரசனாவான். அவன் முன் கோல்தாழ்த்தி முடியளிக்க வேண்டும் நம் குடி. அது கலிதேவனுக்கு நம் குடிகள் அளித்த ஆணை. காலகேயர்கள் கலியை வழிபடுபவர்கள்.” ஆபர் குங்கன் ஏதேனும் சொல்வான் என்று எதிர்பார்த்தார். பின்னர் “ஜீமுதன் அறைகூவினால் விராடபுரியில் அரசர் களமிறங்க வேண்டியிருக்கும். வேறுவழியே இல்லை” என்றார்.
“கீசகர் இறங்கலாமே?” என்றான் குங்கன். “அவர் மச்சர்குடிப் பிறந்தவர். அரசரின் உறவினன் என்ற நிலையிலேயே இங்கே அரசுப்பணி ஆற்றுகிறார். முறைப்படி அரசரின்பொருட்டு களமிறங்குபவர் அரசரின் மைந்தரோ குருதியுறவுகொண்டவரோ அரசரின் படையூழியரோ அடிமையோ ஆக இருந்தாகவேண்டும். ஜீமுதன் அதை மறுப்பான். ஒருவேளை நட்பென அரசர் கோரினாலும் கீசகர் அதை மறுக்கமுடியும். அவர் மறுத்தால் வேறுவழியில்லை, முடிவைத்து அவனிடம் பணியவேண்டும். அது குல இழிவு. எனவே உத்தரர் களமிறங்கியாக வேண்டும். பின்னர் அரசர். இருவரையும் அவன் களத்தில் கொல்வான். அவன் கையின் ஒரு அடியை வாங்கிக்கொள்ளும் ஆற்றல்கொண்ட எவரும் நம் குடிகளில் இல்லை.”
“குடிகளின் கண்ணெதிரே கொலை நிகழும். அரசரின் படைகள் சூழ்ந்து நின்றிருக்கும். ஆனால் அவர்கள் அதை கொண்டாடுவார்கள்… களத்தில் தலைசிதறிச் சாயும் அரசரின்பொருட்டு ஒரு துளி விழிநீர்கூட சிந்தப்படாது” என்றார் ஆபர். “இந்த நிஷதகுடிகளின் குருதியில் ஓடுவது மத்தகம் திரண்ட யானைகளின் காடு. மிக எளிதில் இவர்கள் கானகர்களாக ஆகிவிடுவார்கள். இந்நெறிக்கே மத்தகஜநியாயம் என்றுதான் இவர்களின் நூல்கள் பெயரிட்டிருக்கின்றன.”
“இவர்களின் நெறிப்படி படைக்கலத்தால் கொன்றால்தான் அது கொலை. படைக்கலங்கள் மீது ஆழ்ந்த வெறுப்பு இவர்களுக்கிருக்கிறது. வெறும் கை தெய்வங்களால் கட்டுப்படுத்தப்படுவது என்று நம்புகிறார்கள். ஆகவே மற்போர் இவர்களுக்கு வேள்விக்கு நிகரான தூய்மை கொண்டது. மூதாதையரை மகிழ்விக்கும் வழிபாடு அது” என்று ஆபர் தொடர்ந்தார்.
“ஜீமுதன் பெருந்தசை புடைக்க வந்து களம் நிற்கையிலேயே அவனுடன் இணைந்து கூவிக் கொப்பளிப்பார்கள். அவன் மல்லர்களின் தலைகளை உடைத்து கொல்லக் கொல்ல களிவெறிகொண்டு கொல் கொல் என்று கூச்சலிடுவார்கள். அரசரை அவன் கொல்லும்போது கிழித்தெறி, குருதியாடு என்றுதான் சூழ்ந்திருக்கும் நிஷாதர்கள் வெறியாட்டமிடுவார்கள்.”
“ஆம், ஒரு வினாவும் எழாமல் அரசரையும் இளவரசரையும் கொல்லும் வழி அதுவே” என்றான் குங்கன். “ஜீமுதன் அரசரை வென்று நின்று நெஞ்சறைந்து அறைகூவி மணிமுடியைக் கோரியதும் கீசகர் எழுந்து அவனை அறைகூவுவார்.” குங்கன் புன்னகைத்து “ஆம், அப்போது நிஷதகுடிகள் அவர் பெயரைச் சொல்லி ஆர்ப்பரிப்பார்கள். நெஞ்சில் அறைந்து கண்ணீர் விடுவார்கள். அவர் கோரகோரனை வென்றால் பலர் அங்கேயே சங்கரிந்து உயிர்க்கொடை கொடுக்கவும்கூடும்” என்றான்.
“அதுதான் நிகழவிருக்கிறது. குங்கரே, இன்று மாலை கீசகர் நம் அரசராக ஆவார். நம் குடிகள் கண்ணீரும் களிவெறியுமாக வாழ்த்துரைத்து ஆர்ப்பரிக்க குலத்தலைவர்கள் மணிமுடியை அவர் தலையில் சூட்டுவார்கள்.” ஆபர் குங்கனின் கைகளை பற்றிக்கொண்டார். “என் அரசரையும் இளவரசரையும் காப்பாற்றுங்கள். உங்கள் அடிபணிந்து கோரவும் சித்தமாக இருக்கிறேன்.” குங்கன் தாடியை நீவியபடி “ஆம் என்னும் சொல்லுக்கு தடையாக உள்ளது ஒன்றே, அந்தணரே. உங்கள் அரசர் மிகமிகச் சிறுமைகொண்ட உள்ளத்தான்” என்றார்.
“ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் என் கடப்பாடு அவர் சூடிய மணிமுடிக்கும் கைக்கொண்ட கோலுக்கும்தான். அவற்றால் காக்கப்படும் குடிகள் நலனை அக்குடிகளை ஆளும் நெறிகளை அந்நெறிகளுக்கு அடிப்படையான வேதங்களை மட்டுமே நான் சென்னிசூட முடியும். அதன் பொருட்டு தலையளிக்கவும் நான் ஒருக்கமாகவேண்டும்.” குங்கன் “சிறியாருக்குச் செய்த உதவியின்பொருட்டு ஒருமுறையேனும் துயர் கொள்ளவேண்டியிருக்கும் என்கின்றன நூல்கள்” என்றான். “இவ்வுதவியை என்பொருட்டு செய்யுங்கள். நீங்கள் அறமுணர்ந்தவர்.”
“ஆம், உங்கள்பொருட்டு” என்றான் குங்கன். “காலையில் நிகழ்ந்த கலிபூசனைக்கும் அரண்மனைக்கொலுவுக்கும் களப்பொலிக்கும் இளவரசர் எழுந்தருளவில்லை. செண்டுவெளி ஒருங்கிவிட்டது. அரசர் இன்னும் சற்றுநேரத்தில் களம்புகுவார். அரசியும் இளவரசியும் ஒருங்கிக் கொண்டிருக்கிறார்கள்…” குங்கன் “ஆம், செண்டுவெளியின் குரல்முழக்கத்தை கேட்கிறேன்” என்றான். “இளவரசர் வந்தாகவேண்டும்…” என்றார் ஆபர்.
போர்வையை வீசியபடி எழுந்து “முடியாது… ஒருபோதும் முடியாது. தலை உடைந்து இறக்க நான் வரமாட்டேன்” என்று உத்தரன் கூவினான். உடல் பதற கைகளை அடிக்க வருபவர்களை தடுக்க முயல்வதுபோல நீட்டியபடி “என்னருகே வரவேண்டாம்… நான் போய்விடுகிறேன். நான் எங்காவது ஓடிவிடுகிறேன்” என்று அலறினான். கண்களிலிருந்து நீர்வழிய கழுத்தில் நீலநரம்புகள் புடைத்துத் தெரிய “கொல்லாதீர்கள் கொல்லாதீர்கள்” என்று உடைந்து அழுதான்.
குங்கன் “இளவரசே, உங்களை எவரும் கொல்லப் போவதில்லை” என்றான். “இல்லை, நான் கேட்டேன்… எல்லாவற்றையும் கேட்டேன்” என்றான். குங்கன் “முதல்மூன்று தேவர்களும் இறப்புக்குத் தலைவனாகிய அறத்தோனும் அன்றி எவரும் உங்களை கொல்லமுடியாது. இது என் சொல்” என்றான். அதிலிருந்த உறுதியால் மெல்ல இறுக்கம் தளர்ந்த உத்தரன் இமைகளில் கண்ணீருடன் “ஏன்?” என்றான். “இளவரசே, இப்புவியில் நான் விழைந்தால் அடையமுடியாத எதுவுமில்லை. நான் ஆணையிட்டால் நிகழாதவை என்றும் ஏதுமில்லை” என்றான்.
உத்தரன் வாய் திறந்திருக்க மாறிமாறி இருவரையும் நோக்கி “விளையாடுகிறீர்களா?” என்றான். “நான் பேராற்றல் மிக்க இரண்டு தெய்வங்களால் காக்கப்படுகிறேன். அவர்களிடம் நான் எண்ணுவதை உரைத்தாலே போதும்.” உத்தரன் “கோரகோரனை வெல்லமுடியுமா?” என்றான். “யானை புறாமுட்டையை என அவன் தலையை உடைத்து களத்திலிடச் செய்கிறேன்” என்றான் குங்கன்.
உத்தரன் புன்னகை செய்தான். இரு கைகளாலும் கண்களை துடைத்துக்கொண்டு அருகே வந்து குங்கனின் கைகளைப் பற்றியபடி “அந்த தெய்வத்தை எவருமே வெல்லமுடியாதா?” என்றான். “முடியும், பிறிதொரு தெய்வத்தால். ஆனால் அத்தெய்வம் இதன் உடன்பிறந்தது. அவர்கள் போரிட்டுக்கொள்ள மாட்டார்கள்.” உத்தரன் கிளுகிளுத்துச் சிரித்து “பேருரு கொண்ட தெய்வமா?” என்றான். “மலைகளைத் தூக்குபவன்…” என்றான் குங்கன். “மருத்துமலையைத் தூக்கிய அஞ்சனைமைந்தனைப் போன்றவன்.”
உத்தரன் “ஆ!” என்று கூவியபடி பாய்ந்து குங்கனின் மறுகையையும் பற்றி தன் நெஞ்சில் வைத்தான். “ஆம், அவனை நான் கண்டேன். குரங்குவடிவம் கொண்டவன்… அவனை நான் கனவில் ஒருமுறை கண்டேன்.” குரல் தழைய “அவன் கீசகரை அறைந்து பிளப்பதைக் கண்டேன்” என்றான். ஆபர் “இதை வெளியே சொல்லவேண்டியதில்லை, இளவரசே” என்றார். உத்தரன் “ஆபரே, நான் களம்புக வேண்டியிருக்கிறது. கிரந்திகனிடம் என் கரிய புரவி சித்தமாகட்டும் என ஆணையிடுங்கள். அரசணி புனைந்து சற்றுநேரத்தில் நான் கீழே வருவேன். கரும்புரவியில் களம் நுழைவேன்” என்றான்.
உத்தரன் அரண்மனை முற்றத்தை அடைந்தபோது காரகன் அங்கே முழுதணிக்கோலத்தில் காத்திருந்தது. பொன்செதுக்கு பதித்த இரும்புக் கவசமும் செங்கழுகின் இறகுசூடிய தலையணியும் இரும்புக் குறடுகளும் அணிந்து இடையில் நீண்ட வாளுடன் வந்த உத்தரன் படிகளில் இறங்கியபோது எழுந்த ஒலியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து முகம் மலர மெல்ல நடந்தான். அவனுடன் இரு கவசவீரர்கள் படைக்கலங்கள் ஏந்தி நடந்தனர். கூடத்தை அடைந்ததும் அங்கிருந்தோர் வாழ்த்தொலி எழுப்ப அவன் சற்று நின்றான். பின்னர் அவர்களை நோக்கி கைதூக்கி வாழ்த்தியபடி படியிறங்கி முற்றத்தை அடைந்தான்.
அங்கே நின்றிருந்த ஏவலனிடம் “அரசர் களம்புகுந்துவிட்டாரா?” என்றான். “அரசரும் அரசியும் இளவரசியும் களம்புகுந்து அரியணையில் அமர்ந்து ஒரு நாழிகை கடந்துவிட்டது, இளவரசே. களபூசனைகளும் முறைமைகளும் முடிந்து களமாடல் தொடங்கிவிட்டது. அரசரும் அரசியும் படைத்தலைவரும் நாலைந்துமுறை தங்களைப்பற்றி விசாரித்தனர்.” உத்தரன் திகைப்புடன் நின்று “கீசகர் கேட்டாரா?” என்றான். “ஆம்” என்றான் ஏவலன். “என்ன கேட்டார்?” என்றான். “இளவரசர் இன்னுமா வரவில்லை என்றார்.”
அவன் சில கணங்கள் நின்றபின் “குங்கர் எங்கிருக்கிறார்?” என்றான். “அவர் அரசருடன் சென்றுவிட்டார். அரியணை அருகே அமர்ந்திருக்கிறார்.” உத்தரன் “ஆபர்?” என்றான். “அவரும் அருகிருக்கிறார்.” உத்தரன் நீள்மூச்செறிந்து “என் பீடம் எங்கிருக்கும்? குங்கரின் அருகில் அல்லவா?” என்றான். “இல்லை இளவரசே, அதை தனியாகத்தான் போடுவார்கள். தாங்கள் களம்நிற்பவர் அல்லவா?” உத்தரன் உரக்க “மூடா, என்னிடம் கேட்டாயா? எங்கு போடுவதென்று என்னிடம் கேட்டாயா? என் இருக்கை குங்கருக்கும் ஆபருக்கும் நடுவே இருக்கவேண்டும். புரிகிறதா?” என்றான்.
கிரந்திகன் “இளவரசே, நான் அதற்கு ஒழுங்கு செய்கிறேன். வாருங்கள்… புரவி காத்திருக்கிறது” என்றான். உத்தரன் கவசத்தின் எடையுடன் நடந்தபடி “மூடர்கள்!” என்றான். கிரந்திகன் “குங்கரிடம் பேசினீர்களா?” என்றான். “அவருக்கு நான் ஆணையிட்டேன், என் காப்புக்கு அவரே பொறுப்பு என்று” என்றான். “என்ன சொன்னார்?” என்றான் கிரந்திகன். “அவர் இரு தெய்வங்களால் காக்கப்படுபவர் என்றார். கோரகோரனை புறாமுட்டை என உடைப்பதாகச் சொன்னார்.”
கிரந்திகன் சிரித்து “நன்று, அவருக்கும் தோள் தினவு தீரும்” என்றான். “எவருக்கு?” என்றான் உத்தரன். “அந்த மல்லன்தெய்வத்திற்கு… தெய்வமே என்றாலும் அதற்கும் அவ்வப்போது விளையாட்டுக்கள் தேவையாகின்றன அல்லவா?” உத்தரன் ஐயத்துடன் நோக்கியபின் “அந்தக் குங்கனை வேவுபார்க்க நான் ஆணையிடவேண்டும். நீ அவனை எனக்காக வேவுபார்த்து சொல். அவனிடம் ஏதோ மாய வித்தைகள் உள்ளன என எண்ணுகிறேன்” என்றான்.
காரகன் உத்தரனை தொலைவில் கண்டதுமே ‘ர்ர்ர்ரீப்’ என்று ஓசையிட்டு முன்னங்காலால் தரையைத் தட்டியது. அதன் சிறுசெவிகள் பின்னால் சரிய விழிகள் உருட்டி விழிக்க மூச்சு சீறியது. உத்தரன் நின்று “ஏன் அது என்னைக் கண்டாலே சீறுகிறது?” என்றான். கிரந்திகன் அதன் தோளில் தொட்டதும் அமைதியாகியது. “இளவரசே, அது புரவிகளின் இயல்பு. அது களம் காண விழைகிறது” என்றான் கிரந்திகன். “ஏறிக்கொள்ளுங்கள்!”
உத்தரன் காலைச் சுழற்றிவீசி மேலேறி நிலையழிந்தான். கிரந்திகன் பிடித்துக்கொள்ள கிரந்திகனின் தலையை கையால் பிடித்தபடி சேணத்தில் கால்நுழைத்தான். “இந்தப் புரவி இன்னமும் நன்கு பழகவில்லை என்பது விந்தைதான்” என்றபடி கடிவாளத்தை பிடித்தான். “இழுக்காதீர்கள், தளர்வாக பிடித்துக்கொள்ளுங்கள். காலால் புரவியின் விலாவை அணைத்துக் கொள்ளுங்கள்.” கிரந்திகனை சினத்துடன் நோக்கி “நானறியாத புரவியா? நீ எனக்கு கற்றுத்தருகிறாயா?” என்றான் உத்தரன். “இல்லை, தாங்கள் அறியாதது அல்ல” என்றான் கிரந்திகன்.
காரகனின் காதில் அவன் மெல்ல பேச அது காதுகளைக் கூர்ந்து விழிதாழ்த்தியது. பின்னர் பிடரியை சிலிர்த்துக்கொண்டு வால்சுழல குளம்படி தூக்கி வைத்து கிளம்பியது. கிரந்திகன் ஓடிச்சென்று தன் புரவிமேல் ஏறிக்கொண்டான். இரு புரவிகளும் இணையாக ஓட ஏவலர்களின் புரவிகள் தொடர்ந்து வந்தன. குளம்படியோசை சுவர்களில் எதிரொலித்து முழங்க அவர்கள் அரசவீதியில் விரைந்தார்கள். “மெல்ல மெல்ல…” என்று உத்தரன் சொன்னான். “அவ்வண்ணமே” என்று கிரந்திகன் குதிரையிடம் எதையோ சொல்ல அது மேலும் விரைவுடன் பாய்ந்தது. “அய்யோ அய்யோ” என்றான் உத்தரன். புரவி அவனை உள்ளங்கைப் பந்தென தூக்கி விளையாடியபடி சென்றது.
அவர்கள் செண்டுவெளிக்குள் பீரிட்டு நுழைந்ததை உண்மையில் உத்தரன் உணரவேயில்லை. அவன் கண்களை இறுகமூடி பற்களைக் கடித்து உடலை இறுக்கி அமர்ந்திருந்தான். உள்ளே புரவியாட்டு நடந்துகொண்டிருந்தது. ஏழு பரித்திறனர் வெண்புரவிகளில் காற்றிலெனப் பாய்ந்து வெண்ணிற அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த காரகன் உறுமியபடி தாவி முதற்புரவியின்மேல் எழுந்து முதுகை மிதித்துப் பறந்து அப்பால் சென்று நிலத்தில் காலூன்றி சுழன்று வந்தது. கூட்டத்தினர் கூச்சலிடுவதையும் வாழ்த்துரைப்பதையும் உத்தரன் கேட்டான். எங்கிருக்கிறோம் என்றே அவன் உணரவில்லை.
காரகன் சுழன்று பாய்ந்து காற்றில் நின்ற இரு மூங்கில்களை தாவிக்கடந்தது. அதன் வியர்வைமணம் அறிந்த பெண்புரவிகள் மூக்குவிடைத்து கனைத்தன. காரகன் பாய்ந்து செண்டுவெளியைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மூங்கில் வேலி வழியாகவே ஓடிச் சுழன்று வந்து நிலத்திலிறங்கியது. ஏழுமுறை செண்டுவெளியை சுற்றிவிட்டு அரசமேடை முன் சென்று பொய்யடி வைத்து ஊசலாடி நின்றது. அதனருகே வந்து நின்ற கிரந்திகன் தன் புரவியிலிருந்து இறங்கி “இளவரசே, இறங்குக!” என்றான். உத்தரன் கண்விழித்து “என்ன? என்ன?” என்றான். “இறங்குங்கள்!”
உத்தரன் மெல்ல காலைத் தூக்கிவைத்து கிரந்திகனின் தலையைப் பிடித்தபடி இறங்கினான். அவன் இரு கால்பொருத்துக்களும் எலும்பு உடைந்தவைபோல வலித்தன. அவன் தள்ளாடினான். கண்கள் இருட்டி செவிகள் அடைத்திருந்தன. “அரசமேடைக்கு செல்க!” என்றான் கிரந்திகன். அவன் வாழ்த்தொலிகளை கேட்டான். “விராட நிஷதகுடியின் இளவரசர் வாழ்க! உத்தரர் வாழ்க!”
அவன் உடல் மெய்ப்பு கொண்டது. மெய்யாகவே வாழ்த்து! இதுவரை அவன் கேட்டறிந்த வாழ்த்துக்களில் இருந்த கேலி இதில் இல்லை. அவன் கண்கள் நீர்கொண்டன. கைகளை வீசியபடி நடந்து படிகளில் ஏறி அரசமேடைக்குச் சென்றான். அங்கே அமர்ந்தபின்னர்தான் எதிர்மேடையில் அரசரும் குங்கரும் அமைச்சரும் அமர்ந்திருப்பதைக் கண்டான். கிரந்திகனை நோக்கி கூவ முயன்றபோதுதான் அவன் சென்றுவிட்டதை உணர்ந்தான். வாழ்த்தொலிகள் மெல்ல அவிந்தன. அவன் அப்பால் தனி மேடையில் அமர்ந்திருந்த கீசகனை அரைக்கணம் நோக்கி உடல் விதிர்க்க கண்விலக்கிக் கொண்டான். அவன் உடல் வியர்வையுடன் சேர்ந்து குளிர்ந்து சிலிர்த்தது.
புரவியாட்டுக்கள் முடிந்த பின்னர் வில்வித்தை விளையாட்டு. அதன்பின் வேல் எறிதல். நுண்ணிய இலக்குகளை வீழ்த்தினர் விராட வீரர்கள். அவன் சிறுமேடையில் பிருகந்நளையும் முக்தனும் இருப்பதைக் கண்டான். பெருமூச்சுவிட்டபடி உடலை தளர்த்திக்கொண்டான். இங்குதான் இருக்கிறார்கள் குங்கனின் தெய்வங்கள். அவன் தலையை அவர்கள்தான் காக்கவேண்டும். மீண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டான். என்ன நிகழ்ந்தது? காரகன் அவனைத் தூக்கியபடி எங்கெங்கோ சென்றது. பெருவெள்ளத்தில் மரத்தடியைப் பற்றியபடி செல்பவன்போல அவன் அமர்ந்திருந்தான்.
வாய்வழிய அவன் துயில்கொண்டிருப்பதை பேரொலி கேட்டு விழித்தபோதுதான் உணர்ந்தான். “காலகேயர்கள்! காலகேயர்கள்!” என்ற குரல் ஒலித்தது. அவன் அங்குமிங்கும் நோக்கிவிட்டு அவர்களைக் கண்டதும் அறியாது எழுந்து உடனே அமர்ந்தான். இருபது பெருமல்லர்கள் தோள்புடைக்க கைகளை விரித்தபடி அரங்குக்குள் நுழைந்தனர். அவர்களில் ஏழுவர் கரிய உடல் கொண்டிருந்தார்கள். பன்னிருவர் வெண்ணிறம். ஒருவர் மஞ்சள் நிறம். முன்னால் வந்த காலகேயன் கையில் காகக்கொடியை பிடித்திருந்தான். சூழ்ந்திருந்த நிஷாதர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர்.
“காகக்கொடியா?” என்று அவன் ஏவலனிடம் கேட்டான். “ஆம் அரசே, அவர்களுக்கும் கலிதான் தெய்வம்.” அவர்களின் கொடியில் இரட்டைக்காகங்கள் இருந்தன. “இவர்களுடன் யார் மற்போரிடுவது?” என்றான் உத்தரன். “அவர்களே போரிட்டுக்கொள்ள வேண்டியதுதான்… நம்மவர் அருகே செல்லவே முடியாது” என்றான் ஏவலன். முரசுகள் முழங்கின. கொம்புகள் பிளிறி அடங்கியதும் அறிவிப்புநிமித்திகன் காலகேயர்கள் தங்கள் மல்திறனைக் காட்டப்போவதாக அறிவித்தான்.
அவர்கள் இரண்டிரண்டு பேராக மற்போரிட்டனர். மண்ணில் கைகளை உரசிக்கொண்டு ஒருவரோடொருவர் மோதி அறைந்து பின்னி இறுகி அதிர்ந்து விலகி தூக்கி அறைந்து கைவிரித்து வெற்றிக்கூச்சலிட்டனர். தசைகள் அலையடிப்பதுபோலத் தோன்றியது. “கொல்! கொல்! கொல்!” என்று நிஷாதர்கள் கூச்சலிட்டு எம்பிக்குதித்தனர். கோல்களைத் தூக்கி வீசிப்பிடித்தனர். நெஞ்சிலறைந்து தொண்டை புடைக்க ஆர்ப்பரித்தனர்.
முரசொலி எழுந்தது. காலகேயர்கள் தலைவணங்கி நிரைவகுத்து பின்னால் சென்று இரு பிரிவாக அகல நடுவே ஜீமுதன் தோன்றினான். காலகேயர்கள் நிஷாதர்களைவிட இருமடங்கு பெரிதாக இருந்தனர். ஜீமுதன் அவர்களைவிட தலை ஓங்கியிருந்தான். “அரக்கன்!” என்றான் உத்தரன். “ஆம் அரசே, மானுடரில் இவனுக்கிணையான உருவம் தோன்றியதில்லை என்கிறார்கள்” என்றான் ஏவலன்.
காலகேயனாகிய ஜீமுதன் கன்னங்கரிய உருவம் கொண்டிருந்தான். அவன் உடலுக்கு நோக்க பாதங்களும் கால்களும் சிறியவை. இடையும் நெஞ்சுடன் ஒப்பிட சிறிதாகவே இருந்தது. தோள்கள் தசைகள் புடைத்து பெருத்து அகன்றிருந்தன. தோளெலும்புகள் மாபெரும் எருமை ஒன்றின் கொம்புகளென விரிந்திருக்க நடுவே மூச்சுக்குழி கரிய பளபளப்புடன் அசைந்தது. காளைத்திமில் என புயத்தசை புடைத்த கைகள். நரம்புகள் முடிச்சுக்களுடன் பருத்துப்பரவியிருந்த கழுத்துக்குமேல் தலை சிறிதாக இருந்தது. முடியே இல்லை. மூக்கு பரந்து சிறிய உதடுகளுக்குமேல் இரு துளைகளாக தெரிந்தது. கண்கள் பன்றிகளைப்போல சிறிதாக கொழுப்புக்குள் புதைந்து தெரிந்தன.
அவன் அசைவுகளும் தலைசரித்த நோக்கும் பார்வையற்றவன் என எண்ணச்செய்தன. “பார்வைக் குறைவுண்டா?” என்றான் உத்தரன். “இல்லை இளவரசே, அது ஒருவகை குருட்டுத்தனம். நினைவறிந்த நாள்முதலே உண்பதும் உடல்வளர்ப்பதும் கொல்வதும் மட்டுமே அவனறிந்தவை எனத் தோன்றுகிறது. கொலைவிலங்கு அது.” உத்தரன் அத்தனை அச்சங்களும் விலக உள்ளக்கிளர்ச்சியுடன் அவன் தசைகளை நோக்கி இருக்கை முனையில் அமர்ந்திருந்தான். “ஆக, இப்படியும் மானுட உடல் அமைய முடியும். இவ்வண்ணமும் ஒருவன் எழுந்து பிரம்மனை ஏறிட்டு நோக்கமுடியும்.”
ஜீமுதன் தன் தோள்களை அறைந்துகொண்ட ஓசை களம் முழுக்க கேட்டது. ஒவ்வொருவரும் அந்த அறையின் ஓசையில் திடுக்கிட்டவர்களாக குரலொடுங்க அவனுடைய காலடியோசைகளே ஒலிக்குமளவுக்கு அமைதி உருவானது. யானையின் உறுமலோசையை எழுப்பியபடி அவன் களத்தை சுற்றிவந்தான். அங்கே கிடந்த பெரிய கல் ஒன்றைத் தூக்கி அப்பால் வீசினான். அது நிலத்தை அறைந்த அதிர்வை உத்தரன் உணர்ந்தான். இரு கைகளையும் அறைந்துகொண்டபடி சென்று அரசமேடையை அணுகி ஒரே உதையில் மூங்கில் தடுப்பை வீழ்த்தி மறுபக்கம் சென்று அங்கே இடநிலைக்காப்பென நின்ற அரசத்தேரை தூக்கி தலைக்குமேல் சுழற்றி வீசினான். அருகே நின்ற புரவி திகைத்துச் சுற்றிவர பாய்ந்து அதன் இரு கால்களைப்பற்றித் தூக்கி தோளிலிட்டுச் சுழற்றி அப்பால் வீசினான். களத்தில் வந்து விழுந்த புரவி கனைத்தபடி எழுந்து திகைத்து வால்சுழற்றி சுற்றி ஓடியது. அதன் சிறுநீரும் சாணியும் கலந்து தெறித்த மணம் எழுந்தது.
“நான் அறைகூவுகிறேன். கலியின் குடியாகிய நான் காகக்கொடி கொண்டவனாகிய நான் இந்த அரசகுடிகளையும் அரசனையும் நோக்கி முடியறைகூவல் விடுக்கிறேன்” என்று ஜீமுதன் கூவினான். அந்த ஓசையால் திரளோர் மெய்ப்பு கொள்வதை மெல்லிய அசைவே காட்டியது. “எழுக! என்னுடன் மோதுவோர் களம்புகுக! இல்லையேல் அரசரும் அவர் குருதியினரும் எழுக!” என்று ஜீமுதன் நெஞ்சறைந்து முழக்கமிட்டான். “இல்லையென்றால் இக்களத்திலேயே முடி கழற்றி வைத்துவிட்டு விலகிச் செல்க! என் அடிபணிந்து உயிர்க்கொடை பெறுக!”
உத்தரன் அந்த அறைகூவல் தனக்குரியதென்பதை அப்போது முற்றாக மறந்துவிட்டிருந்தான். அந்தத் தருணத்திலிருந்த விசை அவனை உளம்கொந்தளிக்கச் செய்தது. கதைகளில் அறிந்த ஒன்று வாழ்க்கையில் கண்முன் நிகழ்கிறது, அவன் அதை நோக்கிக்கொண்டிருக்கிறான். ஒருகணம் அவன் தன் கற்பனையில் “நான் எதிர்கொள்கிறேன் உன்னை! உன் தலையை உடைத்து களத்தை குருதியாட்டுகிறேன்” என்று கூவியபடி எழுந்தான். அந்த ஊன்குன்றிடம் மற்போரிட்டு அவனை தூக்கிச் சுழற்றி மண்ணில் அறைந்தான். சூழ்ந்திருந்த நிஷாதர்களின் வெறிகொண்ட வெற்றி முழக்கத்தை நோக்கி கைவிரித்து நின்றான். அவர்கள் கண்களின் நீரொளியை, பற்களின் வெண்சரடுகளை, கையசைவுகளின் அலையை கண்டான். அந்தக் கற்பனையின் எழுச்சியில் அவன் மெய்ப்புகொண்டு கண்ணீர் மல்கினான்.
விராடர் மதுமயக்கில் இருந்தார் என்பதை அவன் உணர்ந்தான். ஆகவே என்ன நிகழ்கிறதென்பதை அவர் உணரவில்லை. மகளிர் மேடையில் அரசியும் இளவரசியும் எழுந்து நின்றுவிட்டனர். விராடர் அமைச்சரிடம் ஏதோ கேட்க அவர் விளக்கினார். “அஞ்சுகிறீர்களா? இன்னொருமுறை… மூன்றுமுறை அறைகூவியபின் நானே அரசமேடைமேல் ஏறி உங்கள் மணிமுடியை எடுத்துக்கொள்வேன்!” என்றான் ஜீமுதன். விராடர் திடீரென்று புரிந்துகொண்டு அறியாமல் எழுந்துவிட்டார்.
“ஆ! அரசரே எழுந்துவிட்டார்! அரசரே மல்லுக்கு வருகிறார்” என்றான் ஜீமுதன். “கீழ்மகனே, உன்னிடம் அரசன் தோள்கோக்க வேண்டியதில்லை. உன்னை எதிர்கொள்ள இங்கே வீரர்கள் உண்டு” என்று விராடர் சொன்னார். “எங்கே நம் மல்லர்கள்? நம் மல்லர்கள் எழட்டும்!” மல்லர்நிரைகளில் எந்த அசைவும் எழவில்லை. “நம் மல்லர்களில் எவருமில்லையா?” என்று விராடர் கூவ நிஷாதர்களில் பலர் சிரிக்கத் தொடங்கினர். “நான் ஆணையிடுகிறேன்… அடேய் சக்ரா, சக்ரா, செல்! சென்று இவனிடம் மோது!” என்றார் விராடர்.
முதன்மை மல்லனாகிய சக்ரன் மெல்ல அசைந்து களத்திற்கு வந்தான். ஜீமுதன் “வா வா” என்று கையசைத்து வெண்பற்களைக் காட்டிச் சிரித்தபடி அவனை நோக்கி சென்றான். சக்ரனின் விழிகளின் நீர்ப்படலத்தை காணமுடிந்தது. அவன் தரையில் கையை உரசிக்கொண்டு கிருத நிலையில் கைகளை நீட்டியபடி நின்றான். ஜீமுதன் இளித்தபடியே இயல்பாக அணுகி ஒற்றைக்கையை நீட்டி சக்ரனின் கையைப் பிடித்து இழுத்து காற்றில் சுழற்றி தன் தொடைமேல் வைத்து அறைந்து முதுகெலும்பை முறித்தான். எலும்பு ஒடியும் ஒலி கேட்டு உத்தரன் கூசி காதுகளை பொத்திக்கொண்டான். சக்ரன் இருமுறை துடித்து கைகால்கள் இழுத்துக்கொண்டான். அவனை நிலத்திலிட்டுவிட்டு அரசரை நோக்கி இளித்தபடி “அடுத்து எவர்? அடுத்த மல்லர் எவர்?” என்றான். “உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன். இருவராக வருக… வேண்டாம் மூவர். வேண்டாம்… எத்தனைபேர் வேண்டுமென்றாலும் சேர்ந்து வருக… ஆம், உங்கள் மல்லர்கூட்டமே சேர்ந்து வரட்டும்…” என்றான் ஜீமுதன். விராடர் “கொல்லுங்கள்… அவனை என் கண்ணெதிரே கொன்று போடுங்கள்” என்று கூவினார். மல்லர்கள் தயங்கி நிற்க “களமிறங்காத மல்லர்களை கழுவிலேற்றுவேன். அவர்களின் குடும்பங்களுக்கான அரசகொடைகளை நிறுத்துவேன்” என்று கூச்சலிட்டபடி படிகளில் இறங்கினார். பன்னிரு மல்லர்கள் பாய்ந்து களத்தில் இறங்கினர். அவர்களின் ஊழ் அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்திருந்தது.
அவர்கள் வராகோத்தூதம் அஸ்வோத்தூதம் கஜோத்தூதம் சிம்ஹோத்தூதம் போன்ற நிலைகளில் கைகளை நீட்டியபடி அவனை அணுகினர். அவர்களில் ஒருவன் “உம்” என்றதும் ஒரே கணத்தில் அவனை நோக்கி பாய்ந்தனர். யானைமேல் காகங்கள் மொய்ப்பதுபோலிருந்தது அக்காட்சி.
ஜீமுதன் மிக எளிதாக அவர்களைப் பிடித்து கொன்றான். ஒரே அடியில் ஒருவனின் மண்டையோட்டை உடைத்து மூக்குவழியாகவும் செவிகள் வழியாகவும் வெண்மூளை வழியச்செய்தான். ஒருவனைத் தூக்கி நிலத்திலிட்டு ஓங்கி வயிற்றில் உதைத்தபோது வாய்வழியாகவும் குதத்தினூடாகவும் குடல் பிதுங்கி வந்தது. ஒற்றைக்கைகளையோ கால்களையோ பிடித்துச் சுழற்றி மண்ணில் அறைந்தான். இரு தலைகளைச் சேர்த்து அறைந்து உடைத்தான். ஒருவனை இரண்டாகக் கிழித்தெறிந்தான். பின்னர் திரும்பி விராடரை நோக்கி இரு கைகளையும் விரித்து வெறிக்கூச்சலிட்டான்.