‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59

58. நிலைபேறு

flowerசூதரங்கு மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது. அரண்மனையிலிருந்த நீள்வட்டமான உணவுக்கூடத்தின் நடுவே சிறிய மரமேடை போடப்பட்டு அதில் சூதுக்களம் ஒருக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் தாழ்வான இருக்கைகள். சூதுக்காய்களை வைப்பதற்கான பீடங்கள் வலக்கை அருகே. இடக்கையருகே ஆட்டத்துணைவனுக்கான பீடம். அதை நோக்குபவர்கள் அமர்வதற்காக வட்டமாக பீடங்கள் போடப்பட்டிருந்தன. நான்கு வாயில்களிலும் காவலர் நின்றனர்.

காலையிலேயே ஆட்டம் குறிக்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு வெளியே களமுற்றத்தில் மிகப் பெரிய ஆட்டக்களம் ஒன்று உள்ளிருப்பதன் அதே வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் யானை, குதிரை, தேர், காலாள் கருக்களைப்போல முகமூடி அணிந்த வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அக்களமுற்றத்திற்கு நேர் மேலே உயர்ந்த மேடையில் முரசுடன் நிமித்திகன் ஒருவன் அமர்ந்திருந்தான். உள்ளே சூதுக்களத்தை நன்கு நோக்கியபடி நிரைகளின் பின்னாலிருந்த மரமேடையில் அமர்ந்திருந்த நிமித்திகன் ஆட்டத்திற்கு ஏற்ப தன் குறுமுரசை முழக்கினான்.

அவ்வொலியைக் கேட்டு காய்நகர்வை புரிந்துகொண்டு வெளியே மேடையில் இருந்த நிமித்திகன் தன் முரசை முழக்கினான். அதைக் கேட்டு நாற்களக் காய்கள் என நின்றிருந்த வீரர்கள் களங்களில் நகர்ந்தனர். உள்ளே நிகழும் ஆட்டம் வெளியே பேருருவில் தெரிந்தது. அதை நோக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சூழ்ந்திருந்தார்கள். அரண்மனை உப்பரிகைகளிலும் இடைநாழிமுகப்புகளிலும் பெண்கள் செறிந்து நின்று அந்த ஆட்டத்தை நோக்கினர். கோட்டையின் காவல்மாடங்களிலும் நடைபாதைகளிலும் நெருக்கி நின்று படைவீரர்கள் அந்த ஆடலைக் கண்டார்கள். அயல்நாட்டு வணிகரும் சூதர்களும் அக்களத்தை முகங்களால் வேலியிட்டு வளைத்திருந்தனர்.

நகரெங்கும் அவ்வாடல் ஒலியென சென்று சேர்ந்துகொண்டிருந்தது. திண்ணைகளில் கூடியிருந்த முதியவர்கள் தங்கள் முன் சுண்ணத்தாலும் கரியாலும் வரையப்பட்டிருந்த சிறிய நாற்களக் கட்டங்களில் கற்களையும் விதைகளையும் சோழிகளையும் பரப்பி வைத்து ஓசைக்கேற்ப காய்நகர்த்தி அந்த ஆடலை நிகழ்த்தினர். அடுமனைத்திண்ணைகளில், கொல்லைப்பக்க கொட்டில்களில், அகத்தளங்களில் பெண்கள் கூடியமர்ந்து அந்த ஆடலை தாங்கள் நிகழ்த்தினர். ஓசைகேட்டு தங்கள் உள்ளங்களை ஆடுகளமாக ஆக்கிக்கொண்டனர் பல்லாயிரவர்.

விஜயபுரி நகரமே தெரிவதும் தெரியாததுமான ஆடுகளங்களின் பெருந்தொகையாக ஆகியது. சுழியின் மையமென அச்சூதுகளத்தின் நடுவே மென்மரப்பட்டையில் பட்டுத்துணியை ஒட்டி அமைத்த அந்தச் சிறிய ஆடுகளம் அமைந்திருந்தது. அதைச் சூழ்ந்து இரவெல்லாம் காவலர் நின்றிருந்தனர். அதை அமைக்கும் சிற்பிகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. புலரியில்தான் பணி முடிந்தது.

முந்தைய இரவிலேயே நாற்களத்தில் நிகரிப்போர் நிகழ்த்த புஷ்கரன் ஒப்புக்கொண்ட செய்தியை குடித்தலைவர்கள் வந்து சொன்னார்கள். இகடர் அதைச் சொல்லும்போதே அழுதுவிட்டார். “இது நிகழுமென நான் எண்ணவில்லை. என் குடிகள் போரிட்டு அழியாமல் காத்தேன் என்று நான் என் மைந்தரிடம் சொல்லமுடியும். இனி என் குடிமூத்தாருக்கு அஞ்சாமல் கூசாமல் பலியளித்து வழிபடமுடியும்.” பணிதர் “உங்கள் இருவரில் எவர் வென்றாலும் நன்றே. இன்றைய பூசல் இப்போதே தீரும். பூசல் தீர்ந்த பின்னர் அனைத்தையும் அமர்ந்து பேசிக்கொள்ளமுடியும்” என்றார்.

மெல்ல மெல்ல நளன் முகம் தெளிந்தான். புன்னகையுடன் “ஆம், அவன் தேடுவது ஒரு களப்போரை என்றால் அது நிகழ்க!” என்றான். “நம் குடிகளுக்கும் போர் ஒன்று தேவையாகிறது. துலா இப்போதே ஆடி நிலைகொள்ளுமென்றால் நன்று.” நாகசேனர் மட்டும் ஐயமும் குழப்பமும் கொண்டவராக இருந்தார். குடித்தலைவர்கள் சென்றபின் நளன் “நீங்கள் அச்சம் கொள்கிறீர்கள், அல்லவா?” என்று நாகசேனரிடம் கேட்டான்.

“ஆம், அரசே. என் உள்ளம் நிலைகொள்ளவில்லை” என்றார் நாகசேனர். “எண்ணி நோக்கினால் போர் என்பது நேரடியானது. அதில் கரவு என ஏதுமில்லை. இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களும் போரிடுகின்றன. ஆகவே அது தெய்வங்கள் அமைத்தது. சூது அப்படி அல்ல. அது இப்புடவியை நோக்கி மானுடன் அமைத்தது. புடவியின் சிறு போலி அது. புடவிச்செயலின் முடிவிலாத தற்செயல்பெருக்கை இக்களத்திலும் நிகழ்த்தி அதனுடன் ஆடுகிறான் மானுடன். போரில் மானுடன் தன் எதிரியை அறைகூவுகிறான். சூதில் தெய்வங்களை அறைகூவுகிறான்.”

நளன் “இப்படி எண்ணியபடியே செல்லமுடியும். ஆனால் உடன்பிறந்தார் குருதி பிழைத்தது என்பதைப்போல ஆறுதல் அளிப்பது பிறிதேதுமில்லை” என்றான். “ஆம், நான் அதையே எண்ணினேன். ஆனால் பராசரரின் புராணமாலிகையை, பலநூறு குடிக்கதைகளை இங்கே அமர்ந்து எண்ணிக்கொண்டேன். எந்தப் பூசலாவது சூதில் முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளதா? இல்லை, அரசே. சூது எப்போதுமே பூசலை ஒத்திப்போடுகிறது. சூதில் நிகழ்ந்தவை அப்பூசலை பெருக்குகின்றன. சூது நிகழ்ந்த பூசல்கள் அனைத்துமே மேலும் பெரிய போரில்தான் முடிந்துள்ளன. ஒருமுறைகூட விலக்கில்லை. ஆகவே இது ஒரு மாறா நெறியென்றே தோன்றுகிறது.”

நளன் புன்னகையுடன் “எதுவானாலும் இனிமேல் எண்ணிப் பயனில்லை. அனைத்தும் முடிவாகிவிட்டன. நாளை காலை கதிரெழுந்த இரண்டாம் ஜாமத்தில் ஆட்டம் நிகழ்கிறது. ஏழு களம் என முடிவாகியிருக்கிறது” என்றான். “இனி ஒன்றும் செய்யமுடியாதென்றில்லை. நான் இதை முறிக்கிறேன்… சிறுமை செய்யப்பட்டதாக சினம்கொண்டு வஞ்சினம் உரைத்து கிளம்பிச்செல்லுங்கள். ஒரு நேரடிப் போரே நிகழட்டும்.”

“ஆம், சில ஆயிரம்பேர் இறப்பார்கள்” என்று நாகசேனர் தொடர்ந்தார். “அதில் பழுதில்லை. போர்களில் பல்லாயிரம் நிஷாதர் முன்னரும் இறந்துள்ளனர். போரில் வீரர் இறப்பது நன்று, வீரருக்குரிய விண்ணுலகை அவர்கள் அடைகிறார்கள். நேரடியான குருதிப்போரே நேர்மையானது. அப்போருடன் அனைத்தும் முற்றாக முடிவுக்கு வந்துவிடும்… அத்தனை போர்களும் அதைவிட பெரிய போர் நிகழாமல் தடுப்பவைதான்.”

நளன் “இல்லை, இப்போது களம்முறித்து நான் சென்றால் என் உடன்பிறந்தானை நான் வேண்டுமென்றே கொன்றேன், என் குடியை அழித்தேன் என்னும் பழியே எஞ்சும். இக்களமாடலில் நானே வெல்வேன். ஐயமே வேண்டியதில்லை, நாகசேனரே. இது நமக்கு சற்று பொழுதிடை அளிக்கும். இந்திரபுரியின் வேள்விநிறைவும் முடிசூட்டும் நன்முறையில் நிறைவுறும். அதன்பின் நாம் புஷ்கரனை அழைத்து பேசுவோம். தோற்று நிற்பவனுக்கு விஜயபுரியை அளித்து இங்கு தனிமுடிசூடச் செய்வோம்” என்றான்.

நாகசேனர் “போரில் கொடைபோல முழுமடம் பிறிதில்லை. நல்லியல்பென்பது வெற்றிக்குமேல் நின்றிருக்காவிட்டால் சிறுமைபடுத்தப்படும். நேர்ப்போர், மாற்றில்லாத வெற்றி. வேறேதும் இங்கே பொருளுள்ளவை அல்ல” என்றார். நளன் “நான் முடிவுசெய்துவிட்டேன், நாகசேனரே” என்றபின் எழுந்து “பிந்திவிட்டது. துயில்கொள்ளவேண்டும். நாளை புதிதென கண் துலங்கவேண்டும்” என்றான். நாகசேனர் “நன்று நிகழ்க!” என்றார்.

அன்றிரவு நாகசேனர் துயிலவில்லை. நிகழ்வன குறித்து கருணாகரருக்கு நீண்ட ஓலைகள் இரண்டை அனுப்பிவிட்டு இரவெல்லாம் நிலையழிந்தவராக உலவிக்கொண்டிருந்தார். சூது அறிவிப்பை முழங்கிச்சொல்லும் முரசொலிகள் கேட்டன. நகர்மக்களின் ஒட்டுமொத்தமான பேச்சொலி எழுந்து கார்வையாக இருண்ட வானில் நெடுநேரம் நின்றது. பின்னிரவில் நகர் அமைதிகொண்டது. கூகைகளின் குழறல்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. நாழிகை மணிகளின் ஓசை. காவல்மாற்றத்தின் ஆணைகள். பின்னர் புலரிமுரசு. அவர் அவ்வோசையைக் கேட்டு திடுக்கிட்டார்.

எழுந்து சென்று விடிவெள்ளியை நோக்கவேண்டும் என விழைந்தார். ஆனால் சற்றுநேரம் அவ்வெண்ணங்களுடன் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து சென்று விடிவெள்ளியை நோக்கினார். கூரிய வேல்முனைபோல் அது மின்னிக்கொண்டிருந்தது. நகரம் உயிர்பெறத் தொடங்கி சற்று நேரத்திலேயே ஓசைகள் நிறைந்து அலைசூழ்ந்தன. அவர் பெருமூச்சுடன் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். அவை எண்ணற்கரிய மாபெரும் சூதுக்களமொன்றின் காய்கள் என்ற பராசரரின் வரி நினைவிலெழுந்தது.

அக்கணமே அடுத்த வரி நினைவிலெழ அவர் துருவனை தேடிச்சென்று விழிதொட்டார், “நிலைபெயராமையே அந்தண அறம் எனப்படுகிறது. பிற எதன்பொருட்டும். தன்பொருட்டும். தன் மூதாதையர், தெய்வங்கள் பொருட்டும். நிலைக்கோளென அவனுடன் இருக்கவேண்டியவை வேதநெறிகள் மட்டுமே.” பன்னிரு அகவையில் அவர் வேதக்கல்வி முடித்து குருநிலையிலிருந்து கிளம்பும்போது ஆசிரியர் புராணமாலிகாவின் அந்த வரியை அவரிடம் சொன்னார்.

துருவனின் மின்னொளி மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்வது போலிருந்தது. மொத்த வானமும் விண்மீன் பெருக்கும் அதை உந்தித்தள்ள அது அசைவில்லாமல் அமைந்திருந்தது. அனைத்து நுண்சொற்களுடனும் இயல்பாக சென்று இணையும் ஓங்காரம் அது. நோக்கிக்கொண்டிருக்கையில் மெல்ல உள்ளம் தெளிவுகொண்டது. நீள்மூச்சுடன் திரும்பி ஏவலனிடம் “அரசரை எழுப்புக!” என்றார்.

நளன் அணிகொண்டு ஒருங்கி வந்தபோது அவர் தலைவணங்கி “அழைப்பு வரும் என்றார்கள், அரசே. காத்திருப்போம்” என்றார். நளனின் முகம் தெளிவுகொண்டிருந்தது. “அனைத்தும் நன்றெனவே முடியும், அமைச்சரே” என்றான். “இக்காலை எனக்கு அதை தெளிவுறக் காட்டுகிறது.” நாகசேனர் “அனைத்தும் முடிவில் நன்றே” என்றார்.

அவர்களை அழைத்துச்செல்ல அவைச்செயலர் பிரவீரர் வந்தார். அவர் முகமனுரைத்ததும் வணங்கியதும் மிகையாக ஒத்திகைநோக்கப்பட்ட நாடகம்போல் இருந்தன. நளன் நாகசேனர் உடன்வர நடந்து இடைநாழிகளினூடாக சூதரங்கு நோக்கி சென்றான். திரும்பி நாகசேனரிடம் “முகத்தை அப்படி வைத்துக்கொள்ளவேண்டாம், அமைச்சரே. நாம் அஞ்சுகிறோம் என எண்ணுவார்கள்” என்றான். நாகசேனர் புன்னகை செய்தார்.

ஆனால் சூதரங்கின் வாயில் கண்ணுக்குப்பட்டதும் நளனின் உள்ளம் திடுக்கிட்டது. படபடப்பை மறைத்துக்கொள்ள முகத்தை அங்குமிங்கும் திருப்பி அச்சூழலை நோக்கினான். ஏன் அந்தப் பதற்றம் என அவனுக்கு புரியவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவருமே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் விழிகளை திருப்பிக்கொண்டு வேறு பேச்சுகளை நடித்தனர்.

அவனை எதிர்கொண்டழைத்த அமைச்சர் பத்ரர் தலைவணங்கி முகமன் உரைத்தார். “இந்திரபுரியின் அரசருக்கு விஜயபுரியின் சூதரங்குக்கு நல்வரவு” என நிமித்திகன் அவைமேடையில் அறிவித்ததும் மெல்லிய வாழ்த்தொலி முழக்கம் எழுந்தது. அவனை அழைத்துச்சென்று ஒரு பீடத்தில் அமரச்செய்தார் அமைச்சர். நளனருகே அமர்ந்த நாகசேனர் “இங்கே ஆட்டத்துணைவருக்கு என ஒரு பீடம் போடப்பட்டுள்ளது” என்றார். “ஆம்” என்றான் நளன். “நம் காவலர்தலைவனை அழைத்துவரும்படி சொல்கிறேன். நான் அந்தணன், சூதாடக் கூடாது.” நளன் தலையசைத்தான். அவர் எழுந்து சென்றார்.

அவன் ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக நெஞ்சிடிப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். களத்தை சீரமைத்தனர். காய்களை கொண்டுவந்து வைத்தனர். இருக்கைகளில் புலித்தோல் விரித்தனர். அவை முன்னரே நிறைந்திருந்தது. அனைவரும் ஒருவரோடொருவர் பேசியபடியும் மெல்ல சிரித்தபடியும் இருந்தனர். அவர்கள் அனைவருமே போர் தவிர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். ஆகவே சூதில் மேலும் ஆர்வம் கொண்டவர்களாக தெரிந்தனர். ஏவலர் அவர்களுக்குரிய இன்கடுநீரும் வாய்மணங்கள் நிறைந்த தாலங்களுமாக நடுவே உலவினர்.

வெளியே மங்கல இசை ஒலித்தது. நிமித்திகன் அவைக்குள் நுழைந்து புஷ்கரன் அவை நுழைவதை அறிவித்தான். தொடர்ந்து காகக்கொடியுடன் கொடிவீரன் உள்ளே வந்தான். இசைச்சூதரும் தாலமேந்திய சேடியரும் நுழைய புஷ்கரன் அருகே ரிஷபன் தொடர அரசணிக்கோலத்தில் நடந்துவந்தான். புன்னகையுடன் அவையை வணங்கியபடி நுழைந்து தனக்கான பீடத்தில் அமர்ந்தான். நளனை நோக்கவோ வணங்கவோ இல்லை. நாகசேனர் காவலர்தலைவனை அழைத்துவந்தார். அவன் நளன் அருகே அமர்ந்தான். நாகசேனரின் முகம் தெளிவுகொண்டிருப்பதை நளன் கண்டான். அவர் எதை உணர்ந்தார் என வியந்துகொண்டான்.

நிமித்திகன் அவைமேடையேறி தன் சிறிய கொம்பை முழக்கினான். முகமனுரைகளும் வாழ்த்துக்களும் கூறியபின் அறிவிப்பை கூவினான். “விஜயபுரியின் தலைவரும் காளகக்குடித் தோன்றலுமாகிய இளவரசர் புஷ்கரருக்கும் அவருடைய தமையனும் இந்திரபுரியின் அரசரும் சபரகுடிவழி வந்தவருமாகிய அரசர் நளனுக்குமிடையே குடிப்பூசல் எழுந்துள்ளது. முறைப்படி குடிமூத்தாரால் ஏற்கப்பட்ட தனக்கே நிஷதமண்ணின் ஆட்சியும் கொடியும் முடியும் உரிமைப்பட்டது என்றும் மூத்தவராகிய நளன் அரியணை ஒழியவேண்டும் என்றும் இளவரசர் புஷ்கரர் கோருகிறார். அதை மூத்தவர் எதிர்ப்பதனால் போர் அறைகூவப்பட்டது.”

“குடிப்பூசலில் உடன்பிறந்தோர் குருதி சிந்தலாகாதென்று எண்ணிய குலமூத்தார் எடுத்த முடிவை ஏற்று இப்பூசலை நிகரிப்போர் வழியாக தீர்த்துக்கொள்ள இரு சாராரும் ஒப்புதல்கொண்டுள்ளனர். நிகரிப்போருக்குரியது நாற்களம் என்பதனால் இன்று இந்த அவையில் இளவரசரும் மூத்தவரும் நேருக்கு நேர் களமாடி வெற்றிதோல்வியை எதிர்கொள்ளவிருக்கிறார்கள். இந்த அவை அதை ஏற்றருள வேண்டுமென்று அரசர் சார்பில் கோருகிறேன்.” அவை கோல்களைத் தூக்கி ஒப்புதல் ஒலி எழுப்பியது. “இளவரசரையும் மூத்தவரையும் ஆடுகளத்தில் அமரவேண்டுமென்று அழைக்கிறோம்” என்றான் நிமித்திகன்.

புஷ்கரன் வணங்கியபடி சென்று பீடத்தில் அமர்ந்தான். அமைச்சர் தலைவணங்கி அழைக்க நளன் எழுந்து அவையை வணங்கியபடி சென்று களத்தருகே இடப்பட்ட பீடத்தில் அமர்ந்தான். “ஆட்டத்துணைவர்கள் அமர்க!” என்றான் நிமித்திகன். புஷ்கரன் அருகே ரிஷபன் வந்து அமர்ந்தான். அவனை நோக்கிய முதற்கணம் நளன் நெஞ்சதிர்ந்து நோக்கை விலக்கிக்கொண்டான். அவனருகே காவலர்தலைவன் வந்து அமர்ந்தான். “தொல்நெறிகளின்படி இந்தக் களமாடல் நிகழும். இதில் வெல்பவர் போரில் வென்றதாக தோற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை இங்கு இருவரும் அனல்தொட்டு ஆணையுரைக்கட்டும்” என்றான் நிமித்திகன்.

இருவரிடமும் எரியும் அகல்விளக்கு கொண்டுவரப்பட்டது. தழல்மேல் கைநீட்டி “ஆம், நான் முழுதேற்கிறேன். ஆணை ஆணை ஆணை” என்றான் புஷ்கரன். நளனும் அவ்வாறே ஆணை ஏற்றான். “ஆட்டம் தொடங்கட்டும். ஆடல் காண வந்துள்ள தெய்வங்களும் மூதாதையரும் மகிழ்வு கொள்க!” என்றான் நிமித்திகன். ஆட்டம் தொடங்குவதை அறிவிக்கும் முகமாக நிமித்திகன் தன் இடையிலிருந்த கொம்பை மும்முறை முழங்கினான். முரசு முழங்க அதை ஏற்று வெளியே பெருமுரசுகள் ஒலித்தன.

“நீங்கள் முதலில், மூத்தவரே” என்றான் புஷ்கரன். தன் முதற்கருமேல் கை வைத்த நளன் திரும்பி ரிஷபனை பார்த்தான். முதற்கணத்தில் தலையில் இரு கொம்புகளுடன் எருதுமுகம் கொண்டு அவன் அமர்ந்திருப்பதாகத் தோன்றி மெய்ப்பு கொண்டான். அக்கணமே புஷ்கரனும் ரிஷபனை திரும்பி நோக்கினான். “காய் நகர்த்துக, அரசே” என்று ரிஷபன் சொன்னான்.

flowerதமயந்தியின் அணியறைக்குள் சேடி வந்து வணங்கி “பேரமைச்சர் கருணாகரர்” என்றாள். தமயந்தி வியப்புடன் “இங்கா? நான் வேள்விச்சாலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றாள். அவள் “அவர் பதற்றத்துடனிருக்கிறார்” என்றாள். தமயந்தி புருவம் சுளித்து எண்ணிநோக்கியபின் “சரி, அவரை வரச்சொல். ஸ்ரீதரரிடம் சென்று நான் அவையேக சற்று பிந்தும், அதுவரை வேறேதேனும் சடங்குகள் நிகழவேண்டும் என்று சொல்” என்றாள். சேடி சென்றதும் பிற அணிச்சேடியர் செல்லலாம் என கையசைத்தாள்.

கருணாகரர் உள்ளே வந்து வணங்கியதுமே அவளுக்கு தீயசெய்தி என்று தெரிந்துவிட்டது. அமர்க என்று அவள் கைகாட்ட அவர் அமர்ந்தார். “வேள்விநிகழ்வு முடிய இன்னும் பொழுதிருக்கிறது அல்லவா?” என்றாள். “ஆம், அரசி. உச்சிப்பொழுதுக்குள் முடிந்துவிடும். நீங்கள் சென்று அமர்ந்து முடித்துவைக்கவேண்டும். அந்தணர்கொடைகளை உங்கள் கைகளால் நிகழ்த்தவேண்டும். அதன்பின்னர் அவைநிகழ்வுகள்.” அவள் அவர் முகத்தை கூர்ந்து நோக்கிவிட்டு “அரசர் இன்னும் வந்துசேரவில்லை அல்லவா?” என்றாள்.

“நீங்கள் ஒற்றர்கள் வழியாக அறிந்திருப்பீர்கள், அரசி. அரசர் விஜயபுரிக்குத்தான் சென்றார்.” தமயந்தி “ஆம்” என்றாள். “சற்றுமுன் பறவைச்செய்தி வந்தது. அரசரும் இளவரசரும் பிறரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.” அவள் அவர் முகத்தை கூர்ந்து நோக்கி “நல்ல செய்தி அல்லவா?” என்றாள். “இல்லை, அரசி” என்றார் கருணாகரர். பின்னர் சொல்தேடித் தொகுத்து “ஊழின் ஆடலென்றே கொள்க! பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “சொல்க!” என்றாள்.

“நிகரிப்போர் என்று ஒரு சூதாட்டம் நிகழ்ந்தது. அரசரும் இளவரசரும் ஆடினர்” என்றார் கருணாகரர். “அதில் அரசர் தோற்றார்.” தமயந்தி சில கணங்கள் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள். பின் மெல்ல கலைந்து “அவ்வளவுதானே? அரசு இளவரசருக்கு. நான் முடிசூட முடியாது. வேறென்ன?” என்றாள். “இல்லை, அரசி. அரசர் முற்றாகவே தோற்றிருக்கிறார்” என்றார் கருணாகரர். அவள் “முற்றாக என்றால்?” என்றாள். “முழுமுற்றாக. அரசரென்றும் நிஷதக்குடிமகன் என்றும் அவர் கொண்டுள்ள அனைத்தையும் துறந்திருக்கிறார்” என்றார் கருணாகரர்.

தமயந்தி அதை முழுக்க புரிந்துகொள்ளாததுபோலத் தோன்றியது. அவள் விழிகள் வெறுமையாக இருந்தன. கருணாகரர் “அரசி, இந்த ஆட்டத்தை முழுமையாகவே ரிஷபன் வழிநடத்தியிருக்கிறான். முதலில் நிஷதகுடியின் முடியுரிமையை வைத்து ஆடுவதாகவே இருந்தது. நாற்களம் முன் அமர்ந்த பின்னர் ரிஷபன் புஷ்கரர் தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடுவதாக அறிவித்தான். அரசர் என்ன எண்ணினாரென்று தெரியவில்லை. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்” என்றார். தமயந்தி அதே நோக்குடன் இருந்தாள். “அவருக்கும் வேறுவழியில்லை. அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டிருந்தன போலும். அவையில் அமர்வது வரைதான் அவர் முடிவெடுக்க முடியும்” என்றார் கருணாகரர்.

“முழுக்கத் தோற்பது என்றால்?” என்றாள் தமயந்தி. அதுவரை சொல்லப்பட்டவை அவள் உள்ளத்திற்குள் செல்லவில்லை என்று தோன்றியது. “அவருடைய அனைத்து உடைமைகளும் உரிமைகளும் இல்லாமலாகும்” என்றார் கருணாகரர். “அவருக்கு நிஷதகுடியின் ஆதரவோ அரசுகளின் காப்போ இனி இல்லை.” தமயந்தி பொருளில்லாமல் தலையசைத்தாள். அவள் தான் சொல்வதை புரிந்துகொண்டிருக்கிறாளா என்று ஐயம்கொண்ட கருணாகரர் “அரசி, நிஷதபுரியில் உங்களை அரசி என நிலைநிறுத்தியது பேரரசர் நளன் கொண்ட உரிமைகளே. அவையனைத்தும் இல்லாமலாகிவிட்டன” என்றார்.

அவள் தொடப்பட்ட நீர்ப்பாவை என அலைவுகொண்டு விழித்து “இனி நான் அரசி அல்ல, அல்லவா?” என்றாள். “ஆம்” என்றார் கருணாகரர். “பேரரசர் அரசிழக்கையிலேயே நீங்களும் அதை இழந்துவிடுகிறீர்கள். அவர் நிஷதர் என்னும் நிலையை இழக்கிறார். குடியிழந்தவர்கள் நான்கு வர்ணங்களிலிருந்தும் விலகி ஐந்தாவது நிலைக்கு சென்று சேர்கிறார்கள்.” அவள் அப்போதுதான் சினம்கொண்டாள். முகம் சிவக்க மூச்சு ஒலிக்க “இது எந்த நூல்நெறி?” என்றாள். “குடியுரிமையை எவரும் வைத்தாடுவதில்லை, அரசி” என்றார் கருணாகரர்.

“ஆனால் உங்கள் குடியுரிமையை நீங்கள் மீட்டுக்கொள்ளலாம்” என்று கருணாகரர் சொன்னார். “நளமன்னருக்குத் துணைவியாக நீங்கள் இருக்கும்வரை நீங்களும் உங்கள் மைந்தரும் ஐந்தாம் வர்ணத்தவரே. அந்த உறவை நீங்கள் வெட்டிக்கொள்ளலாம். மங்கலநாணையும் கணையாழியையும் கழற்றிவிட்டு அனல் சான்றாக்கி சான்றோர் எழுவர் முன் அந்தணர் வேதம் சொல்ல ஒழிந்தது உறவு என்றீர்கள் என்றால் நீங்கள் விதர்ப்ப அரசரின் மகளாக மீண்டுசெல்ல முடியும். இளவரசியென்றாக முடியும். ஷத்ரிய குடியினருக்கு மணவிலக்கும் மறுமணமும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவீர்கள்.”

“அம்முடிவை நான் எடுப்பேன் என நினைக்கிறீர்களா?” என்றாள் தமயந்தி. “அரசி, அம்முடிவை நீங்கள் எடுக்காவிட்டால் அனைத்து இழிவுகளுக்கும் ஆளாக நேரிடும். வர்ணமற்றவர் விலங்குகளைப்போல. ஆற்றலுள்ளோர் எவரும் அடிமைகொள்ளலாம். உடைமையென வைத்திருக்கலாம், விலைகூறி விற்கலாம். எவ்வகையிலும் தண்டிக்கலாம், கொல்லலாம். அவர்களுக்கு எவ்வகையான குடியுரிமைகளும் இல்லை. உடைமையுரிமையும் வாழ்வுரிமையும்கூட இல்லை.” தமயந்தி ஆம் என்று தலையசைத்தாள்.

“வேண்டுமென்றே உங்களை சிறுமை செய்ய புஷ்கரர் தயங்கமாட்டார். அவர் ஒழிந்தாலும் நம் பகையரசர்களும் அவர்களின் ஒற்றர்களும் உறுதியாக அதற்கு முன்வருவார்கள். அறிந்தே நம்மை நாம் இழிநரகத்திற்கு இட்டெறிவது அது. வேண்டியதில்லை… இது ஓர் அரசியல்சூழ்ச்சி என்றே இருக்கட்டும். இன்று இது அறப்பிழையெனப் படலாம். அலர் சில எழலாம். நாம் ஒருநாள் வெல்வோம். அதன்பின் இதற்குரிய நெறிநிலைகளை சொல்லி நிறுத்துவோம்” என்றார் கருணாகரர்.

அவர் முகம் மலர்ந்தது, குரல் வலுக்கொண்டது. “இங்கு வருகையிலேயே இதைத்தான் எண்ணிக்கொண்டு வந்தேன். ஒன்றும் தட்டுப்படவில்லை. பேசிவந்தபோது அறியாது இந்த வழி திறந்துகொண்டது. இவ்வெண்ணம் தோன்றியது தெய்வச்செயலே.” அவர் மேலும் ஊக்கம் கொண்டு “ஒன்று செய்யலாம். அரசரை நீங்கள் மணவிலக்கு செய்த மறுகணமே நீங்கள் விதர்ப்ப இளவரசி ஆகிறீர்கள். இங்குள்ள விதர்ப்ப வீரர்கள் உங்கள் கணையாழிக்கு கட்டுப்பட்டாகவேண்டும். அவர்களிடம் அரசரை அடிமையென பிடிக்கச் சொல்லுங்கள். உங்கள் அரசுக்குறி ஒன்றை அவர் கழுத்தில் அணிவியுங்கள். அக்கணமே அவர் உங்களுக்கு அடிமைப்பொருளென்றாவார். அதன்பின் பிறர் அவரை அடிமைகொள்ள வேண்டுமென்றால் உங்களிடம் பொருதியாகவேண்டும். அரசருக்கும் அதுவே காப்பு” என்றார்.

அவர் மேலும் உளவிரைவு கொண்டு எழுந்து கைகளை விரித்து “வர்ணமில்லாதவர்களை நான்காம் வர்ணத்தவர் பெண்கொடுத்தோ உடன்பிறப்பென குருதிச்சடங்கு ஆற்றியோ தங்கள் குடிக்குள் எடுத்துக்கொள்ளலாம். அவரை விதர்ப்பத்துக்கு கொண்டுசென்று அங்குள்ள குடிகள் ஒன்றில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் அங்கே படைத்தலைமை கொள்ளமுடியும். ஒருநாள் படையுடன் வந்து இந்திரபுரியை வென்று மீண்டும் முடிசூடிக்கொள்ளவும் முடியும்… ஆம் அரசி, இது ஒன்றே வழி” என்று கூவினார்.

தமயந்தி “கருணாகரரே, அமைச்சர்கள் அரசனுக்கு நல்லாசிரியர்களும் வைதிகர்களும் ஆவர் என்பது தொல்நெறி. ஆசிரியராக நான் உங்களிடம் கேட்பது இது. ஒரு மனைவி எதன்பொருட்டு கணவனை உதறிச்செல்லலாம்?” என்றாள். கருணாகரர் “நான்…” என்று குரல் தடுமாறினார். “நான் அரசியலுரைக்கும் ஸ்மிருதிகளை கேட்கவில்லை, அதை நானே கற்றுள்ளேன். வேதம்திகழும் நா கொண்ட அந்தணர் உரைக்கவேண்டியது அழியா ஸ்ருதிகளின் சொல்லை” என்றாள் தமயந்தி.

கருணாகரர் விழிமூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். நெற்றியில் நரம்புகள் புடைத்து அசைந்தன. விழிதிறவாமலேயே எவருடனோ என மெல்லிய குரலில் சொன்னார் “தொல்நெறிகளின்படி வேதம்பழித்தல், மைந்தர்க்கு ஊறுசெய்தல், நீத்தாரைக் கைவிடுதல், மூத்தார் சொல்மீறல், குடிப்பழி கொள்ளுதல், அரசவஞ்சம் இழைத்தல், தன் கற்பை சான்றோரவையில் இகழ்தல் என்னும் ஏழு செயல்களின்பொருட்டு துணைவி கணவனை கைவிடலாம். அவற்றின் முதன்மை வரிசையும் அவ்வாறே. அவ்வாறு கைவிட்ட மனைவி இல்லப்பழி கொண்டவள் ஆகமாட்டாள். அவள் அவனில் பெற்ற மைந்தர் இயல்பாக அவனுக்கு நீர்க்கடன் கொண்டவர்கள். அவள் விழைந்தால் அதையும் மறுக்கலாம்” என்றார்.

“ஆனால் எதன்பொருட்டும் கணவனை கைவிடாதவளே கற்பரசி எனப்படுவாள்” என்றார் கருணாகரர். “தெய்வங்களே அஞ்சும் பெரும்பழி சூடியவன் ஆயினும் கணவனுடன் இருந்து அவனைக் காப்பதன்பொருட்டு அப்பெண் அத்தெய்வங்களாலேயே தூயோள் என வணங்கப்படுவாள். அவளுக்கு எப்பழியும் சூழாது. அவள் அவனுக்கு அன்னையென்றே அமையக் கடன்கொண்டவள். அன்னை மைந்தனை கைவிடும் தருணம் ஒன்றை தெய்வங்கள் படைக்கவில்லை.”

“அறிக, தெய்வமெழுந்து வந்து பலிகொண்ட அரக்கர்களும் அசுரர்களும் இறுதிக் கணம்வரை உடனிருந்த மனையாட்டியரையே கொண்டிருந்தனர். மண்டோதரி சீதைக்கு நிகரானவள் என்கின்றன தொல்கதைகள்… பெரும்பழிகொண்ட கணவர்களைக் கொன்ற தெய்வங்கள் அவர்களை வணங்கி விண்ணேற்றிக்கொண்டன” என்றார் கருணாகரர்.

“ஏனென்றால் மண்ணில் எந்த மானுடனும் முற்றிலும் துணையற்றவனாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணினர் மூதாதையர். பெண்ணுக்கு அவள் கருவிலெழும் மைந்தரின் துணை என்றும் உண்டு. தான் அளித்த முலைப்பாலாலேயே அவள் மண்ணில் வேர்கொள்வாள். நீத்தபின் விண்ணில் இடம் பெறுவாள். ஆணுக்கு பெண் இல்லையேல் இப்புவியில் ஏதுமில்லை, விண்ணேறும் வழிகளுமில்லை.”

கருணாகரர் கைகூப்பியபடி கண்விழித்தார். “அறம் இது. நாமறியாத வழிகொண்டது அது. அறிந்த முன்னோரின் சொற்களைப் பணிந்து ஒழுகினாலொழிய நாம் அறியவும் இயலாதது. முற்றறிய முழுதும் துறந்தவர்க்கே இயலும்” என்றார். “பெரும்பாவிகளிடமும் கருணைகொண்டு நெறிகளை அமைத்தவர்களின் உளவிரிவை எண்ணும்போது தந்தையரே, தெய்வங்களே, இப்புவியில்தான் நீங்கள் பிறந்தீர்களா, இங்குதான் எளியேனும் வாழ்கிறேனா என நான் விழிநீர் உகுத்ததுண்டு. சென்றவர்களின் அடிகளை இத்தருணத்தில் சென்னி சூடுகிறேன்.”

தமயந்தி “நான் செய்யவேண்டியதென்ன என்று சொல்லிவிட்டீர், கருணாகரரே” என்றாள். “வேள்விச்சாலைக்குச் சென்று செய்தியைச் சொல்லி வேள்வி நிறுத்தத்தை அறிவியுங்கள். அவை கூட்டி அனைத்தையும் விளக்குங்கள். அரசர் எப்போது இங்கு வருகிறார்?” கருணாகரர் விழிகளைத் தாழ்த்தி “கிளம்பிவிட்டனர். நாளைமறுநாள் புலர்காலையில்” என்றார். தமயந்தி தலையசைத்தபின் எழுந்து கொண்டாள். இயல்பாக தன் ஆடையை அள்ளி சீரமைத்து குழல்நீவி அமைத்தபின் உள்ளறை நோக்கிசென்றாள்.

முந்தைய கட்டுரைஇன்று கோவையில்..
அடுத்த கட்டுரைASYMPTOTE பரிசு -கடிதங்கள்