இடங்கை இலக்கியம் -கடிதங்கள்

yavanika

ஜெ,

நேற்று நண்பர்சந்திப்பில் உங்கள் இடங்கை இலக்கியம் பற்றி பேச்சுவந்தது. முழுக்க முழுக்க ஒரே விஷயத்தைச் சுற்றிச்சுற்றியே வந்தது பேச்சு. இடதுசாரி எழுத்து என்று சொல்லாமல் ஏன் இடங்கை இலக்கியம் என்று சொல்லவேண்டும்? இதில் அரசியல் உள்ளது- இவ்வளவுதான். அப்புறம் சில விடுபடல்களைப் பற்றிய ஒற்றைவரிகள்.ஆச்சரியமாக இருந்தது.

மனோகர்

***

அன்புள்ள மனோ,

இத்தகைய ஒரு முன்வரைவை யார் போட்டிருந்தாலும் அதில் விடுபடல்கள் இருக்கும். மறுபரிசீலனைகள் இருக்கும். அவற்றை விவாதம் மூலம் செழுமைசெய்தே ஒரு துல்லியமான சித்திரத்தை அளிக்கமுடியும். அத்தனைபேரையும் வாசித்தவர்கள் எத்தனைபேர் இருக்கமுடியும்? இடதுசாரிகளிலேயே பலர் என்னில் கால்வாசிகூட வாசித்திருக்கமாட்டார்கள். நான் இதே வேலையாக கால்நூற்றாண்டை கடந்திருக்கிறேன். [அதோடு பெரும்பாலானவர்கள் எனக்கு நூலை அனுப்பியும் விடுகிறார்கள்] அவர்களில் எவர் பட்டியல்போட்டாலும் பிற மார்க்சிய கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவார்கள். ஆகவே ஓர் அன்னியர்தான் ஓரளவேனும் பட்டியலிடமுடியும். ஆகவே இந்த முதல் தொகுப்புரை என்னால் எழுதப்பட்டுள்ளது

இடங்கை இலக்கியம் என்றெல்லாம் பெயர் மாற்றப்படவில்லை. இடதுசாரி இலக்கியம் என்றே கட்டுரை முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கட்டுரைகளுக்குத் தலைப்பு வைக்கும்போது கவனத்தை ஈர்க்கும்படி, நினைவில்நிற்கும்படி தலைப்புவைப்பது இலக்கியவழக்கம். அத்தகைய நூற்றுக்கணக்கான தலைப்புக்களை என் கட்டுரைகளில் காணலாம். அலங்காரமாக, அல்லது சற்றுவேடிக்கையாக, அல்லது ஏதேனும் வரலாற்றுக்குறிப்பை நினைவுறுத்தும்படியாக. இது மூன்றாவது வகை தலைப்பு

அது வித்தியாசமாக ஒலிப்பதனாலும், வரலாற்றுக்குறிப்பு ஒன்று இருப்பதனாலும்  கொஞ்சம் இலக்கியரசனையும் வாசிப்பும் உள்ள எவருக்கும் அத்தலைப்பு. சுவாரசியமான ஒரு சொல்லாட்சியாகவே தோன்றியது.இந்த எளிய விஷயத்தைக்கூட உணராதவர்கள் என்னதான் இலக்கியம் வாசிக்கிறார்கள்?

இவர்கள் ஏன் இப்படி தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்? வேறு எதையும் பேசுவதற்கான வாசிப்புத்தகுதி அல்லது அறிவுத்தகுதி இல்லை என்பதனாலேயே. இது ஒருவகை புறணிப் பேச்சு. இதுதான் இவர்களால் இயலும். சூழலின் துரதிருஷ்டம் இது

ஜெ

***

அன்புள்ள ஜெ,

இடங்கை இலக்கியம் கட்டுரையில் சமகாலத்தின் முக்கியமான இடதுசாரிக் கவிஞரான நீங்கள் யவனிகா ஸ்ரீராமை குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது. முக்கியமான கவிஞர். ஆனால் கட்சிச்சார்பு இல்லாதவர். கட்டுகள் அற்ற வாழ்க்கை. ஆகவே அவரை இடதுசாரிகள் கூறுவதில்லை. நன்றி

மாரிராஜ்

***

அன்புள்ள மாரிராஜ்

ஏதேனும் ஒரு தருணத்தில் விரிவாக எழுதவேண்டும். பார்ப்போம்

ஜெ

***

அன்புள்ள ஜெ

இடதுசாரி இலக்கியம் பற்றிய கட்டுரைக்கு வலது இடது ஒட்டுமொத்த எதிர்வினையும் இந்த லட்சணத்தில் இருக்கிறதே. உங்களுக்குச் சோர்வாக இருப்பதில்லையா?

அருண்

***

அன்புள்ள அருண்

இல்லை. இவ்வளவுதான் எதிர்பார்ப்பேன்

ஜெ

***
இடங்கை இலக்கியம்
இடதிலக்கியம் கடிதங்கள் 2
இடதிலக்கியம் – கடிதங்கள்
சிறிய மனங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55
அடுத்த கட்டுரைஇச்சையின் சிற்றோடைகள்