பக்திப்பெருக்கு

speaker

ஞாயிற்றுக்கிழமை காலையின் சோதனைகளில் ஒன்று சொர்க்கத்தைக் கூவி அழைக்கும் குரல்கள். திடுக்கிட்டு அரைத்தூக்கத்தில் எழுந்து அமர்ந்தால் நியாயத் தீர்ப்புநாள்தான் வந்துவிட்டதோ என்ற பீதி ஏற்படும். எழுதிக்குவித்த எழுத்துக்கு என்னை லூசிபரிடம் ஏசுவே அழைத்துக்கொடுத்து “கூட்டிட்டு ஓடீரு கேட்டியாலே?” என்றுதானே சொல்வார்.

எங்கள் வீட்டைச்சூழ்ந்து இருபதுக்கும் மேற்பட்ட கிறித்தவ தேவாலயங்கள். ஆகவே ஏசுவைப்பற்றியும் பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவைப்பற்றியும் நான் எண்ணிக்கொண்டே இருக்கிறேன். எண்ணாமல் விடமாட்டார்கள். ஒவ்வொரு தேவாலயமும் மணிக்கொருதரம் பைபிள் வசனத்தை மணியோசையுடன் சொல்கின்றனர். இதற்கென்றே ஒரு ‘ஆப்’ உள்ளது.

இனிய, ஜெபத்தால் கனத்த பெண்குரல். “நேரம் மணி பன்னிரண்டு, உங்கள் தாய்தந்தையரை கனம்பண்ணுங்கள்”. உச்சிப்பொழுதில் அதற்கு பெற்றோர் ஓய்வாக அகப்படவேண்டுமே. “நேரம் மாலை ஆறுமணி, எதை தின்போம் எதைக்குடிப்போம் என்று எண்ணாதேயுங்கள்” மிகச்சரியாக நம் உணர்வுகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நள்ளிரவு ஒன்றரை மணி “என் தாய் என்னை பாவத்தில் கருத்தரித்தாள்” வாஸ்தவம்.

ஒரு தேவாலயம் சொல்வதைப் பிறிதொரு தேவாலய ஓசை மறைக்கலாகாதென்பதனால் இரண்டிரண்டு நிமிடம் தள்ளிவைத்திருப்பார்கள். ஆகவே இறுதி தேவாலயத்தின் வசனம் அரைமணிநேரம் கழிந்துதான் வரும். அப்பாடா என மூச்சுவிட்டால் அடுத்த மணி அடிக்கும். ஆகவே இருபத்துநான்கு மணிநேரமும் நம்முள் பைபிள் வசனம் மேலே ஓடிக்கொண்டிருக்க அன்றாடச்செயல்கள் எல்லாம் ஆழ்மன ஓட்டமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. வங்கிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை ஃப்ராய்ட் வந்துதான் தோண்டி எடுக்கவேண்டும் என்றால் என்ன செய்ய? அந்தக்காலத்தில் பத்மினி அக்கா குளிப்பதை ஒளிந்திருந்து பார்த்ததும் உடன்கிளம்பி வருமென்றால் எவ்வளவு கொடுமை அது?

ஞாயிறன்று விடிகாலையில் ”ஏசப்பா!” என அலறல். யாரோ வழுக்கி விழுந்துவிட்டதாக கனவு. அப்பென்டிக்ஸ் நடுநடுங்க பாய்ந்து எழுந்தால் “ஏசுவே நீ ஒரு சூப்பர் ஸ்டார்! ஏசுவே நீ ஒரு லக்கி ஸ்டார்” என்று கட்டைக்குரல் கானம். அதிலும் புத்தாண்டு அன்று ”ஏசப்பா இரக்கமே இல்லையா? என்னப்பா இது? ஒரு இது வேண்டாமா?” என்றவகையிலான ஒரு கண்ணீர்க் கதறலுடன்தான் கண்விழித்தேன். “புத்தாண்டுக்கான மன்றாட்டு”

இங்குள்ள கிறித்தவ ஆன்மீகம் யதார்த்தவாதம் சார்ந்தது. எந்த மேஜிக்கல் ரியலிசமும் கிடையாது. ஏசுவிடமும் யகோவாவிடமும் பிதாவிடமும் ஏன் பரிசுத்த ஆவியிடமுமே கூட மிக எளிமையான கோரிக்கைகள்தான். பெரும்பாலானவை வங்கிமேலாளர், அலுவலக மேலதிகாரி, உள்ளூர் தாசில்தார் ஆகியோரிடம் முன்வைக்க வேண்டிய மன்றாட்டுக்கள் “ஏசுவே காசு கொடும் ஏசுவே. வீடு கொடும் ஏசுவே. ஏசுவே கார் வாங்க லோன் கொடும் கர்த்தாவே, ஏசுவே பரிச்சையிலே பாஸ்போடும் ஏசுவே” உருக்கமான ஜெபம்.

”குடுத்திடும் ஏசுவே. குடுத்திடும் ஏசுவே. குடுக்காம இருந்திராதியும் ஏசுவே. ஏசுவே ப்ளீஸ் ஏசுவே” மனிதகுமாரன் கிருஷ்ணனாக மாறி கூரைமேல் ஏறிநின்றுகொண்டு சிரிப்புடன் “மாட்டேன் போ” என்று சொல்வதுபோல ஒரு மனப்பிராந்தி. ”ஏசுவே அவளுக்குக் குடுத்தீரே. எனக்கு குடுக்க மாட்டீரா? ஏசுவே குடும் ஏசுவே” சங்கப்புலவன் மட்டுமே இந்த அளவுக்கு வேண்டிக் கேட்டிருக்க முடியும்.

ஞாயிற்றுக்கிழமை பாடல்கள் தனிவகை. ஃபாதர் பெர்க்மான்ஸ் கிறித்தவ பாடல் இலக்கியத்தில் பெரும்புரட்சியாளர். “மக்களுக்கான பாடல்கள்” அவருக்குப்பின் அவரை முன்மாதிரியாகக் கொண்டு எழுந்தன. பழையகாலத்தில் நான் கேட்டு நெக்குருகிய “அய்யய்யா நான் வந்தேன்” பாடலை சமீபத்தில் கேட்டபோது “என்ன இது ரொம்ப கவிதையா இருக்கே” என நானே கொஞ்சம் மனம்சுளித்தேன்.

இன்றெல்லாம் பாடல்கள் ஏசுவுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் நோக்கம் கொண்டவை. “ஏசுவே நீர் நல்லவர். ஏசுவே நீர் வல்லவர். ஏசுவே நீர் எல்லாம் அறிந்தவர். உம்மால் எதுவும் முடியும். நீர் நினைத்தால் முடியாதது இல்லை.” அதோடு அவருடைய பொறுப்புகளையும் கடமைகளையும் நினைவூட்டுபவை. “ஏசுவே நீர் எங்கள் தகப்பன். ஏசுவே நீர் எங்கள் மேய்ப்பன்” இவ்வளவு சொல்லியும் ஏசு அடாமத்தாக இருக்கிறார் என்றால் அது மிகவும் தவறு. பைபிள் பாஷையின் அர்த்த விபரீதங்கள். “ஆவியானவரே, ஆவியானவரே” என உச்சக்குரல் வீரிடல். ’வெயிலில் நின்னுட்டாராமா?’ என்று சின்னப்பிள்ளைகள் ஐயுறவாய்ப்பு.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுவரை ஏசு. பின் ஓர் அரிய நிம்மதி. ஆனால் வியாழன் பின்னிரவு வரைதான். வெள்ளிக்கிழமை அம்மன்கள் கிளம்பிவிடுவார்கள். புற்றீசல்! அம்மன்பாடல்களில் இப்போதெல்லாம் அனுராதா ஸ்ரீராம்தான். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியபோது எனக்கெல்லாம் கிராமத்தில் மஞ்சளாடை கட்டியபெண் ஒருத்தி கையில் வேப்பிலையுடன் ஆடுவதுபோல ஒரு மனச்சித்திரம். அனுராதா ஸ்ரீராம் கேட்கும்போது ஜீன்ஸ் அணிந்த பெண் கையில் செல்பேசியுடன் அம்மன் வந்து ஆடுவதுபோல ஒரு நவீனத்துவ உணர்வு. ‘ஸொல்லடி ஸொல்லடி ஸிவஸக்தி!”

அம்மன் பாடல்களை எழுதுவது மிக எளிது. அம்மனின் பெயர்களை அடுக்கினால் போதும். ”மாரியம்மா காளியம்மா கூளியம்மா நீலியம்மா பேச்சியம்மா ஆச்சியம்மா” அம்மன்களின் ஊர்களையே பாட்டாக பாடியிருக்கிறார்கள். ”சமயபுரத்திலே மாரியம்மா, சாமிவிளையிலே முத்தாலம்மா, கொல்லங்குடியிலே கருப்பாயியம்மா மதுரையிலே மீனாட்சியம்மா.. ”

மேற்கொண்டு முழுவிலாசத்துடன் எழுதலாம். “அருப்புக்கோட்டை ஆசாரிமார்தெரு நாலாம்நம்பர் கதவிலக்கத்திலே கருமாரியம்மா, அழகியபாண்டிபுரம் அசம்புரோட்டிலே ஆறாம்சந்திலே அற்புதவள்ளியம்மா! உலகளக்கும் தாயே, இப்படி தெருத்தெருவாய் நீயே!” பட்டியலை வைத்துக்கொண்டு கிளம்ப வாகாக இருக்கும்.

நான் என் பட்டியலில் “திருவாரூரிலே சரோஜாம்மா பார்வதிபுரத்திலே அருண்மொழியம்மா” இரண்டு அம்மன்களையும் சேர்த்திருக்கிறேன். முன்னது உக்கிரதெய்வம். பின்னது அன்னலட்சுமி.

Sep 18, 2021

முந்தைய கட்டுரைவீரபத்திரர்
அடுத்த கட்டுரைதீயின் தொடக்கம்