தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச்சித்திரம்

C9Wpss1UMAA4fn6

ஜெ

இந்த படம் வாட்ஸப்பில் வந்தது. முதற்கணம் ஒரு பெரிய பெருமிதம் எழுந்தது. நானெல்லாம் சரித்திரத்தைச் சரியாகப் படிக்காதவன். ஆனால் பின்னர் இப்படி இல்லையே என்றும் தோன்றியது. இந்தவகையான பிரச்சாரங்களின் உண்மை என்ன?

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெயக்குமார்

முதலில் இந்தவகையான பிரச்சாரங்களின் உளவியல் என்ன என்றுதான் பார்க்க வேண்டும். இரண்டு அம்சங்கள் இதிலுள்ளன. ஒன்று பரிபூர்ணமான அறியாமை. மிக எளிய அளவில் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்கூட கண்டுகொள்ளக் கூடியவற்றை அறியாமலிருப்பது.

அதைவிட முக்கியமானது, தாழ்வுணர்ச்சி. இவ்வகையில் பொய்யான செய்திகளை பரப்புவதும், பார்த்துப் புல்லரிப்பதும் உள்ளூர உறைந்த தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடுகள். எவரேனும் ஏதேனும் நம்மைப் பற்றிப் பாராட்டிச் சொல்லிவிட்டால் அவருடைய தகுதி என்ன, அச்செய்தி என்ன என்றெல்லாம் யோசிக்காமல் புல்லரிப்பது தாழ்வுணர்ச்சியின் உச்ச வெளிப்பாடு.

இதே போல எவ்வளவு செய்திகள்! கொரியாவின் அரசி ஒரு தமிழ்ப்பெண். எகிப்திய மொழி உண்மையில் தமிழ்தான், உலகிலேயே மிகப்பெரிய கோயில் தஞ்சைபெரியகோயில், நான்குலட்சம் வருடங்களுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாடு கண்டெடுப்பு என வந்துகொண்டே இருக்கின்றன. இதை நம்பி பல அரசியல்கட்சிகளே இன்று செயல்பட்டுவருகின்றன. படித்த இளைஞர்கள்கூட இதை நம்புகிறார்கள்.

கீழடியை வைத்து நான் பார்க்கநேர்ந்த செய்திகளை தமிழரல்லாதவர் பார்க்கலாகாது என பதறுகிறேன். இணையம் அழியாதது என்கிறார்கள். இந்தக் கேனத்தனங்களை நாளை நம் வாரிசுகள் பார்ப்பார்களே என்று நினைத்து கசப்பு கொள்கிறேன்.

இவ்வகையான செய்திகளைப் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். மூடநம்பிக்கை நிறைந்த செய்திகளே வாட்ஸ்அப்பில் அதிகமும் பரவுகின்றன. அது இந்தியக்குணம். ஆனால் அதில் நாம் மட்டுமே இந்தவகையான வரலாற்றுப் பீலாக்களுக்காக ஏங்குகிறோம்

கேரளத்தில் அதிகமும் வருவன ‘போராட்ட’ அறைகூவலுள்ள செய்திகள். பெரும்பாலும் பொய்யானவை. கோயில்நிலங்களை, சர்ச் நிலங்களை, மசூதி நிலங்களை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிவிட்டார்கள், மக்களே போராடுங்கள்; முல்லைப்பெரியாறு உடைகிறது, மக்களே ஓடுங்கள் என்றவகைச் செய்திகள். அவை 90 சதவீதம் பொய். கர்நாடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன். பெரும்பாலும் மதம்சம்பந்தமான மூடநம்பிக்கைகள். பல்வேறு ஸ்தலங்களின், மனிதக்கடவுள்களின் அற்புதங்கள். ஆந்திராவிலும் அப்படியே.

தமிழில் நமக்கு இரண்டாவது வகை மூடநம்பிக்கைகளுக்குக் குறைவில்லை. ஆனால் அதே அளவுக்கு இந்த வகையான வரலாற்று மூடநம்பிக்கைகள். நம் இணையத்தில் பொதுத்தளத்தில் தமிழக, இந்திய வரலாறு குறித்துப்பேசப்படும் அனைத்துமே முற்றிலும் பொய் என துணிந்து சொல்லிவிடலாம். தேடிப்போனால் லட்சத்தில் ஒரு செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.

puli
புலிகேசியின் அவை

சரி, மேலே சொன்ன செய்திக்கு வருகிறேன். நமக்குத் தமிழ் வரலாறு கிடைக்கத் தொடங்கும் காலத்தில், இந்தியவரலாறு குறைந்தபட்ச ஆதாரங்களுடன் எழுதத்தொடங்கப்படும் காலத்திலேயே, சங்ககாலம் எனச் சொல்லப்படும் நிலையற்ற அரசியல்குழப்பங்கள் கொண்ட காலத்திலேயே தமிழகம் களப்பிரர் ஆட்சிக்குள் வந்துவிட்டது.களப்பிரர் சாதவாகனப்பேரரசின்  சிற்றரசர்கள். கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் முந்நூறாண்டுக்காலம் அவர்கள் தமிழகத்தை ஆண்டனர்

அதன்பின்னர் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் தமிழகத்தை தோற்கடித்தனர். கிபி 620 வாக்கில் இரண்டாம் புலிகேசியும், பின்னர் 740 வாக்கில்  இரண்டாம் விக்ரமாதித்யனும் பல்லவர்களை தோற்கடித்து தமிழகத்தை கைப்பற்றினர். அதன் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் ஹொய்ச்சாளர்கள் மதுரைவரை கைப்பற்றி சிலகாலம் ஆண்டனர்

malik
மாலிக் காபூர்

1311 ல் மாலிக் காபூர் தலைமையில் சுல்தானியப்   மாலிகாபூரின் தலைமையில் தமிழகத்தை வென்று மதுரையை கைப்பற்றின.    மாலிக் காபூரின் தளபதிகள் சுல்தான்களாக பட்டம்சூட்டிக்கொண்டு மதுரையை ஆண்டனர். திருவனந்தபுரத்திலும் அவர்களின் படைத்தளபதி ஒருவனின் தலைமையில் நேரடியாக ஆட்சி நடந்தது.

1378ல் அவர்களிடமிருந்து மதுரையை கைப்பற்றி பாண்டியர்களுக்கு அளித்து கப்பம் கட்ட வைத்தவர் விஜயநகரப்பேரரசின் அரசர் குமார கம்பணர்.1528 ல் விஜயநகர தளபதி நாகமநாயக்கர் மதுரையை வென்றார். 1529 அவரது மகன் விஸ்வநாத நாயக்கர் பாண்டிய நாட்டை முழுக்க கைப்பற்றி நாயக்கப் பேரரசை அமைத்தார். . நடுவே முகமது பின் துக்ளக்கும், ஔரங்கசீபும் தங்கள் படைகளை அனுப்பி தமிழகத்தை வென்று நாயக்கர்களிடம் கப்பம் பெற்று சென்றனர்.

1736 ல் நாயக்க அரசி மீனாட்சி சந்தா சாகிப்பால் வெல்லப்படுவது வரை நாயக்க ஆட்சி மதுரையில் நீடித்தது. நாயக்கர்கள்தான் தமிழகத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறையைக் கொண்டுவந்தனர். பாளையக்காரர்கள் பெரும்பாலும் அனைவருமே தெலுங்குச்சாதியினர்.

1
ஷாஜி பான்ஸ்லே

தமிழகம் பலமுறை மராத்தியர்களால் கைப்பற்றப்பட்டது. சிவாஜியின் தந்தை ஷாஜி பான்ஸ்லே பீஜப்பூர் சுல்தானின் தளபதியாக 1638ல் தஞ்சைவரை வந்து கப்பம் பெற்றுச் சென்றார். அவருக்குப் பின்னால் சிவாஜி 1674ல் தஞ்சையைக் கைப்பற்றினார். தமிழகத்தின் பெரும்பகுதியை பிடித்து தன் தம்பி ஏகோஜியை தஞ்சை மன்னராக நியமித்துச்சென்றார். தஞ்சை மராட்டிய அரசு அவ்வாறு தொடக்கமிடப்பட்டது.

நடுவே தஞ்சை மராட்டியர் கையிலிருந்து சென்றது. மீண்டும் சிவாஜியின் மகன் சம்பாஜியால் கைப்பற்றப்பட்டது. செஞ்சியும் தஞ்சையும் மராட்டியரின் தலைமையகங்களாக இருந்தன. வெள்ளையர் ஆட்சி வரும்வரை தஞ்சை மராட்டிய ஆட்சியிலேயே இருந்தது. தஞ்சை மராட்டிய அரசகுலம் [சரபோஜிகள்] இன்றும் உள்ளனர்

1
சிவாஜி

1748 முதல் மெல்ல தமிழகம் பிரிட்டிஷ் ஆட்சிக்குக்கீழே சென்றது. ராபர்ட் கிளைவ் தமிழகத்தில் வெள்ளையர் வேரூன்றுவதற்கான அடித்தளத்தை அமைத்தார்.. அவர்கள் சென்னையை மையமாகக் கொண்டு ஆண்டாலும் பழைய பாளையக்காரர்களை ஜமீன்தார்களாக ஆக்கி ஆட்சியை ஒப்படைத்திருந்தனர். அவர்களில் தமிழர்கள் மிகச்சிலரே.

மௌரியப்பேரரசு முதல் பெரும்பாலான பேரரசுகளின் பொதுவான வரைபடத்தில் தமிழகம் காட்டப்படுவதில்லை. அதைப்பார்த்து சில அப்பாவிகள் உருவாக்கும் பீலாதான் தமிழகம் வெல்லப்படவில்லை என்பது. உண்மையில் தமிழகம் இங்கே படைகொண்டு வந்த அனைவராலும் வெல்லப்பட்டது. அனைவருக்கும் நாம் கப்பம் கட்டினோம். அல்லது அவர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டோம். ஆகவே நேரடியாக நாம் அவர்களின் ஆட்சிக்குக் கீழே செல்லவில்லை.

visva
விஸ்வநாத நாயக்கர் சிலை

[இதேபோல எந்தப் பேரரசின் வரைபடத்திலும் கேரளம் இருப்பதில்லை. ஏனென்றால் அது மலைகள் சூழ்ந்த வெறும் காடு அன்று. அங்கே வந்து நேரடியாக அட்சி செய்ய முடியாது. ஆனால் கேரளம் என்றுமே சுதந்திரமாக இருந்ததுமில்லை. அனைவருக்கும் கப்பம் கட்டி வாழ்ந்தனர். வரைபடத்தைக் கண்டு எந்த மலையாளியும் இப்படி ’வெல்ல முடியாத வீரம்’ என்றெல்லாம் தாண்டிக் குதித்ததை நான் கண்டதில்லை]

உதாரணமாக, விஜயநகர ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே குமார கம்பணனால் தமிழகம் கைப்பற்றப்பட்டது. கடைசிவரை அவர்கள் ஆட்சியிலேயெ இருந்தது. ஆனால் மதுரை நாயக்கப் பேரரசு தனியாகக் குறிக்கப்படுவதனால் விஜயநகரப் பேரரசின் வரைபடத்தில் தமிழகம் இருப்பதில்லை.

அதேபோல கில்ஜியின் பேரரசின் கீழ் மதுரை இருப்பதில்லை. ஆனால் மதுரையை கைப்பற்றிய கில்ஜியின் படைத்தலைவரான மாலிக் காபூர் தன் பிரதிநிதியை அங்கே ஆட்சியாளனாக ஆக்கிச்சென்றான். அவர்கள் மதுரை சுல்தான்களாக ஆனார்கள்.

ஏனென்றால் இந்தியப் பெருநிலத்தில் தமிழகம் மிகச்சிறிய பகுதி. அன்றைய தமிழகம் வளமானதோ பெரிய அளவில் வருமானம் உள்ளதோ அல்ல. அதை நேரடியாக ஆட்சி செய்யவேண்டிய அவசியமுண்டு என பெரிய அரசுகள் எண்ணவில்லை.

மாலிக் காபூர்  மதுரைக்குச் சுல்தானாக ஆக்கிவிட்டுச் சென்ற குஸ்ரவ்கான்  மாலிக் காபூரின் வாளை தூக்கிக்கொண்டு உடன்செல்லும் உதவியாளர். மதுரை நாயக்க அரசை அமைத்த  விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரர்.

தமிழகம்மீது வந்த படையெடுப்பாளர்களில் அனேகமாக எவருமே தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டதில்லை. அன்னியருடனான போரில் தமிழகம் அடைந்த வெற்றிகள் சாளுக்கியர்களையும் ஹொய்ச்சாளர்களையும் ஒருமுறை தோற்கடித்தது மட்டுமே.

clive
ராபர்ட் கிளைவ்

ப.சிங்காரம் அவருடைய ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் “தன்மேல் படைகொண்டு வந்த எவரையுமே தோற்கடித்துத் திருப்பியனுப்பாத பெருந்தன்மைகொண்டது தமிழர் வீரம்” என நக்கலடிக்கிறார்.

தமிழகம் தமிழகத்து அரசர்களால் ஆளப்பட்டது தெளிவாக வரலாறு உருவாகிவராத காலகட்டமாகிய சங்ககாலத்தில். ஒரு இருநூறாண்டுக்காலம். அப்போதே மௌரியர்கள் காஞ்சிவரை வந்ததற்குச் சான்று உள்ளது. அதன்பின் பல்லவர்களின் நூறாண்டு [பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்றாலும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்]

அதன்பின் பிற்காலச் சோழர்களின் இருநூறாண்டுக்காலம். [சோழர்களும் முழுக்க தமிழர்கள் அல்ல , அவர்களின் தாய்வழி வேர்கள் ஆந்திரத்தில் வெங்கி நாட்டிலேயே உள்ளன என்றாலும்] அதன்பின்  பிற்கால பாண்டியர்களின் ஐம்பதாண்டுக்காலம். அவ்வளவேதான். ஈராயிரம் ஆண்டுகளில் வெறும் ஐநூறாண்டுக்காலம் மட்டும்

இதை சுயஇழிவு கொள்வதற்காகச் சொல்லவில்லை. இந்த உண்மை நமக்கு உள்ளூரத் தெரியும் என்பதனால்தான் நாம் பொய்யான பெருமிதங்களை உருவாக்கிக் கொள்கிறோம் என்கிறேன். இதிலிருந்து விடுபட்டால் மட்டுமே நாம் மெய்யான பெருமிதங்களை அடையமுடியும்

*

வரலாற்றை இவ்வகையான அசட்டு இனம், மொழி, மதம் சார்ந்த பெருமிதங்கள் வழியாக அறிவது போல அபத்தம் வேறில்லை. அதை அறிவதற்கு வரலாறு இயங்கும் முறை, அதன் பொருளியல் அடிப்படைகள், புவியியல் அடிப்படைகள் மற்றும் பண்பாட்டுக் கூறுகளையே கருத்தில்கொள்ளவேண்டும்.

தமிழகம் எப்போதும் எளிதில் தாக்கி வெல்லக்கூடிய நிலமாக இருந்தது ஏன்? நிலவியல், பொருளியல், பண்பாட்டு விளக்கங்கள் அதற்குச் சாத்தியம்.

ஒன்று நிலவியல். அன்றைய தமிழகத்தில் காவேரிக்கரை தவிர எங்குமே பெரிய அளவில் வேளாண்மை இல்லை. கணிசமானநிலம் அரைப்பாலை [இன்று இத்தனை ஏரி, கால்வாய் பாசனத்திற்குப்பிறகும் இப்படி உள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள்] ஆகவே மக்கள்தொகை மிகக்குறைவு. அன்றைய படைகளின் ஆற்றல் என்பது முதன்மையாக எண்ணிக்கைதான்

இந்திய நிலப்பகுதியில் இரு நதிப்படுகைகளே வேளாண்மைக்கு உகந்தவை அன்று. சிந்து—கங்கைச் சமவெளி. கோதாவரி முதல் கிருஷ்ணா வரையிலான நிலம். இப்பகுதியில்தான் மக்கள்தொகைப்பெருக்கம் நிகழ்ந்தது. ஆகவே அங்கே பெரிய படைகள் உருவாயின. பேரரசுகள் பிறந்தன. அவை மக்கள்தொகை குறைவான நாடுகளை எளிதில் வென்றன

இரண்டு பொருளியல். பேரரசுகள் வளர்வதற்கு உகந்த பொருளியல்சூழல் என்ன என்று பார்க்கவேண்டும். கங்கையும் சிந்துவும் மகாநதியும் கிருஷ்ணாவும் கோதாவரியும் மிகப்பெரிய நதிகள். பெரிய கப்பல்கள் அவற்றில் சென்றிருக்கின்றன. அவற்றால் பெரிய துறைமுகங்கள் வளர்ந்தன. பொருளியல் உபரி உருவானது.

அது வலிமைவாய்ந்த பேரரசுகளை நிலைநிறுத்தியது. தமிழகத்தில் சங்ககாலத்தில் இச்சிறுநிலப்பகுதிக்குள் மூன்று முதன்மை அரசர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய அரசர்களும் இருந்தனர். ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டிருந்தனர். அதே காலகட்டத்தில் வடக்கே மைய இந்தியா முழுக்க சாதவாகனப் பேரரசின் ஆட்சிக்குக் கீழே இருந்தது., இன்றைய ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நிலங்கள் .

மூன்றாவதாக பண்பாடு. இந்தியாவில் போர்ச்சாதியினர் சிலரே. பிறர் போர் அறியாத தொழில்சாதியினர். ஆகவே படைகளின் எண்ணிக்கை ஓர் அளவுக்குமேல் பெருக முடியாது. சாதிமுறை இவ்வாறு இந்தியச் சமூகத்தை தேங்கவைத்தது. அதேசமயம் வரண்ட பாலைநில மக்கள் அனேகமாக அனைவருமே படைவீரர்கள்தான். ஆகவே ஜெங்கிஸ்கான் உலகை வெல்லமுடிந்தது. ஆப்கானியரும் துருக்கியரும் இந்தியாவை வெல்லமுடிந்தது.

தமிழகத்தை நாயக்கர்கள் ஏன் வென்றார்கள்? நாயக்கசாதியினரில் அனைவருமே போர்வீரர்கள். தீண்டப்படாதவர்கள் எனக் கருதப்பட்ட பகடைகள் கூட. அதேசமயம் தமிழகத்தில் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தீண்டப்படாத சாதியினராக பொதுச்சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு வயல்வெளியில் அடிமைகளாக வாழ்ந்தனர்.  ஆகவே அவர்களின் படைபலத்தை தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளமுடியவில்லை.

தமிழகம் இந்தியாவின் மைய நிலங்களில் இருந்த அரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய நிலப்பகுதி. குறைவான வளங்கள் கொண்டது. சோழர்காலத்தில்தான் நமக்கு பெரிய அளவில் பாசன வசதிகள் உருவாயின. ஏரிகள் வெட்டப்பட்டன. விளைச்சல் பெருகியது, மக்கள்தொகை வளர்ந்தது. ஆகவேதான் சோழர்கள் சற்றுப் பெரிய அரசை உருவாக்கமுடிந்தது. ஆனால் நம்மால் மிகப்பெரிய நதிகள் பாயும் மையநிலத்தின் அரசுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கவில்லை. இதுவே வரலாற்றுச்சித்திரம்

ஜெ

முந்தைய கட்டுரைASYMPTOTE பரிசு -கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைகோவையில் ஒருநாள்..