‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54

53. உடனுறை நஞ்சு

flowerமீண்டும் ஒரு தோல்வி. ஆனால் விராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு கல்வியே” என்றார். குங்கன் சிரித்து “தோல்விகளை அவ்வாறு எண்ணிக்கொண்டால் துயரில்லை” என்றான். “நான் இந்த நாட்டில் எவரிடமும் சூதில் இனி தோற்கப்போவதில்லை. அது என் வெற்றி. நான் எத்தனை முயன்றாலும் உங்களை வெல்லப்போவதில்லை, ஆகவே அது தோல்வியும் அல்ல” என்றார் விராடர்.

ஏவலன் வந்து வணங்கி “அமைச்சர் ஆபர்” என்றான். விராடர் குங்கனைப் பார்க்க அவன் “வரச்சொல்” என்றான். ஏவலன் வணங்கி திரும்பிச்செல்ல “அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன. கடந்த சில நாட்களாக நான் அரண்மனைவிட்டு அவைக்குச் செல்லவே இல்லை” என்றார் விராடர். “ஆம், அறிவேன்” என்றான் குங்கன். “எப்படி செல்ல? இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார்?” என்றார்.

“ஏதேனும் அவைச்செய்தி உரைத்து ஓலைச்சாத்து பெறவேண்டியிருக்கும்” என்றான் குங்கன். “ஓலைச்சாத்தே இப்போது தேவைப்படுவதில்லை. கீசகனிடமே முத்திரைக் கணையாழியை கொடுத்துவிட்டேன்” என்றார் விராடர். “அதற்கு அரசி என்னை வசைபாடினாள். அவள்தான் இளையவனை அங்கே அமர்த்தும்பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இரவெல்லாம் பேசியவள். பெண்களின் உள்ளங்கள் எளிதில் மாறிவிடுகின்றன.” குங்கன் “அவர்களின் மைந்தனை எண்ணி அஞ்சுகிறார்கள் போலும்” என்றான். “ஆம், ஆனால் அவனை என்ன செய்யமுடியும்? ஆணிலி” என்றார் விராடர்.

அமைச்சர் ஆபர் வந்து வணங்கி முகமனும் வாழ்த்தும் சொன்னார். அவரை அமரும்படி விராடர் கைகாட்டினார். அவர் அமர்ந்து களம்வரைந்த மென்பலகையை மடித்து அப்பால் வைத்து காய்களைத் திரட்டி சிறுபேழையில் வைத்துக்கொண்டிருந்த குங்கனைப் பார்த்தார். “அவர் இருக்கட்டும், அவரில்லாமல் நான் எதையும் எண்ணுவதே இல்லை” என்றார் அரசர். “இல்லை…” என அவர் தயங்க “சொல்லும், அமைச்சரே” என்றார். ஆபர் துணிவுகொண்டு “இதை அமைச்சர்கள் கூடி தங்களிடம் வந்து சொல்ல விழைந்தோம். ஆனால் அவ்வண்ணம் சொல்வது கீசகர் காதுகளுக்கு செல்லும் என்பதனால் என்னை மட்டும் அனுப்பினார்கள். நான் இதைச் சொல்ல பல நாட்கள் காத்திருந்தேன்” என்றார்.

ஆர்வமில்லாமல் ஏப்பம் விட்டு “என்ன?” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா?” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா?” என்றார்.

“அரசே, இது முதன்மைச்செய்தி கொண்ட ஓலை. உங்கள் நேர்விழிக்கு மட்டும் என மேலரக்கு போடப்பட்டது.” விராடர் “என்ன சொல்லவருகிறீர்? எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது?” என்றார். “ஆம். முன்பு பேசப்பட்டது கலிங்க அரசர் ருதாயுவுக்கு நிஷாதகுலத்து அரசி சௌமினிதேவியில் பிறந்த மகள் பத்மினியை. அதனால் நமக்கு அரசியல் நேட்டம் ஏதுமில்லை. இப்போது அவர்கள் சொல்வது அரசருக்கு வங்கநாட்டு பட்டத்தரசி குசுமவதியில் பிறந்த மகள் சாலினியை. அது நம்மை அவர்கள் நிகரென்று அறிவிப்பது. நம் அரசுடன் அழியாத குருதியிணைப்பை அவர்கள் தொடங்குகிறார்கள்.”

“ஆனால் அவர்கள் இதுவரை நமக்கு செவிகொடுக்கவில்லை. நம் இளவரசர் கரியபுரவியில் நகர்வலம் வந்த செய்தியை ஒற்றர்வழி அறிந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.” விராடர் சிரித்து “அந்த குதிரைக்காரன், அவன் பெயர் என்ன…? கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா?” என்றார். ஆபர் பொறுமையை இழக்காமல் “அரசே, அவர்களின் எண்ணம் பிறிதொன்று. கலிங்க இளவரசன் ஆதித்யதேவனுக்கு நம் இளவரசியை மணம்புரிந்து கொடுக்கவேண்டும். இரு மணங்களும் ஒரே வேள்விப்பந்தலில் நிகழவேண்டும்…” என்றார்.

விராடர் குங்கனை நோக்கிவிட்டு “அப்படியெல்லாம் சொன்னால்…” என்றார். ஆபர் “நமக்கு வேறு வழியே இல்லை… கலிங்கத்துடனான உறவு நம்மை வலுப்படுத்தும். நம் இளவரசரின் முடியுரிமை உறுதியாகும்” என்றார். “அப்படியென்றால் நிகழட்டுமே… ஓலை அனுப்ப கீசகனிடம் சொல்வோம்” என்றார் விராடர். “அந்த ஓலையை கீசகர் நேராக இளவரசியிடம் அனுப்பி அவர் எண்ணத்தை கோரினார். அவர் சினந்து ஓலையைக் கிழித்துவீசி அதை கொண்டுசென்ற தூதனை அடிக்க கையோங்கினார்… கீசகர் நேரில் சென்று இளவரசியிடம் அவர் எண்ணத்தை கேட்டார். கலிங்க இளவரசனுக்கு துணைவியாவதைவிட உயிர்விடுவேன் என்று இளவரசி சொன்னார். தங்கள் விழைவைமீறி ஒன்றும் நிகழாது இளவரசி என்று சொல்லி இளவரசி உத்தரைக்கு கலிங்க இளவரசனை ஏற்பதில் ஒப்புதலில்லை என்று மறுமொழி அனுப்பிவிட்டார் படைத்தலைவர் கீசகர்.”

விராடர் முகவாயின் மயிர்க்குச்சத்தை அளைந்தபின் குங்கனை ஒருமுறை நோக்கிவிட்டு “ஏன் அப்படி சொன்னாள்? கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா? விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா? நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே?” என்றார்.

குங்கன் “ஆணிலிகளை பெண்டிர் விரும்புவர். அது அவர்கள் விரும்பும்படி சமைக்கப்பட்ட உணவு” என்றார். விராடர் உரக்க நகைத்தார். ஆபர் பொறுமையிழந்து “நான் சொல்ல வந்தது என்னவென்றால்…” என்றார். “நீர் சொன்னதை முழுமையாகவே புரிந்துகொண்டேன். செல்க! நான் இதை குங்கரிடம் பேசி என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன்” என்றார் விராடர். “அரசே…” என்று ஆபர் மேலும் சொல்லத் தொடங்க “செல்க” என்றார் விராடர். குங்கனிடம் “நாம் இன்னொரு முறை அமர்வோம். இம்முறை நீங்கள் களிறு” என்றார்.

ஆபர் முகம் சிவக்க சில கணங்கள் அமர்ந்திருந்துவிட்டு “நான் செல்வதற்கு முன் ஒரு நீண்ட கதையைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார். “கதையா?” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா?” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா? கானேக எண்ணமா?” என்றார் விராடர் ஏளனத்துடன். “நான் உங்கள் ஆணையை மீற இனி தடையில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டாக வேண்டும்” என்றார் ஆபர். பொறுமையிழந்து எழுந்து “கேட்கவில்லை என்றால்? எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக!” என்றார் விராடர்.

ஆபர் தாழ்ந்த குரலில் “தீர்க்கபாகு, அந்த இருக்கையில் அமர்க!” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க!” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று!” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று!” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா?” என்றார் ஆபர். “ஆம்” என்றான் குங்கன். “என் காலடியில் தரையில் அமர்ந்துகொள். இருவருக்குமான சொற்கள் இவை.” குங்கன் தரையில் அமர்ந்தான்.

“நளமாமன்னரின் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்… அவர்கள் காடேகியதை உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்றார் ஆபர். “நான் முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றார் விராடர். “நீ கேட்டிருப்பாய். இவன் முழுமையாக கேட்டிருக்கமாட்டான். இவன் கேட்டாகவேண்டிய கதை இது” என்ற ஆபர் குங்கனை கூர்ந்து நோக்கி “இப்புவியில் எக்கதையும் புதியதல்ல என்று அறிவாயா?” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக!” என்றார் ஆபர்.

flowerகோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் நடுவே விரிந்துள்ள பெருநிலத்தை வானில் கருமுகில் வடிவில் நின்று ஆண்டவள் பேரன்னை ஒருத்தி. அவளை அவர்களின் மூதாதையர் நூறு முலைக்காம்புகள் கொண்ட அடிவயிறும் செங்கனல் போன்ற விழிகளும் இரு பிறைநிலவுகள் போன்ற தேற்றைகளும் கொண்ட பெரும்பன்றி என்று வழிபட்டனர். காளி, கூளி, கராளி என்று நூறு பெயர்கள் அவளுக்கு இடப்பட்டன.

வானில் அவள் உறுமலோசை எழுந்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நின்று மேல்நோக்கி கைகூப்பி வாழ்த்தினர். மண்ணில் நெற்றிபட விழுந்து வணங்கினர். அன்னையின் நூறு முலைக்கண்களும் சுரந்து பெய்த அமுதை இரு கைகளாலும் அள்ளி தங்கள் மைந்தருக்கு ஊட்டி அருந்தினர். அன்னையின் கருணை அவர்களைச் சூழ்ந்து காடென்று பசுமைகொண்டது. ஓடைகளும் சுனைகளுமாயிற்று. காடுகளில் கனியும் ஊனும் விளைந்தன. நீரில் மீன்கள் பெருகின. அவர்கள் அன்னைக்கு மட்டுமே கடன்பட்டிருந்தனர்.

அன்னையின் குரலைக் கேட்ட காதுகள் கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் தங்களை கர்ணிகள் என்றனர். நூறு குலங்களாகப் பிரிந்து மலைச்சரிவுகளிலும் செறிகாடுகளிலும் பெருநீர்ச்சதுப்புகளிலும் மணல்வெளிகளிலும் கடலோரங்களிலும் அவர்கள் பரவினர். கடல் அலைமேல் ஏறிச்சென்று மீன்கொண்டனர். நதிகளில் படகுகள் ஓட்டினர். மண்திருத்தி விளைபெருக்கினர். நாளடைவில் நூறு குலங்களும் ஒருவருக்கொருவர் பூசலிடலாயினர். பொருள்கொண்டு செல்லும் படகுகளை வேட்டுவர் தாக்கி கொள்ளையிட்டனர். விளை அறுத்து களஞ்சியம்நிறைத்த கர்ணிகளை பாலைநிலத்தவர் வந்து சூறையாடிச் சென்றனர். ஒருவருக்கொருவர் போரிட்டழிந்த அவர்களை தெற்கில் திருவிடத்திலிருந்தும் வடக்கே தண்டகத்திலிருந்தும் அயலவர் படைகொண்டுவந்து வென்று கொள்ளையிட்டுச் சென்றனர்.

அள்ளிக்கொடுக்கும் அன்னைமுலைக்குக் கீழே பசியும் நோயும் கொண்டு அம்மக்கள் வருந்தினர். நூறாண்டுகாலம் அன்னையர் வீழ்த்திய கண்ணீரை விண்நிறைந்திருந்த அவர்களின் பேரன்னை கேட்டாள். அவள் கனிந்தமையால் அவர்களின் குடிகளில் ஒன்றில் சிஷுகன் பிறந்தான். தன் வீரத்தால் அவர்களில் முதல்வனானான். ஷத்ரிய குலங்களை வென்று குருதியாடியபடி பாரதவர்ஷத்தை அளந்துகொண்டிருந்த பரசுராமரைப்பற்றி அறிந்து அவரைத் தேடிச்சென்று அடிபணிந்தான். அவர் அவனை அனல்முன் நிறுத்தி அந்தணன் ஆக்கினார். சதகர்ணிகள் ஷத்ரியப் பெருங்குடிகளுக்கு எதிரான அந்தண அரசர்களாகத் திகழவேண்டும் என அவர் ஆணையிட்டார்.

தர்ப்பைப் புல்லில் அனலும் நாவில் வேதமுமாக வந்த அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக்கொண்டார்கள். தன் கருணையாலும் கருணையின்மையாலும் சிஷுகன் நூறு குலங்களை இணைத்தான். கர்ணிகளில் முதன்மையான குடியான பிரீதர்கள் வடக்கே இன்று மாளவத்தில் இருக்கும் பிரீதகிரி என்னும் குன்றின் அடிவாரத்தில் வாழ்ந்தவர்கள். பிரீதகிரியின் உச்சியில் அவர்களின் குடித்தெய்வமாகிய மாகாளையின் பெருஞ்சிற்பம் ஒன்றிருந்தது. பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை அங்கே கர்ணிகள் கூடி தலையெண்ணிப் பலியிட்டு அக்காளையை வழிபடுவதுண்டு.

அங்கே ஒரு குலக்கூடலை சிஷுகன் ஒருங்கிணைத்தான். அதில் நூறு குலங்களின் தலைவர்கள் கூடி வாள் ஏந்தி அவனை தங்கள் அரசன் என்று தேர்ந்தெடுத்தனர். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் குடிக்கோல் தாழ்த்தி அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை அவ்வாறு உருவானது. நூறு குலங்களின் தலைவனாகிய அவன் சதகர்ணி என அழைக்கப்பட்டான். அவ்வூரே சதகர்ணிகளின் முதல் தலைநகர் என்றானது. அதை பிரதிஷ்டானபுரி என்றழைத்தனர். சதகர்ணிகளின் குலமுத்திரையாக மாகாளைவடிவமே நிறுவப்பட்டது. அவர்களின் கொடியிலும் தேர்நெற்றியிலும் கால்மடித்தமர்ந்த மாகாளை பொறிக்கப்பட்டது.

சதகர்ணிகள் ஒருங்கிணைந்தபோது சூழ்ந்திருக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் சென்றன. வடக்கே பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை ஆண்ட வாகடர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டினார்கள். அஸ்மாகர்களும் சாளுக்கியர்களும் அவர்களிடம் பணிந்தனர். தான்யகடகமும் இந்திரகீலமும் ராஜமகேந்திரபுரியும் அவர்களுக்குரியதாயின. அந்நகர் முகப்புகளில் மாகாளையின் பேருருவச் சிலைகள் அமைக்கப்பட்டன. சிந்துகன், ஷிப்ரகன், செஸ்மாகன், சூத்ரகன், சுரகன் என தொடர்ந்த மாவீரர்களின் நிரையால் அவர்களின் கொடி கடல்முதல் கடல்வரை பறந்தது.

பின்னர் வடக்கே மகதமும் மேற்கே மாளவமும் கிழக்கே கலிங்கமும் ஆற்றல்கொண்டபோது சதகர்ணிகள் தெற்கே சென்றனர். அவர்களின் இரண்டாவது தலைநகராக இருந்த வெண்கல்நாட்டு அமராவதியை மையமாக்கினர். அவர்களின் அரசனான பதினெட்டாவது சிந்துகனை மாமன்னர் நளன் வென்றார். அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி தெற்கே ரேணுநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். சிந்துகனின் மைந்தன் சுகர்ணன் ஏழுமுறை வாகடர்களையும் பல்லவர்களையும் திரட்டியபடி படைகொண்டுவந்தாலும் மீண்டும் மீண்டும் நளனின் புரவிப்படையால் தோற்கடிக்கப்பட்டான்.

flowerசுகர்ணனின் பேரமைச்சர் சுசீலர் மறைந்தபோது அவர் மைந்தர் சுமத்ரர் கங்கணம் சூடினார். தென்னாட்டில் காஞ்சியில் பதினெட்டாண்டுகள் அரசநூலும் நெறிநூலும் காவியமும் கற்றுவந்த அவர் ஒவ்வொரு நாளுமென தென்னாட்டு அரசியலை கூர்நோக்கிக் கொண்டிருந்தார். “ஒவ்வொரு அரசுக்கும் வீழ்ச்சியின் தருணமொன்று உள்ளது, அரசே. அதை கண்டடைந்து அப்போது தாக்கினாலொழிய நாம் அவர்களை வெல்லமுடியாது” என்றார். “மிகப் பெரிய கட்டடங்கள் வீழ்வதெப்படி என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. கட்டி எழுப்பப்படும் அனைத்துக்குமே அந்நெறிகள் பொருந்தும்.”

“ஏழு நெறிகள் அவை” என்று சுமத்ரர் சொன்னார். “அடித்தளம் தாளாத மேற்கட்டு. அடித்தளம் இடும்போது எத்தனை பெரிதாக அக்கட்டு எழுமென்று எண்ணியிருப்பவர் சிலரே. ஏனென்றால் தங்கள் பெருவிழைவையும் ஆணவத்தையும் எவராலும் அளவிட்டுக்கொள்ள இயலாது. எங்கு நிறுத்தவேண்டும் என்று அறிதலும் எளிதல்ல. ஏனென்றால் விரிசல் எழுவதற்கு முந்தைய கணம்வரை ஆயிரமாண்டுகாலம் விந்தியமலைமுடிகள் என நிற்கும் அக்கட்டு என்றே தோன்றும்.”

“அதன் உடல்கட்டு அதன் பொருண்மையை தாளமுடியாது விள்ளலிடுவது இரண்டாவது” என்றார் சுமத்ரர். “இங்குள்ள ஒவ்வொரு பொருளையும் ஒன்றெனக் கட்டியுள்ளது அப்பொருளுக்குள் உறையும் விசைகளே. நீர்த்துளியை பாறைகளை மலைகளை. கல்லின்மேல் கல்லையும் சுவர்கள்மேல் கூரையையும் அவையே நிலைநிறுத்துகின்றன. அவ்விசைகள் எத்தனை எடைதாங்குமென்று எவராலும் அறியக்கூடுவதில்லை. ஏனென்றால் முதலில் ஒவ்வொரு முறையும் எண்ணியதைவிட கூடுதல் எடை தாங்குவது அது என்றுதான் தோன்றும். எடைமீறி அவ்விசைச்சரடு அறுபடும் கணம்வரை.”

“உள்ளிருந்து பிறிதொன்று எழுவதனால் கட்டமைவுகள் சிதையும் என்பது மூன்றாம் நெறி. அரசே, அரண்மனைகளையும் கோட்டைகளையும் மட்டுமல்ல பெரும்பாறைகளையும் சிதைக்கின்றன ஆலமர வேர்கள்” என்றார் சுமத்ரர். “அருகே பிறிதொன்று சரிவதன் அதிர்வால் கட்டமைவுகள் வீழும் என்பது நான்காம் நெறி. அக்கட்டடத்தை அமைத்த பொருட்களின் நிகரின்மையால் அவை சரியும் என்பது ஐந்தாம் நெறி. அரசே அறிந்திருப்பீர்கள், கருங்கல் கட்டடத்தில் அமைந்த மணல்கல் எடைதாளாமல் உதிர்ந்தழியும். அக்கட்டடத்தை இழுத்துச்சரிக்கும்.”

“ஆறாவது நெறி கால உருவம்கொண்டு வரும் நீரும் காற்றும். எளிய நீர்த்துளி ஊறி ஆழ்ந்துசென்று தன் வழியை அமைக்கிறது. அவ்வழி பிளவென்று பெருகுகிறது” என்றார் சுமத்ரர். “ஏழாவது நெறியே முதன்மையானது. தன்மேல் எதையும் எப்போதைக்குமென சூடியிருக்க மண்மகள் விரும்புவதில்லை. பெருமலைகளே ஆயினும் எழுந்தவை அனைத்தும் சரிந்தே ஆகவேண்டும்.”

அவை அவர் சொல்லப்போவதைக் கேட்டு அமர்ந்திருந்தது. “நிஷாதர்களின் இவ்வரசின் ஆற்றல்குறைகள் எவை? இறுதிக்குறை எவருக்கும் உள்ளது. முதல்குறையே முதன்மையானது. அவையோரே, அதன் அடித்தளம் நிஷாதனாகிய நளனால் உருவாக்கப்பட்டது. அதன் மேற்கட்டு ஷத்ரிய அரசியால் எழுப்பப்படுகிறது. நிஷாதனுடையது விழைவு. ஷத்ரியர் பெருவிழைவால் ஆனவர்கள்.” அரசன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“இரண்டாவது குறை எழுந்துகொண்டிருக்கிறது நிஷதபுரியில்” என்றார் சுமத்ரர். “குலங்களை ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பாரதவர்ஷத்தின் பேரரசுகள் அனைத்தும் தோன்றின. ஜனபதங்கள் என அவை அழைக்கப்பட்டன. குலசேகரர்கள் கோல்கொண்டு ஆளும் எந்நாடும் உறுதியுடன் அமைந்ததில்லை. குலப்பூசல்களை குலப்பூசலால் தீர்க்கும் முறையையே அங்கே ஆட்சி என்கிறார்கள். பாறைகளுக்கு மாறாக ஆமைகளை அடுக்கி கோட்டை எழுப்புவது அது.” குலத்தலைவர்கள் சிலர் மெல்ல ஏதோ சொன்னார்கள். அதை செவிமடுக்காமல் சுமத்ரர் தொடர்ந்தார்.

“எந்த அரசு குலத்தலைவர்களால் நீக்கப்பட முடியாத அரசனை அடைகிறதோ அதுதான் பாரதவர்ஷத்தை வென்று ஆள்கிறது. மகதம், அஸ்தினபுரம், பாஞ்சாலம் அனைத்தும் அவ்வாறே. நிஷதபுரியின் அரசன் தன்னை முற்றரசன் என்று ஆக்கிக் கொள்ளாமல் நாட்டை விரிக்கிறான். அவையோரே, அந்நாட்டை கட்டிவைத்திருந்த விசைகள் எதிரிகள் மீதான அச்சம், குடிப்பெருமை, வெற்றியால் வந்துசேரும் செல்வம் ஆகிய மூன்றும். இன்று அந்த விசைகளை மீறிச்செல்கிறது நிஷதகுடிகளின் ஆணவம். அங்கே குடிப்பூசலெழுந்துள்ளது. அது நிஷதபுரியை பிளந்து சரியச்செய்யும்.”

அவை மெல்ல அசைந்தது. பெருமூச்சுகள் ஒலித்தன. “நாம் அதற்கு காத்திருக்கவேண்டுமா?” என்றான் அரசன். “ஆம். விரிசல்களுக்கு மாறா இயல்பென்று ஒன்று உண்டு, அவை வளர்ந்தேயாகவேண்டும். விரிசல் கண்டு அரசி அஞ்சுவாள். அதை சீரமைக்க முயல்வாள். அம்முயற்சிகளால் விரிசல் பிளவென்றாகும். நாம் நுழைய இடைவெளி திறக்கும்வரை பொறுத்திருப்போம்” என்றார் சுமத்ரர். “நிஷதமன்னன் நளன் செய்த பிழை தெற்கே நம்மை முற்றழிக்காமல் வடக்கே படைகொண்டு சென்றது. எதையும் முழுமையாக வெல்லாமல் எஞ்சவிடக்கூடாது . ஷத்ரியர்கள் நஞ்சையும் எரியையும் எஞ்சவிடுவதில்லை. நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் விலங்குகளைப்போல. அவை புல்லையும் மரத்தையும் இரைவிலங்குகளையும் முற்றழிப்பதில்லை.”

“இன்று மாளவனும் மகதனும் கலிங்கனும் வங்கனும் அவனுக்கு எதிரிகளென்றாகி விட்டனர். அவர்களின் சூழ்ச்சியால் புஷ்கரன் உளம்திரிந்துள்ளான். அவனுள் செலுத்தப்பட்ட நஞ்சு அரசி என்றும் அவைத்துணைவன் என்றும் உடனுறைகிறது” என்று சுமத்ரர் தொடர்ந்தார். “இனி தமயந்தி செய்வதற்கொன்றே உள்ளது. நளனை பேரரசன் என்று இந்திரபுரியில் கோல்கொண்டு அமரச்செய்யவேண்டும். நிஷதகுடிகள் அனைத்தும் அவனை முற்றரசன் என, மறுசொல்லற்ற மண்ணிறை என ஏற்கவைக்கவேண்டும்.”

“அது எளிதா என்ன?” என்றான் அரசன். “ஆம், தொன்றுதொட்டு வரும் வழிமுறைகள் சில உள்ளன. அஸ்வமேதம் ஒன்றை முடிப்பது. அது குடிகளின் குலப்பெருமையைத் தூண்டும். ஒவ்வொருநாளும் புரவியின் வெற்றிச்செய்தி நகர்நுழையவேண்டும். தெருக்களில் வாகைவிழா நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். செவிகளில் சூதர்பாடல்கள் ஓயலாகாது. குடிகளின் ஆணவம் பெருகிப்பெருகி உச்சத்தை அடையும்போது அஸ்வமேதம் முடிந்து ராஜசூயம் தொடங்கவேண்டும். அரசக் கருவூலம் திறந்து பொன்னும் பொருளும் மக்களைநோக்கி பாயவேண்டும். தற்பெருமையும் தன்னலமும் கலந்து மக்களை அரசனுக்கு அடிமைகளென்றாக்கும்.”

“அதை அவள் செய்வாள், ஐயமே இல்லை” என்றான் அரசன். “ஆம், அஸ்வமேதம் குறித்து கருணாகரருடன் அவள் பேசினாள் என்பதை நான் அறிந்தேன். ஆனால் அவளால் சத்ரபதி என்று தானே அமரத்தான் முடியும்.” அவையில் வியப்பொலி எழுந்தது. “ஆம், அவள் உள்ளத்தில் அவன் எளிய நிஷாதனே. அவளுள் ஓடும் ஷத்ரியக் குருதி அவன் சத்ரபதியென்று அமர்வதை ஏற்காது. எத்தனை சொற்களிட்டு அடுக்கெழுப்பி மூடினாலும் அவன் பரசுராமனின் ஷத்ரியக் குருதிபடிந்த மழுவால் உருவாக்கப்பட்டவன் என்னும் மெய் அவளுக்குள் மறைந்துவிடாது.”

சில கணங்கள் அவையில் அமைதி நிலவியது. சுகர்ணன் பெருமூச்சுடன் எழுந்தமைந்து கால்களை நீட்டியபடி “அவள் பரிவேள்வியைத் தொடங்கும்போது புஷ்கரனின் தரப்பினர் எரிபற்றி எழுவர் என்கிறீர்களா?” என்றான். “ஐயமே தேவையில்லை. அவள் நிகழ்த்தும் வேள்வி பெருகும்தோறும் தன் அடித்தளம் கரைவதாக புஷ்கரன் எண்ணுவான். அச்சத்தைப்போல ஐயத்தையும் காழ்ப்பையும் பெருக்குவது பிறிதொன்றில்லை.”

சுகர்ணன் “ஆனால் அவனால் தமையனை எதிர்கொள்ள முடியாது. குலங்களில் பெரும்பகுதியினர் இன்று அவனைத்தான் ஆதரிக்கின்றனர். அவனுக்கு உள்ளூரத் தெரியும், நளனுக்கு முன் நான்கு நாழிகைகூட அவனால் களம்நிற்க இயலாது என்று” என்றான். “அவன் குடிகளுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு களத்தில் புஷ்கரன் தோற்றால் அக்குடிகளே அவன் தலையை வெட்டிக்கொண்டுசென்று நளன் காலடியில் வைப்பார்கள்.” சுமத்ரர் “ஆம், ஆனால் புஷ்கரனை நாம் ஆற்றல்கொள்ளச் செய்யமுடியும்” என்றார்.

திகைப்புடன் “நாமா?” என்றான் சுகர்ணன். “ஆம், அவனுடன் இன்று கலிங்கனும் மாளவனும் மகதனும் வங்கனும் சேர்ந்திருக்கிறார்கள். நாமும் இணைந்துகொள்வோம். நம் ஆதரவு அவனுக்கு துணிவளிக்கும். தமையனுக்கு இளையோன் எதிர்நிற்கட்டும். கட்டடம் விண்டு சரிகையில் நாம் எழுவோம். நம் கொடியை குருதியால் நனைப்போம்” என்றார் சுமத்ரர். சில கணங்கள் அவை ஓசையற்றிருந்தது. பின் ஒற்றைக்குரலென “நூறு செவிகளுக்கிறைவன் வாழ்க! தென்னகத்தின் தலைவன் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பியது.

முந்தைய கட்டுரைஅட்டைப்படங்களின் வரலாறு
அடுத்த கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்