அன்புள்ள ஜெ,
நலமா?
நீங்கள் சமீபத்தில் எழுதியிருந்தஅரசியலும் மேற்கோள்திரிபுகளும் என்ற பதிவை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. இதுகுறித்து நான் சிலது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதனால் இக்கடிதம்.
இப்பதிவில் பேசப்படும் அம்பேத்கர் பற்றி அ.நீ எழுதிய கட்டுரை ஸ்வராஜ்யா இதழில் வந்தது 2017 ஏப்ரல்-14 அன்று. அதற்கு ஸ்க்ரோல் தளத்தில் கேசவ குகா எதிர்வினை எழுதியது ஏப்ரல்-19 அன்று. உங்களிடம் கேள்வி கேட்கும் அந்த வாசகர் இந்த இரண்டையும் வாசித்திருக்கிறார் என்பதை அவரே தனது கடிதத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால், உடனடியாக ஏப்ரல்-20 அன்று அந்த எதிர்வினைக்கு ஒரு பதிலை அ.நீ அதே ஸ்வராஜ்யா இதழில் எழுதியிருந்தார். இவ்வளவு தூரம் நீட்டி முழக்கிக் கடிதம் எழுதும் ஊக்கமும் முனைப்பும் கொண்ட அந்த வாசகர் அ.நீயின் அந்த எதிர்வினையைப் பற்றி தனது கடிதத்தில் வாயே திறக்கவில்லை. அவர் அதைப் படித்தாரா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும், அதீத நம்பிக்கையுடன் ‘புளுகுமூட்டைக் கட்டுரை’, ‘தில்லாலங்கடி வேலைகள்’ என்று சரமாரியாக அ.நீ மீது வசைகளை அள்ளிவீசுகிறார். “சிறுநூல் படித்தோரே கிழித்துத் தோரணங்கட்டி அம்பலப்படுத்திவிடுமளவுக்கு அசட்டையான செயல். பச்சையான திரிபுகளும், பலவற்றைத் தன்சார்புக்கேற்ப out of contextஇல் எடுத்துப் பயன்படுத்துவதுமுமாக ஒரு கட்டுரை” என்றெல்லாம் எடுத்து விடுகிறார். குறைந்தபட்ச அறிவுசார் நேர்மை (intellectual honesty), அறிவுசார் உழைப்பு (intellectual rigor) கூட இல்லாமல் எழுதப்பட்ட அவதூறு கடிதம் அது.
துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் அதை அப்படியே ஆமோதிக்கிறீர்கள். “அது அம்பேத்கர் இஸ்லாம் குறித்துச் சொன்ன மிகக்கடுமையான விமர்சனங்களை, நிராகரிப்புகளை எடுத்து தொகுத்து முன்வைக்கிறது. கிறித்தவத்தின் நிறுவன அமைப்பு குறித்த அவருடைய விமர்சனங்களை தொகுக்கிறது. அவற்றின் விவாதச்சூழலில் இருந்து வெட்டி மேற்கோள்களாக எடுக்கிறது. அதாவது முதல் தரப்பு செய்த அதே செயல்களை அதே பாணியில் இவர்களும் செய்கிறார்கள்.” என்று தடாலடியாக தீர்ப்பு வழங்குகிறீர்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
’உங்களுக்கு சொல்லப்படாத அம்பேத்கர்’ என்ற தனது கட்டுரையில் உணமையில் எந்த *முடிவுகளையும்* அ.நீ கூறவில்லை. அம்பேத்கர் எழுத்துத் தொகுப்புகளிலிருந்து அதிகம் அறியப்படாத கீழ்க்கண்ட தரவுகளைத் தான் அவர் முன்வைக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை.
- உபநிஷதங்களின் மகாவாக்கியங்களை ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையாக அம்பேத்கார் முன்வைத்தார் என்கிறார் அ.நீ. இதற்கு இரண்டு நூல்களை காட்டுகிறார். ஒன்று, சாதி ஒழிப்பு குறித்த ‘Annihilation of Caste’ நூல். இந்நூலில் அம்பேத்கர் ‘உபநிஷதங்கள் மூலம் நீங்கள் இதை, (அதாவது ஜனநாயகத்தின் ஆன்மீக அடிப்படைகளை நிறுவுவதை) செய்யலாம் என கேள்விப்படுகிறேன்’ என்று கூறுவதைக் குறிப்பிடுகிறார். இரண்டாவது ‘இந்து மதத்தின் புதிர்கள்’ (Riddles of Hinduism) என்கிற நூல். இந்துமதக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதியது இந்த நூல் (அம்பேத்கரைப் பெருமளவு மதித்தாலும் கூட, பல இடங்களில் ஈவே.ரா பாணி ”பகுத்தறிவு”க்கு ஈடாக அவரது கருத்துக்கள் இதில் அமைந்துள்ளதால் இந்தக் குறிப்பிட்ட நூலை நான் உட்பட பல இந்துமத அபிமானிகள் முற்றாக நிராகரிக்கிறோம்). ஆனால் இந்த நூலில் கூட, ”ஜனநாயகம் ஐரோப்பாவிற்கு முன்னரே இந்தியாவில் இருந்தது; அதன் ஆன்மிக அடிப்படையாக நாமெல்லாம் இறைவனின் குழந்தைகள் என்பதைக் காட்டிலும் நாமெல்லாம் பிரம்மத்தின் பகுதி என்பதே சிறப்பாக இருக்கும்” என்கிறார் அம்பேத்கர். ’சர்வம் கல்விதம் பிரம்ம’, ‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத் த்வமஸி’ ஆகிய மகா வாக்கியங்களையும் இப்பகுதியில் அம்பேத்கர் குறிப்பிட்டு தம் தரப்பை நிறுவுகிறார். இப்படி, ‘சாதி ஒழிப்பு’ நூலில் ஒரு தொடக்க ஊகமாக சொல்லப்பட்ட விஷயத்தை பின்னர் ஒரு கோட்பாடாகவே அவர் வளர்த்தெடுக்கிறார் என்பதை அநீ அம்பேத்கரது நேரடி மேற்கோள்கள் வழியாகவே தெளிவாக நிறுவுகிறார். ஆனால், குகா தன் எதிர்வினையில் அம்பேத்கர் இப்படியெல்லாம் சொல்லவில்லை. அவர் வெறும் எளிய ஊகமாக ஐயத்துடன் மட்டுமே உபநிஷதத்தை முன்வைத்தார் என்கிறார். அவர் ‘சாதி ஒழிப்பு’ நூலைக் குறித்து மட்டுமே பேசுகிறாரே ஒழிய, அநீ அடுத்ததாகக் கூறிய ‘ரிடில்ஸ்’ நூலில் அம்பேத்கர் மகாவாக்கியங்களை நேரடியாகவே குறிப்பிட்டு இப்படி எழுதியிருப்பதைப் பேசவே இல்லை. இதிலிருந்தே மேற்கோள் இருட்டடிப்பு செய்வது யார் என்பது விளங்கும். இத்தனைக்கும் ’ரிடில்ஸ்’ ஒரு அபூர்வமான நூலெல்லாம் அல்ல. உண்மையில் இந்து விரோதிகளால் ”அம்பேத்கரின் கருத்துக்கள்” என்று பக்கம் பக்கமாக காட்டப்படுவது அந்த நூல் தான். ஆனால் அதற்குள்ளும் இப்படி ஒரு அருமையான கருத்தை அம்பேத்கர் வைத்திருந்திருக்கிறார் என்பது தான் அநீ வெளிக்கொண்டு வரும் விஷயம். இதை அவர் 2012லேயே எழுதியிருக்கிறார்.
- பொது சிவில் சட்டத்துக்கான முதல் படி இந்து சிவில் சட்டம் என்றும் அது இந்து தர்ம சாஸ்திரங்களின் மிகச் சிறந்த தன்மைகளை உள்ளடக்கியது என்றும் 11 ஜனவரி 1950 அன்று அம்பேத்கர் பேட்டி கொடுத்ததை அநீ சொல்கிறார். இதற்கு குகாவிடமிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை.
- சிந்து நதி நீர் ஒப்பந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பிலான குழுவில் அம்பேத்கர் இருந்தார். சிந்து நதியில் இந்திய விவசாயிகளுக்கே முதல் உரிமை என்று பாகிஸ்தான் ஒத்துக் கொள்ளாதவரை, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். இது அம்பேத்கரிடம் இயல்பாக அமைந்திருந்த தேசபக்திக்கும் தொலை நோக்குப் பார்வைக்கும் உதாரணம் என்பதை அடுத்ததாக அநீ முன்வைக்கிறார். இதற்கும் குகாவிடமிருந்து எதிர்வினை இல்லை.
- இந்தியாவின் தேசிய மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறுகிறார். 2014 போல இல்லாமல், இப்போது இது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக ஆகிவிட்டது. இதை சொல்ல ஒரு அநீ தேவை இல்லை. ஆனால் இதற்கும் குகாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.
- இந்திய ராணுவத்தில் இந்தியா மீது கசப்பும் வெறுப்பும் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லதல்ல என அம்பேத்கர் எச்சரிப்பதை அநீ கூறுகிறார். உண்மையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு அம்பேத்கர் கூறியது இது தான் – ”ராணுவத்தில் முஸ்லீம்கள் அதிகம் இருப்பது நம் நாட்டு எல்லைப் பாதுகாப்புக்கு நல்லதல்ல”. ஆனால் அம்பேத்கரின் வார்த்தைகளை அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்ற கவனத்துடன், இன்றைய சூழலுக்கு ஏற்ப மதச்சார்பற்ற ஒரு பார்வையாக்கி தருகிறார் அநீ. இதற்கும் குகாவிடமிருந்து எதிர்வினை இல்லை.
- தலித் இயக்கங்களின் செயல்பாட்டில் மிஷினரிகளின் பங்கை அம்பேத்கர் ஐயத்துடன் பார்த்தார் என்று அநீ கூறுகிறார். இதற்கு அநீ இரண்டு ஆதாரங்கள் தருகிறார். 1) லக்ஷ்மி நரசு எழுதிய நூலுக்கான முன்னுரையில், மிஷினரிகளின் சமூக சீர்திருத்த ஆதரவு ஒரு கட்டத்துடன் நின்றுவிடுகிறது. ஏனென்றால் சமூக சீர்திருத்தத்தால் மதமாற்றம் ஏற்படுவதில்லை என்கிறார் அம்பேத்கர் 2) இது அம்பேத்கருடையது அல்ல, பாபு ஜகஜீவன் ராம் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம். இதில் தலித் இயக்கத்தை நடத்தும் ஒருவர் மிஷினரி ஆதரவாளர் என்றும் அவரது இயக்கங்களில் பங்கெடுக்க வேண்டாமென்றும் எழுதுகிறார். ஆனால் கடிதமோ பிரிட்டிஷ் சிஐடி ஆவணங்களில் போய் சேர்கிறது. இவை இரண்டுமே இதுவரை பெரிதும் பேசப்படாத தரவுகள். இவை முக்கியமானவை – ஏனென்றால், அன்றைய தலித் அமைப்புகளில் மிஷினரிகளின் ஊடுருவல் இருந்தது; அதற்கு பிரிட்டிஷ் அரசின் மறைமுக ஆதரவு இருந்தது; இது அன்றைய உண்மையான தலித் தலைவர்களுக்கு சங்கடம் அளித்தது; இது குறித்து அவர்கள் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தனர் என்று பல விஷயங்களை இவை காட்டுகின்றன. இந்த நேரடியான தரவுகளுக்கு குகாவின் எதிர்வினை என்ன என்றால், சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கரின் நூல்களிலிருந்து வழக்கமான இந்து எதிர்ப்பு மேற்கோள்களைக் காட்டுவதுதான்.
- சாதி அடிப்படையில் இல்லாத ஒரு பூசகர்கள் சேவை அமைப்பை இந்திய அரசே நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை அ.நீ சொல்கிறார். அதற்கான சரியான முயற்சிகளை பாஜக அரசுகள் செய்வதாகவும், இதை செய்வது நல்லது என்கிறார் . இதற்கு குகாவின் எதிர்வினை – ஆனால் பூசகர்களே இல்லாத நிலையையே நான் விரும்புகிறேன் என அம்பேத்கர் கூறியிருக்கிறாரே என்பது. இது அபத்தமானது. எங்கே அப்படி கூறியிருக்கிறார்? அம்பேத்கர் மார்க்ஸோ ஈவேராவோ அல்ல, மதம் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கருவி என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. மாறாக, மதம் மனித சமூக வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது; ஆனால் அதில் சமத்துவம் இருக்கவேண்டும் என்று தான் அவர் கருதினார்.
அநீ அம்பேத்கர் குறித்து எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து அவரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் எங்களிடம் ஒருசில கருத்து வேறுபாடுகளும் உண்டு. உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. எனக்கு தெரிந்து அவர் திண்ணையில் எழுத வந்த காலம் முதலே இதை அவர் வலியுறுத்தி வருகிறார். கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக, அவரது இக்கட்டுரையில், மூர்க்கத்தனம் எதுவும் நிச்சயமாக இல்லை.
நீங்கள் அநீயின் முதல் கட்டுரையை படித்தீர்களா என்றே எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அல்லது படித்துவிட்டும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக இப்படி எல்லாம் எழுதுபவர் அல்ல நீங்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.
குகாவின் இந்த மேலோட்டமான எதிர்வினையை வைத்துக் கொண்டு அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம் என்பது எனது பணிவான எண்ணம்.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு
நான் இந்த விவாதத்தை முழுமையாகப் பின்தொடரவில்லை. சுட்டிகொடுக்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே வாசித்தேன். மேற்கோள் வாதங்களில் ஆர்வமில்லை.
அம்பேத்கரை தொடர்ந்து படிப்பவன் என்றமுறையில் என் கருத்து அக்கட்டுரையில் நான் சொன்னதுபோல அவர் இந்துமதத்தின் ஞானமரபை, தத்துவத்தை நிராகரிக்கவில்லை, அதுபற்றிய மதிப்புள்ளவராகவே இருந்தார் என்பதே. ஆனால் இந்து மதத்தின் நிறுவனங்கள், சடங்குகள், அதன் சமூகக்கட்டமைப்பு ஆகியவை சாதிக்கு ஆதரவானவையாக, அதை மாற்றிக்கொள்ள மறுப்பவையாக உள்ளன என்பதனால் அவர் இந்துமதத்தை நிராகரிக்கிறார்.
அந்த அம்சத்தை அவர் இந்துத்துவ அரசியலுக்கும் சாதகமானவர் என நீட்டிக்கொள்வதற்கான மேற்கோள்பயிற்சியே அரவிந்தனின் முதற்கட்டுரை. அதை மேற்கோள்களால் குகா மறுக்கையில் மேலும் மேற்கோள்களால் அதை நிறுவ மீண்டும் முயல்கிறது மேலதிகக் கட்டுரை. அப்படி மேற்கோள்களால் நிறைய விளையாட முடியும்.அவர் மேற்கோளாக்கியிருக்கும் பல வரிகள் அந்த கட்டுரையின் பொதுபோக்கில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு பொருள் அளிக்கப்பட்டவை. அதையே கேசவ குகாவும் செய்கிறார்.
குகா தரப்பில் நின்று நான் எழுதினேன் என்றால் அம்பேத்கர் கிறித்தவத்தின் கொடை, இந்துமதத்தின் போதாமை குறித்து எழுதிய பல மேற்கோள்களைக்கொண்டு மேலே பேசுவேன். அதில் பொருள் இல்லை.மேற்கோள்களை பிரித்து ஆராய்வதனூடாக அல்ல, நேர்மையாக மனம்திறந்து அணுகுவதனூடாகவே உண்மையை அறியமுடியும். என் தரப்பு இதுவே. அதையே அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜடாயு,
அந்த மேற்கோள் மட்டுமல்ல, பூசகர்கள் இல்லாத ஒரு பௌத்ததை உருவாக்க அவர் முயன்றது உட்பட இருபது மேற்கோள்களையாவது என்னால் திரட்ட முடியும். ஒற்றைமத – ஒற்றைப்பண்பாட்டுத் தேசியத்துக்கு எதிராக அவர் பேசியவற்றைத் திரட்ட முடியும். இந்தவகைச் சண்டைகளில் எனக்கு ஆர்வமில்லை. ஏனென்றால் இவை எதையும் புரியவைப்பதில்லை
ஜெ