அன்புள்ள ஜெயமோகன்
பாவ மௌனம் கட்டுரையையொட்டி பகிர்ந்துகொள்ள விரும்பும் கேள்விகள்.
‘தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக’ மட்டுமே தொடர்வதுதான் தீர்வா?
அமைப்புமனிதனும் தனிமனிதனும் சந்திக்கும் புள்ளி சாத்தியமானது இல்லையா ?
காந்தியின் அமைப்பை மீறி சிந்திக்கும் ஆற்றலையும் அமைப்பை தன் இச்சைக்கு ஆட்டிவைக்கும் தந்திரத்தையும் தீர்வாக ஒப்புக் கொள்வதா?
அன்புடன
S
அன்புள்ள எஸ் அவர்களுக்கு,
உங்கள் கடிதம். அது எழுப்பும் சிக்கல்கள் எளிமையாக ஒற்றைவரியில் பதில்சொல்லத்தக்கவை அல்ல. என்னைப்பொறுத்தவரை நான் தனிவாழ்விலும் எப்போதுமே எதிர்கொண்டபடி இருக்கும் ஒரு வினாவை அது முன்வைக்கிறது. ஆகவே அதை பல தளங்களைத்தொட்டு விரிவாகவே முன்வைக்க முடியும்.
மனிதர்கள் மந்தையாக வாழும் இயல்புகொண்ட உயிர்கள். ஆகவே கூட்டாகச் சிந்திப்பதும் கூட்டாக நடந்துகொள்வதும் அவர்களின் தன்னியல்பு. ஒரு சமூகம் என்ற அளவில் அவர்கள் கூட்டாகவே செயல்பட்டாகவேண்டியிருக்கிறது. ஆகவே பல்வேறு சமூக, அரசியல், பண்பாட்டு,ஆன்மீக அமைப்புகள் அவர்களுக்குத்தேவையாகின்றன. அவை இல்லாமல் வாழ்வதென்பது அவர்களுக்குச் சாத்தியமில்ல.
இன்னொரு பக்கம், நெடுங்காலமாக மனிதர்கள் தங்கள் பண்பாட்டுப்பரிணாமம் மூலம் உருவாக்கி வளர்த்தெடுத்துகொண்டவையும் அவர்களின் வாழ்க்கையின் அடிபப்டைகளாக இருப்பவையுமான நீதியுணர்வு, அன்பு, இடக்கம் போன்ற பல விழுமியங்கள் தனிமனித அந்தரங்கம் சார்ந்தே உள்ளன. அவை மனிதர்கள் கூட்டமாகச் சேரும்போது சாதாரணமாக காணாமல்போய்விடுகின்றன.
இந்த முரண்பாட்டை முன்வைத்துத்தான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அமைப்புகள் மனிதர்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டுகின்றன. அவர்களுக்கு பொது நோக்கத்தையும் பொதுவான செயல்முறையையும் வகுத்தளிக்கின்றன. அவற்றுகு அவற்றின் வரலாற்றுப்பாத்திரம் மட்டுமே கண்களுக்குப் படுகிறது. உணர்வுகளோ விழுமியங்களோ அவற்றின் நிரலில் இருப்பதில்லை. முழுமையாக அவற்றுக்கு ஆளாகும் ஒரு மனிதன் ஒரு வரலாற்றுத்துளி மட்டுமாக ஆகிவிடுகிறான், அவனுக்கென தன்னியல்பான உணர்ச்சிகள் விழுமியங்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஹிட்லரின் ஆள்கூட்ட உளவியலைப்பற்றி வில்ஹெல்க் ரீஹ் எழுதிய ‘மாஸ் சைக்காலஜி ஆப் ·பாசிசம்’ என்ற நூல் என்னிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. கிறித்தவர்கள் மீதான தாக்குதல்கள் என்ற கட்டுரையில் அதைப்பற்றி பேசியிருக்கிறேன். ஹிட்லர் தன் சுயசரிதையில் மனிதர்களை ஒருபோதும் தனிமனிதர்களாகச் சிந்திக்க அனுமதிக்கக்கூடாது என்றும், எப்போதும் அவர்களை ஒரு பெருந்திரளாக மட்டுமே முன்னிலைப்படுத்தவேண்டும் என்றும் வாதிடுகிறார். இந்தக் காரணத்தாலேயே இதற்கு நேர் எதிரான நிலையை எடுத்துக்கொண்டு தனிமனிதவாதம் நோக்கி என்னுடைய மனம் நகர்ந்ததோ என்னவோ.
உலகப்போர் முடிந்து அதன் பெருங்கொடுமைகள் வெளித்தெரியத் தெரிய தனிமனித வாதத்தில் ஊன்றிய இருத்தலியல் வலிமைபெற்றது வரலாறு. அனைத்தையும் தத்துவப்படுத்துதல், சோர்வுவாதம் போன்ற பலகுறைகள் இருந்தாலும் அடுத்த அரைநூற்றாண்டுக்காலம் உலக அளவில் அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய அழிவுகளையும் ஒடுக்குதல்களையும் எதிர்த்துப்பேசும் மானுட மனசாட்சியாக இருத்தலியல் இருந்திருக்கிறதென்பதை எவராலும் மறுக்க முடியாது.
அத்துடன் ஒருவனுக்கு ஆன்மீக வளர்ச்சி என்பது அவன் தன்னை ஒரு தனிமனிதனாக நான் -அஹம்- என்று உணரும் நிலையிலேயே தொடங்குகிறது என்ற இந்து- பௌத்த- சமண ஞானங்களையும் நான் பெரிதும் சார்ந்திருக்கிறேன். சமூக,அரசியல், ஆன்மீகக் குழுக்க்ளைவிட்டு விலகிச்செல்லும் போது, தனித்து-பசித்து-விழித்திருக்கும்போது மட்டுமே மெய்ஞானம் கிடைக்கிறதென நாம் பலநூற்றாண்டுகளாக நம்பிவந்திருக்கிறோம். ஞானம் என்றுமே தனிக்குரல். கூட்டுக்கோஷம் அல்ல.
மனிதவரலாற்றை எடுத்துக்கொண்டால் மந்தை மனநிலையில் இருந்து விடுபட்டு தனிமனிதர்களாக மக்கள் உணர ஆரம்பிக்கும்போதுதான் பண்பாட்டின் அடிப்படைகள் உருவாக ஆரம்பிக்கின்றன.பழங்குடிச் சமூகங்களில் தனிமனிதன் இல்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். காணிக்காரர்கள் ‘காணி’ என்று தங்கள் பழங்குடியையே தான் ஆகக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் ஒரு குடியென்ற நிலையில் தங்கள் உறுப்பினர்களிடமும் பிறரிடம் மேற்கொள்ளும் குரூரங்கள் பயங்கரமானவை. அவர்களின் அறம் என்பது அவர்களின் குலநீதிமுறை மட்டுமே. தங்கள் குழுவுக்கு வெளியே அவர்களுக்கு நியாய அநியாயங்கள் இல்லை.
இன்று உலகம் முழுக்க மதம், இனம், மொழி, சார்ந்து நடக்கும் அடிப்படைவாதம் என்பது பழங்குடிமனநிலையின் நீட்சியே. தனிமனிதன் என்ற கருத்து உதயமாகி அது மனிதர்களை வடிவமைக்க ஆரம்பித்த பின்னரே ஜனநாயகம் பிறந்தது. ஜனநாயகம் நீடிக்க அவசியமாக உள்ளது தனிமனிதர்களாகச் சிந்திக்கும் குடிமக்கள். அத்தகைய மக்கள் பெருவாரியாக இல்லாத சமூகங்களில் ஜனநாயகம் இருக்காது. ஐரோப்பிய சமூகங்கள் பதினாறாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக உருவாக்கி எடுத்த மறுமலர்ச்சிக்காலகட்டம், அறிவொளிக்காலகட்டம், சுதந்திர விருப்புறுதிக்காலகட்டம் போன்றவற்றின் மூலம் உருவான தனிமனிதப் பிரக்ஞையே அவர்களிடம் இருக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை.
இந்தியாவில் இரண்டு வகை வரலாற்றுப்போக்குகள் உள்ளன. இங்குள்ள சாதிசமூகம் என்ற பழங்குடிக் கட்டுமானம் முழுக்க முழுக்க அமைப்புசார்ந்த மனிதர்களை உருவாக்குகின்றது. ஆனால் அவற்றைத்தொகுத்து ஒரு பெருஞ்சமூகக் கட்டுமானமாக வடிவமைக்கும் இந்து-சமண-பௌத்த மதசிந்தனைகள் தொகுப்புமனிதனை நிராகரித்து தனிமனித ஆன்மீக ஈடேற்றத்தையே வலியுறுத்துகின்றன. ஆகவே இங்கே ஒரு இரட்டைநிலை எப்போதும் உள்ளது.
இங்கே இன்னும் ஜனநாயகம் வேரூன்றிருப்பதற்குக் காரணம், இங்குள்ள ஆன்மீக உருவகம் என்பது தனிமனிதனைச் சார்ந்தது என்பதும் அடிப்படை விஷயங்களில் ஒரு சராசரி இந்தியன் தனிமனிதனாகவே முடிவெடுக்கிறான் என்பதும்தான். அதேசமயம் நம்முடைய ஜனநாயகத்தைச் சீரழிக்கும் எதிர்மறை அம்சமாக உள்ளது சாதியமைப்பு சார்ந்து உருவாகும் மந்தை மனநிலை. மற்றும் அந்த மந்தை மனநிலையை உணர்ச்சிபூர்வமாகத் தூண்டி வளர்த்து வாக்கு பெறுவதற்கான பரப்புவாத [பாப்புலரிசம்] அரசியல். இந்திய ஜனநாயகம் மந்தை மனநிலையில் இருந்து விடுபட்டு தனிமனிதர்களை மேலும் உருவாக்கும்போதே அதற்கு முதிர்ச்சி ஏற்படும்.
அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய சக்தி சமூகத்தில் செயல்படும் அறிவுவாதிகளும் வழிகாட்டியான அரசியல் தலைவர்களுமே. குறைந்தபட்சம் அவர்களாவது தங்கள் அந்தரங்க மனசாட்சியின் குரலை மட்டுமே சார்ந்து செயல்பட்டாக வேண்டும். அப்படிச்செயல்படும் சமூகத்தில் மட்டுமே அறமும் நீதியும் தொடர்ந்து நீடிக்கும். இதையே நாம் உலகப்போர் முதல் இன்றுவரை எல்லா நெருக்கடிகளிலும் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.
காந்தியின் மனசாட்சியின் குரலை நம்முடைய வரட்டுக் கோட்பாட்டாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது அதைப்புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களின் கோட்பாடுகள் முதிர்ச்சி அடையவில்லை. தனிமனித ஆழ்மனம் என்பது அசட்டுத்தனமான ஒரு கனவு அல்ல. தர்க்க அடிபப்டை இல்லாத உணர்ச்சிகளின் குவியலும் அல்ல. அதுவும் வரலாறு அளவுக்கு பிரம்மாண்டமானதே. வரலாற்றால் உருவாக்கப்பட்டதே. ஒருவன் மொத்த வரலாற்றை பகுப்பாய்வுசெய்வதைப்போலவே தன்னுடைய சொந்த ஆழ்மனதை உற்றுநோக்கியும் காலத்தைப் புரிந்துகொள்ளலாம். அதுவும் இன்னொருவகையான வரலாறுதான்.’ என்னுடைய மனசாட்சி இதை ஒத்துக்கொள்ளவில்லை’ என்று ஒருவர் சொல்வதென்பது மேலோட்டமான ஒரு உணர்ச்சிகரம் அல்ல, ஆழமான தரிசனம்.
காந்தி செய்தது அதையே. அது நடைமுறை தந்திரமோ பாவனையோ ஒன்றும் அல்ல. அது காந்திக்கே உரிய தனிப்பட்ட ஒரு சக்தியும் அல்ல. அத்தனை இலக்கியவாதிகளிடமும் கலைஞர்களிடமும் அவர்களின் படைப்பூக்கத்தின் உச்சத்தில் வெளிப்பட்டது அதுவே. சார்லி சாப்லினில் , தாமஸ் மன்-னில் நாம் காண்பது காந்தியில் செயல்பட்ட அதே மனசாட்சியின் குரலைத்தான். அக்காலகட்டத்தைய மேதைகள் அனைவரிலும் நாம் அந்தக்குரலையே கேட்கிறோம்.
ஒவ்வொரு சாதாரணமனிதனிலும் அது உள்ளது. உலகப்போரின்போது அத்தகைய மனசாட்சி மனிதர்களாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, மனசாட்சியின்பொருட்டு தங்கள் இன-மத-தேசங்களுக்கு துரோகிகளாக ஆன, எத்தனையோ எளிய மனிதர்களின் கதைகளை நாம் இன்று வாசிக்கிரோம். அது நாம் அனைவருமே கேட்கும் குரல்தான். அந்தக் குரலைச் செவிமடுக்கும் பொறுமையும் எத்தனை இழப்புகள் இருந்தாலும் மொத்த வாழ்க்கையையே அதையொட்டி அமைத்துக்கொள்ளும் துணிவும் — அல்லது உலகியல் நோக்கில் கிறுக்குத்தனமும்- உடையவர்களே மாமனிதர்கள் அல்லது மகாத்மாக்கள் ஆகிறார்கள். அவர்களால் சமூகம் வழிநடத்தப்படும்போதே அது அறத்தில் வேரூன்றிய சமூகமாக ஆகிறது.
இந்த விவேகம் நம் மரபில் எப்போதும் இருந்துள்ளது. சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்கள் எளிய அடையாளங்கள் சார்ந்து அன்றாடவாழ்க்கையை நடத்துபவர்கள். அடையாளங்களுக்கும் அன்றாட வாழ்க்கைநோக்குகளுக்கும் அப்பாற் சென்று தங்கள் அடிப்படை மனசாட்சியின் குரலைக் கேட்பவர்களே சான்றோர்கள். சங்க காலம் முதல் அந்தக் குரலுக்கு இருந்த இடத்துக்கு நம் மரபில் பல உதாரணங்கள் உள்ளன. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ற வரி அதையே குறிக்கிறது. அந்த விவேகம் சமண-பௌத்த மரபுகளிலும் அழுத்தமாக உள்ளது.
அமைப்புகள் தேவையே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு ஜனநாயக அமைப்பில் அவை கருவிகள். தன் தேவைக்காக மனிதன் கருவிகளைக் கையாளலாம். ஒரு கருவி அவனைத் தீர்மானிக்கலாகாது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், கருத்தியல் அமைப்புகள் போன்றவை அவற்றுக்கான தனிப்பட்ட பணியை ஆற்றுவதற்குரியவை. அந்தப்பணிக்கு அப்பால் அவை ‘நிரந்தரமான’ அமைப்புகளாக மாறி உணர்ச்சிகரமாக மனிதர்களைக் கட்டுபப்டுத்தக் கூடாது. மனிதர்களின் அடையாளங்களை அவை உருவாக்கக் கூடாது. ஒரு மனிதனின் அந்தரங்கம் அவற்றுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகவே இருந்தாக வேண்டும்.
j