அன்புள்ள ஜெ,
சிங்கை நூலகத்தில் இந்த ‘கேரளாவிலிருந்து சிங்கப்பூருக்கு’ என்ற வரலாற்றுப்பதிவு நூலை பார்த்துக்கொண்டிருந்தபோது, காசர்கோட்டிலிருந்தும் இடுக்கியிலிருந்தும் யாரும் சிங்க்கப்பூருக்கு புலம்பெயராததைப்போல ஒரு தோற்றம் கிடைத்தது. மற்ற மாவட்டங்கள் அனைத்திலிருந்தும் இங்கு வந்துள்ளார்கள்.
இது தற்செயலா அல்லது நீங்கள் அறிந்த சிறப்புக்காரணங்கள் ஏதும் உண்டா?
நன்றி,
சிவானந்தம் நீலகண்டன்
அன்புள்ள சிவானந்தம் நீலகண்டன்,
சிங்கப்பூர் குடியேற்றம் என்றால் அது 1950 க்குப்பின்னர். அதற்கு முன்னர் 1900 முதல் மலாயா குடியேற்றம். அதை இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம்.
மலாயாக் குடியேற்றம் நிகழ்ந்த 1870 – 1965 காலகட்டத்தில் இன்றைய இடுக்கி மாவட்டம் வெறும் காடு. காசர்கோடு மாவட்டத்தில் பெரும்பகுதி காடு. திருவிதாங்கூர் அரசும் பிரிட்டிஷ் மாகாண அரசும்ச் அங்கே குடியேற்றங்களை ஊக்குவித்தன. செழிப்பான விளைநிலம் அனேகமாக இலவசமாக கிடைத்தது. ஆக்ரமித்து விவசாயம் செய்யவேண்டியதுதான். வெள்ளையர் தேயிலை, காப்பி, ரப்பர்த் தோட்டங்களை உருவாக்கினர்.
ஆனால் அது அன்று மழைக்காடு. காட்டை அழிப்பதென்பது ஒரு மாபெரும் எதிரியுடன் ஓயாத போர் புரிவதைப்போல. அத்துடன் உக்கிரமான மலேரியா. அன்றைய பஞ்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு தோட்டங்களில் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்கள் மலாயாவிலும் இலங்கையிலும் வாழ்ந்தது போல அதேவகையான ‘லாயங்களில்’ அதேவகையான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதன்பின் சிரியன் கிறித்தவர்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் குடியேறி நிலத்தைக் கைப்பற்றி வேளாண்மைச்செய்ய தொடங்கினர்.
அதாவது மலாயா குடியேற்றம் நிகழ்ந்த அந்தக்காலத்தில் மலாயா போலவே குடியேற்றம் நிகழும் நிலமாகவே இடுக்கியும் காசர்கோடும் இருந்தன. 1950 களுக்குப்பின்னர் அங்கே பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டது. தோட்டத்தொழில் லாபகரமானதாக ஆகியது. நிலத்தைக் கைப்பற்றி தோட்டங்களாக ஆக்கிய பழைய குடியேற்றக்காரர்கள் நிலவுடைமையாளர்களாக ஆனார்கள். அங்கிருந்த ஒரே அரசியல் ‘பட்டா அரசியல்’ மட்டுமே. ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களுக்க்கு அரசு பட்டா பெறுதல். அதற்கென்றே கேரள காங்கிரஸ் என்னும் கட்சி உருவாகியது. இன்றும் அவ்வரசியலே அங்கே நீடிக்கிறது
இச்சூழலில் அவர்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டதே ஒழிய அவர்கள் வேலைதேடிச்செல்லவேண்டியிருக்கவில்லை. ஆனால் அங்கே தோட்டங்களில் குடியேறிய தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் கல்வி முதலிய எதிலுமே எவ்வகையிலும் முன்னேறாமல் முழுக்கமுழுக்க குடியில் மூழ்கி தேங்கிக்கிடந்தனர். இன்றும் அவ்வாறுதான் இருக்கிறார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகளைத் தேடிச்செல்லமுடியவில்லை. அதற்கான கல்வியோ விழிப்புணர்வோ இல்லை.
சென்ற இருபதாண்டுகளாகத்தான் அவர்கள் தோட்டங்களைவிட்டு வெளியே வந்து வேலைகளுக்குச் செல்கிறார்கள். காரணம் தோட்டத்தொழிலில் உள்ள தேக்கநிலை.வளைகுடாக்களுக்கு மிகச்சிறிய அளவில் சிலர் செல்கிறார்கள். மலேசியா சிங்கப்பூருக்கு எவரும் செல்வதில்லை.
ஆனால் பிற கேரளநிலப் பகுதிகளில் இருந்து மலேசியா சிங்கப்பூர் குடியேற்றம் மிக அதிகம். கோழிக்கோடு முஸ்லீம்கள் ம்லேசியாவுக்கு வியாபாரம்செய்யச் சென்றிருக்கிறார்கள். மகாதிர் முகமதுவின் முன்னோர் அப்படிச் சென்றவர்களே. மலேசியாவுக்கு மையநில கேரளத்தில் இருந்து ஏராளமாக குடியேறியிருக்கிறார்கள். என்.என்.பிள்ளையின் ஞான் என்னும் சுயசரிதை அதை விரிவாகப்பேசுகிறது. சிங்கப்பூர் உருவானபோது மையகேரள இந்துக்களும் கிறித்தவர்களும் நிறைய குடியேறினர்.
இதையெல்லாம் ஆராய இருநாவல்கள் முக்கியமானவை. இடுக்கி மலைப்பகுதிக் குடியேற்றங்களைப்பற்றி எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய விஷகன்னி. [தமிழில் வந்துள்ளது.குறிஞ்சிவேலன் மொழியாக்கம் ] விஷக்கன்னி என அவர் அந்த நிலத்தை சொல்கிறார். இன்னொன்று ,மலேசியா- சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பான அவகாசிகள். விலாஸினி [எம்.கே.மேனோன்] எழுதிய இந்த 4000 பக்க நாவல் மலேசிய- சிங்கப்பூர் வரலாற்றின் பின்னணியில் மலையாள வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு மகத்தான பேரிலக்கியம் இது. மலேசியா சிங்கப்பூர் சார்ந்து இதுவரை வந்த பிற படைப்புக்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் குவித்து வைத்தால்கூட விலாசினியின் படைப்புக்கு இணையாகாது
ஜெ
***
***