சுராவும் சுஜாதாவும்

sura

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெ

சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழைத் தொடங்கும்போது நீங்கள் அதனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். சுஜாதாவுக்கு காலச்சுவடு இதழின் முதல் இதழை சு.ரா அனுப்பி கருத்து கோரினார் என்று இணையத்தில் ஒரு விவாதம் நிகழ்கிறதே அதைப்பற்றி உங்கள் தரப்பு என்ன?

சுந்தர்ராஜன்

kala

அன்புள்ள சுந்தர்ராஜன்,

காலச்சுவடு முதலில் சுந்தர ராமசாமி பொறுப்பில் வெளிவந்தபோது அதனுடன் மிகநெருக்கமான தொடர்பில் இருந்தேன். அதற்காக நிறைய பணியாற்றினேன். அதில்வெளிவந்த பிளாக்குகள் [படங்கள்] நான் சேகரித்து அளித்தவை. பலரை சந்தித்து எழுத்துக்களை வாங்கி வந்தேன். பல பெயர்களில் அதில் எழுதினேன். காகங்கள் என்ற பேரில் ஆலோசிக்கப்பட்டு பின்னர் அது காலச்சுவடு என்றானது. அட்டையில் முன்னோடியான தமிழ் இலக்கியவாதிகளின் பெயர்கள் மட்டுமே இருக்கவேண்டுமென திட்டமிடப்பட்டு க்ரியா ராமகிருஷ்ணன் ஆலோசனையின்பேரில் படமாக அது மாறியது.

சுந்தர ராமசாமிக்கு சுஜாதா மீது மதிப்பும் நிராகரிப்பும் இருந்தது. மதிப்பு, அவர் ஒரு நல்ல நடையாளர், சிறுகதையின் வடிவத்தை சிறப்பாக அடைந்தவர், சித்தரிப்புத் தொழில்நுட்பத்தில் சிறந்தவர் என்பதனால்.அக்கருத்தை சுரா பலரிடம் சொல்லியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்றும் நினைக்கிறேன்.

என் கருத்து இன்றும் அதுவே. ஆனால் கதைத் தொழில்நுட்பத்திற்கு அப்பால் தனக்கெனத் தேடல் இல்லாமலிருப்பதும், உணர்வுரீதியான ஒட்டுதலின்மையும் சுஜாதாவின் கதைகளை உள்ளீடற்றவையாக ஆக்குகின்றன என்பதே அன்றும் இன்றும் என் கருத்து. விதிவிலக்கு ஸ்ரீரங்கம் பின்னணியில் எழுதப்பட்ட ‘மாஞ்சு’ போன்ற சிலகதைகள். என் முதல் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையிலும் அதையே சொல்லியிருக்கிறேன்

ஆனால் வணிக எழுத்தின் முன்விசையாக, எளிய மலினமான வாசிப்பை பெருக்குபவராக சுஜாதா இருக்கிறார் என்பதும் அவ்வெழுத்தின் ஓர் அடையாளம் அவர் என்பதும் சுஜாதாவை சுந்தர ராமசாமி நிராகரிக்கக் காரணமாக அமைந்தன.

இலக்கியம், வணிக எழுத்து என்னும் இருமுனைகள் தெளிவாக விலகியிருந்த அச்சூழலில் தமிழவன், ராமசாமி , கிருஷ்ணசாமி போன்றவர்களால் நடத்தப்பட்டு பெங்களூரிலிருந்து வெளிவந்த படிகள் இதழ் சுஜாதாவை நேர்காணல் செய்து வெளியிட்டது.  தூய இலக்கியம் போன்ற பிடிவாதங்களில் இருந்து விலகி வணிக இலக்கியம், வணிகசினிமா, அரசியல்நிகழ்வுகள் போன்றவற்றையும் அறிவுஜீவித்தளத்தில் ஆராயவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்த சிற்றிதழ் அது.அதேசமயம் அந்த  நேர்காணல் இலக்கியத்தின் தரப்பிலிருந்துகொண்டு வணிக எழுத்தை ஆராயும் கோணம் கொண்டது சுஜாதாவை குற்றம்சாட்டும் கோணத்தில் வினாக்களைத் தொடுக்க சுஜாதா ஒருவகை சமாதானங்களையே அதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

1987 ல் சுந்தர ராமசாமி சுஜாதாவை பெங்களூரில் ஒரு விழாவில் நேரில் சந்தித்தார். அவர்களுக்கிடையே நிறைய உரையாடல் நிகழ்ந்தது. சுந்தர ராமசாமி படிகள் பேட்டி பற்றி சொல்லும்போது அதில் சுஜாதாவின் சிறுகதைகளைப் பற்றிய நல்ல மதிப்பீடும் இருந்திருக்கலாம் என்றார். அது சுஜாதாவை மகிழ்வித்தது. சுந்தர ராமசாமியிடம் ஓர் அணுக்கம் அவருக்கு ஏற்பட்டது

“சரியான லொட லொட… பேசிண்டே இருக்கார்” என்று சுந்தர ராமசாமி சுஜாதா பற்றி என்னிடம் சொன்னார். “ஓரளவு வாசிச்சிருக்கார். எல்லாம் ஜான் அப்டைக், கர்ட் வேன்காட் டைப் ரைட்டிங். சீரியஸா வாசிக்கிற ஆள் இல்லைன்னு தோணித்து”. அப்போது ஒரு சிற்றிதழ் நடத்தவேண்டுமென்ற தன் ஆசையை சுந்தர ராமசாமி சுஜாதாவிடம் சொன்னார். அது இலக்கியம் – அரசியல் சிந்தனை- தத்துவம் ஆகிய மூன்றுக்குமான இதழ் என்பது அவருடைய கற்பனை.

sujatha

என்னிடம் சுந்தர ராமசாமி சொன்னதைக்கொண்டு பார்த்தால் சுஜாதா அவ்விதழை நடத்த சுந்தர ராமசாமியுடன் தானும் சேர்ந்துகொள்ள விரும்பினார். தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழலுக்குள் புகுந்து ஒர் இடத்தை அடைய தன்னால் முடியுமென அவர் நம்பினார். அதற்குக் காரணம் படிகளின் சீண்டல். ஆனால் சுந்தர ராமசாமி அதை தவிர்த்துவிட்டார். என்னிடம் “அது சரியா வராது” என்றார். அதை சுஜாதாவிடம் சொல்லவில்லை. ஒன்றுமே சொல்லவில்லை.  அது சுந்தர ராமசாமியின் பாணி. “அவர் இலக்கியம் சார்ந்த நோக்கம் கொண்டிருக்கலாம் இல்லையா?” என்று நான் கேட்டேன். “நோக்கம் என்னவா இருந்தாலும் அவர் கமர்ஷியல் ரைட்டிங்கோட சிம்பல்” என்றார் சுந்தர ராமசாமி

முதல் இதழ் சுஜாதாவின் பார்வைக்காக அனுப்பப் பட்டது என நான் உறுதியாகச் சொல்லமுடியும். ஏனென்றால் அந்தக்குறிப்பு தட்டச்சு செய்யப்பட்டபோது நானும் இருந்தேன். மொத்தம் ஏழு பிரதிகள் வெவ்வேறுபேருக்கு சுந்தர ராமசாமியின் குறிப்புடன் அனுப்பப் பட்டன. அன்று சுந்தர ராமசாமிக்கு ஓரளவு அணுக்கமாக இருந்த அப்துல் ரகுமான், சுந்தர ராமசாமி பேரைக்கேட்டாலே சீறிக்கொண்டிருந்த நகுலன் என பலருக்கும் அனுப்பப் பட்டது. அப்படி அனுப்பப் பட்ட எவருமே பதில் எழுதவில்லை. அசோகமித்திரன் கூட.

ஆனா நான் அறியாத முதல்பட்டியலிலேயே க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவருக்கும் இதழ் அனுப்பப் பட்டிருந்தது. இருவரும் எதிர்வினையாற்றினர். இருவருமே அதில் எழுத விரும்பினார்கள். செல்லப்பா பின்னாளில் சுபமங்களாவில் வெளிவந்த இலக்கிய அழகியல் பற்றிய நீண்ட கட்டுரையை அனுப்பியிருந்தார். .சு.,நா.சு ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். அது கட்டுரையே அல்ல. ஒர் எளிய குறிப்பு.நகுலன் நக்கலாக ஏதோ சொன்னதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் மூன்று இதழ்களுக்குப்பின் அவர் ஒரு கதை அனுப்பியிருந்தார். அது பிரசுரிக்கும் தகுதிகொண்ட கதை அல்ல. ஒரு காமாசோமா குறிப்பு. எதையும் சு.ரா பிரசுரிக்கவில்லை. அவை மீண்டும் ஒரு வழக்கமான சிற்றிதழாக காலச்சுவை மாற்றிவிடும் என நினைத்தார்.

சுஜாதா சுந்தர ராமசாமிக்கு கடிதம் போடவில்லை. ஆனால் கணையாழியில் ஒரு குறிப்பு எழுதினார். சிற்றிதழில் வரும் அச்சுப்பிழைகளைப்பற்றி சுந்தர ராமசாமிக்கு மிகப்பெரிய மனக்குறை இருந்தது. ஆகவே காலச்சுவடு முதல் இதழை சுந்தர ராமசாமி அவரே அமர்ந்து வரிவரியாக மெய்ப்பு பார்த்தார். நான் நேரில் வந்து ஒருமுறை மெய்ப்பு பார்த்தேன். ராஜமார்த்தாண்டன் ஒருமுறை மெய்ப்பு பார்த்தார். அன்றெல்லாம் கட்டை அச்சுமுறையில் அச்சுப்பிழை இல்லாது வரவேண்டுமென்றால் அச்சகத்தில் சென்று அமர்ந்திருக்கவேண்டும்.

இதழில் அனேகமாக அச்சுப்பிழைகளே இல்லை. ஆனால் அட்டையிலோ உள்ளட்டையிலோ தலைப்பில் ஒரு சிறு அச்சுப்பிழை வந்துவிட்டது. சுஜாதா அதைச் சுட்டிக்காட்டி எழுதினார்.’சுந்தர ராமசாமி நடத்தும் காலச்சுவடு ‘காலண்டிதழ்’ கிடைக்கப்பெற்றேன் என்று எழுதியிருந்தார் என நினைவு.சுஜாதாவின் கடுப்பு புரிந்தாலும் சுந்தர ராமசாமி கடுமையாக கோபம் கொண்டார். அந்தப்பூசல் தொடர்ந்து மௌனமாக நீடித்தது.

காலச்சுவடு மலர் [அதாவது அவ்விதழ் நின்றுவிட்டபின் அனுப்பப் பட்ட ஓராண்டு சந்தாக்களுக்கு பதிலாகவும் பெறப்பட்ட படைப்புகளை தொகுத்து அளிப்பதாகவும் தயாரிக்கப்பட்ட தொகுப்பு] வெளிவந்தபோது சுபமங்களாவில் சுஜாதா நீண்ட மதிப்புரை ஒன்றை எழுதினார். அது வழக்கமாக இங்கே இன்றும் வணிக எழுத்தில் ஊறியவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லும் கருத்துக்கள்தான்.

சுந்தர ராமசாமி அதற்கு சுபமங்களாவில் கடுமையாக பதிலுரை எழுதினார். ’இலக்கிய வெளியீட்டில் பிழைகள் நிகழலாம். ஆனால் வணிக எழுத்துக்களுக்கு எதிரான முயற்சியை வணிக எழுத்துக்களின் நாயகனே தராசுடன் வந்து அமர்ந்து மதிப்பிடுவது வேறெங்கும் நிகழாது’ என்று எழுதினார் [நினைவில் இருந்து. கட்டுரையின் தலைப்பு சுஜாதாவின் வெளிநாட்டுக்குடைஎன நினைக்கிறேன்  ]

அதற்குள் இதெல்லாம் வரலாறாக விவாதிக்கப்படுகிறது என்பது ஆழ்ந்த சோர்வை உருவாக்குகிறது. அப்படியென்றால் நானெல்லாம் வயோதிகனா இனிமேல்?

ஜெ

முந்தைய கட்டுரைசீ முத்துசாமி நேர்காணல் -நவீன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49