இடதிலக்கியம் – கடிதங்கள்

muruka

இடங்கை இலக்கியம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் கட்டுரை அற்புதமான அறிமுகத்தை அளிக்கிறது

இரா முருகவேள் – தங்கள் வரிசையில் வரும் காலங்களில் இடம் பெற க் கூடும்

அன்புடன்

மணிகண்டன்

***

அன்புள்ள மணிகண்டன்

முருகவேளின் மிளிர்கல் டான்பிரவுன் பாணியில் கொஞ்சம் உள்ளூர்நிறம் சேர்த்து எழுதப்பட்ட சுவாரசியமான நாவல் என்று தோன்றியது. ஆங்காங்கே பொதுவான அரசியல் பேசப்பட்டுள்ளது. அதைவைத்து அந்நாவலை இடதுசாரிப்படைப்பு என்று எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அவர் இடதுசாரி இயக்கங்களில் ஈடுபாடுகொண்டவர் என அறிவேன். ஆனால் நான் புனைகதைகளை மட்டுமே கருத்தில்கொண்டேன்

சமகால நாவல்களை நான் முழுமையாக வாசிக்கவில்லை. முருகவேளைக் குறித்து முழுமையாக ஒரு கருத்தைச் சொல்லவோ அல்லது அனைவரையும் கருத்தில்கொண்டு பேசவோ எனக்கு இப்போது முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்

ஜெ

***

அன்புள்ள ஜெ

நீங்கள் முற்போக்கு [இடதுசாரி] எழுத்துக்கு அளித்துள்ள மூன்றுவரையறைகளும் ஒட்டுமொத்தமாக முற்போக்கு எழுத்தின் வரலாற்றையே ஏறத்தாழ முழுமையாக, அதேசமயம் உங்கள் அழகியல்பாணி விமர்சனங்களுடன் சொல்லியிருக்கும் விதமும் அற்புதமான பணி. முற்போக்குத்தரப்பில் இப்படி ஒரு கறாரான முழுமையான மதிப்பீட்டை எவரேனும் எழுதமுடியுமா என்றே தெரியவில்லை. அந்திமழையில் இருந்த பிறகட்டுரைகள் எல்லாமே எந்த கவனமும் இல்லாமல் போகிறபோக்கில் எழுதப்பட்டவை. உங்கள் கட்டுரையில் உள்ள உழைப்பு, கவனம் ஆகியவை மிகமிக முன்னுதாரணமானவை

ஆனால் நீங்கள் பாரதிநாதனின் தறியுடன் நாவலை விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். அதைச் சொல்லியிருக்கவேண்டும். அது ஒரு முக்கியமான முயற்சி

சண்முகசுந்தரம்

***

அன்புள்ள சண்முகசுந்தரம்,

நன்றி. தறியுடன் நாவலை நான் வாசித்தேன். ஆரம்பத்திலிருந்த மெல்லிய ஆர்வம் கூட படிப்படியாக கரைந்து போய் வெறும் ஆவணமாக சலிப்பூட்டிச்சென்றது. மேலும் இந்தக்கட்டுரை இடதுசாரி எழுத்தின் அத்தனை பேரையும் சொல்லிச்செல்வதும் அல்ல. ஆகவே ஒரு தயக்கத்திற்குப்பின் விட்டுவிட்டேன்

ஜெ

***

ஜெ

இடதுசாரி எழுத்தில் புதியபடைப்பாளிகள் என எவரும் பெரிதாகக் கண்ணுக்குப்படவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். சம்சுதீன் ஹீராவின் மௌனத்தின் சாட்சியங்கள் புதினத்தைக் கருத்தில்கொள்ளவில்லையா?

ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்குமார்

சம்சுதீன் ஹீராவின் மௌனத்தின் சாட்சியங்கள் நாவலை இடதுசாரி எழுத்து என்று அத்தரப்பு கருதுவது எப்படியாவது ஆள்பிடித்துச்சேர்த்தால்போதும் என்ற அவர்களின் பரிதாபநிலைக்குச் சான்று. அதில் எந்தவகையிலும் இடதுசாரி அரசியல், தத்துவ நோக்கு இல்லை. அதிலுள்ளது மிக எளிய வஹாபிய அரசியல் மட்டுமே. இடதுசாரி போர்வையில் அது முன்வைப்பது மதவெறியை

ஜெ

கீரனூர் ஜாகீர் ராஜா
கீரனூர் ஜாகீர் ராஜா

அன்புள்ள ஜெமோ,

 

 

இடங்கை கட்டுரையில் நிறைய இடதுசாரி எழுத்தாளர்கள் பெயர் இடம்பெறவில்லை.

 

நிறைய எழுத்தாளர்கள் இரா.முருகவேள், கீரனுர் ஜாகிர் ராஜா, பவா போன்றவர்கள் எந்த வகையில் வருவார்கள்??

 

ராஜீவ்

 

அன்புள்ள ராஜீவ்

 

கீரனூர் ஜாகீர்ராஜா முக்கியமான எழுத்தாளர். ஆனால் இடதுசாரி எழுத்தாளரா? அவ்வரையறைக்குள் வருவாரா? இதை உடனடியாக முடிவுசெய்ய முடியவில்லை.

 

மேலும் இம்மாதிரி இலக்கிய மதிப்பீடுகளை ஒரு பெரிய தொடர்விவாதம் மூலமே காலப்போக்கில் உருவாக்கமுடியும். மூத்த எழுத்தாளர்களைப்பற்றி நாம் ஏற்கனவே பேசியிருப்போம். ஆகவே அதில் சிக்கல் இல்லை.

 

மேலும் நீங்கள் ‘ஏராளமான’ என்னும்போது பீதி எழுகிறது. நான் ஓரளவு எழுதிவிட்ட அனைவரையுமே கணக்கில்கொண்டிருக்கிறேன். நீங்கள் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாரும் இலக்கியவாதிகள் என நினைக்கிறீர்கள்போல.

ஜெ

 

இடங்கை இலக்கியம்

கீரனூர் ஜாகீர்ராஜா இணையதளம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50