46. கான்நுழைவு
இரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து அடுக்கினர். அரிசியும் வெல்லமும் கிழங்குகளும் முதலிலும் காய்கறிகள் இறுதியிலுமாக அடுக்கப்பட்டன. நெய்க்குடங்களை வைப்பதற்கு முன் அவற்றின் மூடி தேன்மெழுகால் இறுக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். தேன் நிறைந்த குடுவைகளையும் யவன மது நிறைக்கப்பட்ட பீதர்நாட்டு வெண்களிமண் கலங்களையும் கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தான் அஸ்வகன். அவர்கள் உரக்கக் கூவி ஆணையிட்டு சிரித்து அத்தருணத்தை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். சம்பவன் அடுமனைக்குள் வாழ்பவர்களுக்கு எந்தப் பயணமும் கேளிக்கைதான் என நினைத்துக்கொண்டான்.
மதுக்கலங்கள் இறுக மூடப்பட்டிருந்தாலும்கூட ஒவ்வொன்றிலிருந்தும் மெல்லிய மணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அந்த மணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து இனிய புதிய மணம் ஒன்றை உருவாக்கின. அவை அத்தனை மென்மையாக இருப்பதனால்தான் இயல்பாக ஒன்றுகலக்க முடிகிறது என்று எண்ணிக்கொண்டான். குறைவாக இருப்பதன் பெயர் மணம். மிகையே கெடுமணம் என்ற வரி நினைவிலெழுந்தது. யவன மது நிறைக்கப்பட்டு தேன்மெழுகாலும் அரக்காலும் நன்கு மூடப்பட்ட களிமண் கலத்திற்குள் இருந்து எப்படி அந்த மணம் எழுகிறதென்பதை தன் மூக்கை வைத்து பார்த்தான். மூக்கை அதன் மேல் வைக்கும்போது அந்த மணமே ஒரு உளமயக்குதானோ என்று தோன்றியது. அதில் யவன மது இருப்பது தெரியாவிட்டால் அந்த மணம் சித்தத்திற்கு தெரியாதோ? ஆனால் அப்படி அல்ல என்று மீண்டும் அவன் மூக்கு சொன்னது. மிகத் தொலைவில் கேட்கும் குரல்போல மிக மெல்ல வந்து காற்றில் தொட்டு மறையும் குழலிசைபோல அந்த மணம்.
அவன் முகர்ந்து பார்ப்பதைக் கண்ட விகிர்தர் புன்னகையுடன் “மது அருந்தியவர்களைப்போலவே கலங்களாலும் அதன் மணத்தை மறைக்கமுடியாது” என்றார். “உள்ளிருக்கும் எந்த மணமும் வெளிவந்தே தீரும். மணத்திற்கு பல்லாயிரம் வாயில்கள்” என்றார் சுந்தரர். அவன் யவன மதுவை ஒரே ஒருமுறை ஒரு சிமிழ் அளவுக்கு நாவில் விட்டு சுவைத்திருந்தான். பெருவணிகன் ஒருவன் சுவைத்து விட்டுச்சென்ற கோப்பையில் எஞ்சியது அது. அதற்குமுன் பலமுறை கலிங்க மதுவை அருந்தியதுண்டு. அது வாள் என எண்ணங்களுக்குள் பாய்ந்து பலநூறு துண்டுகளென அதை வெட்டிச் சிதறடித்தது. அலையில் நீர்ப்பாவை என சித்தம் நெளிந்தது.
ஆனால் யவன மது, மது கலக்கப்பட்ட பழச்சாறென்றே தோன்றியது. நாவில் அது கடிக்கவில்லை. தொண்டையை கரிக்கவும் இல்லை. உடலுக்குள் சென்றதும் நீர்த்துளி விழுந்த கொதிக்கும் எண்ணைபோல உடல் உலுக்கி எதிர்வினையாற்றவில்லை. அந்த மணம் தன் வாயில் எஞ்சியிருப்பதற்காக பிறிதெதையும் உண்ணாமல் மூச்சை மூக்கு வழியாக வெளிவிட்டுக்கொண்டிருந்தான். தனக்குள் என்ன நிகழ்கிறதென்று பார்த்தான். எதுவுமே நிகழவில்லை. நோக்கிச் சலித்தபின் சூழ்ந்திருந்த பிற அடுமனையாளர்களையும் மிக அப்பால் கேட்டுக்கொண்டிருந்த விறலியின் குரலையும் நோக்கி சித்தத்தை திருப்பினான். விறலி தேவயானியின் கதையை சொல்லிக்கொண்டிருந்தாள். கசன் தேவயானியை பார்க்கும்பொருட்டு கையில் தாமரை மலருடன் சுக்ரரின் குடிலுக்குள் நுழையும் காட்சி.
பாய்ந்து வந்த புலிகளை ஒரு கையால் அடித்து வீழ்த்தி மறுகையில் இருந்த தாமரை இதழ்குலையாமல் உள்ளே சென்றான். இதழ்குலையாத தாமரை என்று அவள் பாடினாள். ‘அந்தத் தாமரை இதழ்குலைந்ததே இல்லை. இதழ்குலையாத தாமரை கொண்டவர்களுக்கு துயரமில்லை. துயரற்றவர்களுக்கு காதலும் இல்லை.’ நெடுநேரம் அவள் பாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. உடலில் மெல்லிய அலுப்பும் தசைகளில் தளர்வும் எழுந்தது. அவள் மிகமிக இனிமையாக பாடிக்கொண்டே இருந்தாள். பல நாட்களாகிவிட்டன. மரங்கள் வளர்ந்து இலைதழைத்தன. வெளியே மழை பெய்து வெயில் எழுந்து இருண்டு மீண்டும் புலர்ந்தது. அவள் முகம் மிக அருகே வந்துவிட்டதாகத் தோன்றியது. பிறகு அது அந்த மதுமயக்கால்தான் என்று உணர்ந்து, அவ்வுணர்வை அடைந்ததுமே தன்னை விடுவித்துக்கொண்டான்.
மீண்டும் அந்த இனிய உணர்வை அடையவேண்டுமென முயன்றபோது சித்தம் முற்றிலும் விழித்துக்கொண்டது. மது குருதியில் சிறிய குமிழிகளாக மிதந்து அலைந்து ஒவ்வொன்றாக வெடித்து மெல்லிய வெம்மையுடன் கலந்து மறைந்தது. பின்னர் யவன மதுவின் மெல்லிய மணம் அவனுக்கு இதழ்நலுங்காத தாமரை என்ற சொல்லாகவே நினைவில் நின்றது. அது அலைபாயும் துலாத்தட்டுகளுக்கு நடுவே அசையாமல் நின்றிருக்கும் முள் போலும்.
வலவன் இரு கைகளிலும் இரு பெரிய மதுக்கலங்களை தூக்கிக்கொண்டு வந்து வண்டியின் பின்பக்கம் வைத்துத் தள்ளி உள்ளே செலுத்தியபின் அவனை நோக்கி “முதல் வண்டியில் நீ ஏறிக்கொள்” என்றான். மதுக்கலங்களின் எடையை அறிந்திருந்த சம்பவனுக்கு அந்தக் காட்சியே தசைகளை இழுபட்டுத் தெறிக்கச் செய்தது. “ஏறு” என்றான் வலவன். விழித்துக்கொண்டு “நானா?” என்று சம்பவன் கேட்டான். “ஆம், அங்கு இன்று சமைக்கவேண்டுமல்லவா?” என்றான். சம்பவன் “என்னை தாங்கள் சரியாக நினைவுகூரவில்லையென்று நினைக்கிறேன்” என்றான். “மூடா, நீ கலிங்க நாட்டுச் சம்பவன்… அதற்குமேல் உன்னிடம் நினைவுகூர என்ன உள்ளது?” என்றான் வலவன்.
மேலும் தயங்கி “ஆசிரியரே, நான் அடுமனையாளன். ஆனால் என்னை கலங்களைக் கழுவும்படி ஆணையிட்டீர்களல்லவா?” என்றான். வலவன் முகம் மலர்ந்தது. “ஆம், எந்த அடுமனைக்குச் சென்றாலும் முதலில் அங்குள்ள கலங்களைக் கழுவுவதே அடுதிறவோன் செய்யவேண்டியது. அப்போதுதான் அந்த அடுமனையின் இயங்குமுறையென்ன என்று உனக்குத் தெரியும். சொல், இங்கு மிகுதியும் எந்தக் கலத்தில் உணவு சமைக்கப்படுகிறது?” சம்பவன் “செம்புக் கலங்கள்” என்றான். “அரிதாக பித்தளைக் கலங்கள். சிறிய சமையல்களுக்கு மண் கலங்கள். வெம்மைநின்று வற்றியாறவேண்டிய உணவுகளுக்கு கல்லுருளிகள். இரும்புக் கலங்களும் ஓரிரண்டு உள்ளன.”
வலவன் எடைமிக்க கலங்களை எடுத்து உள்ளே வைத்தபடி அவனை நோக்காமல் “எந்தக் கலம் அதிகமாக அடிப்பற்று கொண்டுள்ளது? எது கருக்குகிறது?” என்றான். மலர்ந்த முகத்துடன் அருகே சென்று ஒரு குடுவையை எடுத்துவைத்த சம்பவன் “ஆம், நான் அவற்றை உற்று நோக்கினேன். இங்கே அடிப்பற்று மிகுதி. இரும்புக் கலங்களின் வெளிவட்டத்தில் எப்போதும் உணவு கருகியிருக்கிறது. செம்புக்கலங்களின் அடிவட்டத்தில் பற்று படிந்துள்ளது…” என்று சொல்லத்தொடங்க வலவன் குறுக்கிட்டு “இந்த அறிதல் உனக்குள் இருந்தால் மட்டுமே அடுதொழில் கைவரும்” என்றான். “ஆம்” என்றான் சம்பவன். “ஏன் இங்கே அடிப்பற்று மிகுதி?” என்றான் வலவன். “இங்கே உள்ள விறகுகள் எளிதில் எரியும் தைல மரங்களுடையவை. அனல்நிற்கும் செறிமர விறகுகள் தேவை. அல்லது நல்ல கரி” என்றான் சம்பவன்.
“நன்று!” என புன்னகைத்த வலவன் கயிறு சுற்றப்பட்ட யவன மதுப்புட்டிகளை பெட்டியில் அடுக்கி “இவை கீசகருக்கானவை. ஈரப்பஞ்சால் பொதியப்பட்டுள்ளன. சென்றதுமே குளிர்நீரோடைக்குள் இறக்கி வைக்கவேண்டும்” என்றான். சம்பவன் “எனது சமையல் தங்களுக்கு உகக்கவில்லையோ என்று தோன்றியது, ஆசிரியரே” என்றான். தன் பெரிய கையை அவன் தோளில் வைத்து இழுத்து மார்புடன் அணைத்து வலவன் சொன்னான் “அடுதொழில் என்பது ஒன்றிற்கொன்று மாறுபட்ட சுவைகள்கொண்ட பொருட்களை உகந்த முறையில் கலப்பதுதான். உப்பையும் புளியையும் காரத்தையும் கலக்கத் தெரிவது மொழியின் இலக்கணத்தை கற்றுக்கொள்வதுபோல. அதன்பின் சிறிய நுட்பங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவை முடிவிலாமல் கற்கத் தகுந்தவை. உன் கைக்கலவை நன்று.”
சம்பவன் முகம் மலர்ந்தான். “நான் அங்கிருந்தோரின் சுவையறிதலைத்தான் பார்த்தேன். என் நாவைவிட உண்டு நிறைந்த அவர்களின் நாக்கு கூறுவதே மேலும் சரியானது” என்றான் வலவன். “ஆகவேதான் புளிக்காய்ச்சல் செய்யச்சொன்னேன். நிறைந்த வயிறுகொண்டவர்களின் நாக்குக்கு வேறெந்த சுவையும் உறைக்காது.” சம்பவன் கண்கலங்கிவிட்டான். “அவ்வளவுதான் என நினைக்கிறேன். ஒருமுறை அனைத்தையும் பார்த்துவிடு” என வலவன் உள்ளே சென்றான். சம்பவன் மறுபக்கம் நோக்கித் திரும்பி கண்களை விரல்களால் அழுத்தித் துடைத்தான்.
சுபாஷிணி கால்சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் ஓடிவந்து பாவாடைமுனையை பிடித்தபடி படிகளில் துள்ளி இறங்கினாள். அப்போது தன்னை எவரும் பார்த்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையும் பல்லாயிரம்பேர் பார்க்கவேண்டும் என்ற விழைவும் அவளிடமிருந்தது. சிலம்பு ஒலிக்க ஆடை சரசரக்க அப்படி இறங்கவேண்டும் என்பது அவள் இளமைமுதலே எண்ணிவந்த விழைவு. இறுதிப்படிக்கு சென்றபின் மீண்டும் மேலே வந்தாள். மேலாடையை சீரமைத்தபின் மீண்டும் உடலை நெளித்து தோள்களை அசைத்து நடந்துவந்து வேறு ஒருமுறையில் ஆடைநுனி பற்றி படிகளில் இறங்கினாள். அவளே மகிழ்ந்து சிரித்துக்கொண்டு மீண்டும் படி ஏறலாமா என எண்ணியபோது பிரீதையை கண்டாள். அவள் அப்பால் கண்களைச் சுருக்கி நோக்கியபடி நின்றிருந்தாள்.
சுபாஷிணி தலைகுனிந்து நின்றபின் திரும்பிவிடலாமா என மேலே பார்த்தாள். பிரீதை “என்ன செய்கிறாய்?” என்றாள். அப்போது அவளை சிறுக்க வைக்கும் வினா அதுவே என அவள் நன்கறிந்திருந்தாள். ஆனால் அந்த வினா அவளை பொருந்தாத எவரோ தொட்டதுபோல சினந்து சீறச்செய்தது. பிரீதையின் விழிகளை நோக்கியதுமே அவளை சிறுக்க வைப்பதென்ன என்று தெரிந்தது. “தேவி என்னிடம் அவர்களுக்குரிய பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டுவிட்டனவா என்று பார்த்துவரச் சொன்னார்” என்றாள். பிரீதையின் விழிகளில் சினம் வந்து மறைந்தது. “இளவரசியா? அவர்கள் இங்கிருந்தா கிளம்புகிறார்கள்?” என்றாள்.
அந்த நச்சுமுள்ளை உணர்ந்தாலும் அதை அறியாதவள்போல “இல்லை, சைரந்திரி தேவி” என்றாள் சுபாஷிணி. “பேரரசியுடன் அவர்கள் பல்லக்கில் செல்லவிருக்கிறார்கள் அல்லவா? அனைத்தும் உடனிருக்கவேண்டுமே?” பிரீதையின் விழிகளில் மீண்டும் சினம் வந்து அணைந்தது. விராடபுரியின் வரலாற்றில் பேரரசியுடன் எவரும் பல்லக்கில் ஏறியதில்லை. சேடியரைச் சுமக்க சூதர்குலத்து போகிகள் ஒப்புக்கொண்டதில்லை. அவளுடைய உள்ளம் தயங்குவதை உணர்ந்ததுமே மேலும் முன்னேறி “தேவியும் இன்று அருமணி நகைகளும் பீதர்நாட்டுப் பட்டாடைகளும் அணிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் பல்லக்கில் ஏறுவதுவரை நானும் ஆடைபற்றி பின்செல்லவேண்டும்…” என்றாள்.
“சேடிக்கு ஒரு சேடி. நன்று” என்று தனக்குள் என முனகிக்கொண்ட பிரீதை “சென்று பார்! எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன்” என்றாள். “எனக்கென்ன தெரியும்…? வந்து காட்டுங்கள்” என்றபின் அவளை நோக்காமல் பாவாடையை சற்றே தூக்கிப்பிடித்தபடி தலைதூக்கி சுபாஷிணி முன்னால் சென்றாள். இடையை அசைத்தபோது அது ஓரிரு முறைக்குப்பின் மறந்துபோய்விட இயல்பாக தாவிச்சென்றாள். தன் இடை இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாமோ என எண்ணிக்கொண்டாள். பிரீதை அவளுக்குப் பின்னால் வருவதை காலடியோசையாக கேட்கமுடிந்தது.
அவளருகே வந்த பிரீதை “வெள்ளிச் சிலம்புகளை சேடியர் அணிய இங்கே நெறி இல்லை” என்றாள். “பட்டுப்பாவாடை அணிய மட்டும் ஒப்புதல் உண்டோ?” என்றாள் சுபாஷிணி. பிரீதை வாயை அழுத்திக்கொண்டாள். “இதோ, தோடு அணிந்துள்ளேன். மணிமாலை, இடையில் சரமேகலை. இதெல்லாம் சேடியர் அணியலாமா?” பிரீதை தலையை திருப்பிக்கொள்ள “எனக்கு இதை அளித்தவர் தேவி… நீங்கள் அவர்களிடமே கேட்கலாம்” என்றாள் சுபாஷிணி. பிரீதை கடுகடுப்புடன் “பார், அரசிக்குரிய அனைத்தும் சித்தமாக உள்ளன. செல்லும் வழியில் அருந்துவதற்குரிய இன்னீர், பழங்கள். ஆடைகள் அந்தப் பிரம்புக்கூடையில் உள்ளன… கலங்கள் அனைத்தும் தொடர்ந்துவரும் வண்டிகளில் ஏற்றப்பட்டுள்ளன…” என்றாள். சுபாஷிணி “ஒவ்வொன்றாக சொல்லுங்கள், நான் சரிபார்க்கிறேன்” என்றாள்.
ஒன்றுக்கு இருமுறையாக அவள் பொருட்களை சரிபார்த்தாள். “நான் செல்லலாமா? எனக்கு அங்கே பணிகள் மிகுதி” என்றாள் பிரீதை. புன்னகையுடன் முகத்தை அவளுக்குக் காட்டாமல் நின்றிருந்த சுபாஷிணி வாயை இறுக்கியபடி திரும்பி “தேவி தன் அறையிலிருந்து அரசியின் அகத்தளத்திற்கு சென்றுவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் இருவரும் வருவார்கள். அவர்கள் வந்தபின் நீங்கள் செல்லலாம். ஏதேனும் கேட்டாலும் கேட்கக்கூடும் அல்லவா?” என்றாள். பிரீதை தலையசைத்தபின் நோக்கை விலக்கிக்கொண்டாள்.
உள்ளிருந்து அரசியின் அகம்படிச் சேடியர் வெளியே வந்தனர். அவர்கள் கொண்டுசெல்லவேண்டிய கூடைகளையும் தோல்பொதிகளையும் கையில் எடுத்துக்கொண்டு ஓரமாக நிரைவகுத்து நின்றனர். ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டும் அவ்வப்போது ஓசையெழாது சிரித்துக்கொண்டும் இருந்தனர். வண்ண ஆடைகளும் பொன்னணிகளும் அணிந்து பெரிய வலம்சரிவுக் கொண்டையில் மலர்ச்சுருள் சூடியிருந்தனர். அவர்களில் பலர் தன்னை நோக்குவதை விழியசைவால் உணர்ந்த சுபாஷிணி கொண்டையை சீரமைத்து தலையைத் தூக்கி நின்றாள். ஆனால் சற்றுநேரத்திலேயே இடை வலித்தது. எங்காவது சாய்ந்து ஒசிந்து நின்றுதான் தனக்குப் பழக்கம் என அவள் எண்ணிக்கொண்டாள்.
அரண்மனைக்குள் கொம்பு முழங்கியது. உடன் சங்கோசையும் மணிமுழக்கமும் கலந்தன. அணிச்சேடியர் உடலசைந்து ஒழுங்கமைந்தனர். அப்பால் விலகி உடல்சேர்ந்து நின்றிருந்த பல்லக்குத்தூக்கிகள் வந்து இரு நிரைகளாக நின்றனர். அவர்களை அப்போதுதான் அவள் பார்த்தாள். வெளியே செல்லும் பாதையில் காவலர்தலைவன் உரத்த குரலில் ஆணை முழக்க காவல்வீரர்கள் வலக்கையில் வேல்களுடனும் விற்களுடனும் தங்கள் புரவிகளின் கடிவாளங்களை இடக்கையால் பற்றியபடி சீரமைந்தனர். அந்த முற்றமே கல்விழுந்த குளமென அலைகொள்வதை அவள் வியப்புடன் நோக்கினாள். அங்கு வந்தபின் பெண்களை அன்றி எதையுமே தான் பார்க்கவில்லை என்பதை அதன்பின் நினைவுகொண்டாள்.
கேகயத்தின் எருதுக்கொடியுடன் இரும்புக்கவசம் அணிந்த காவல்வீரன் குறடுகள் மரத்தரையில் ஒலியெழுப்ப சீர்நடையிட்டு வந்தான். தொடர்ந்து சூதர்கள் கொம்புகளும் முழவுகளும் மணியும் சங்கும் முழக்கியபடி நடந்து வந்தார்கள். வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. அரசியின் சேடியர் மூவர் மங்கலத் தாலங்களுடன் வருவதைக் கண்டதும் சுபாஷிணி ஓடிச்சென்று வாயிலருகே நின்றாள். அரசி வருவது தெரிந்தது. அவள் கவலைகொண்டு எதையோ பேசிவந்து சற்றுமுன் நிறுத்திக்கொண்டவள்போலத் தோன்றினாள். வாயைச் சூழ்ந்து சுருக்கங்களும் கோடுகளும் இருந்தன. கண்களுக்குக் கீழே கருகிய மென்தசை வளையங்களாக இழுபட்டிருந்தது. காதோரத்திலும் முன்நெற்றியிலும் முடி நரைத்திருக்க கன்னத்தில் மென்மயிர்ப்பரவல் பொன்னிறமாகத் தெரிந்தது. முதிய பெண்களுக்கு ஏன் உதடுகள் அப்படி சற்று தொங்குகின்றன என சுபாஷிணி எண்ணிக்கொண்டாள்.
அரசிக்குப் பின்னால் இடையில் நீண்ட உடைவாளுடன் சைரந்திரி வந்தாள். அவள் விழிகள் சுபாஷிணியை வந்து தொட்டு என் பின்னால் வா என ஆணையிட்டன. ஆம் என விழியுணர்த்திய சுபாஷிணி அவர்கள் தன்னை கடந்துசென்றபோது வணங்கி நின்று பின்னர் சைரந்திரியின் பின்னால் சென்றாள். அவள் நீளாடை நெகிழ்ந்து கிடக்க அதைப் பற்றி தூக்கிக்கொண்டாள். அவர்கள் முற்றத்திற்குச் சென்றதும் காவலர்தலைவன் நீள்நடையிட்டு அருகணைந்து உருவிய வாளைத் தாழ்த்தி அரசியை வணங்கினான். பல்லக்குதூக்கிகளை நடத்தும் முதியவராகிய நிலைச்செயலர் வணங்கி “கேகயத்து மாதரசிக்கு வணக்கம். தங்கள் பல்லக்கு காத்திருக்கின்றது” என்றார். அரசி சைரந்திரியிடம் “வாடி” என்று சொன்னபின் ஏறிக்கொண்டாள்.
சுபாஷிணியிடம் திரும்பி சைரந்திரி “நீ வண்டியில் வா… அங்கே காட்டுமுற்றத்தில் என்னுடன் வந்து சேர்ந்துகொள்” என்றபின் பல்லக்கில் நுழைந்தாள். பல்லக்கு மெல்ல எழுந்து தோள்களில் மிதந்தது. பின்னர் காற்றால் கொண்டுசெல்லப்படுவதுபோல ஒழுகியது. சுபாஷிணி ஓடிச்சென்று பின்னால் நின்றிருந்த அணிச்சேடியருடன் இணைந்துகொண்டாள். “நீ அரசியின் சேடியா?” என்றாள் ஒருத்தி. “ஆம், என் பெயர் சுபாஷிணி…” என்றாள் சுபாஷிணி. “இந்த அணிகளை அரசி அளித்தார்களா?” என்றாள் இன்னொருத்தி. “ஆம்” என்றாள் சுபாஷிணி. “நன்று, விரைவிலேயே அரச மஞ்சத்துக்குச் சென்றுவிடுவாய்.” சுபாஷிணியின் உடல் குளிரில் என சிலிர்த்தது. “பலியாட்டுக்கு அரளிமாலை அணிவித்துவிட்டார்கள்” என்று ஒருத்தி சொல்ல அவர்கள் சேர்ந்து நகைத்தனர்.
அவர்கள் செல்வதற்கு மூடுதிரையிட்ட வண்டி வந்தது. ஒற்றைப்புரவி இழுத்த அவ்வண்டியில் உடல்பிதுங்கி நெரிய அமரவேண்டியிருந்தது. அப்பெண்களின் வியர்வையும் அவர்கள் அணிந்த மலர்களும் நறுமணச்சாந்தும் குழலில் இட்ட அகிலும் சேர்ந்து கெடுமணமாக ஆகி காற்றில் நிறைந்து குமட்டலெடுக்கச் செய்தன. அவள் திரைச்சீலையை சற்று விலக்கி வெளியே பார்த்தாள். மணியோசையுடன் வண்டி கிளம்பியபோது சற்று காற்று உள்ளே வந்தது. அப்பெண்கள் எவரும் வெளியே பார்க்கவில்லை. இடைவெளியே இல்லாமல் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்களின் மஞ்சத்தை அன்றி பிறிதெதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று சுபாஷிணி உணர்ந்தாள். அவர்களின் செய்திகளும் வம்புகளும் நகையாட்டும் அனைத்தும் அதைப்பற்றி மட்டுமே அமைந்திருந்தன. நகையாடல் இழிவுகொள்ளும்தோறும் அவர்கள் மகிழ்ந்து சிரித்தனர்.
அவர்களிடமிருந்து எழுந்த அந்தக் கெடுமணம் அவர்களின் சொற்களிலும் இருந்தது. அவர்களுடன் ஒருத்தியாக அங்கிருப்பதை எண்ணி அவள் கூசினாள். அதை எவரும் அறியலாகாது. ஆனால் அவள் அந்த வண்டியில் இருந்து அவர்களுடன் சேர்ந்துதான் இறங்கவேண்டும். அதை எத்தனைபேர் பார்ப்பார்கள்? வழியிலேயே ஏதேனும் சொல்லி இறங்கிவிடமுடியுமா? வேறேதாவது வண்டியில் படைவீரர்களுடன் ஏறிக்கொள்ளமுடியுமா? அது இயலாதென்று அறிந்திருந்தாள். அது அவளை நீள்மூச்செறியச் செய்தது. வேறுவழியில்லை என்றானதும் வெளியே தெரிந்த நகர்க்காட்சிகளை நோக்கலானாள். பெருந்தெருவும் அங்காடிச்சாலையும் கோட்டைமுகப்பும் புறக்கோட்டை பெருமுற்றத்தின் வணிகர்கொட்டகைகளும் இருபுறமும் சோலைக்காடு செறிந்த பெருஞ்சாலையும் அவளை ஈர்த்துக்கொண்டன.
காடு அவளை மெல்ல விடுவித்தது. உடல் இயல்பாகத் தளர அரைத்துயிலில் என உள்ளம் அமைதிகொண்டது. காட்டில் தனித்தனியாக மரங்களைப் பார்ப்பதில் பொருளில்லை. காடு என்பது ஒற்றைப்பெரும் பரப்பு. ஒரு சூழ்கை. ஓர் அமைதி. அலைகளின் அசைவின்மை. அவள் நெடுநேரம் கழித்து தன்னை உணர்ந்தபோது உள்ளம் துயிலெழுந்த இனிய அமைதியால் நிறைந்திருந்தது. அவர்கள் அப்போதும் ஆண்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அப்போது முதலில் எழுந்த அருவருப்பு தோன்றவில்லை. அவர்கள் ஆண்களை ஒரு சில உறுப்புகளாக, மிகச் சில அசைவுகளாக ஆக்கிக்கொண்டனர். குடிப்பெருமை, செல்வம், அரசிருப்பு அனைத்தையும் களைந்து ஆண்மையையும் அகற்றி வெறும் அசையும் தசைகள் என்றாக்கி எடுத்து அடுக்கினர். அவளுக்கு அச்சொல்லாடல் மெல்லிய உவகை ஒன்றையே அளித்தது.
கரவுக்காட்டுக்கு முன்னால் இருந்த முற்றத்தில் அவர்களின் வண்டி நின்றது. காவலர்களின் அறிவிப்புகளும் முரசுகளும் கொம்புகளும் இணைந்து எழுந்த பேரோசையுமாக வெளியுலகம் அவளை அடைந்தது. அரசியை வாழ்த்தி காவலர்கள் குரலெழுப்பினர். ஒரு காவலன் அவர்களின் வண்டிக்கு அருகே வந்து “நிலைகோள்!” என்று கூவினான். திரைவிலக்கி மூத்த சேடி இறங்கினாள். தொடர்ந்து ஆடைதிருத்தியபடி ஒவ்வொருவராக இறங்கினர். தரையில் நின்று குழலையும் அணிகளையும் சீரமைத்தனர். அவள் இறங்கியதும் நேராக சைரந்திரியை நோக்கி சென்றாள். அரசிக்குப் பின்னால் நின்றிருந்த சைரந்திரி அவளிடம் “என்னுடன் வா” என்றாள்.
முன்னரே உத்தரையும் அகம்படியினரும் வந்து அங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவலர்கள் புரவிகளை அவிழ்த்துக் கட்டி காட்டுக்காவலர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்த புல்கட்டுகளை அவிழ்த்து புரவிகளுக்கு முன்னால் குவித்தனர். கழுத்துமணி ஓசையுடன் அவை புல் தின்றன. அவற்றின் வால்கள் அசைவது காற்றில் புதர்மலர்கள் ஆடுவதுபோலத் தெரிந்தது. உத்தரை அரசியைக் கண்டதும் எழுந்து அருகே வந்தாள். அவளுடன் அவளுடைய அணுக்கச்சேடியும் வந்து அப்பால் நின்றாள். உத்தரை முகமன் சொல்லி தாயை வணங்கினாள்.
அரசி முகம் சுளித்து “முன்னரே வந்துவிட்டாயா?” என்றாள். “சற்றுமுன்” என்றாள் உத்தரை. அன்னையும் மகளும் விழிதொட்டுக்கொள்ளவில்லை. உத்தரையின் நிற்பிலும் முகத்திலும் அன்னையை புறக்கணிக்கும் அசைவுகள் இருந்தன. “உத்தரன் முன்னரே வந்துவிட்டதாகச் சொன்னார்கள்” என்றாள் அரசி. “ஆம், காட்டுக்குள் சென்றுவிட்டார்” என்றாள் உத்தரை. “இளையவன் வந்துகொண்டிருப்பதாக அறிந்தேன்” என்ற அரசி இயல்பாகக் கேட்பதுபோல “உன் ஆசிரியர் எங்கே?” என்றாள். அந்த வினா உத்தரையின் உடலை புகையைக் காற்று என மெல்ல உலையச்செய்தாலும் அவள் அது ஒருபொருட்டே அல்ல என்பதுபோல “அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது… நேற்று மாலையே அரண்மனையை விட்டு கிளம்பிவிட்டார்கள் என்று அறிந்தேன்” என்றாள்.
மேலும் ஏதோ பேச உடல்தவித்தபின் பெருமூச்சுடன் அமைந்த அரசி சைரந்திரியிடம் “நாம் உள்ளே செல்வோமே” என்றாள். “இங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்றார்கள்” என்றாள் சைரந்திரி. “வேண்டாம்… காட்டுக்குள் குடில்கள் மேலும் சிறப்பானவை… நான் சற்றுநேரம் படுக்கவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. சைரந்திரி சுபாஷிணியை நோக்கி “நீ இளவரசியுடன் இருந்துகொள்…” என்றாள். உத்தரை திடுக்கிட்டுத் திரும்பி சுபாஷிணியை பார்க்க “இளையவள். உங்களுக்கு உகந்த துணையாக இருப்பாள்” என்றாள் சைரந்திரி. அவள் விழிகளை ஒருகணம் நோக்கியபின் உத்தரை சரி என தலையசைத்தாள். அவள் உள்ளூர நிலைகொள்ளாமலிருப்பதை சுபாஷிணி உணர்ந்தாள். ஓடும் வண்டிக்குள் இருக்கும் குடுவைக்குள் நீர் குலுங்குவதுபோல என எண்ணிக்கொண்டாள். அவளருகே வண்டியில் ஒரு நீர்க்குடுவை இருந்ததை நினைவுகூர்ந்தாள்.
காவலர்தலைவன் வந்து அப்பால் நின்று தலைவணங்கினான் உத்தரை திரும்பி நோக்க “இளவரசி விழைந்தால் காட்டுக்குள் செல்லலாம்” என்றான். “செல்வோம்” என்று சொல்லி உத்தரை அன்னைக்கு மீண்டும் தலைவணங்கி முன்னால் செல்ல விழிகளால் சைரந்திரியிடம் விடைபெற்று சுபாஷிணி அவளுக்குப் பின்னால் சென்றாள்.
உத்தரை தன்னந்தனியாக நடப்பவள்போல செல்ல அவள் அகம்படியினரும் சேடியரும் உடன் நடந்தனர். அவர்கள் சொல்வனவற்றை அவள் இரண்டாவது முறைதான் கேட்டாள். ஒற்றைச் சொல்லில் மறுமொழி உரைத்தாள். அவள் முகம் சிடுசிடுப்புடன் இருந்தது, எவரிடமோ எரிச்சல் கொண்டவள்போல. ஒவ்வாத நினைவொன்றை சுமப்பவள்போல. தன்னை அவள் ஒருமுறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதை சுபாஷிணி உணர்ந்தாள். அவளுக்கு தன் முகம் நினைவில் நிற்கவே வாய்ப்பில்லை. ஏன் அவளை எண்ணிக்கொண்டிருக்கிறேன், நான் வந்தது காட்டைப் பார்க்க என்று அவள் தன்னை திருப்பிக்கொண்டாள். அந்தி இருண்டுகொண்டிருக்க காட்டுக்குள் இருள் நிறைந்திருந்தது. சீவிடுகளின் ஒலி வலுத்து அத்தனை ஒலிகளையும் ஒரு சரடெனக் கோத்து சூழ்ந்திருந்தது.
உத்தரை எதிரே வேலுடன் வந்து வணங்கி அப்பால் வழிவிலகி நின்ற இளம்காவலனிடம் “நீ இங்குள்ள காவலனா?” என்றாள். அவன் தலைவணங்கி “ஆம், இளவரசி” என்றான். அவனுக்கு மீசைகூட அரும்பவில்லை என்பதை சுபாஷிணி நோக்கினாள். மெல்லிய பாசிப்படர்வுபோல மேலுதடு கருமைகொண்டிருந்தது. கண்களில் எப்போதுமென ஒரு நகைப்பின் ஒளி. “உன் பெயரென்ன?” என்று உத்தரை கேட்டாள். அவன் பணிந்து “கஜன், மூன்றாம் காவல்மாடத்தவன்” என்றான். “இங்கே நேற்று எவரேனும் வந்தார்களா?” என்றாள் உத்தரை. “இல்லை, இளவரசி. இக்காட்டுக்குள் எவரும் நுழையமுடியாது, கடுமையான காவல் உள்ளது” என்றான் கஜன்.
உத்தரை உதட்டைச் சுழித்தபின் “இரவில் எவரேனும் நுழைந்தால்?” என்றாள். “இரவிலும் காவலுண்டு… அத்துடன் இது நிலவுப்பொழுது” என்றான். உத்தரை “நீங்கள் அறியாமல் எவரேனும் உள்ளே நுழைந்தால் புள்ளொலியோ பூச்சியொலியோ மாறி அதை காட்டித்தருமா?” என்றாள். அவன் “அறியேன், இளவரசி… ஆனால்…” என்று சொல்ல அவள் செல்க என கையசைத்தபின் முன்னால் சென்றாள். அவன் வணங்கி விலகி நிற்க அவர்கள் அவனைக் கடந்து சென்றனர். அவன் விழிகளை சந்தித்த சுபாஷிணி திடுக்கிட்டு விலகிக்கொண்டாள். பின் நெடுநேரம் அவள் உள்ளம் படபடத்துக்கொண்டே இருந்தது.