கலையின் உலை

 muva

மு.வ கட்டுரை

அன்புள்ள ஜெ,

உங்கள் மு.வ மீள்பிரசுரக் கட்டுரை சில எண்னங்களைத் தூண்டியது.

மூத்த சிங்கை எழுத்தாளர் ஒருவரிடம் நேற்றிரவு நெடுநேரம் இலக்கின்றி, தாவித்தாவிப் பலவிஷயங்களும் பேசிக்கொண்டிருந்தபோது அதில் முவ பற்றிய பேச்சும் வந்தது.

முவவைத் தன் மானசீக குருவாக பதின்ம வயதில் ஏற்றதாக அவர் சொன்னார். அந்த வயதில், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த சூழலில் முவ எழுத்துக்களைப் பற்றுக்கோலாகக் கொண்டுதான் தன்னால் ஒழுக்கத்தை ஒரு நெறியாகக் கடைப்பிடிக்க முடிந்தது என்றார்.

வாழ்க்கை தடம்புரண்டு போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த புறச்சூழல், அந்த வயதுக்கேயுரிய இயற்கையின் உந்துதல் உச்சத்தில் இருக்கும் அகச்சூழல் – இவையிரண்டையுமே எதிர்த்து நின்று போராடும் அளவுக்கு ஓர் எழுத்து உத்வேகத்தைத் தரக்கூடும் என்றால் அதுவே முவ எழுத்துக்களின் ஆகப்பெரிய பங்களிப்பு என்று கருதுகிறேன்.

இந்த இடத்தில் முன்பு ஓஷோ-காந்தி இருவரின் எழுத்துக்களைக் குறித்தும் அவர்களைப் பின்பற்றியவர்கள் சென்றடைந்த வாழ்க்கை நிலையைக் குறித்தும் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையும் நினைவுக்கு வந்தது.

ஆன்மிகத் தருணங்களை அளிக்கவல்ல ஓஷோவின் பேச்சுகள் அதைக்கேட்டவர்களை செயலின்மைக்கும் கட்டுப்பாட்டற்ற வாழ்க்கையால் உண்டான சக்தி விரயத்துக்கும் தள்ளியபோது, காந்தியின் உணர்ச்சியற்ற அழகியலைப் புறந்தள்ளிய பேச்சும் எழுத்தும் தீவிரமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு உந்தியதை அதில் பதிவு செய்திருந்தீர்கள்.

ஆனால் இலக்கியம் என்று வரும்போது இன்னொன்றையும் யோசித்துப்பார்க்கிறேன். Goodness is nothing in the furnace of art என்பார்கள். கலையின் உலை உக்கிரமானது. கட்டுப்பாடுகளை விறகாக எரித்துத்தான் அவ்வுலை தகிக்கிறது. அந்த வகையில் ஒழுக்கம் என்ற கட்டுப்பாடும் அடிபட்டுப்போகிறது என்பது என் பார்வை.

நவீன இலக்கியத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்துவைக்க தயங்குவதற்குப்பின்னால் புரியவில்லை, நேரவிரயம், கவனச்சிதறல் போன்ற காரணிகள் சொல்லப்பட்டாலும் கலையின் இந்தக்கட்டுப்பாடற்ற தன்மையைக் குறித்தான அச்சமே அது என்று நினைக்கிறேன்.

சிவானந்தம் நீலகண்டன்

சிங்கப்பூர்

siva

அன்புள்ள சிவானந்தம்

 

ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மை. அற இலக்கியம் நம்பிக்கை ஊட்டுகிறது. இலட்சியங்களை அளிக்கிறது. சீரான வாழ்க்கையை அளிக்கிறது. நவீன இலக்கியம் கொந்தளிப்பை அளிக்கிறது, அலைக்கழிக்கிறது. நிலைகுலையச்செய்கிறது

ஆகவே மாணவர்களுக்கு சரியான பொருளில் நவீன இலக்கியம் அறிமுகம் செய்யப்படுவது சரியில்லை என்று நீங்கள் சொன்னபோதுஅது உண்மை என்றே முதலில் தோன்றியது. ஆனால் என்னை எடுத்துக்கொண்டேன். என் இளமையில் நான் அற இலக்கியத்துடன் நின்றிருப்பேனா|? நான் மு.வ வை வாசிக்கையில் எனக்கு 15 வயது. அன்று நான் அறிந்த வாழ்க்கையைக்கொண்டே அந்த எழுத்து போதாது, அது உண்மையைச் சொல்லவில்லை என உணர்ந்தேன். மேலும் மேலும் என தேடிச்சென்றேன்.

இப்படிச் சொல்லலாம், ஓர் இளைஞன் மு.வவுக்குள் நிறைவடைவான் என்றால் அவனுக்கு அவரே போதும். மேலே அவன் வாசிப்பது ஆபத்து.அவனை அவர் வழிகாட்டிச்செல்வார். ஆனால் அவன் மிகச்சம்பிரதாயமான ஒர் ஆளுமையாக அமைவான். சமூகத்தின் நோக்கில் சரியான மனிதனாக ஆவான்,.எளிய வாழ்க்கைவெற்றிகளைப் பெறுவான்.

தமிழ் எழுத்தாளர்களிலேயே மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளை இலக்கியவாசனையே இல்லாமல்தான் வளர்த்திருக்கிறார்கள். அவர்களை உலகியலில் நிலைநிறுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தார்கள். விதிவிலக்குகள் மிகச்சிலவே. ஆனால் அந்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்கள் அவ்வளவுதான், அவர்களின் தந்தையர் விரும்பினாலும் மேலே கொண்டு சென்றிருக்க முடியாது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

மேலும் மேலும் என தேடும் இளைஞனுக்கு மு.வ போதாது. அவனிடம் மு.வவுடன் நிறுத்திக்கொள் என்றாலும் அவன் நிற்கமாட்டான். அவன் முரண்படுவான். குழம்புவான், அலைவான். மெல்ல தன்னைக் கண்டடைவான்.

என்ன கவனிக்கவேண்டும் என்றால் இங்கே கலையில், இலக்கியத்தில், அரசியல், சமூகப்பணியில் தனித்துவம் கொண்டு முன்னெழுந்த அத்தனைபேருமே இரண்டாம் வகையினர்தான்

அகஆற்றல், படைப்பூக்கம் போன்றவை பிறவியிலேயே அமைபவை. அந்த விசைதான் இளைஞர்களை தேடல் கொண்டவர்களாக ஆக்குகிறது, அலைக்கழிக்கிறது. அந்த அக ஆற்றல் கொண்ட ஒருவரை மு.வவில் ஊறப்போட்டு வளர்த்தால் என்ன ஆகும்? அவருடைய அக ஆற்றல் வெளிப்பட வழியே இல்லாமல் தேங்கும். அவர்களே பலவகையான மீறல்களை நோக்கிச் செல்கிறர்கள்.

கல்லூரிநாட்களில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்களைப் பாருங்கள், ஒருவர் மிச்சமில்லாமல் அத்தனைபேருமே அசாதாரணமான அறிவாற்றலும் கற்பனையும் கொண்டவர்கள்.

உங்கள் துறையில் குடிகாரராக, அராஜகம் நிறைந்தவராக, வீணகிப்போனவராக ஒருவர் இருப்பார். கவனியுங்கள், அவர்தான் உங்கள் துறையிலேயே ஆற்றல்மிக்கவர், நுண்மையானவர். அவருக்கு அந்தத்துறை போதவில்லை. யானைகளை ஆடுப்பட்டியில் கட்டமுடியாது. அதைப்போலவே ஆடுகளை கொண்டுசென்று யானைக்கொட்டிலிலும் அடைக்கமுடியாது

இயல்பான அகஆற்றல், தேடல் கொண்ட குழந்தைகளுக்கு இலக்கியம், தத்துவ, கலை, அறிவியல் என அவர்களின் இயல்புக்குரிய வெளிப்பாட்டுத்தளம் அளிக்கப்படவேண்டும். மற்றவர்களுக்கு ‘எல்லாரையும்போல’ இருப்பதற்கான பயிற்சி, சராசரி வாழ்க்கையில் அமைவதற்கான கல்வி, போதும். மு.வ போதும் .

தந்தையரால் செலுத்தப்பட்டு சராசரி வாழ்க்கையில் அமைக்கப்பட்ட பலர் சலித்து சீற்றம்கொண்டு அதை உதறி இலக்கியம் பக்கம் வருகிறார்கள். அவ்வாய்ப்பு அமையாமல் சோர்வில் அழிபவர்களும் உண்டு. அவ்வாறு சராசரியை மீறி செல்லும் தன்மைகொண்டவர்கள் அதிகபட்சம் பத்துசதவீதம்பேர்.

அவர்களுக்குரியதே நவீன இலக்கியம். இளையோரை அது அலைக்கழிய வைக்கலாம். ஆனால் ஆற்றலை கூர்தீட்டி முன்செல்ல வைக்கும். அவர்கள் சிதறி வீணாவதைவிட அது நல்லதுதானே?

ஜெ

 

மு.வ கட்டுரை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47
அடுத்த கட்டுரை“கெரகம்!”