நம் நாயகர்களின் கதைகள்

 

 

sta

ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்” என்னும் நூலை கையிலெடுத்தபோது படித்து முடிக்க குறைந்தது ஒருவாரம் ஆகும் என்று நினைத்தேன். அதன் தலைப்பு உருவாக்கிய சித்திரம் அது. அன்று மத்தியானத்திற்குள் அந்த நூலை படித்து முடித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஒரு கட்டுரை நூலை இத்தனை ஆர்வத்துடன் நான் படித்ததில்லை.

கட்டுரை நூல்கள் பொதுவாகவே சற்று சலிப்பை ஊட்டலாம், அறியும் பொருட்டு நாம் அவற்றை படிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் படித்த மிகச் சிறந்த கட்டுரைநூல்கள் அனைத்துமே எந்த புனைவு நூலுக்கும் நிகராக என்னை ஆழ்த்தி வைத்திருந்தவை என்பதை நினைவு கூர்கிறேன். பொதுவாக கட்டுரை நூல்கள் சலிப்பூட்டுவதற்கான காரணம் என்பது சொற்றொடர்களின் திருகலே. ஒவ்வொரு சொற்றொடரையும் ஊன்றிக்கவனித்து மீண்டும் நினைவில் மீட்டி நீவிஎடுத்துப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும்போது மட்டும் தான் கட்டுரை நூல்கள் மிகச்சலிப்பூட்டுகின்றன. அரிதாக கருத்துக்களின் செறிவோ புதுமையோ நம்மை வெளியே தள்ளிவிடுகிறது. நமக்குநாமே விவாதிக்கச்செய்கிறது.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்நூலின் மிகச்சிறந்த அம்சமென்பது கூரிய அழகிய உரைநடை. தேவையற்று சொற்களை முன்வைக்காதது, அதேசமயம் தேவையானவற்றை மிகச்சரியாக சொல்வது. அதனாலேயே இது ஒரு நேர் உரையாடலை அவருடன் நிகழ்த்தும் அனுபவத்தை அளிக்கிறது. இது ஒரு தேர்ச்சி அல்ல. மொழித்திறன் அல்ல. உரைநடை என்பது கைப்பழக்கம் அல்ல. அது சிந்தனைத் தெளிவுதான். ஸ்டாலின் ராஜாங்கத்தின் முதல் தகுதியே அவர் தனது அனுபவத்திற்கும் அறிவுக்கும் முற்றிலும் விசுவாசமாக இருக்கிறார் என்பதும் அறிதலுக்கும் விளக்குவதற்கும் மட்டுமே கோட்பாடுகளையோ கொள்கைகளையும் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதும்தான். தன் அறிவைக்  காட்டுவதற்காகவோ, கல்வித்துறை சார்ந்த பின்புலத்தை காட்டுவதற்காகவோ அவர் மெனக்கெடுவதில்லை. ஒற்றை வரிக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு எளியவிவாதங்கள் கிளப்பப்படும் இன்றைய முகநூல் சூழலில் இந்நூல் உருவாக்கும் பொறுப்பான விவாதம் மிக முக்கியமானது.

stal

ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்நூல் முழுக்க மறுதரப்பையும் கருத்தில் கொள்ளும் நிதானமும், எவரையும் புண்படுத்தும் அல்லது சீண்டும் நோக்கமற்ற முதிர்ச்சியும், அதேசமயம் தன் தரப்பை வலுவாக முன் வைக்கும் அறப்பற்றும் செயல்படுகின்றன. ஐயமே இன்றி இந்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தை இந்நூலை மட்டுமே ஆதாரமாக்கிச் சொல்ல முடியும்.

இந்நூலில் உள்ள ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரைகளுக்கு பொதுவாக ஓர் அமைப்பு உள்ளது. நேரடியான களச்செயல்பாடுகளிலிருந்து கிடைத்த ஒரு அனுபவத்தை, ஒரு திறப்பை முதலில் புனைவுக்குரிய ஒருமையுடன் விவரிக்கிறார். அதிலிருந்து ஒரு சமூக எதார்த்தத்தை நோக்கியோ ஒரு அரசியல் கருத்தை நோக்கியோ விரிந்து செல்கிறார். இது புனைவிலக்கியத்தின் கட்டமைப்பை கட்டுரைகளுக்கு வழங்குகிறது. வாசகனின் ஆர்வம் தூண்டப்பட்டு வெவ்வேறு கோணங்களில் அவனுடைய சிந்தனை விரித்து எடுத்துக் கொண்டு செல்லப்படுகிறது.

உதாரணமாக, சிந்து சிலைச் சின்னம் சாதி எதிர்ப்புப்போராட்டங்களின் வட்டார வரலாறு என்னும் கட்டுரை இப்படி தொடங்குகிறது. “1928ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் நாள் காஞ்சிபுரத்துக்கு அருகே இருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களை கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். தாக்குதலை முடித்தகும்பல் குடிசைகளைக் கொளுத்திவிட்டு அங்கிருந்து குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது

அதிலிருந்து விரியும் கட்டுரை தங்கள் வாழ்வுரிமைப் போரில் மாண்டவர்களும் , தலைமைதாங்கியவர்களும் அடித்தள மக்களின் நினைவில் எப்படியெல்லாம் நிலைநிறுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கிச் செல்கிறது. சிந்து முதலிய பாடல்கள், வாய்மொழியாக உலவும் அனுபவக் கதைகள், முதியவர்களின் நினைவுகள், குழந்தைகளுக்குப் பெயர்கள், அரிதாகச் சிலைகள் என அந்நினைவுப்பேணல் பலமுகம் கொள்கிறது. போராட்டநினைவுகளை பேணிக்கொள்வதே ஒருவகை போராட்டம். அது போராட்டத்திற்கான உணர்வுக்குவியம்.

பிறிதொரு கட்டுரை தங்கை வீரம்மாளும் தமையன் வீராச்சாமியும் இப்படித் தொடங்குகிறது திருச்சி விமான நிலையத்துக்கு அருகே உள்ள சாலையில் சென்று அன்னை ஆசிரமம் என்று கேட்டால் எவரும் வழி சொல்கிறார்கள். மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, திக்கற்ற குழந்தைகள் காப்பகம், தொழில் பயிற்சி பள்ளி போன்றவை அமைந்திருக்கும் வளாகத்திற்குதான் அன்னை ஆசிரமம் என்று பெயர்என்று தொடங்குகிறது. சென்றகாலத்தைய தலித் போராளிகள் இருவரின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் வழியாக அன்றைய அரசியல்சூழலும் விவரிக்கப்படுகின்றன

ஒவ்வொரு கட்டுரையிலும் முன் முடிவுகள் இல்லாத ஒரு பயணம் நிகழ்வதனால் பிற தலித் எழுத்தாளர்களின் கட்டுரைகளில் இருக்கும் குறுகிய அரசியலை இத்தொகுதியில் பார்க்க முடியாது. அதாவது அரசியல் வழியாக இந்த களயதார்த்தங்களை ஸ்டாலின் பார்க்கவில்லை, மாறாக கள யதார்த்தம் வழியாக ஓர் அரசியலை வந்தடைகிறார். உதாரணமாக ,பல கட்டுரைகளில் தமிழக தலித் இயக்கத்திற்கு காந்தியம் அளித்த கொடையை ஸ்டாலின் ராஜாங்கம் பதிவு செய்கிறார். காந்தியம் பற்றிய வழக்கமான தலித்திய கசப்புகளோ முன்முடிவுகளோ அவருக்கு இல்லை. அது யதார்த்தத்தை மறைக்கவுமில்லை.

.

swami_ananda_thirtha
சுவாமி ஆனந்தத் தீர்த்தர்

 

உண்மையில் ஸ்டாலின் காந்தியத்தின் தலித் முன்னேற்றப்பணியின் விரிவு பற்றி முன்னரே அறிந்திருக்கவில்லை என நூல் சொல்கிறது. அவ்வரலாறு தமிழகத்தில் ஒருபக்கம் இடதுசாரிகளாலும் மறுபக்கம் திராவிட இயக்கத்தினாலும் பிற்காலத்தில் தலித் இயக்கத்தினாலும் மறைக்கப்பட்டதென்றே அவர் அடையாளம் காட்டுகிறார். அம்பேத்காரின் செயல்பாடுகளின் மூலம் சீண்டப்பட்டுதான் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கமும் தாழ்த்தப்பட்டோ முன்னேற்ற இயக்கமும் தொடங்கியதென்று அவர் நினைக்கிறார். ஆனால் மதுரைச் சுற்றுப்புறங்களில், ஒட்டியுள்ள மாவட்டங்களில் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காகவும் அம்மக்களின் கல்விக்காகவும் நிகழ்ந்த முதல் பேரியக்கம் என்பது காந்திய இயக்கமே என்பதை இக்கட்டுரைகளில் பல இடங்களில் அவர் கள ஆய்விலிருந்து பதிவு செய்வதை பார்க்கலாம்.

இந்நூல் இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அறியப்படாத தலித் களப்பணியாளர்கள் மற்றும் களப்பலியாளர்கள் எப்படி வரலாற்றால் மறக்கப்பட்டாலும் மக்களின் வாய்மொழி மரபில் தொடர்ந்து உயிர்வாழ்கிறார்கள் என்பதை கண்டடைந்து பதிவு செய்கின்றன பல கட்டுரைகள்.  உதாரணமாக கேரளத்தை சேர்ந்தவரும் காந்திய இயக்கத்தின் பிரதிநிதியாக மதுரை மக்களிடையே மிகப்பெரிய கல்விப்பணி ஆற்றியவருமாகிய ஆனந்த தீர்த்தருடைய பெயர் ஸ்வாமி என்றும் ஆனந்த தீர்த்தர் என்றும் தலித்துகளுக்கிடையே புழங்குவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சுவாமி ஆனந்ததீர்த்தர் பிராமணராகப் பிறந்தவர், காந்தியால் ஈர்க்கப்பட்டு பொதுப்பணிக்கு வந்தார். நாராயணகுருவால் துறவு அளிக்கப்பட்டு ஆனந்த தீர்த்தராக மாறினார். நடராஜகுருவுக்கு மூத்தவர். தலைச்சேரியில் பிறந்து மதுரை மேலூர் உட்பட பல ஊர்களில் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக உழைத்தவர். வைக்கம் போராட்டம் குருவாயூர் ஆலயநுழைவுப்போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் மிக கடுமையாக தாக்கப்பட்டவர். அவருடைய மதுரை மாவட்டத்துப் பணிகளைப்பற்றி ஸ்டாலின் பதிவுசெய்ததை வாசிக்கையில் பெரும் மனநிறைவு எழுந்தது.

காங்கிரஸ் இயக்கத்தவரான ஜார்ஜ் ஜோசப் போன்று தலித் பணியாற்றியவர்கள் காலத்தால் மறக்கப்பட்டு அடையாளம் காணப்படாத சிலைகளாக எஞ்சுவதையும் விவரிக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பாரிஸ்டர் பட்டம் பெற்றபின் காந்தியால் ஈர்க்கப்பட்டு தேசியப்போராட்டத்தில் ஈடுபட்டவர் ஜார்ஜ் ஜோசப். வைக்கம் போராட்டத்தில் காந்தியின் அணுகுமுறையால் மனவேறுபாடுகொண்டு காந்தியிடமிருந்து பிரிந்துசென்றாலும் காங்கிரஸ்காரராக நீடித்தார் [வைக்கம் போரில் பிற மதத்தவர் ஈடுபடக்கூடாது என காந்தி விலக்கினார். அந்தப்போராட்டமே கிறித்தவர்களின் தூண்டுதலால் நிகழ்வது என்னும் பிரச்சாரம் அன்று நிகழ்ந்ததே காரணம். ஆனால் தான் எந்த மதத்தையும் சேர்ந்தவர் அல்ல என்றும் வைக்கத்தின் தீண்டாமைப்பிரச்சினை மதப்பிரச்சினை அல்ல என்றும் ஜார்ஜ் ஜோசப் கருதினார்.

 

 

george joseph
ஜார்ஜ் ஜோசஃப்

தலித் களப்பலிகளான பாண்டியன், கந்தன் போன்றவர்கள் மக்களின் நினைவில் நின்றிருப்பதை அவர் விவரிக்கும் இடம் முக்கியமானது. அவர்களை எழுத்தில், நூலில் கொண்டுவருவதனூடாக ஒரு பொதுமொழிப்பெருக்கில் நிலைநிறுத்துகிறார். இந்நூலின் பணிகளில் முக்கியமானது இது. வரலாறு என்ற பொதுவான புனைவுக்கு நிகராக ஒரு மாற்று புனைவை தலித்துகள் தங்களுக்காக உருவாக்கி அதை தக்க வைதிருக்க்கிறார்கள். வரலாறு என்பதுஒரு சமரசப் புனைவு மட்டுமே. ஒவ்வொருவரும் தங்கள் தரப்பை முன்வைக்க, அவற்றுக்கிடையே ஒரு ஒத்திசைவாக ஒரு பொதுப்புனைவு என உருவாவது அது. அதில் தங்களுடைய தரப்பை முன்வைத்து வெற்றிகொள்ள தலித்துக்களால் இயலாவிட்டாலும் தங்களுக்குள் வரலாற்றுநினைவுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். தலித்துகளின் இந்த வரலாற்று நினைவை பதிவு செய்வதும் அதன் இயங்கு விதிகளைக் கண்டடைவதும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வுகளில் முக்கியமான போக்காக அமைகிறது.

எம்.சி ராஜா

இன்னொரு பகுதி அவரே ஒரு மாற்று வரலாற்றாளராக மாறி எழுதுவது. தமிழக தலித் இயக்கத்தின் பல்வேறு ஆளுமைகள் எப்படியெல்லாம் மறக்கப்பட்டார்கள் அல்லது அவர்களது பங்களிப்பு எப்படி வரலாற்று உருவாக்கத்தின்போது திரிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து பதிவு செய்கிறார். உதாரணமாக எம்.சி.ராஜா எப்படி அவருடைய அனைத்து தலைமைப்பண்புகளுக்கும் சேவைகளுக்கும் அப்பால் வெறுமொரு துரோகியாக நீதிக்கட்சியாலும் அவர்களை அடியொற்றிச் சிந்தித்த பிற்கால தலித் இயக்கத்தினாலும் முத்திரை குத்தப்பட்டார் என்பதை விளக்கும்போதும் சரி, ஆனந்த தீர்த்தரைப்போல தலித் இயக்கத்திற்கு பெரும்பங்கு வகித்த ஒருவர் எப்படி எந்த வரலாற்று பதிவுகளும் நினைவுகளும் இல்லாமலானார் என்பதை குறிப்பிடுவதிலும் சரி, ஒரு மாற்று வரலாற்று ஆசிரியருக்குரிய குரல் அவரிடம் ஒலிக்கிறது.

அதே சமயம் கவனிக்கப்படாதவற்றை முன்வைக்கும் குரலுக்கு வழக்கமாக இருக்கும் மிதமிஞ்சிய வேகமும் அவரிடம் இல்லை. தெளிவான ஆதாரங்களுடன் வரலாற்று இயக்கத்தை புரிந்துகொண்டு கல்வியாளனின் நிதானத்துடன் அந்த தரப்பை முன்வைக்கிறார். ஆகவே அவற்றின் கனமும் விசையும் மேலும் அதிகமாகிறது

இந்த நூல் எனக்களித்த உளச்சித்திரம் ஒன்றுண்டு பொதுவாகக் கொந்தளிப்புகள் அதிரடிகள் போன்றவை தீவிரமாக நம் நினைவில் நிற்கின்றன. ஏனென்றால் அவற்றைப்பற்றி பிறர் அதிகம் பேசுகிறார்கள். பரபரப்பான செய்திகளால் வரலாறு கட்டமைக்கப்படும்  காலகட்டத்தில் இத்தகைய செயல்பாடுகளின் இடம் மிகப்பெரிதாக ஆகிவிட்டது. ஆனால் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாறுதலை உருவாக்குவதென்பது தொடர்ச்சியான ,சீரான, சலிக்காத களப்பணிகள் மூலமே.

தங்கை வீரம்மாளும் தமையன் வீராச்சாமியும் என்ற கட்டுரை அவ்வகையில் மிக முக்கியமானது. இரண்டு வகையான களப்பணிகளை அதில் திறம்பட ஒன்றிணைத்துக்காட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஒன்று, தனது எல்லைகளை வரையறுத்துக்கொண்டு தனது திறன்களை முழுக்க ஒருங்கிணைத்து கல்விப்பணியில் முழுவீச்சாக செயல்பட்ட வீரம்மாளின் பாணி. இன்னொன்று கொப்பளிப்பும் கொந்தளிப்புமாக பல்வேறுஇடங்களில் முட்டி மோதி பலவகையான பணிகளை ஆற்றிய வீராச்சாமியின் பாணி. வீராச்சாமி எதையும் செய்து முழுமைசெய்யாதவராக ,அவரது நோக்கத்தின் நேர்மையால் மட்டுமே நினைவு கூரப்படுபவராக, இருக்கும் போது வீரம்மாள் ஆல் மரம்போல வேரும் விழுதும் பெருகி நிற்கும் பெருநிறுவனம் ஒன்றின் மூலம் இரண்டு தலைமுறைகளுக்கு வாழ்வளித்தவராக மாறியிருக்கிறார்.

அரசியல் பணி என்பது ஆக்கப்பணியாக ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக ஸ்டாலின் வீரம்மாளைக்குறிப்பிடுகிறார். வீரம்மாள் அந்த உளநிலையை அவர் பின்பற்றிய காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். குறுகிய காலம் ஈ.வே.ராவுடன் இணைந்துசெயல்பட்டாலும் அவரால் ஈவேராவின் அதிரடி அரசியலுடன் ஒன்ற முடியவில்லை. விலகி விடுகிறார். இவ்விரு ஆளுமைகளை ஒப்பிட்டுக் காட்டும் இக்கட்டுரை ஒரு பெரிய புனைகதை அளிக்கும் உளவிரிவை அளிக்கிறது. ஒரு நாவலாகவே இவ்விரு வாழ்க்கையையும் எழுதிவிடமுடியும் என தோன்றுகிறது.

அர்ப்பணிப்புடன் ஆற்றப்படும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட பௌர்ணமி குப்புசாமி ,பொன்னுத்தாயி போன்றவர்களை ஸ்டாலின் ராஜாங்கம் விவரிக்கும் இடங்கள் பலவகையான திறப்புகளை அளிப்பவை. இரண்டு வகையான பணிகள் இவை. பொன்னுத்தாயி பல்வேறு இடர்களுக்கு நடுவே ஒரு பள்ளியை தொடர்ந்து நடத்தி தன் சமூகத்து மக்களுக்கு கல்விப்பணியாற்றுகிறார். பௌர்ணமி குப்புசாமி தன் மக்களுக்கு பௌத்தத்தின் மெய்ச்செய்தியை எடுத்துச் சொல்லும்பொருட்டு அர்ப்பணிப்புடன் நீண்ட காலப்பணியை ஆற்றுகிறார். இவ்விரு பணிகளும் இரண்டு வகையில் முக்கியமானவை. வயிற்றுக்கும் ஆன்மாவுக்கும் சோறிடுவது போல என்று சொல்லலாம்.

இத்தகைய பணிகளின் மதிப்பை ஆய்வாளர்கள் கூட புரிந்துகொள்ளாத காலம் இது ஏனெனில் சமூகம் கவனித்த ஒன்றில் மேலும் நுட்பங்களைக் கண்டுபிடிக்கும்போது ஆய்வாளனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அறியப்படாத பணிகளை தேடிச் செல்லும் போது வருவதில்லை. மிகையோ உணர்வெழுச்சியோ இல்லாமல் ஸ்டாலின் இப்பணிகள் நிகழ்ந்த வரலாற்றையும் அவை இன்று சென்றகாலமாக மாறிவிட்டதையும் சொல்லிச்செல்கிறார்

இத்தகைய பணிகளை பல்லாண்டுகாலம் செய்தவர்கள் எத்தகைய நம்பிக்கை இழப்பை,சோர்வை, தனிமையை சந்தித்திருப்பார்கள்; எந்த அளவுக்கு தங்கள் ஆன்மாவின் விசையைத் திரட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் களப்பணிக்கு வந்திருப்பார்கள் என்பது சற்று கற்பனை உள்ளவர்களுக்கே வசப்படும். இவர்கள் கொண்ட லட்சியவாதம் என்பது எரிந்தணைவதல்ல நின்று சுடர்வது. எரிந்தணைவதற்கு மிகக்குறைவான எரிபொருள் போதும் நெடுங்காலம் நின்று சுடர்வதற்கு எரிபொருள் உள்ளே ஊறிக்கொண்டிருக்க வேண்டும் எந்த தியாகியை விடவும் மகத்தானவர்கள் நின்று நெடுங்காலம் பணியாற்றியவர்கள் .நமது சூழலில் இவர்களைப்பற்றிய கவனமே அற்றுப்போயிருக்கும்போது இந்நூல் அவர்களை அடிக்கோடிடுவது மிகுந்த மனஎழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்னொரு வகையில் இந்நூல் எம்.சி.ராஜா, டி.எம்.மணி போன்ற வரலாற்றால் மறுஎல்லைக்குத் தள்ளப்பட்ட மிகச்சிலரை மிகக்கூர்மையாக அவதானித்து அவர்களின் சித்திரத்தை காரணகாரிய அடுக்குகளுடன் முன்வைத்து மதிப்பிட்டு மீட்க முயல்கிறது.

இந்த நூலை ஒரு வகை வீரகதைப்பாடலென்று சொல்ல தயங்கமாட்டேன். சென்ற கால லட்சியவாதத்தின் முன் ஸ்டாலின் ராஜாங்கம் சென்று நிற்கிறார். சமகால அரசியலில் லட்சியவாதத்தை விட நடைமுறை நோக்கும் அடக்கத்தை விட ஆர்ர்ப்பாட்டமும் அர்ப்பணிப்பைவிட தந்திரங்களும் முக்கியத்துவம் பெறும் சூழலில் பெரும் கனவுகள் நிகழ்ந்த சென்ற காலத்தை நோக்கிச் செல்லும் ராஜாங்கத்தின் உள்ளம் செல்வது என்னால் மிக அணுக்கமாக புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுந்து வரும் சென்றகாலத்து மாமனிதர்கள் ஒவ்வொருவரின் முன்னாலும் நின்று பணிந்துதான் மேலே சென்றேன்.

கவிஞனின் பணி என்பது தன்னை எழுதுவது மட்டுமல்ல தன்னை விடப்பெரியவற்றின் முன் சென்று நின்று தன்னை இழப்பதும் கூடத்தான். வரலாற்று ஆசிரியனின் பணியும் அதுவே. வரலாற்றை மாமனிதர்களினூடாக வாசிக்கப்புகுந்த நூல் என்று இதைச்சொல்லலாம். இந்நூல் அளிக்கும் ஆளுமைச்சித்திரங்களுக்காகவே இதை ஒரு இலக்கிய சாதனை என்றும் தயங்காமல் சொல்வேன்.

[எழுதாக்கிளவி – வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள். ஸ்டாலின் ராஜாங்கம். காலச்சுவடு வெளியீடு]

***

ஜார்ஜ் ஜோசப் குடும்ப இணைய தளம்

http://josephclan.com/barristergjpartone.htm

ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம்

 

 

முந்தைய கட்டுரைகலையை கையாளுதல் பற்றி …
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46