அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
பருவ மழைப்பயணம். நினைவில் அகலாத மலைகள், தழுவிச் செல்லும் முகில்கள், பச்சைப் படாம் போர்த்த வெளிகள், அடர்ந்த பல்வகைத் தாவரங்கள், மலர்கள், பெருமரங்கள், நீரோடைகள், ஓயாது ஓசையிடும் அருவி, தொடர்ந்து வரும் மழை, மனதில் இன்னும் உலராத ஈரம். இரவு வீடு திரும்பினேன் உடல் சோர்வடையவில்லை அதனால் உறக்கம் உடனடித் தேவையாக இல்லை. மனம் உவகையில் இருந்தது. நீர்க்கோலத்தின் விடுபட்ட நான்கு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். “மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை ஒன்றை அளித்திருந்தது. விழிகள் ஒளிக்கு கூசின. புறவுலகை மறுத்தது உள்ளம்” – நீர்க்கோலத்தின் வரிகள், புகைமூட்டம் என நகர்ந்து, முகிலென மலை தழுவி, துளிகள் என நழுவி, அருவி என ஓசையிட்டு வீழ்ந்து ஓடையென ஆறென பெருகிய நீர்கோலங்கள் கண்டு வந்த பின், உவந்தது. சிறு மாற்றம், உள்வாழ்க்கை அளித்தது ஆனால் உடல் ஓயவில்லை. விழிகள் ஒளிக்கு கூசவில்லை. புறவுலகை மறுக்கிறது உள்ளம் -ஆம் அவ்வாறே. இயற்கை எங்கேயும் தீவிரம் கொண்டே இருக்கிறது என்னும் போதும் சில இடங்களில் மட்டுமே உணர்ந்தே தீர வேண்டும் என்னும் அளவிற்கு தீவிரம் கொண்டுள்ளது என்று எண்ணுகிறேன்.
உணர்கொம்புகள் இழக்கப்படவில்லை அவை இருப்பதே மறக்கப்படும் அளவிற்கு வாழ்க்கையைச் சுருக்கினோம் என்றும் எண்ணுகிறேன். இயற்கையின் தீவிரம் அங்கு எங்கும் இருந்தது. பயணம் கொண்டோர் அனைவரிடமும் ஏதோ ஒரு வகையில் தீவிரம் இருந்தது. ஒருவர் போல் ஒருவர் இல்லை ஆனால் அன்பு அனைவரிடமும் இருந்தது. கண்கள் அதைத் தெரிவித்தவாறே இருந்தது. முதல் நாளில் அந்த நள்ளிரவில் தன் குடும்பத்தினர் அனைவரையும் விழிக்கச் செய்து அன்புடன் உபசரித்த தங்கள் வாசகர் – எத்தகையதொரு அன்பு அவருக்கு உங்கள் மீது?. மறுநாள் இரவில் தரையின் குளிருக்கு விரிப்புகள் பரப்பிய தங்கள் அன்பு. பேசிய போதும் பேசாதிருந்த போதும் ஒருவித தீவிரம்-தவிப்பு உங்களிடம் எப்போதும் இருப்பது போல் தோன்றியது. அந்த அன்பினைப் போற்றுகின்றேன்.
இதெல்லாம் அருள் அருளேதான்.
விக்ரம்,
கோவை
***
ஜெ அவர்களுக்கு
வணக்கம்.. அருமையான மலை& மழைப்பயணம் சென்று வந்திருக்கிறீர்கள்.. அதை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது, நானே சென்று வந்ததாய் உணர்கிறேன்..
பச்சைக்கனவு தலைப்பை படித்ததுமே, அலைபாயுதே படத்தில் வரும் பச்சை நிறமே! பச்சை நிறமே! பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் மனதுக்குள் பல விதமான பச்சைநிறங்கள் அடுக்கடுக்காய் விரியும்.. வெகு நேரம் மனதில் பச்சை நிறம் ததும்பி நிற்கும்…
அது போல் தான் உங்கள் பயணமும்.. பச்சைக்கனவு படித்ததும் என்னால் அப்பச்சைப்புல்வெளியை உணர முடிந்தது.. நீங்கள் கூறியபடி, அடுத்த வருடம் பிசா, பர்கர் எல்லாம் கிடைக்கும் போல… வாகமன் பைன் ஃபாரஸ்ட் அருகில் எத்தனை கடைகள்..புல்வெளி அருகிலும் கூட.. பருந்துப் பாறையும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறது.. நிரந்தரக்கடைகள் இல்லை என்பது ஆறுதல்..
உங்கள் வாசகரின் அன்பு ஆச்சரியம்.. அழகு.. வழியில் எதிர்பாரா உபசரிப்பு பயணத்தை சுவாரஸ்யமாக்கும்..
உச்சியில், பாறைமேல் மல்லாந்து படுத்து வான் நோக்குவதை விட வேறு என்ன பெரு மகிழ்வை நாம் இப்புவிவாழ்வில் பெறப் போகிறோம்?
நீங்கள் பயணித்தது மகிழ்வு,.. அதைவிட உங்கள் வாசகர்கள் எல்லோரையும் அதில் பயணிக்க வைத்து விட்டீர்கள்..
நன்றி
பவித்ரா
உறுத்தல் தரும் ஈர உடைகள் உவகை தருவனவாய் மாறிய பயணம். திருச்சியிலிருந்து பைக்கில் வீடு திரும்புகையில், அணியா ஆடைகளை புறந்தள்ளி, ஈரம் உலராத பேண்ட் ஒன்றை அணிந்து பயணித்தேன்.
நன்றி!!!. பயணத்தை இனிய நினைவாக்கிய நண்பர்கள் அனைவருக்கும்.
-யோகேஸ்வரன்.
ஜெ
பச்சைக்கனவு பற்றி எழுதியிருந்தீர்கள். லா.சராவின் அந்தக்கதை இணையத்தில் கிடைக்கிறதா?
ஜெயராம்
***
இணைப்பு
ஜெ
***