மத்தகம்:கடிதங்கள்

செயமோகனின் “மத்தகம்”

திருவிதாங்கூர் நாட்டின்(சமத்தானத்தின் அல்ல – வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு) இறுதிக் காலத்தில் அரசர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த சுற்றத்தார் என்று தமிழ் இலக்கியம் கூறும் ஆள்வினையாளர்களும் ஆடிய ஆட்டங்களை ஒரு யானையின் பிடரியைக் குறியீடாக்கி சொல்லோவியமாகத் தீட்டியிருக்கும் மத்தகம்(தமிழினி நவம்பர்-2008) நண்பர் செயமோகனின் படைப்பாற்றலுக்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக்காட்டு.

அரசன் விரும்பும் ஒரு யானை அதைப் புரிந்து கொண்டு நிகழ்த்தும் கொடுமைகளும் அதற்கு ஈடுகொடுக்காமல் போனால்இ அரசனின் வருத்தத்துக்கு ஆளானோர் எப்போதும் எதிர்பார்த்து அஞ்சியிருந்த கழுக்கோலுக்கு இரையாக வேண்டிய கொடுமையும்இ கழுவேறிச் சாவதை விட யானை மிதித்துச் செத்துப் போவது மேல் என்ற எண்ணமும் அன்றைய சராசரிக் குடிமகனின்  அவல வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. யானை மிதித்து இறந்தால் நொடியில் சாவு விழுங்கிவிடும்; கழுவேற்றினால்இ நாள் கணக்கில் ஊணின்றி நீரின்றி அணு அணுவாகச் செத்து உயிர் இருக்கும் போதே காக்கையும் கழுகும் கொத்திக் கொத்தித் தின்னஇ ஓஇ ஓ என்று ஓலமிட அந்த வட்டாரத்தில் அறியாமல் நுழைந்துவிடும் மனிதர்களைக் கிலிபிடித்துச் சாக வைக்கும் கொடுமை அது. நாகர்கோயிலில் இன்று மத்தியாசு மருத்துவமனை இருக்கும் பகுதியை முன்பு கழுவன்தட்டு  அல்லது கழுவன்திட்டை  என்று கூறுவார்கள். கழுவேற்றுதல் நின்று இரண்டு நூற்றாண்டுகள் சென்ற பின்னரும் அந்த வட்டாரத்தில் நடமாடவே மக்கள் அஞ்சினர்.

யானைப் பார்ப்பார்(பாகன்)களின் மனைவிகளின் நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பதறுகிறது. கணவன் இறந்து ஓரிரண்டு நாளிலேயே தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்ற இன்னோர் ஆடவனுக்குத் தயங்காமல் தன்னை ஒப்படைக்க வேண்டிய வெட்கப்பட வேண்டிய அவர்களது நிலை தொல்காப்பிய காலத்திலிருந்து இன்றுவரை நம் நாட்டில் பெண்கள் பட்டுவந்துள்ள பாடுகளின் உச்சத்தை உள்ளம் ஒடுங்கும் வகையில் படம் பிடித்துக் காட்டியுள்ள  பாங்கு வியக்கத்தக்கது.

தங்களை விடத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் எதிரில் வரும் போது முலைகளைத் திறந்து போட்டுக்கொண்டு நடக்க வேண்டும் என்ற கேரளத்தின் நடைமுறை பெண்கள் மீது நம் நாட்டில் பார்ப்பனியம் எனப்படும் சாதியத்தின் வடிவத்தில் நடைபெற்ற மிகக் கொடுமையான சுரண்டலாகும். அம்பிலி என்ற பெண்ணின் வடிவத்தில் அதனையும் கோயில்களினுள் நடைபெறும் முறைகேடுகளையும் மென்மையாகக் காட்டியுள்ளார். இன்னும் கொஞ்சம் காட்டத்துடன் இதைக் கையாண்டிருக்கலாம்.

தீண்டாமைஇ காணாமைஇ கேளாமை போன்ற கொடுமைகளுக்கு உட்பாடாத நால்வரண வரம்புக்கு உட்பட்ட மக்களுக்கே இந்த நிலை என்றால் அதற்கு வெளியேஇ அத்தகைய கொடுமைகளுக்கு ஆட்பட்ட மக்களின் வாழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே எம் மனத்துக்குத் துணிவில்லை.

தன்னை விரும்பும் அரசனையும் தெய்வப் படிமத்தையும் தவிர வேறெவரையும் தன் மத்தகத்தில் ஏறவிடாத யானை அந்த அரசனும் மாண்டுஇ அரண்மனைச் சூழலும் மாறிய உடன்இ குறிப்பாகத் தன்னை நோக்கிக் குறிபார்த்த துப்பாக்கியைக் கண்ட பின்னர் துணிச்சலுடனும்  நேர்மையாகவும் தனக்குப் பணியாற்றிய பாகனுக்குப் பணிந்து அவனைத் தன் மத்தகத்தில் ஏந்திக் கொண்டது மனிதர்கள்இ குறிப்பாக அரசியல்வாணர்கள் தங்கள் சார்பை அவ்வப்போதைய ஆட்சிச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதை நினைவூட்டுகிறது.

புதிய அரசனுடன் வந்து சேர்ந்த வெள்ளையர்கள்இ நம் நாட்டில் பழைய அரசு முறை மாறி புதிய ஒன்று உள்ளே நுழைந்ததைக் குறியீடாகக் காட்டுகிறது. ஆனால் அந்தப் புதிய ஆட்சிமுறை நிலைத்து  நிற்குமா? நாம் மீண்டும் பழைய நிலையை நோக்கிப் போவதைத் தடுக்க வழியுள்ளதா என்பது இந்தக் குறும்புதினத்துக்கு வெளியே நம்மை நோக்கி நிற்கும் கேள்வி.

நிகழ்ச்சிகளைச் சொல்லும் போது நாம் உள்ளாகும் மெய்ப்பாடு ஈடு இணையற்றது. பெரும் பேய் மழையைப் பற்றிய விளக்கம் அதில் உச்சம்.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் உயர்வான ஒரு படைப்பை நண்பர் செயமோகன் வழங்கியுள்ளார். கருவுயிர்க்க நாளானாலும் ஈன்றுள்ளது ஒரு கொம்பனானைக் குட்டியை.

நன்றி

குமரிமைந்தன்.

8888

அன்புள்ல ஜெமோ,

உங்களுக்கு நூறு ஆயுசு. நல்லா இருங்க. இப்போதான் மத்தகம் படிச்சு முடிச்சு அப்படியே அம்பரன்னு போய் நிக்கிறேன். கேசவன் என்றதும் நம்ம குருவாயூர் கேசவனின் நினைவு வந்தது. கஜராஜன்.

நான் ஒரு யானைப்ரேமி.  நாவல் அப்படியே உள்ளே இழுத்துக்கிட்டுப் போயிருச்சு. அந்த மழையிலே, வெள்ளச் சாட்டத்தில் கேசவன் நடந்து போகுறதை மனக்கண்ணில்  பார்த்தேன். கரிய பாறை திம்திம்ன்னு நடக்குது..

பசிக்கு முன்னே, அதிலும் குழந்தைகளின் காலி வயித்துக்கு முன்னே  கற்பாவது மண்ணாவதுன்னு தோணிப்போச்சு.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி

அன்புள்ள அண்ணன்,
தமிழினியில் ‘மத்தகமும்’ உங்கள் வலைப்பூவில் ‘ஊமைச் செந்நாயும்’ படித்தேன்.  உங்களுடைய களத்தில் நீங்கள் விண்ணாதி விண்ணன் என்பதற்கு மற்றுமுள சான்றுகள் அவை.
காடும் யானையும் உங்களுக்குக் கைவந்தவை. கரடிக்குளம் நாராயணனை உரசிப்போவதற்குக் கேசவனை உள்ளிட்டும் வேறு ஆனை கிடையாததுபோல இவற்றைச் சித்திரிப்பதில் நீங்கள்.
விஷ்ணுபுரமும் கொற்றவையும் ஒரு வாகு. கதைக்கு ஒரு தளம் அமைத்துக்கொண்டு தத்துவம் விசாரிப்பன அவை.
பின் தொடரும் நிழலின் குரல் தத்துவ உரசல்களையே களமாகக் கொண்டு அமைந்தது. கதைச் சாரம் குறைவு. ஆகையால் நீர்த்துப்போகாத கவனம் வேண்டி நிற்பது.
காடு, இரப்பர், மத்தகம், ஊமைச் செந்நாய் ஆகியன ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிகழ்ந்து கழிந்த வாழ்வுகளை இயல்பு கெடாமல் புனைந்துரைப்பன. இவற்றில் எந்த முயற்சியும் இல்லாமலே உங்கள் மொழி தன்னியல்பான வீச்சில் சுழன்றாடுகிறது. ‘செம்பரத்தம்பூ அழகுதான். பன்னிக்க சூத்து? அழகுன்னு நெனச்சா அழகு’ என்று ‘காட்டில்’ போத்தி கிரியிடம் எழுப்பிய கேள்வி அதன் மொழி எளிமையினாலேயே இன்னும் அச்சடித்தாற்போல் நினைவிலிருக்கிறது. நினைத்துக்கொள்ளும்போது ‘அடத் தாயளி’ என்று மெச்சிக்கொள்ளவும் தோன்றுகிறது.
மத்தகம் ஒரு நல்ல வாட்டமுள்ள கதை.
நாடு அதிகாரம் கைப்பற்றுதல்; ஆனை அதிகாரத்தைக் கைப்பற்றுதல்; பெண்டாளும் அதிகாரம் கைப்பற்றுதல் என்று அவரவர் தகுதி விருப்பங்களுக்கேற்ப அதிகார நாடகம் நிகழ்கிறது.
ராமவர்மாவிடமிருந்து தானாகவே நாட்டு அதிகாரத்தை எடுத்துக்கொள்கிற மார்த்தாண்டவர்மா; சாகக் கிடக்கிற மார்த்தாண்டவர்மாவிடமிருந்து அதிகாரம் கைப்பற்றக் காத்திருக்கும் இளந்தம்புரான்.
சீதரன் நாயரிடமிருந்து ஆனை கேசவனின் மேய்ப்பு அதிகாரம் அருணாசலத்திற்குப் போய்விடாமல் தான் கைப்பற்றத் துணிந்து சதி செய்யும் பரமன்; பரமனிடமிருந்து தனக்குக் கைமாறப்போவனவற்றை எண்ணி இறும்பூதெய்தும் சுப்புக்கண்.
சீதரன் நாயரின் நீலம்மையைக் கைப்பற்றும் அருணாசலம், அருணாசலத்தை மிரட்டி நீலம்மையையும் அருணாசலத்தைக் கொன்று இராமலட்சுமியையும் பெண்டாளும் பரமன்.
இந்த மனிதர்களைப் போலவே முனைகிற கேசவன் யானை. கரடிக்குளம் நாராயணன் யானையின் இடத்தில் கண்வைத்துக்கொண்டு திரிகிறது.
மனிதர்கள் அடைந்ததைப்போலவே யானையும் அடைந்தது.
அதிகாரங்களைப் பெற்றுத் துய்த்தவர்களெல்லாம் அந்த அதிகாரங்களாலேயே செத்தார்கள்.
கேசவனிடம் குத்துப்பட்டுச் சாகவிருக்கிற கரடிக்குளம் நாராயணன்.
பாட்டனும் தகப்பனும் ஆனையால் சவட்டப்பட்டுச் செத்துப்போயிருந்தாலும் ஆனையையே நோங்கி நின்ற பரமன்.
அதிகாரம் என்பது யாருக்கும் நிலைக்காத இருக்கை.
இப்படி இழையோடி முழுக்கதையாக விரிகிறது மத்தகம். மத்தகம் என்பது அதிகார இருக்கையல்லவோ!
‘இனி என் கேசவனுடெ மீதே ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு’ என்று மார்த்தாண்டவர்மா கற்பித்த நாள்தொட்டுத் தன்னுடைய மத்தகத்தை மற்றவர்க்கு மறுத்த கேசவன் மார்த்தாண்ட வர்மா திருநாடேகியதறிந்து துவண்டு, ‘ஆனே, காலெடு’ என்று சொன்ன பரமனுக்கு அவனே நம்பமுடியாத வண்ணம் காலெடுத்துக் கொடுத்து அவனுக்கு மத்தகம் கொடுத்த நிகழ்வு.
அதற்கு இணை பேசுகிற வகையில் முதல் ஆனைப் பாப்பான் அருணாசலம் இறந்துபோன நிலையில் அவனுடைய மனைவி இராமலட்சுமி இரண்டாம் ஆனைப்பாப்பான் பரமனுக்கு உடன்படுவது.
‘செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுன்னு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே’ என்று அவள் தான் மானங் கெட்டதற்குக் கற்பிக்கிற நியாயம்.
கேசவன் தன்னுடைய களித்தோழனும் ஏமானுமாகிய மார்த்தாண்டவர்மா மரணமடைந்ததால் ஆதரவிழந்து ஒரு சாதாரண ஆனைப் பாப்பானின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு மத்தகம் கொடுப்பதென்பது கேசவனைப் போன்ற ஒரு ‘கஜகேசரிக்குச்’ சற்றுக் குறைவாகத்தான் தோன்றுகிறது. கேசவன் ஆயிரம் மனிதர்களைப்போலச் சிந்திப்பவன் என்று முன் பகுதிகளில் ஏற்றிவிட்டு கடைசியில் பொசுக்கென்று மண்டியிடுவது மேக் சுர்ரென்டெர் என்று தோன்றிற்று. ஆனால் தன்னுடைய அதிகார இருக்கை பறிபோய்விட்டது என்பது இளந்தம்புரான் துப்பாக்கிகொண்டு குறிநோக்கியபோதே கேசவனுக்கு விளங்கியிருக்கவேண்டும். புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை!


அம்பிளிபோலப் பிள்ளைகுட்டிக் கட்டுமானம் இல்லாத பெண்ணுக்கு உண்டாகிற துணிவு ‘கண்ணு தெறக்காத நாய்க்குட்டிகளாக’ இருக்கிற சில பிள்ளைகளால் கட்டுண்ட இராமலட்சுமிபோன்ற அன்னைக்கு இல்லாமல்போவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
கேசவனும் அப்படித்தான் தளைப்பட்டுவிட்டானோ? காட்டுக் கரும்பாறை காட்டில் மட்டும்தான் கஜகேசரியாக இருக்கமுடியும்போலிருக்கிறது!
தாய்வழிச் சமூக அமைப்பு அன்னைமையின்பேரில் உங்களுக்கு உண்டாக்கியிருக்கிற பற்றுதலை உங்களுடைய புதினங்களின்வழியாக அறியமுடிகிறது. அந்த இழையைத் தொடாமல் ஏறத்தாழ நீங்கள் எழுதுவதில்லை.
தந்தைவழிச் சமூக அமைப்பிலேயே பழகியவர்களுக்கு அது புதிய விரிவுகளை உண்டாக்கும்.
மகிழ்ச்சியும் வணக்கமும்!
அன்பன்,
கரு.ஆறுமுகத்தமிழன்

முந்தைய கட்டுரைஅ.மார்க்ஸ்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருமலைக்கிராமம்;கடிதங்கள்