தமிழ்விக்கி – தூரன் விருது 2023
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது ஆய்வாளர் மு.இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்ற முப்பதாண்டுகளில் ஓர் கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் மு. இளங்கோவன் ஆற்றியுள்ள பணிகள் மிக விரிவானவை. தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். பாரதிதாசன படைப்புகல் பெரும்பாலும் வெளிவந்த பொன்னி இதழ்களை மீட்டு தொகுத்தவர். தமிழறிஞர்களின் வாழ்க்கைகளை தேடித்தேடி ஆவணப்படுத்தியவர். இசைத்தமிழ் ஆய்வாளர்களை ஆவணப்படுத்தியவர். கணினித்தமிழை பரவலாக்கியவர். தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுத்தவர்.கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்த மு.இளங்கோவன் புதுச்சேரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இவ்வாண்டு சிறப்பு விருதாக தொடக்கநிலை ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.ஜே.சிவசங்கருக்கும் தமிழ்விக்கி – தூரன் விருது வழங்கப்படுகிறது. எஸ்.ஜே.சிவசங்கர் இடதுசாரி அமைப்புகளில் இருந்து தலித் சிந்தனைப்பள்ளி நோக்கி நகர்ந்தவர். மொழிபெயர்ப்பாளர், சிறுகதையாசிரியர் என்னும் அடையாளங்கள் கொண்டவர். குமரிமாவட்டத்து அடித்தள மக்களின் பண்பாடு சார்ந்து நாட்டாரியல் முறைமைப்படி தரவுகள் சேமிப்பதையும், ஆய்வுசெய்வதையும் நிகழ்த்திவருகிறார். இதயநோயால் முழுமையாக கள ஆய்வு செய்வதில் இப்போது சுணக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.